முள்ளுள்ள புதர்களின் மத்தியில்; அத்தியாயம் 3

8 வெற்றிடங்கட்கு 20 பேர் நேர்முகப்பரீட்சைக்கு சமூகம் அளித்திருந்தனர். காலை 9மணிக்கு ஆரம்பமாவிருந்த நேர்முகப்பரீட்சைக்கு 7..30 மணிக்கே பலர் வந்து விட்டனர். முதல் சிக்கல் வன்னியில் வசித்தவர்களுக்கா அல்லது இடம்பெயர்தவர்கட்கா முன்னுரிமை வழங்குவது என்று முடிவெடுப்பது.

வன்னிக்கல்விப்பொறுப்பாளர் ஒரு தடவை கதையோடு கதையாகக்கூறியது நினைவுக்கு வந்தது. ‘ முந்தி ஒரு துண்டு பஸ்ரைவரிட்டை கொடுத்து விட்டாடால் எல்லா அதிபர்மாரும் சொன்ன இடத்தில சொன்ன நேரத்திற்கு நிப்பினம். இந்த யாழ்ப்பாணத்தாங்கள் வந்து எல்லாத்தையும் பழுதாக்கிப்போட்டாங்கள்’

‘ஒரு ரீ குடியுங்கோ சேர்’ என்ற பியுன் பொடியன் கோப்பையை மேசையில் வைத்துவிட்டு பம்மிக்கொண்டு நின்றான். ‘என்ன விஷயம் சொல்லு’ என்றேன்.
வழமையாக தாமதமாக வேலைக்கு வரும் பணியாட்கள் சிலர் அன்று நேரகாலத்திற்கே கந்தோருக்கு வந்துவிட்டார்கள். அவர்கள் முன்கூட்டியே கந்தோருக்கு வந்த நோக்கத்தை புரிந்துகொள்ள எனக்கு அதிக நேரம் தேவைப்படவில்லை. தாங்கள் யார் யாரை சிபாரிசு செய்கிறார்கள் என்பதை மிகவும் பக்குவமாக் கூறிவிட்டு நைஸ்சாகச் சொல்லிவிட்டு தங்கள் மேசைகட்கு சென்று ஏதோ அவசரமாக வேலை செய்வதுபோல் பாசங்கு பண்ணத்தொடங்கினார்கள். ‘சேர் அதில சிவப்பு சேட்டோட நிக்கிற ஒல்லியனை மாத்திரம் எடுத்துப்போடாதையுங்கோ,

மல்லாவிக்காம்பிலை சித்திரவதை செய்ததில முன்னுக்கு நிண்டவன், கட்டாயம் புலனாய்வுத்துறை தான் அனுப்பியிருக்கவேணும்’ என்றார் பைல்லை புரட்டியவாறு எனது பக்கத்து சீட்காரர். நானும் ஒன்றும் கோளாதவன் போல் கடிதங்களை பிரித்துக்கொண்டிருந்தேன். அவரோ விட்டபாடாய்யில்லை. ‘ அந்தக் கட்டைத்தடியன் முந்தி பளைப்பொறுப்பாளராய் இருந்தவன் உவன் சாகவேண்டுமென்று அங்க ஒருத்தன் கிடாய் ஒண்டை நேர்ந்துவிட்டிருக்கிறான்’

புதிதாக ஆட்களை எடுக்கிறதை விட TROவிட்ட எல்லாத்தையும் கையளித்து விடுதல் மேல் என்ற எண்ணம் என்னையறியாமலே மனதில் வந்து போனது. என்னுடன் தேர்வுக்குழுவிலிருக்கும் மற்றய இருவரும் கையில் ஏதோவொரு லிஸ்ட்டுடன் வந்தார்கள். நேர்முகப்பரிட்சையில் முதலிரண்டு இடங்களையும் பளைப்பொறுப்பாளரும் மல்லாவிப்பொடியனும் தட்டிக்கொண்டார்கள்.

யாழ்பாணத்திலிருந்து வன்னிக்கு இடம்பெயர்ந்து வந்தவர்களுக்கான தற்காலிக வீடுகளமைக்கும் வேலை முட்கொம்பனில் மும்மாரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஊர் மக்களும் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவன பணியாட்களும் இடம்பெயர்ந்து வந்தவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தார்கள். சில வீடுகளின் கூரைகள் கிடுகுகளினால் வேய்யப்பட்டுக்கொண்டிருந்தன வேறு சிலவற்றில் மண்சுவர்கள் எழும்பிக்கொண்டிருந்தன. சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் நிதியுதவியுடன் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் வேலைத்திட்டங்களை உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக நடைமுறைப்படுத்திக்கொண்டிருந்தது.
ஒவ்வொரு வீட்டிற்கு ஒதுக்கப்பட்ட தொகையில் வெறும் 30 சதவீதத்தை மாத்திரம் தான் செலவு செய்யப்பட்டிருக்குமென்பது ஊரறிந்த இரகசியம். ஒரு சில அரைகுறையாக முடிக்கப்பட்ட வீடுகளில் மக்கள் குடியமரத்தொடங்கிவிட்டார்கள். வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கும் இடங்களை நானும் சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘ஜயா இதை ஒருக்கா பாருங்கோ’ என்று குருநாகலிலிருந்து வந்த கிடுகுகளில் சிலவற்றைக்காட்டினார் கொஞ்சமாகத் தண்ணி’ பாவித்த ஒருவர். புல பாதிக்கிடுகுகள் பெரிய கண்ணறைகள். ‘சிங்களவங்கள் எல்லாத்திலையும் தானே எங்களைப் பேய்க்காட்டுறாங்கள்’ என்று கூறியவர் காறித்துப்பிவிட்டு ‘ உவங்கள் எண்டாப்போல என்ன திறமே’ என கொஞ்சம் தொலையில் நின்ற TRO க்காறறைக்காட்டி சற்றே தணிந்த குரலில் சொன்னார். ‘சீமான்கள் வீடு கட்ட தந்த மரங்களைப்பாருங்கோ ஒண்டுக்கும் உதவாது ஒரு மாசம் நிண்டுபிடிக்குமோ தெரியாது எங்களை வைச்சு எத்தனை பேர்தான் காசடிக்கிறாங்கள்’ என்றார் யதார்த்தமாக. காட்டு வெக்கையின் கடுமை எல்லோரையும் வாட்டி வதைத்தது. நானும் அவர்களுடன் பாலைமரநிழலில் ஒதுங்கினேன்.

‘என்ன வந்திறங்கிய கிடுகுகள் மரங்கள் ஒண்டும் அவ்வளவாய் வாய்க்கவில்லை போலகிடக்குது’ என்றபடி அவர்களது சம்பாஷனையில் இணைந்து கொண்டேன். ‘ உங்களுக்கேன் நல்ல கிடுகும் மரங்களும் பொடியள் வலு கெதியாய் யாழ்ப்பாணத்தை திருப்பி பிடிப்பாங்கள் தானே’ என்றேன் நமட்டுச்சிரிப்புடன். ‘மண்ணாங்கட்டி மனுசனுக்கு விசர் வரப்பண்ணாதையுங்கோ வன்னியும் எப்ப பறிபோகுதோ தெரியாது’ என்ற அவரது குரலில் வெறுப்பு கோபம் வெறுமை எல்லாம் தென்பட்டது.

அப்பதான் சைக்கிளில் வந்திறங்கிய வயதானவொருவர் ‘நாளைக்கு எல்லாரையும் துயிலுமில்லத்தை துப்பரவு செய்ய வரட்டாம் இல்லாட்டி நிவாரணம் இல்லையாம்’ என்றார் கொதியுடன். ‘என்னத்தைச் சொன்னாலும் உவங்கள் ஆட்கள் கெட்டிக்காரர்கள் அரசாங்கம் தாறதைக் கொண்டு தங்கட வேலைகளை எங்களைக்கொண்டு சிம்பிளாகச் செய்து முடிக்கிறாங்கள்’

‘ரெட் குறஸ் உவங்களுக்கு கனக்க காசு குடுத்திருக்குப்போல கிடக்கு அவசர அவசரமாய் கக்கூஸ் கட்டட்டாம் இல்லாட்டி காசு திரும்பிப்போடுமாம்இ கக்கூஸ் கட்டி என்ன பிரியோசனம் தண்ணிக்கு எங்க போறது’

‘வந்தாரை வாழவைக்கும் வளம் கொழிக்கும் வன்னிக்கு வாங்கோ உங்களுக்கு ஒரு குறையும் இருக்காது’ என்று லவுட்ஸ் பீக்கரில எனவுன்ஸ் பண்ணியெல்லே எங்களை பேய்க்காட்டி இஞ்சாலை கூட்டி வந்தவங்கள் நாங்கள் எவ்வளவு பேயர் என்று அவங்களுக்கு நல்லாத்தெரியும்

‘இந்த இடப்பெயர்வுடன் எனக்கு கடவுள் நம்பிக்கையும் துப்பரவாய் போட்டுது கடவுளும் அவங்கட பக்கம் போலத்தான் கிடக்குது.’

‘சனங்களப்போல அப்பனுக்கும் மறதி கூடப்போல கோயில் நகைகளையும் விட்டாங்களே’ இப்படியாக இவர்களது உரையாடல் சுவாரிசயமாக தொடர்கையில் ‘ இந்த மண் எங்களின் சொந்த மண் இதன் எல்லையை மீறி யார் வந்தவன் நீர்வளம் உண்டு நிலவளம் உண்டு நிம்மதி ஒன்றுதான் இல்லை’ என்ற பாடல் ஒலிபெருக்கியில் ஓங்கி ஒலிக்க வாகனம் ஒன்று வந்முகொண்டிருந்தது.

‘உந்தா வருகுது பிள்ளைபிடிக்கிற கோஷ்டி உன்ட பொடியனை எங்கயாலும் ஒழிக்கச்கசொல்லு
‘உனக்கு விஷயம் தெரியாது போலகிடக்கு உவங்கள் எங்களையெல்லே ரெயினிங் எடுக்கெட்டாம் ஆண் , பெண் , கிழடுகட்டை எண்டஎந்த வேறுபாடும் கிடையாதாம் எல்லாரும் கட்டாயம் எடுக்க வேணுமாம் ஒண்டில் மாவீரர் அல்லது நாட்டுப்பற்றாளராக மாறவேண்டுமாம் இல்லாட்டி வீண்வில்லங்கம்தான’;

‘இதுதாண்ட அப்பா சமஉரிமைச்சமுதாயம் வாழ்க தமிழீழம் கெதியாய் வெளிக்கிடு கோப்பரேசனுக்கு.’

தொடரும்