(கனகலிங்கம் கோபிகிருஷ்ணா)
இலங்கையின் வடக்குப் பகுதியிலிருந்து, முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டு 26 ஆண்டுகள், சில நாட்களுக்கு முன்னர் பூர்த்தியடைந்தன. வழக்கமாக, ஒவ்வோர் ஆண்டும் பூர்த்தியாகும் போது இருப்பதைப் போன்று, அந்த வாரத்தில் அதுபற்றிய பேச்சுகளும் கருத்துகளும் இடம்பெற்றிருக்கின்றன. இம்முறையும், கலந்துரையாடலொன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. வழக்கமாகவும் இவ்வாறான கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்ற போதிலும், இம்முறை இடம்பெற்ற கலந்துரையாடலில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், பிரதம பேச்சாளராக இருந்தார். அக்கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான எம்.சுமந்திரனும், அங்கு உரையாற்றினார்.
இந்தக் கலந்துரையாடலில், “வடக்கு – கிழக்கின் எந்தப் பகுதியிலும், முஸ்லிம் மக்கள் வாழ உரித்துடையவர்கள்” என சம்பந்தனும், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை இனச்சுத்திகரிப்புத் தான் என சுமந்திரனும் குறிப்பிட்டமை, வரவேற்கத்தக்கது. அதில் குறிப்பாக, இனச்சுத்திகரிப்புக் கருத்தை, கடந்தாண்டு தெரிவித்து, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் சிலரிடமும் தமிழ் மக்களில் ஒரு பகுதியினரிடமும் விமர்சனங்களைச் சந்தித்துக்கொண்ட சுமந்திரன், அதேபோன்ற கருத்தை மீள வலியுறுத்தியிருப்பது,முக்கியமான ஒன்று. இருவரினதும் இந்தக் கருத்துகளும் வரவேற்கப்படத்தக்கன.
ஆனால், அந்தக் கலந்துரையாடலில் இவர்கள் இருவரும் தெரிவித்த வேறு சில கருத்துகள், இந்த விடயத்தில் இவர்களது அர்ப்பணிப்பு அல்லது தூய எண்ணங்கள் குறித்துக் கேள்வியெழுப்பியிருக்கின்றன.
சம்பந்தனின் கருத்தில், வடக்கு முஸ்லிம்கள் யாரால் வெளியேற்றப்பட்டனரோ, அவர்களால் தமிழர்களும் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. 1995ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின் காரணமாக, தமிழர்கள், வன்னிப் பகுதிக்குச் செல்ல வேண்டியதையே அவ்வாறு கூறுவதாக அவர் குறிப்பிட்டார். இந்தக் கருத்து, அடிப்படையிலேயே மோசமான ஒப்பீடாகும். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை, யுத்தம் தீவிரமாகியிருந்த காலத்தில், பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கிடையாது. “துரோகிகள்” என்ற பட்டம் சுமத்தி, நேரடியான போர் நெருக்குவாரம் இல்லாத காலத்தில், போரல்லாத வேறு காரணங்களுக்காகவே அவர்கள் அனுப்பப்பட்டார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டமை, போரிலிருந்து தப்புவதற்காக ஆகும். இரண்டையும் ஒப்பிட்டு. ஒரே மாதிரியான பிரச்சினை போன்று சித்திரிப்பது, வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினையைச் சிறுமைப்படுத்துவதாகும்.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள், இன்னமும் எவ்வாறு மீளக்குடியமர்த்தப்படவில்லையோ, அகதி முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களில் ஒரு பகுதியினரும், இன்னமும் மீளக்குடியமர்த்தப்படவில்லை என்பது உண்மையானது. ஆனால், முஸ்லிம்களின் வெளியேற்றத்துக்கும் மீள்குடியமர்த்துதலுக்கும், தமிழர்களின் வெளியேற்றத்துக்கும் மீள்குடியமர்த்துதலுக்கும் இடையில் முடிச்சுப் போடுதல் அல்லது ஒப்பிடுதல் என்பது தவறானது; அடிப்படையற்றது.
அதேபோன்று, ஒருவர் பிரச்சினையைச் சந்தித்துள்ள போது, “எனக்கும் இவ்வாறு தான் நடந்தது. நான் இப்படி உணர்ந்தேன்” என, பாதிக்கப்பட்டவரின் கதைகளைத் திசைதிருப்பும்படியான கருத்துகளை வெளிப்படுத்துவது, அவரை மேலும் பாதிக்குமென உளவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். ஒருவரது கவலையான தருணங்களில், அது தொடர்பான உரையாடல், அவரைப் பற்றியதாகவே மையப்படுத்தப்பட வேண்டுமென்பது, அவ்வறிஞர்களின் கருத்தாகும்.
சம்பந்தனின் உரையில், “முஸ்லிம்களை நாங்கள் குறைகூறவில்லை… எனினும் முஸ்லிம் தலைவர்கள், எமது போராட்டத்துக்கு ஒத்துழைப்புத் தரவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். ஜெனீவாத் தீர்மானங்களின் போது, மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் காணப்பட்ட அமைச்சர்கள், அந்தத் தீர்மானத்துக்கு எதிராகச் செயற்பட்டமையை, அவர் சுட்டிக்காட்டினார்.
இதில் முதலாவதாக, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு, முஸ்லிம் தலைவர்கள் எதற்காக உதவ வேண்டும் எனச் சம்பந்தன் நினைக்கிறார் எனத் தெரியவில்லை. அதை உதவி என நினைத்தாரானால் அது வேறு விடயம். ஆனால், அவரது தொனியில், அவ்வாறு உதவுவதை கடமை போன்று கருதுகிறார் என்று தான் தெரிகிறது. சிறுபான்மை இனங்கள், தங்களுக்கிடையில் ஒற்றுமையாக இருப்பது சிறப்பானது தான். ஆனால் அந்த ஒற்றுமை, பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையிலும் நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் கட்டியெழுப்பப்பட வேண்டும். அவ்வாறான ஒற்றுமை, தற்போது காணப்படவில்லை என்பதே யதார்த்தம்.
அடுத்ததாக, வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியமர்த்துதல் தொடர்பாக, தமிழ்த் தலைமைகளால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை, சம்பந்தன் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இரு இனங்களுக்கிடையிலான கருத்து வேறுபாட்டில், தமிழர்களின் போராட்டம் மீதும் தமிழ்த் தலைமைகள் மீதும், முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கும் நம்பிக்கையீனம் ஏற்பட்டமைக்கு, முஸ்லிம்களின் வெளியேற்றமே பிரதானமான காரணமாக அமைந்தது. அந்த மக்களின் மீள்குடியேற்றத்துக்காக உழைக்க வேண்டியது, தமிழ்த் தலைமைகளின் கடமையல்லவா? அதை எத்தனை பேர் செய்திருக்கிறார்கள்? சம்பந்தன் செய்திருக்கிறாரா?
மூன்றாவதாக, முன்னைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகித்து, அந்த அரசாங்கத்தின் கொள்கைகளைப் பின்பற்றியமை தவறு என்றால், இறுதி யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழுள்ள அரசாங்கத்தை நம்புவதாக சம்பந்தன் தெரிவிக்கின்றமை எந்த வகையில் சேரும்? படையினரை நீதிமன்றத்துக்கு அனுப்ப மாட்டேன் என்று சொல்கின்றமை குறித்து சம்பந்தன் என்ன நினைக்கிறார்? சர்வதேச நீதிபதிகள் விடயத்தில், வெளிநாட்டில் ஒன்றும், இலங்கைக்குள் ஒன்றும் சொல்லும் அரசாங்கத்தின் கொள்கை குறித்தும், அவ்வரசாங்கத்தை நம்புவதாகக் கூறுகின்றமை குறித்தும் சம்பந்தன் என்ன நினைக்கிறார்?
முஸ்லிம்களின் மீள்குடியமர்த்துதல் என்பது ஒருபுறமிருக்க, முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை நிபந்தனைகள் எதுவுமற்ற தவறு, வரைவிலக்கணங்களின்படி அதுவோர் இனச்சுத்திகரிப்பு என்பதையாவது உறுதியாகச் சொல்லும் தைரியம், தமிழ்த் தலைமைகளுக்கு இருக்கிறதா? இந்தக் கலந்துரையாடலில் வைத்து, அதை இனச்சுத்திகரிப்பு என்றழைத்தமைக்காக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், அதற்குக் கண்டனம் தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. அவ்வெளியேற்றத்தை இனச்சுத்திகரிப்பு என்றழைப்பது, இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்துமென அவர் கூறியிருக்கிறார். இது, சுரேஷ் மாத்திரமன்றி, பல தமிழ்த் தலைமைகளின் நிலைப்பாடு. அதற்கான பிரதான காரணம், தமிழ் மக்களின் வாக்குகளை இழக்கும் ஆபத்துத் தான்.
முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அதை நியாயப்படுத்துவதற்காக, “முஸ்லிம்கள் காட்டிக் கொடுத்தார்கள். அதனால் வெளியேற்றப்பட்டார்கள். அதில் தவறு இல்லை” என்ற பிரசாரமே, தமிழ் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டது. இன்னமும் கூட, தமிழ் மக்களில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினர், அதே மனநிலையைத் தான் கொண்டிருக்கின்றனர். அந்த மனநிலையை மாற்றி, மற்றைய சிறுபான்மை இனத்துக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க முயல்வதை விடுத்து, வாக்குகள் குறைந்துவிடும் என அஞ்சும் தலைமைகள் இருக்கும் போது, இனங்களுக்கிடையில் எவ்வாறு ஒற்றுமை ஏற்படும். எழுத்தாளரும் செயற்பாட்டளருமான ஜேம்ஸ் ஃபிறீமான் கிளார்க் கூறியதைப் போல, “அரசியல்வாதி என்பவன், அடுத்த தேர்தலைப் பற்றிச் சிந்திப்பவன்; அரசியல் தலைவன் என்பவன், அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திப்பவன்”. இங்கு, எத்தனை தலைவர்கள் இருக்கிறார்கள்?
அடுத்ததாக, உண்மையைச் சொல்லும் போது, இனங்களுக்கிடையில் ஒற்றுமை பாதிக்கப்படுமென, தமிழ்த் தரப்புத் தலைமைகள் சொல்வது கூட வேடிக்கையானது. இறுதி யுத்தம் தொடர்பான தமிழ்த் தரப்பின் கோரிக்கைகளில், “உண்மையைக் கண்டறிதல்” என்பது முக்கியமானது. இறுதி யுத்தத்தில் இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் யுத்தக் குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்கப்பட்டு, அவற்றுக்கு நீதி வழங்கினாலேயே, உண்மையான நல்லிணக்கம் ஏற்படுமென்பது, தமிழ்த் தரப்பின் நியாயமான கோரிக்கையாகும். ஆனால், முஸ்லிம்களின் வெளியேற்றம் என்ற விடயத்தில் மாத்திரம், “பழையதைக் கிளறினால் ஒற்றுமை பாதிக்கப்படும்” என்ற பாணியில் கருத்துகளைத் தெரிவிக்கின்றமை, இரட்டை நிலைப்பாட்டையே காண்பிக்கிறது. வடிவேலுவின் நகைச்சுவையில் சொல்வதானால், அடுத்தவனுக்கு வந்தால் தக்காளிச் சட்னி, தனக்கு வந்தால் இரத்தம் என்பது தான், இந்த இரட்டை நிலைப்பாட்டின் அர்த்தம்.
இந்த உரையாடலில், சம்பந்தன், முஸ்லிம் மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக, முஸ்லிம் அமைச்சர்கள் என்ன செய்தார்கள் எனவும் கேள்வியெழுப்பியிருக்கிறார். அந்தக் கேள்வியில் நியாயமிருக்கிறது. ஆனால் அதை, சம்பந்தன் கேட்பது தான் வேடிக்கையானது. தங்களைத் தெரிவுசெய்த தமிழ் மக்களுக்காக, இதுவரை என்ன செய்திருக்கிறது கூட்டமைப்பு? கண்ணாடிக் கூண்டுக்குள்ளிலிருந்து கல்லெறிவது போன்றதல்லவா இது? முஸ்லிம் அமைச்சர்கள் மீதான விமர்சனங்கள் எவ்வாறிருந்தாலும், தம்மைத் தெரிவுசெய்த மக்களுக்காக, சிறிதளவிலான சேவையையாவது அவர்கள் செய்திருக்கிறார்கள் என்பது மறுக்கப்பட முடியாதது. நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செய்தவை என்ன?
சுமந்திரன் தனது நேரத்தில், முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக, வடமாகாணசபை, அசமந்தப் போக்கைக் கடைப்பிடிப்பதாகக் குறிப்பிட்டார். அதில் மட்டும் தான் அச்சபை அசமந்தப் போக்குடன் நடக்கிறதா என்பது ஒரு கேள்வியாக இருக்க, வடமாகாண சபையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தமிழரசுக் கட்சி, இவ்விடயம் தொடர்பாகக் கட்சி மட்டத்தில் என்ன செய்தது, என்ன கலந்துரையாடியது? கட்சி மட்டத்தில் கலந்துரையாடப்பட்டும், அது தொடர்பாக மாகாண சபையால் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையா அல்லது வடக்கு முதலமைச்சர் மீதான விமர்சனத்தை வெளிப்படுத்துவதற்காக மாத்திரம் சுமந்திரனின் கருத்து வெளியிடப்பட்டதா என்பது, அவருக்கே வெளிச்சம்.
இவ்வாறு, ஆக்கபூர்வமான கலந்துரையாடலாக, தமிழ் – முஸ்லிம் இனங்களுக்கிடையிலான பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்பி, கடந்தகாலத் தவறுகளை மாற்றியமைப்பதற்குத் தமிழ்த்தரப்புத் தயாராக இருக்கிறது என்று வெளிப்படுத்துவதற்காகக் கிடைத்த அற்புதமான வாய்ப்பை, சம்பந்தனும் சுமந்திரனும் தவறவிட்டிருக்கிறார்கள் என்றே தெரிவிக்கத் தோன்றுகின்றது. இவ்விடயத்தில் அரசாங்கம், தமிழ்த் தலைமைகள், முஸ்லிம் தலைமைகள் என அனைவருமே அசமந்தப் போக்கில் செயற்படுகின்ற போதிலும், தங்கள் பக்கமுள்ள தவறை மறந்து/மறைத்து, எதிர்த்தரப்பு மீது குற்றங்கண்டுபிடிக்க முயலும் “திறமையைப்” பாராட்டத் தான் வேண்டும்.