முற்போக்கு சமூகப் படைப்பு இலக்கியவாதி நந்தினி சேவியர்

தனது படைப்புக்களில் இந்த மக்களின் விடிவு பற்றியும் அதற்கான போராட்டங்கள் பற்றியும் அறை கூவல் விடுத்த வண்ணம் இருக்கின்றானோ அவன் பலராலும் திரும்பிப் பார்க்கப்படும் வரலாற்று நாயகன் ஆகின்றான்

பணம், பொருள் ஈட்டலுக்கு அப்பால் சமூகம் சார்ந்த படைப்புகளையும் செயற்பாடுகளையும் தனது வாழ் நாள் முழுவதும் எந்த சமரசமும் இன்றி செயற்படுத்த முனைகின்றாரோ அவன் மக்கள் போராளி சமூகப் போராளி ஆகின்றான்.

இப்படியான ஒரு சமூகப் போராளியான நந்தின சேசியரை நாம் இழந்து நிற்கின்றோம்.அவர் தனது செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டாலும் அவரின் படைப்புகளும்… சிந்தனைகளும்… கருத்துரைகளும்…. எந்த மக்களுக்காக அவர் வாழ முற்பட்டாரோ அதனால் ஏற்பட்ட விளைவுகளும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.

மீண்டு வருவேன்… தொடர்ந்தும் எழுத்துலகில் களப் பணியாற்றுவேன் என்ற வாக்குறிதியை கொடுத்த வண்ணம் இருந்தவர் திடீரென தனது சிந்தனையை நிறுத்திக் கொண்டவர். தனது இறுதி மூச்சு வரையும் மனித குலத்தின் மேம்பாட்டிற்கான சிந்தனை செயற்பாட்டில் பலருடனும் கை கோர்த்து பயணித்தவர்தான் நந்தின் சேவையர்.

கே.டானியலைப் பற்றிய ஆவணப்படுத்தலை மேற்கொண்டிருக்கையில் அவரின் மரணம் நிகழந்திருக்கின்றது அதனை எங்களில் ஒருவர் தொடர்ந்து மேற்கொள்வதும் நாம் அவருக்கு செய்யும் அஞ்சலியாக அமையும்.

இலங்கை வாழ் சிறுபான்மை தேசிய இனம் தனது தலைநகராக வரிந்து கட்டிய திருகோணமலையில் தனது பெரும்பகுதி வாழ்வை நகர்த்திய கிழக்கிலங்கையின் மைந்தன் என்று அவரை தாராளமாக அழைக்கலாம். ஒடுக்கு முறைப் போராட்ங்களில் அடையாளப்படுதப்பட்ட தென்மராட்சி மட்டுவில் பிறந்தாலும் இளமையில் வடமராட்சி அல்வாயில் அதிகம் களித்தவர் அன்றைய காலகட்டத்தில் அங்கு மையம் கொண்டிருந்த இடதுசாரிச் செயற்பாட்டாளர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டவர்.

ஏழ்மையான குடும்பம் பின்புலம் பாடசாலை நேரம் தவிர்ந்த மிகுதி நேரங்களை தனது தந்தையாருக்கு தொழில் உதவி செய்வதில் அதிகம் பங்கெடுத்தார்….. வடமராட்சிப் பகுதியில் சண்முகதாசன் தலைமையிலான நடைபெற்ற சாதி ஒழிப்புப் போராட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டவர்…. என்று ஆரம்பமான இளைஞர் வாழ்வு.

ஈழவிடுதலைப் போராட்ட காலத்திலும் இடதுசாரிக் கருத்தியலை தமக்குள் கொண்டிருந்த விடுதலை அமைப்புகளுடன் தொடர்ந்தார். 1960 களின் இறுதிப் பகுதியிலிருந்து தொடர்ந்தது அவருடைய இந்த இடதுசாரி வழிப் பயணம். இறுதி வரையிலும் அவர் ஒரு சமூகப் போராளியாகவே இருந்தார்.இடையில் அவரையும் குடும்பத்தையும் மிகத் துயர்ப்படுத்தியது அவருடைய மகனின் மரணம். அதிலிருந்து மீண்டு வரக் கடினமான அவஸ்தைப்பட்டார் சேவியர்.

அன்றாட வாழ்கையில் இயல்பாகவே இடதுசாரிச் சிந்தனையும் செயற்பாடுகளும் வெளிபட்டுக் கொண்டே இருக்கும் என்பதை அவருடன் நெருக்கமாக பலகாலம் பழகியவர்கள் பதிவு செய்திருப்பதும் இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.

சிந்தனையும் செயற்பாடும் இணைந்து பயணம் செய்து மக்களின் மனங்களை வென்றவராகவே இறுதி வரை வாழ்ந்தவர்.

மொழியால் உறவால் சிந்தனையால் தமிழ் நாட்டு விளிம்பு நிலை மக்களிடமும் அவர்களுக்கு குரல் கொடுக்கும் போராடிக் கொண்டிருக்கும் முற்போக்கு தமிழ் நாட்டு இலக்கியவாதிகள் மத்தியிலும் பிரபல்யம் என்பது ஒரு வகையில் வர்க்கம் சார்ந்த இணைப்பாகவே நாம் பார்க்க முடியும்.

அது சேவியரின் படைப்பு இலக்கியங்களை தமிழ்நாட்டு மக்களிடமும் எடுத்துச் சென்றது ஈழத்து படைப்பிலக்கியவாதிகள் விளிம்பு நிலை மக்கள் பற்றி பேசவிளையும் போது அவர்களுக்கான படைப்புகளை உருவாக்கும் போது செயற்படும் போது அவர்கள் சர்வதேசவாதிகளாக ஒரே மொழி பேசும் தமிழகத்தின் ஊடு வெளிச்சத்திற்கு வந்ததே ஈழ முற்போக்குவாதிகளின் வரலாறு. இது இயல்பானதும் கூட.

அந்த வகையில் நந்தின் சேவியரின் முற்போக்கு இடதுசாரிச் செயற்பாடுகள் சர்வதேசம் எங்கும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பரந்து விரிந்திருப்பதை அவருக்கான மரியாதை கலந்த அஞ்சலிசச் செய்திகள் இன்று கூறி நிற்கின்றன.

அவரின் முற்போக்கு இலக்கியப் படைப்புகளாக…

‘அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்” சிறுகதைத் தொகுப்பு.

“நெல்லிமரப் பள்ளிக்கூடம்” சிறுகதைத் தொகுப்பு.

பிறகு பிந்திய கதைகளையும் சேர்த்து “நந்தினி சேவியர் படைப்புகள் வந்தது.

தமிழகத்தில் முற்போக்கு இலக்கியவாதிகள் இதனை வெளிக் கொணர்ந்தனர்

இதன் பின்னர் ‘பிடித்த கதைகள்’ என்ற தொடரை முகப்புத்தகத்தில் எழுதித் தொகுத்திருந்தார். அவரின் எழுத்திற்கு கிடைத் கௌரவ விருதாக அவருக்குக் கிடைத்த ‘கொடகே’ விருதைக் நாம் கொள்ள முடியும்

ஒரு சிறந்த கதை சொல்லியாக தான் எந்த சமூகம் சார்ந்து எந்த வர்க்கம் சார்ந்து நிற்கின்றார் என்பதை அவர் கூறி ஒரு கதையில் இருந்து அவரை புடம் போட்டு அறியமுடியும்.அந்த கதை இவ்வாறு விரிகின்றது….

தோழர் நந்தினி சேவியர் சரவணன் என்பவருக்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்த

‘யாழ்ப்பாணத்தில் அருந்ததிய மாயாண்டியை தோற்கடித்த கதை”….

‘யாழ்ப்பாணத்தில் 1967 ஆம் ஆண்டு சித்திரைப் பிறப்பு போட்டியாக மல்யுத்தப் போட்டியை பொலிஸ் நிலையம் நடத்தியது. மாயாண்டி என்கிற ஒரு மல்யுத்த வீரன் இருந்தார். அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த பருத்தித்துறை நகரசுத்தித் தொழிலாளி சமூகத்தைச் சேர்ந்தவர்.

வெல்லப்பட முடியாத ஒருவராக இருந்தார். அப்போட்டியில் இறுதியில் மாயாண்டி வென்றுவிட்டார். அங்கிருந்த உயர் சாதிக்காரர்கள் அதனை ஏற்பாடு செய்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் மாயாண்டி ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்று சொல்லி விட்டார்கள். மாயாண்டி மீண்டும் ஒருவரோடு போட்டியிடவேண்டும் என்று வற்புத்தினார்கள். அவரையும் வென்றார் மாயாண்டி.

மீண்டும் இன்னொருவருடன் விளையாடத்தான் வேண்டும் என்றார்கள் அந்த வீரனையும் வென்றார் மாயாண்டி. அவர்கள் விடாப்படியாக இருந்தார்கள். இன்னொருவருடனும் மோதினால் தான் வெற்றி என்றார்கள்.

மாயாண்டியின் உடலும் எவ்வளவு தான் தாக்குபிடிக்கும். எத்தனை பேரோடு தான் தனி ஒருவன் மோத முடியும்.மாயாண்டியை அப்படித்தான் தோற்கடித்தார்களப்பா.

மாயாண்டி என்கிற தாழ்த்தப்பட்ட சாதி ஒருவருக்கு பரிசு போய்விடக்கூடாது என்பதற்கு அவ்வளவு வேலை பார்த்தார்கள் ஆதிக்க சாதியினர். ஒடுக்கப்பட்டவர்களாக இருந்த கறுப்பினத்தவர்கள் இன்று சகல விளையாட்டுகளிலும் உலகளவில் சாதனை படைக்கிறார்கள். ஆனால் ஒரு அருந்ததியன் வென்று விடுவதை யாழ்ப்பாண சாதி தடுத்தது.”

(நன்றி: சரவணன் கோமதி நடராசா)

இன்று உலகெங்கும் ஒடுக்கப்பட்ட கறுப்பினத்தவர்களின் தியாகங்கள் நிறைந்து நீண்ட நெடிய போராட்டம்தான் இன்று உலகில் வலிமை மிக்க விளையாட்டுப் போட்டி வீரர்களாக போராளிகளாக அவர்களை நிலை நிறுத்தியிருக்கின்றது என்பதை நாம் இங்கு கவனத்தில் எடுக்க வேண்டும்.

40 வருட ஆயதப் போராட்ட காலத்திலும் அதிக ஒடுக்கு முறையிற்குள்ளான சமூகமாக ஆதிக சாதியினால் கையாளப்பட்ட மக்களே இன்று அதிகம் கல்வி நிலையிலும் அது சார்ந்த பொருளாதாரம் உழைப்பிலும் மேம்பட்டிருக்கின்றார்கள் என்பதையும் நாம் இங்கு உதாரணமாக கொள்ளலாம்.

ஆனாலும் மயாண்டியின் வெற்றியை ஏற்றுக் கொள்ளாத சமூகமாகவே இன்னமும் ஆளுமையில் உள்ள பிரதான நீரோட்ட அரசியல் தலமைகள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலமையில் இன்னமும் தோழர் நந்தின சேவையர்களின் தேவை இருப்பதை நாம் மறுக்க முடியாது.

அந்த வகையிலும் தோழர் நந்தினி சேவையரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாக உணரப்படுகின்றது.

வாழும் காலத்திலேயே நந்தின் சேவையர் போன்ற முற்போக்கு படைபிலக்கியவாதிகள் கௌரவிக்கப்பட்டு அதிகம் இளம் தலைமுறையினர் மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டிய வரலாற்றுக் கடமை எம் முன்னே உள்ளது என்பதில் நாம் தாமதமாக பயணிக்கின்றோமோ என்ற சுயவிமர்சனத்தை நந்தின சேவையிரின் மரணமும் எமக்கு உணர்த்தித்தான் இருக்கின்றது.

அவருக்கு மரியாதை கலந்த செவ்வணக்கங்கள்