அந்த இடத்தை கடந்து வந்த போது எனக்கு வயது 13, ஆனால் எதுவுமே மறந்து போகவில்லை. எத்தனையோ விதமான வெடிபொருட்கள், கந்தக வாசனை. சாகும் வரைக்கும் மறக்காது. மாத்தளன் என்ற இடத்தை கடக்கும் வரைக்கும் நானும் விளையாட்டு பிள்ளை தான். அதுக்கு பிறகு நான் உற்று பாத்த விடயங்கள் அனேகம். கொத்துக் குண்டு, பொஸ்பரஸ் குண்டு, multi baral இப்படி விதம் விதமா வந்து விழும். எது விழுந்தாலும் குறைந்தது 10 பேர் அந்த இடத்தில சாவாங்க, 10 பேர் காயப்படுவாங்க பக்கத்தில நிக்கிற எங்களாலயும் ஒண்றுமே செய்ய இயலாத கையாலாகத தன்மை.
ஏழை முதல் பணக்காரர்கள் வரை ஒரு நாளைக்கு ஒரு நேரம் என்றாலும் ஏதோ ஒன்றை சாப்பிட வேண்டும் என்று ஏங்கினார்கள். வெறும் அரிசியை தண்ணியில் அவிய வைத்து கஞ்சி காய்ச்சி கொடுப்பார்கள். அதில் ஒரு கப் வாங்கி குடிக்க கண்ணுக்கெட்டின தூரம் வரை ஆக்கள் நிற்பார்கள். சில நேரம் கஞ்சி குடித்து பசி அடங்கும், சில நேரம் அந்த இடத்தில் 4 எறிகணை விழுந்து ஒரேயதாக கூட பசி அடங்கும்.
எனக்கு இந்த நிமிடம் வரை யாரை குற்றம் சொல்வது என்று தெரியவில்லை. எனது அம்மா, தம்பி இறப்பதற்கு சில நாட்களுக்கு முதல் இனியும் இருக்க வேண்டாம், படையினர் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடலாம் என்று ஒரு 200 பேர் வரையில் புறப்பட்டு சென்றோம். அப்போது யாரெல்லாம் எமக்காக போராடினார்களோ அவர்களது துப்பாக்கிகள் எம்மை நோக்கி திரும்பியது. மரியாதையாக திரும்பி போங்க இல்லை என்றால் சுட்டிருவம். நாங்கள் திரும்பி வர தயாரானோம். மீறி போனவர்கள் சிலர் எமது இன மக்களின் துப்பாக்கி ரவைகளால் இறந்தார்கள், சிலர் சென்றார்கள்
திரும்பி வந்த நாங்கள் அதே முள்ளிவாய்காலில் இருந்தோம். அந்த சமயத்தில் என்னை பார்த்தால் 13 வயது என்று கூட சொல்ல மாட்டார்கள். ஆனால் என்னை போராட்டத்தில் சேர்க்க இரண்டு தடவைகள் ஆட்கள் வந்தார்கள். என்னை பாதுகாக்க அம்மா பெரிய போராட்டமே நடத்தினார். அதை பார்க்கும் போது பேசாமல் நானே போவமா என்று கூட தோண்றும். ஆனால் சின்ன வாளியில் தண்ணீர் அள்ளி தூக்க முடியாத நான் போய் என்ன செய்வேன் என்று தோண்றும்.
இந்த சூழ்நிலையில் தான் எனது அம்மா, தம்பி மே மாதம் 1ம் திகதி இறந்தார்கள். எமது குடும்பத்துடன் பக்கத்தில் ஒரு இளம் தம்பதிகள் ஒரு கைக்குழந்தையுடன் இருந்தார்கள். மே 1 அதிகாலை 6 மணி அம்மா ஒரு கையில் என்னையும் மற்றகையில் தம்பியையும் பிடித்துக் கொண்டு இருந்தார். திடீரென ஒரு சந்தம், புகை அவ்வளவு தான். கண்ணுக்கு முன்னாலேயே அம்மாவும் தம்பியும் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். தலையில் அடித்துக் கொண்டு பைத்தியம் போல கத்தினேன். எந்த கடவுளும் காப்பாற்ற வரவில்லை. எங்கள் கண் முன்னாலேயே இருவரும் கண்களை மூடினார்கள். மற்ற பக்கம் திரும்பி பார்த்தேன் அந்த குடும்பத்தில் அந்த அண்ணாவின் உடல் மட்டும் இருந்தது, தலையை காணவில்லை. அந்த அக்காவிற்கு ஒரு 20 வயது தான் இருந்திருக்கும் அந்த கைக்குழந்தையை தூக்கி கொண்டு பைத்தியம் பிடித்தது போல ஒரு பக்கமாக ஓடி கொண்டு இருந்தார். பிறகு என்ன ஆனார் என்று கூட தெரியவில்லை.
இருப்பதற்கு வீடுகள் இல்லை, உண்பதற்கு சரியான உணவு இல்லை, குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கூட இல்லை. கையில் ஒரு பையுடன் தெரு தெருவாக அலைந்து கொண்டு இருந்தோம். அந்த முள்ளிவாய்காலை படையினர் சுற்றி வளைத்து விட்டார்கள். எந்த நேரத்திலும் மரணத்தை எதிர்பார்த்து கொண்டு இருந்தோம். மே மாதம் 12ம் திகதி வந்தது மறுபடியும் படையினரிடம் சரணடைந்து விடலாம் என்று முடிவெடுத்து சென்றோம். தூரத்தில் சிங்களவரின் கொச்சை தமிழில் “சுட மாட்டோம் வாங்க” என்ற ஒலிபெருக்கி ஒலி கேட்டது. ஆனால் அருகே ” போன சுடுவம்” என்ற சரியான தமிழ் கேட்டது. செல்ல முடியாமல் திரும்பி வந்தோம். இப்போது தான் தோன்றுகிறது இதன் பெயர் தான் பணயக் கைதிகள் போல.
மே மாதம் 13 ம் திகதி ஏதோ ஒரு பாதையால் நடந்து கொண்டிருந்தோம். அது தான் வட்டுவாகல் என்ற இடமாம். திடீரென எறிகணை கூவும் சத்தம் கேட்டது எனது இரு பக்கங்களிலும் நின்ற இரு சித்தப்பாக்கள் டினு படு என்று என்னை தள்ளி விட்டார்கள், முகம் அடிபட போய் குப்பற விழுந்தேன். மறுபடியும் அதே சத்தம், அதே புகை எழும்பி பாக்க அந்த இடமே ரத்த வெள்ளமாக இருந்தது. என்னை தள்ளி விட்ட இருவரும் இப்போது உயிரோடு இல்லை. அந்த இடத்திலே எனது பெரியம்மா இறந்திருந்தார். தங்கச்சி, இரண்டு சித்தப்பாக்களுக்கு உயிர் போற அளவு காயம், இன்னொரு சித்தப்பா & சித்திக்கு 3,4 நாட்கள் அளவுக்கு உயிரோடு இருக்க கூடிய காயம்.
நான் என்னுடைய உறவுகளை இழந்ததற்கு 50% மாற்றான் காரணம் 50% எனது இனமே காரணம். அந்த உயிர் போற நிலையில் இருந்த 3 பேரையும் இருந்த துணிகளில் சுற்றி வைத்தியசாலை என்ற பெயரில் இருந்த ஒரு கூடாரத்தின் கீழே கொண்டு போய் விட்டோம். அங்கே எந்த மருத்துவ வசதியும் இல்லை இரத்தம் போகாமல் இருக்க துணிகள் மட்டுமே கிடைக்கும். இருந்தாலும் அங்கே போனதற்கு காரணம், சில நாட்களுக்கு ஒரு தடவை அங்கிருந்து சர்வதே செஞ்சிலுவை சங்க கப்பலில் ஆட்களை புல்மோட்டை நோக்கி அனுப்புவார்கள்.
ஆனால் அந்த இடத்தில் கூட எம்மினம் எம்மை வஞ்சித்தது. அந்த வைத்தியசாலை கூடாரத்தின் கீழே அழுகிய நாற்றத்துடன் பல பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்ற போது,, சில போராளிகளின் உறவினர்கள் கையில் இருக்கும் சிறு கீறலுக்கு துணியை சுற்றிக் கொண்டு அந்தக் கப்பலில் ஏறி தப்பி செல்வார்கள். அவர்கள் ஏறிய பின்பே காயமடைந்தவர்கள் அதில் செல்வார்கள். அந்த வைத்தியசாலை கூடாரத்தின் மேலேயே எறிகணை விழுந்து இரு சித்தப்பாக்களும் இறந்தார்கள். என் அம்மம்மாவின் கையிலேயே என் தங்கச்சி உயிரை விட்டாள்.
மிஞ்சிய அனைவரும் காயமடைந்த சித்தி சித்தப்பாவோடு கால் போன போக்கில் போனோம். கடவுளே இல்லை என்றாலும் கூட அந்த கடவுளிடம் நான் ஒன்றை மட்டும் வேண்டினேன். அப்பாவிற்கும் எனக்கும் சாவு ஒரேயதாக வர வேண்டும் என்று. அந்த நிமிடம் முதல் அப்பாவின் கையை இறுக்கமாக பிடித்து கொண்டேன். அனாதை ஆகி விட கூடாது என்ற ஏக்கத்தில்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பிணங்களும், துண்டு பட்ட கைகால்களும், பட்டினியால் சாகிறவர்களும், காயம்பட்டு உயிருக்கு போராடுபவர்களும், எறிகணைகள் விழுந்து செத்து கொண்டு இருப்பவர்களும், இரத்தமும், சத்தமும் புகையுமே தெரிந்தது. சரணடைந்து வருவதற்கு முதல்நாள் நான் அப்பாவை பார்த்துக் கேட்ட ஒரு விடயம் சாப்பாடு இல்லை, குடிக்க தண்ணி தான். முதல் எல்லாம் நான் ஒரு நேரம் சாப்பிடாமல் விட்டால் கூட துடிக்கும் அப்பா, அன்றைய நாள் ஒரு வாய் தண்ணி கேட்ட என்னை பாத்து கண் கலங்கினார். நல்ல தண்ணீர் கூட வேண்டாம் அப்பா, ஏதாவது தண்ணீர் இருந்தாலும் பரவாயில்லை. இது என்னுடைய ஏக்கம்.
அன்றைய நாள் எல்லோரும் முடிவெடுத்தோம் செத்தலூம் பரவாயில்லை படையினரிடம் சரணடைந்து விடுவோம். பட்டினியால் சாவதற்கு பதிலாக ஒரேயதாக சாகலாம். அன்று இரவு படையினரை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். அவர்களும் சுட்டார்கள், இவர்களும் சுட்டார்கள். செத்து விழுபவர்கள் விழ மீதி பேர் போய் சேர்ந்தோம். அவர்கள் முதலில் தந்தது சாப்பாடு தான். அதை சாப்பிடவும் பயமாக தான் இருந்தது. இருந்தாலும் சாப்பிட்டு விட்டு நிம்மதியாக சாகலாமே என்று வேகமாக சாப்பிட்டேன்.
யார் வேண்டுமானாலும் முள்ளிவாய்காலை, வட்டுவாகலை மறக்கலாம். நான் மறக்க மாட்டேன். நான் மேலே எழுதியவை எல்லாம் நான் நேரடியாக அனுபவித்தவைகளின் ஒரு சிறு பகுதி முழுமையாக எழுதும் மன தைரிம் 10 வருடங்களின் பிறகும் வரவில்லை. நான் எழுதியவை தவறு என்று யாரும் வாக்குவாதம் செய்வதாக இருந்தால் தயவு செய்து மே மாதம் முள்ளிவாய்காலில் இருந்தவர்கள் மட்டும் வாருங்கள். கதை கேட்டு கதைக்கும் யாரும் வர வேண்டாம் . இந்த விடயத்தில் யாராவது ஏதாவது கதைத்தால் அவர்கள் நட்பை இழக்க நான் துளி கூட தயங்க மாட்டேன்.
ஆரம்பத்தில் மண்ணுக்காக போராடி மடிந்த மாவீரர்களை மதிக்கிறேன். என் இனம் ( அப்பாவி பொதுமக்கள்) சாக காரணமான யாரையும் மறக்கவோ மன்னிக்கவோ மனம் தயாராக இல்லை.
(Sheran dinuja அவர்களின் பதிவில் இருந்து யாவும் உண்மை)