(கே. சஞ்சயன்)
வடக்கில் அறுதிப் பெரும்பான்மை பெறாத சபைகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆட்சியமைக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்று வருகிறது. ஆனாலும், இது கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது.யாழ்ப்பாண மாநகர சபையில் தொடங்கியது இந்தப் பலப்பரீட்சை. இங்கு, 16 ஆசனங்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாநகர மேயர் பதவிக்கு ஆர்னோல்ட்டின் பெயரை முன்மொழிய, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மணிவண்ணனின் பெயரை முன்மொழிய, பதிலுக்கு ஈ.பி.டி.பியும் ரெமீடியசின் பெயரை முன்மொழிந்ததால் திருப்பம் ஏற்பட்டது.
மும்முனைப் போட்டி எதிர்பார்க்கப்படாத நிலையில், வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, 18 வாக்குகளுடன் ஆர்னோல்ட் முன்னிலை வகித்தார். மணிவண்ணனும், ரெமீடியஸும், சமமாக 13 வாக்குகளைப் பெற்றதால், குலுக்கல் முறையில் மணிவண்ணன் வெளியேற்றப்பட்டார். அதற்குப் பின்னர், ரெமீடியஸ் போட்டியில் இருந்து விலகியதால், ஆர்னோல்ட் மேயராக அறிவிக்கப்பட்டார். ஐ.தே.க ஆதரவுடன், ஈ.பி.டி.பி கூட்டுச் சேர்ந்து வெற்றி பெற்றிருப்பதாக, கூட்டமைப்பு மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
சாவகச்சேரி, பருத்தித்துறை நகரசபைகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய போதிலும், தவிசாளர் தெரிவில் கோட்டை விட்டிருக்கிறது. ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் சாவகச்சேரியிலும், ஈ.பி.டி.பி ஆதரவுடன் பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை நகர சபைகளிலும் கூட்டமைப்பு ஆட்சியைப் பிடித்திருக்கிறது. பெரும்பாலும் இதே நிலை ஏனைய சபைகளில் தொடரப் போகிறது.
ஈ.பி.டி.பி, ஐ.தே.க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி போன்றவற்றின் ஆதரவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆட்சியைப் பிடித்திருக்கிறது என்பது பொதுவானதும், பரவலானதுமான குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டின் மூலம், கூட்டமைப்பு கொள்கையைக் கைவிட்டு விட்டது என்பது, நிரூபிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட கூறியிருக்கிறார். இது ஆபத்தான கூட்டு என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்களை எச்சரித்திருக்கிறது.
யாழ். மாநகரசபையில் ஈ.பி.டி.பியும் போட்டியிட்டிருந்தது. இறுதிப் போட்டியில் வெல்ல முடியாது என்று தெரிந்த நிலையில்தான் விலகிக் கொண்டது. எனவே, மாநகரசபையில் ஈ.பி.டி.பிக்கும், கூட்டமைப்புக்கும் இணக்கப்பாடு இருந்தது என்று கூறமுடியாது. ஆனால், டக்ளஸ் தேவானந்தாவிடம், மாவை சேனாதிராஜா பேச்சு நடத்தும் அளவுக்கு சென்றிருந்தார் என்பது உண்மை.
உள்ளூராட்சித் தேர்தலில், தொங்கு சபைகள் அமைந்ததும், எல்லாக் கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க வேண்டும்; பொது நோக்கில் செயற்பட வேண்டும் என்று பொது அமைப்புகள் அழைப்பு விடுத்தன.
ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதற்குச் செவிசாய்க்கவில்லை. கூட்டமைப்புக்குள் காணப்பட்ட விரிசலைப் பயன்படுத்திக் கொண்டு, தாம் ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என்று கணக்குப் போட்டு, யாழ். மாநகர மேயர் பதவிக்குப் போட்டியிடுவோம் என்று அறிவித்தது.
அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சிகள் ஆட்சியமைக்கட்டும்; ஏனைய கட்சிகள் ஒத்துழைக்கட்டும் என்று கூட்டமைப்பு ஒரு யோசனையை முன்வைத்தது.
எனினும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ, சாவகச்சேரி, பருத்தித்துறை நகரசபைகளில் மாத்திரமன்றி, யாழ். மாநகர சபை, நல்லூர் பிரதேச சபைகளிலும் போட்டியிடுவோம் என்று அடம்பிடித்தது.
இதன் விளைவாக, சாவகச்சேரி, பருத்தித்துறை நகரசபைகளிலும் ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறது.
அத்துடன், ஈ.பி.டி.பி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டமைப்பு சபைகளைக் கைப்பற்றும் நிலைக்கும் இட்டுச் சென்றது.
இதன் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தாம் தோலுரித்துக் காட்டியுள்ளதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூறுகிறது.
கூட்டமைப்பைத் தோலுரிப்பதற்காகவே தான், உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னொரு போதும் கூறவில்லை. உள்ளூரில் சிறப்பாக ஆட்சியைக் கொடுக்கப் போவதாகவும், அபிவிருத்தி செய்யப் போவதாகவும் தான் வாக்குறுதி அளித்தது.
ஆனால், என்ன நடந்திருக்கிறது? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோலுரித்துக் காட்டி விட்டு, உள்ளூரை அபிவிருத்தி செய்யும் வாய்ப்பைப் பறிகொடுத்திருக்கிறது.
கூட்டமைப்பைத் தோலுரித்துக் காட்டுதல் என்பது, அரசியல் நலன். ஆனால், உள்ளூரை அபிவிருத்தி செய்வது தான், மக்கள் நலன்.
நீண்டகாலமாக, உள்ளூராட்சி, மாகாணசபைத் தேர்தல்களைப் புறக்கணித்து வந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இந்தத் தேர்தலில் போட்டியிட்ட போதும், அதைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளத் தவறியிருக்கிறது. அதுமாத்திரமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, ஈ.பி.டி.பி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐ.தே.க போன்றவற்றை நோக்கி நகர்த்தியும் செல்ல வைத்திருக்கிறது.
கோட்பாட்டு அரசியலில் வேண்டுமானால், இதைச் சாதனையாகக் கூறலாம். ஆனால், நடைமுறை அரசியலில் இது எந்தளவுக்குச் சாதகமானது என்ற கேள்விகள் உள்ளன.
அண்மையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் டிலான் பெரேரா ஒரு கருத்தை கூறியிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைப்பதைத் தடுக்கவே, தாம் அந்தக் கட்சியுடன் கூட்டு அரசாங்கத்தை அமைக்க இணங்கினோம் என்றும், கூட்டமைப்பும் ஐ.தே.கவும் இணைந்து ஆட்சியமைத்தால், அது நாட்டுக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தி விடும் என்றும் கூறியிருந்தார்
ஐ.தே.கவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் பெரும் பகையாளிகளாக இருந்த போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்துக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக ஒன்றிணைந்தன. அதுபோலவே, பொது எதிரிக்கு எதிராக, உள் முரண்பாடுகளை மறந்து ஒன்றிணையத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தயாராக இருக்கவில்லை. அதன் விளைவு தான் இந்தப் புதிய கூட்டு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பியோ விரும்பாமலோ, இந்தக் கூட்டை உருவாக்க வேண்டியிருந்தது. ஏனென்றால், சபைகளின் நிர்வாகத்தை எப்படியாவது நடத்தியாக வேண்டும். அடுத்த நான்கு ஆண்டுகளில், இப்படித்தான் தொடர வேண்டும் என்பது முடிவாகி விட்ட நிலையில், அதை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களைச் செய்தாக வேண்டும்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரையில், உள்ளூராட்சி சபைகளில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு முடிவை எடுத்தது. உதாரணத்துக்கு, யாழ். மாநகரசபையில் இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அழுங்குப்பிடியில் இருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, வல்வெட்டித்துறை நகர சபைக்கு பகிரங்க வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரியது.
வல்வெட்டித்துறை நகரசபையில், சுயேட்சைக் குழுவுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கான குறைந்தபட்ச வேலையைக் கூட, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுக்கவில்லை. அங்கு கூட்டமைப்பு நிறுத்திய வேட்பாளருக்கு எதிராக சுயேட்சைக் குழு போட்டியிட்ட போதும், இரண்டு ஆசனங்களைக் கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ, ஓர் ஆசனத்தைக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியோ அவருக்கு ஆதரவளிக்கவில்லை. இதுவோர் உதாரணம் மாத்திரமே, ஈ.பி.டி.பியும் கூட அப்படித்தான். யாழ். மாநகரசபையில் ஒரு முடிவை எடுத்தது. பருத்தித்துறை, வல்வெட்டித்துறையில் இன்னொரு முடிவை எடுத்தது.
யாழ். மாநகர சபையைப் பொறுத்தவரையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, 13 வாக்குகளை வைத்துக் கொண்டு, 45 பேர் கொண்ட சபையில் பெரும்பான்மை வாக்குகள் தமக்கு கிடைக்கும் என்று எப்படி நம்பியது என்ற கேள்வி உள்ளது.
ஆர்னோல்ட் மேயராவது கூட்டமைப்புக்குள் ஒரு பகுதியினருக்குப் பிடிக்கவில்லை என்பதால், அவர்களுக்குள் ஏற்படக் கூடிய பிளவைப் பயன்படுத்தி, போட்டியில் குதித்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலராவது தமக்கு வாக்களிக்கலாம் என்பதால்தான், இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது.
ஏனைய கட்சிகளில் இருந்து தெரிவான பலரும், தமக்கு ஆதரவு தர முன்வந்துள்ளனர் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகிரங்கமாகவே கூறியிருந்தார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைக்கு விரோதமாக, போட்டியிட்டு வாக்குகளைப் பெற்றவர்களைக் கூட, தமது பக்கம் அரவணைக்க அவர்கள் தயாராக இருந்தனர்.
யாழ். மாநகர சபைக்குப் போட்டியிட்டு, குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தாலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதிக ஆசனங்களைப் பெற்ற, சாவகச்சேரி, பருத்தித்துறை நகர சபைகளில் ஆட்சியமைக்க அனுமதித்திருக்க வேண்டும்.
அது பெருந்தன்மையை காட்டுவதாக இருந்திருக்கும். புதிய அரசியல் கலாசாரத்துக்கான அடையாளமாகவும் பார்க்கப்பட்டிருக்கும். அதைக் கூட்டமைப்பு செய்யத் தவறி விட்டது, அதனால் தான், பெரும் பழியைச் சுமக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இப்போது என்ன தான் சுழித்துக் கொண்டு, சபைகளின் ஆட்சியை அமைத்துக் கொண்டாலும், இது ஒரு ‘முள் படுக்கை’ என்பது கூட்டமைப்புக்குத் தெரியும்.
அறுதிப் பெரும்பான்மை இல்லாத சபைகளில் எந்த நேரமும் தலைவலி காத்திருக்கும். உள்ளூராட்சி சபைகளில் அடுத்த நான்கு ஆண்டுகளும், கூட்டமைப்புக்கு சோதனையாகவே இருக்கப் போகிறது.