(அக்கினி ஞானாஸ்ஞானம்)
“அடோ கொட்டியா கவத ஆவே இ போம்ப மொனவத் கெனாவத’( அடோ புலி எப்ப வந்தனி குண்டு ஏதாவது கொண்டு வந்தியா) என்று கொழும்பிலுள்ள எங்கள் தலைமையகத்தில் பணிபுரியும் சிங்கள நண்பர் சிரித்தபடியே என்னைக்கேட்டுக்கொண்டு கட்டித்தளுவினார்.
“ போம்ப நவே அம்ப கெனாவ” ( குண்டு அல்ல மாம்பழம் கொண்டு வந்தனான்) என்று நான் கூறி முடிக்கும் முன்னரே சமயலறையை நோக்கிப்பறந்தார் என் நண்பர். அங்கு பணிபுரியும் பலரும் என்னைக்கண்டவுடன் சுகதுக்கங்களை விசாரித்து வன்னி நிலவரங்களை கேட்டறிந்தனர்.
இவர்கள் பலவகைப்படுவர் யார் உண்மையிலேயை சமாதனத்தை விரும்புகிறார்கள் என்பதைக்கண்டறிவது கடினம் பொதுவாக புலிகளைத்திட்டினால் தப்பித்துக்கொள்ளளாமென்பது வடகிழக்கிலிருந்து வரும் பலரது அபிப்பிராயம். ஆனாலும் சிங்களவர்கள் முட்டாள்கள் அல்லர்.
வெளிநாட்டுப்பிரதிநிதிகளுடன் கலந்துரையாடும் பொளுது அவர்கள் எப்பொளுதும் தந்களுடன் இலங்கையின் வரைபடத்தை வைத்திருப்புத வழமை. புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசம் சூனியப்பிரதேசம் இவற்றிக்கிடைப்பட்பட்ட தூரம் போக்குவரத்துப்பாதைகள் என்பனவற்றை அறிய அதிக ஆவலக இருப்பார்கள். அவர்களுடன் கதைத்துவிட்டு வெளியில் வரும்பெளுது நாங்கள் என்ன கதைத்தோம் என்பதை அறிய பலர் முண்டியடித்துக்கொண்டு வருவார்கள். இவர்களை சமாளிப்புத பெரும்பாடாகிவிடும்.
‘மச்சாங் must do something to the poor people, they must be suffering a lot’ என்றார் ஒருவர் பிளேன் டி யை உறிஞ்சிக்குடித்தபடியே. ‘யெஸ் மச்சாங் பவ் நேத அற மினுசு’(பாவம் அந்த மனிதர்கள்) என அவருடன் உடன்பட்டார் இன்னுமொருஊழியர் கல்குலேட்டரில் கணக்குப் பார்த்தவாறே. இவர்களதுமனிதாபிமானமும் கரிசனையும் என்னை வெகுவாகக்கவர்ந்தது. பின்னர்தான் அறிந்தேன் அவர்களிலொருவர் பெர்ச்சசிங் ஒபிசர் என்று. மற்றயவர் அவரது உதவியாளர். அநேகர் என்னுடன் அன்பாகவும் நட்புடனும் பழகினார்கள். ஒருசிலர் இரவில் தண்ணியடிக்கவும் அழைத்தார்கள்.மறுநாள் நடைபெற இருக்கும் கிறிக்கட் மட்ச் பார்க்கப்போகலாமென ஒருவர் விடாப்பிடியாக நின்றார். வன்னியிலிருந்து வந்த எனக்கு இவையெல்லாம் உற்சாகம் தருவதாகவே இருந்தது. நானும் கொழும்பிலிருக்கும் நாட்களை எவ்வாறு களிக்கலாமென்று எனக்குள் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கும் பொழுது ஓபீஸ் எங்கும் ஒரே பரபரப்பு எல்லோரும் அங்குமிங்குமாக அவசரமாக தங்களுக்குள் எதோ குசுகுசுத்தவாறு நடந்து திரிந்து கொண்டிருந்தனர். எல்லோரிடமும் ஏதோ ஒருவித பதட்டம் தென்பட்டது. காலையில் அன்போடு பழகியவர்களில் சிலர் முகம்கொடுத்து கதைக்கவே தயங்கினர ;.சிலர் என்னை ஒருவித சந்தேகத்துடன் பார்தனர். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. அப்பொழது எமது வெளிநாட்டு வதிவிடப்பிரதிநிதி என்னை தனது அறைக்குள் அழைத்து விடயத்தைக் கூறினார். கொழும்பில் பாரிய குண்டொன்று வெடித்து பலர் இறந்து விட்டதானவும் எங்கும் பதட்டம் நிலவுவதாகம் என்னை அவதானமாக இருக்கும்படியும் கண்டபடி திரிய வேண்டாமென்றும் அறிவுரை கூறினார். நான் அவரது அறையைவிட்டு வரும்பொழது ‘மச்சாங் நீ ஒண்டுக்கும் பயப்படாதை இண்டைக்கு நீ என்ட வீட்டிற்கு வா தண்ணி அடித்து சாப்பிட்டு படுப்பம் நாளைக்கு எல்லாம் சரியாப்போடும்’ என்றார் இதுவரை பெரிதாக அலட்டிக்கொள்ளாத சிங்கள நண்பர். அன்றைய இரவு அவரின் வீட்டில் நிம்மதியாகக்களிந்தது.
(முள்ளுள்ள புதர்கள் வளரும்…..)