(மொஹமட் பாதுஷா)
ஒரு நாட்டின் மீது, இனக் குழுமத்தின் மீது, போர் தொடுப்பதற்கு முன்னதாக, மெல்லமெல்ல ஏனைய மக்கள் மத்தியில், அதற்கான காரணத்தை விதைத்து வருவது, உலக அரசியலுக்குப் புதிதல்ல. முஸ்லிம் விரோத சக்திகள், ஓரிரு முஸ்லிம் நாடுகளில், உயிராபத்தை ஏற்படுத்தும் ஆயுதங்கள் இருப்பதாகச் சொல்லியும் பயங்கரவாதிகள் நிலைகொண்டுள்ளனர் எனக் கூறியும் கொடுங்கோல் ஆட்சி நடப்பதாகச் சித்திரித்தும், அந்நாடுகள் மீது போர் தொடுத்து, உள்நாட்டுக் கலவரங்களை ஏற்படுத்தி, அந்நாடுகளைச் சின்னாபின்னமாக்கியதற்கு, நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.
குறிப்பாக, ஈராக்கில் உயிரழிவை ஏற்படுத்தும் ஆபத்தான ஆயுதங்களை, சதாம் ஹூஸைன் வைத்திருப்பதாகச் சொல்லி, அந்நாட்டின் மீது போர் தொடுத்து, சதாமுக்குத் தூக்குத் தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.
இதுஇவ்வாறிருக்க, புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் என அறியப்படுகின்ற கே.இன்பராசா என்பவர், அண்மையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், “யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், புலி உறுப்பினர்கள் ஆயுதங்களை, முஸ்லிம்களுக்கே நல்ல விலைக்கு விற்பனை செய்தனர். எனவே, நாட்டில் இப்போது, முஸ்லிம்களிடமே ஆயுதங்கள் இருக்கின்றன” எனக் கருத்துரைத்திருந்தமை பெரும் சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கிறது.
இதற்கெதிராக முஸ்லிம் சமூகத்தில் இருந்து, கடுமையான கண்டனங்கள் முன்வைக்கப்படுவதுடன், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படுகின்றது. ஏறாவூர், சம்மாந்துறை, மூதூர் உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், முஸ்லிம் செயற்பாட்டாளர்கள், சட்ட நடவடிக்கையிலும் களமிறங்கியுள்ளனர்.
சமகாலத்தில், இராவண பலய போன்ற ஓரிரு பௌத்த கடும்போக்கு அமைப்புகளும் இன்பராசாவின் நிலைப்பாட்டையொத்த அறிக்கையை வெளியிட்டிருந்தன.
அதுமாத்திரமல்லாமல், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் எனத் தன்னை அடையாளப்படுத்திய போதும், வேறுவிதமான அரசியல் நிலைப்பாடுகளில் நின்றுகொண்டு, அறிக்கைகளை விட்டுச் சர்ச்சைக்குள்ளாகும் நபரான தேசிய சுதந்திர முன்னணியின் மொஹமட் முஸம்மில் (முன்னாள் எம்.பி), முஸ்லிம்கள் முகஞ்சுழிக்கும் இக்கருத்தை, ஏதோ காரணத்துக்காக வழிமொழிந்து, “முஸ்லிம் அரசியல்வாதிகளிடம், ஆயுதங்கள் இருப்பது பற்றி விசாரிக்க வேண்டும்” என்று, தனது ‘அக்கறையை’ வெளிப்படுத்தி இருக்கின்றார்.
குறிப்பிட்டதோர் இனக் குழுமத்தைச் சேர்ந்த மக்களிடம், இல்லாத ஆயுதங்களை இருப்பதாக, அடிப்படையற்ற விதத்தில் கூறுவதானது, ஐ.சி.சி.பி.ஆர் எனப்படும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் 3(1மற்றும்2) பிரிவுகளின் கீழ், ‘இனவெறுப்புப் பிரசாரம்’ என, முஸ்லிம்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இனநல்லிணக்கம் பேசி வருகின்ற சமூகங்களுக்கு மத்தியில், இனவாதத் தீ கனன்று கொண்டிருக்கின்ற ஒரு காலப்பகுதியில், இப்படியான பாரதூரமான கருத்தொன்று முன்வைக்கப்படுவது, தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த நாட்டில் வாழும், எந்த இனத்தையும் சேர்ந்த அப்பாவிப் பொதுமக்கள் எவருமே, ஆயுதங்களை விட்டு விலகியிருக்கவே விரும்புகின்றார்கள்.
அதேபோல், இலங்கை முஸ்லிம் இளைஞர்கள், தமிழ் ஆயுதக் குழுக்களில் இணைந்து, விடுதலைப் போராட்டத்துக்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்திருந்தாலும், நாட்டுக்காக அரச படைகளில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியிருந்தாலும், சாதாரண முஸ்லிம் மக்கள், எப்போதும் ஆயுதங்களில் இருந்து, தூர விலகியிருக்கவே விரும்புகின்றனர்.
இலங்கையில் முஸ்லிம்கள், எந்தக் கட்டத்திலும், தமிழர்களின் அளவுக்கேனும் ஆயுதங்களில் நம்பிக்கை வைத்தவர்களல்ல. அத்துடன், தமிழர்களைப் போல, ஆயுதப் போராட்டமொன்றை முன்னெடுத்தவர்களும் அல்லர்.
உலகில் முஸ்லிம் போராளிகளை உள்ளடக்கிய பல ஆயுத இயக்கங்கள் இருந்தாலும், முஸ்லிம்கள் போராட்டக் குணம் கொண்டவர்களாக பிரதிவிம்பப்படுத்தப்பட்டாலும் இலங்கையைப் பொறுத்தமட்டில், முஸ்லிம்களிடையே பெருமளவு ஆயுதங்களோ, கட்டமைக்கப்பட்ட ஆயுதக் குழுக்களோ இல்லை என்பதே நிதர்சனமாகும்.
ஆனாலும், முஸ்லிம்களைச் சீண்டிவிட்டு, அவர்கள் கிளர்ந்தெழும் போது, மிகப் பலமான கருவிகள் கொண்டு அடக்கி, தாம் முன்சொன்ன கருத்துச் சரி என நிரூபிப்பதற்கும், அதனூடாக முஸ்லிம் விரோத நாடுகளின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்கும், அடிக்கடி இதுபோன்ற நச்சுக் கருத்துகள், இலங்கையில் விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதற்காக, பல வகையான இனவாத சக்திகள் திரைமறைவில் ஒன்றிணைந்து இயங்குகின்றன என, முஸ்லிம்கள் திடமாக நம்புகின்றனர்.
ஒரு பல்லின நாடான இலங்கையில், முஸ்லிம் அடிப்படைவாதமும் தீவிரவாதமும் இருப்பதாகச் சில காலத்துக்கு முன்னர், இனவாத சிந்தனையாளர்கள் சொன்னார்கள்; ஆனால், அதை நிரூபிக்க முடியவில்லை.
பிறகு, ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற குழுக்கள், இலங்கையில் செயற்படுவதாக ஒரு கதையை உலாவ விட்டார்கள். ஆனால், நாட்டின் பாதுகாப்புத் தரப்பு, அவ்வாறான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று, உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இப்போது ஆயுதக் கதை சொல்ல ஆரம்பித்து இருக்கின்றார்கள்.
‘கரடிவிடுதல்’ என்ற சொல்லுக்கு அர்த்தம், தான் சொல்வதை, மற்றவர்கள் நம்புவார்கள் என்று நினைத்து, பொய்யைச் சோடித்துக் கூறுதலாகும். சுருங்கக்கூறின், அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால், இதன் உள்நோக்கமும் இதற்குப் பின்னால் உள்ள அரசியலும் அதன் நிகழ்ச்சி நிரலும் மிகப் பாரதூரமானவையாகும்.
உண்மையில், புலிகளால் விற்கப்பட்ட ஆயுதங்கள், முஸ்லிம்களிடம் இருக்கின்றன என்று, சொல்லப்படுகின்ற கருத்தின் புத்திசாலித்தனம் பற்றியும் சிந்திக்க வேண்டும்.
தமிழர்களின் விடுதலைப் போராட்டம், சிலபோதுகளில் பிற இன மக்களால் வெறுக்கப்படுவதாக இருந்தது என்றாலும் கூட, அதனது ஆரம்பகால அடிப்படை நோக்கமென்பது உன்னதமானது.
விடுதலைப் போராட்டத்தால் உருவான சூழ்நிலைகளால் சிங்கள, முஸ்லிம் மக்கள் உயிர், உடைமை இழைப்புகளைச் சந்தித்தாலும் கூட, இந்த விடுதலைப் போராட்டத்துக்காகப் போராடியவர்களின் தியாகம் என்பது, விலைமதிப்பற்றது என்பதை மறுக்க முடியாது.
இப்பேர்ப்பட்ட போராளிகள், புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர், தங்களிடம் மீதமிருக்கின்ற, அதுவும் போராட்டத்தின் அடையாளச் சின்னமான ஆயுதங்களை, விற்றிருப்பார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.
வருமானமில்லாமல் வாழ வழியற்று, யாருடைய உதவியுமின்றி வாழும் நிலை வந்தால், ஓரிரு போராளிகள், ஆயுதங்களை விற்பனை செய்திருக்கலாம் என்பது யதார்த்தமானதே.
அப்போது, நல்ல விலையை யார் தருகின்றார்கள் என்றே அவர்கள் பார்ப்பார்களேயொழிய, கொள்வனவாளர் முஸ்லிமா, சிங்களவரா எனப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார் என்பதையும் எல்லோரும் ஏற்றுக் கொள்வர்.
யதார்த்தம் இவ்வாறிருக்க, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள், ஆயுதங்களை விற்றார்கள் என்றும், அதை முஸ்லிம்களே வாங்கினார்கள் என்றும் பொதுப்படையாகக் கூறுவது, அபத்தமானதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.
உண்மையிலேயே, வலுவான ஒரு காரணம் இன்றி, பெருமளவிலான முன்னாள் போராளிகள், அதை விற்றிருப்பார்கள் என்றால், அது உலகத் தமிழர்கள், அவர்கள் மீது வைத்திருத்த நம்பிக்கையையும் போராட்டத்தின் அர்ப்பணிப்பையும் பூச்சியத்தால் பெருக்குகின்ற செயல் என்றே கூற வேண்டும்.
அதேபோல், ஏதோ ஒரு காரணத்துக்காக, ஒரிருவர் அவ்வாறு செய்திருப்பினும் அதை எல்லோரும் செய்தது போன்று பெருப்பித்து, ஆதாரங்களை முன்வைக்காமல் அறிக்கை விடுவது, இந்தப் போராட்டத்தையே கொச்சைப்படுத்துவதற்குச் சமனாகும்.
சரியாகச் சிந்தித்தால், ‘முஸ்லிம்களுக்கு ஆயுதம் விற்கப்பட்டது’ என்ற இக்கருத்தைத் தமிழர்கள் கூட, ஏற்றுக் கொள்ள மட்டார்கள். அதையும் தாண்டி, மேற்குறிப்பிட்ட நபர், இப்படியான ஒரு கருத்தைக் கூறியிருக்கின்றார் என்றால், அதற்கு வலுவான ஒரு காரணமோ, பின்னணியோ இருக்க வேண்டும் என்பது மட்டும் நிச்சயம்.
நாட்டில், எந்தவோர் இனத்தைச் சேர்ந்த மக்களிடமும், பகிரங்கப் புழக்கத்தில் ஆயுதங்கள் இல்லை என்பதுடன், முன்னைய காலங்களில் இருந்த ஆயுதங்கள், பொலிஸ் நிலையங்கள் ஊடாகக் கட்டங்கட்டமாக, அரசாங்கத்தால் மீளப் பெறப்பட்டும் விட்டன.
யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட பெருமளவான ஆயுதங்கள், தற்போது பயன்படுத்த முடியாதவையாகப் போயிருக்கும். ஒருசிலரிடமே, பாதுகாப்புக் காரணங்களுக்காக அனுமதிப்பத்திரத்துடனான துப்பாக்கிகள் தற்சமயம் இருப்பதாகத் தெரிகின்றது. இதைப் புரிந்து கொள்ள, பெரிய அறிவு அவசியமில்லை.
ஆனால், அதற்காக இலங்கையில், ஆயுத வியாபாரம் இல்லை என்று கூறுவதற்கில்லை. பணம் இருந்தால், கறுப்புச் சந்தையில் ஆயுதங்களைக் கொள்வனவு செய்து, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை காண்கின்றோம்.
எனவே, ஆயுதத்தை விற்பது என்று முடிவெடுத்துவிட்டால், யாரும் யாருக்கும் விற்க முடியும்; எந்த இனத்தைச் சேர்ந்தவரும் அதை வாங்கலாம். ஆனால், முன்னாள் புலி உறுப்பினர்கள், ஆயுதங்களை விற்றார்கள் என்பதும், அதை முஸ்லிம்கள்தான் வாங்கினார்கள் என்பதும், ஏற்றுக் கொள்ள முடியாத ‘கரடிவிடுதல்’ ஆகும்.
எவ்வாறாயினும், இலங்கையில் வாழ்கின்ற சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகிய முக்கிய இனங்களுக்கிடையே, பிளவுகளை ஏற்படுத்துவதற்காக, நிறையச் சக்திகள் திரைமறைவில் வேலை செய்து கொண்டிருக்கின்றன.
அதேபோன்று, மூன்று இனங்களுக்கு இடையிலும் இருக்கின்ற ஒற்றுமையையும் கெடுத்து, இனங்களை மோதவிடும் திட்டமொன்று, தென்னாசியப் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளைப் போல, இலங்கையிலும் நகர்த்தப்படுகின்றது.
இதற்குப் பின்னால் முஸ்லிம் விரோத நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களும், இனவாதங்களின் கூட்டு நிகழ்ச்சி நிரல்களும் இருக்கின்றன. ஆனால், இதை அமுல்படுத்தக் களத்தில் இறங்கும் முகவர்களை அன்றி, செயற்பாட்டாளர்கள் இதுபற்றி அறியாமல் கூட இருக்கலாம்.
உலகில் 18 பில்லியனாகவும் இரண்டாவது மிகப் பெரிய மதக் குழுமமாகவும் வாழ்கின்ற முஸ்லிம்களிடையே, இயக்க ரீதியான பிளவுகளை ஏற்படுத்துவதுடன், முஸ்லிம்களுடன் ஏனையோரை மூட்டிவிடுகின்ற கைங்கரியத்தையும் அமெரிக்க, இஸ்ரேல் உள்ளிட்ட முஸ்லிம்கள் விரோத நாடுகள், கனகச்சிதமாகச் செய்து வருகின்றன.
பொய்க் கதைகளைக் கட்டிவிட்டு அல்லது ஒரு விடயத்தைப் பூதாகரமாக்கி, அதன்மூலம் குறிப்பிட்ட முஸ்லிம் நாடு அல்லது ஆட்சியாளர் பற்றிய பயத்தையும் அந்த நாடு அல்லது அந்த மன்னர் அழிக்கப்பட வேண்டியர் என்ற நியாயத்தையும் உலக மக்களிடையே நிலைநிறுத்திவிட்டு, முஸ்லிம்களின் மீதான சம்ஹாரத்தை, மேற்சொன்ன முஸ்லிம் விரோத நாடுகள் நடைமுறைப்படுத்துகின்றன.
மேற்குலகிடம் மண்டியிட்டுக்கிடக்கும், சவூதி அரேபியா போன்ற ஓரிரு முஸ்லிம் நாடுகளும் இதற்கு முட்டுக் கொடுப்பதைக் காண முடிகின்றது.
‘முஸ்லிம்களிடம் ஆயுதம் இருக்கின்றது’ என்ற கருத்தை மேற்குறிப்பிட்ட அடிப்படையிலேயே முஸ்லிம்கள் நோக்குகின்றனர்.
அதாவது, இலங்கை முஸ்லிம்கள் பற்றிய ஒரு பயத்தை ஏற்படுத்தி, அவர்களை ஏனைய இன மக்களை விட்டுத் தூரமாக்கி, தூரநோக்கில் நீண்ட காலப் பகைமையை வளர்த்தெடுத்து, முஸ்லிம்களை ஆயுததாரிகளாகச் சித்திரித்து, அவர்கள் மீது வெறுப்பை உண்டுபண்ணி, முஸ்லிம்கள் தாக்கப்படும் போது, ஏனைய இன மக்கள் குரல் கொடுப்பதைத் தடுப்பது, இதன் குறுகியகால நோக்கமாக இருக்கும்.
சுருங்கக் கூறின், ‘முஸ்லிம்கள் அடக்கியொடுக்கப்பட வேண்டிய அளவுக்கு ஆபத்தானவர்கள்’ என்ற மனப்பதிவை, தமிழர்களினதும் சிங்களவர்களினதும் மனங்களில் எந்த அடிப்படையிலாவது ஏற்படுத்துவதே, இந்தக் கருத்தியலுக்குள் உள்ளுறைந்துள்ள நஞ்சு ஆகும்.
திடீரென இந்தக் கருத்தை இன்பராசா என்பவர் அறிவித்ததும், அதன் பின்னர், இராவண பலய வெளியிட்டுள்ள அறிக்கையும், தே.சு.முன்னணியின் முஸம்மில் கூறுகின்ற விடயமும் சாதாரணமானவை அல்ல.
பகுத்தறிவின்படி, இதை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி நோக்குகின்ற யாரும், இக்கருத்துகள் சந்தர்ப்பவசமாக வெளியிடப்படுகின்றவை என்று கருத மாட்டார்கள்.
முஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக, முஸ்லிம் விரோத சக்திகள் கூறுவது என்பது, உண்மையில் முஸ்லிம்களின் தன்மானப் பிரச்சினை மட்டுமன்றி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக் கூடியதும் ஆகும்.
எனவே முஸ்லிம் கட்சித் தலைவர்கள், அரசியல்வாதிகள் விரைந்து செயற்பட்டு, இவ்வாறான விசமக் கருத்துகளை வௌிப்படுத்துவோருக்கு வாய்ப்பூட்டுப் போட வேண்டும் என்பதுடன், அரசாங்கம் இதை விசாரித்து, உண்மை நிலையை நாட்டு மக்களுக்கும், சர்வதேசத்துக்கும் வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.