(எஸ். ஹமீத்)
கடந்த சில தினங்களாக வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் ஊடகங்களில் பேசு பொருளாகியிருக்கிறார். இலங்கை வாழ் இஸ்லாமிய சமூகத்தின் உணர்வுகளை அவர் வெகுவாகக் காயப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதனால் ஊடகங்களில் அவர் பலவாறாக விமர்சிக்கப்படுகின்றார். உண்மையில் இதன் பின்னணியில் அய்யூப் அஸ்மினின் மிகக் கேடுகெட்ட ஓர் அரசியல் இருக்கிறது. இதுபற்றி மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்.
அடுத்த மாகாண சபை போனஸ் ஆசனத்தைப் பெற்றுக் கொள்வதற்குத் தன்னை வசைபாடும் முஸ்லிம் சமூகத்தின் ஒவ்வொரு சொற்களும் உதவி செய்யும் என்பது தற்போதைய வட மாகாண சபை உறுப்பினரான அய்யூப் அஸ்மினுக்கு நன்கு தெரியும். இஸ்லாமிய விழுமியங்களைப் பேணி நடக்கின்ற இலங்கை முஸ்லிம் மக்கள் தன்னைத் திட்டித் தீர்ப்பதானது, அடுத்த மாகாண சபை உறுப்பினர் பதவியைத் தான் பெற்றுக் கொள்வதற்கான உத்தரவாதம் என்பதும் அவருக்கு மிக நன்கு தெரியும். ஆனால், இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் என்ன மூடர்களா, தன்னைக் காரணமில்லாமல் திட்டுவதற்கு? பின் என்ன செய்யலாம்?
முஸ்லிம் மக்களைச் சீண்ட வேண்டும். முஸ்லிம்களை எதிர்ப்பது போல பாவனை காட்ட வேண்டும். முஸ்லிம்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்த வேண்டும். இவற்றின் மூலம் முஸ்லிம்கள் கோபமுற்றுத் தன் மீது வசைமாரி பொழிய வேண்டும் எனும் தனதிந்த வஞ்சக எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகத்தான் முஸ்லிம்களின் இதயங்களில் அண்மைக் காலங்களாக ஈட்டிகளைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார் இந்த அய்யூப் அஸ்மின் என்பதைப் புரிந்து கொள்வதற்கு உளவியலோ, தர்க்கவியலோ கற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. கொஞ்சம் சிந்தித்தாலே இந்த உண்மை புலப்பட்டுவிடும்.
அய்யூப் அஸ்மின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காகச் செய்யும் தியாகம் என்பது அவர் முஸ்லிம் சமூகத்தினால் எந்தளவு தாக்குதலுக்குள்ளாகிறார் என்பதைப் பொறுத்திருக்கிறது. இலங்கை முஸ்லிம் இனம் அஸ்மின் மீது காட்டும் சினத்தின் அளவும் அஸ்மின் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வைத்திருக்கும் நம்பிக்கையும் ஒன்றுக்கொன்று நேர்விகித சமனானவை. நமது சினம் கூடக்கூட அவரின் மீது கூட்டமைப்பு கொண்டுள்ள நம்பிக்கையும் கூடிச் செல்லும். நமது சினம் குறைந்தால் அந்த நம்பிக்கை குறைவடையும்.
இது அய்யூப் அஸ்மினின் வட மாகாண சபைப் பரீட்சைக்கான இறுதிக் காலம். இந்தப் பரீட்சையில் அவர் அதிக புள்ளிகள் பெற்றுச் சித்தியடைந்தால்தான் அவருக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மாகாண சபை உறுப்பினர் பதவிக்கான போனஸ் ஆசனத்தை வழங்கும். எனவேதான், இப்போதிருந்தே அவர் முஸ்லிம் சமூகத்திற்கெதிராக எழுதியும், பேசியும் தனக்கான புள்ளிகளைச் சேகரித்துக் கொண்டிருக்கிறார்.
‘தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தனது சொந்தச் சமூகத்தையே எதிர்த்துப் போராடிய வீரத் தியாகி’ என்று அய்யூப் அஸ்மின் பெறப்போகின்ற பட்டம்தான் அவருக்கான மாகாண சபை உறுப்பினர் பதவியை எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் உறுதி செய்யும். எனவேதான், ஒட்டுமொத்த முஸ்லிம்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தியபடி, அந்தப் பட்டத்தையும் பதவியையும் பெறுவதற்கு அவர் கடும் முயற்சிகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினருக்குச் சொந்தமான மாகாண சபை போனஸ் ஆசனத்தை நயவஞ்சகமாகக் கவர்ந்து, கடந்த காலங்களில் தனது சொகுசுகளையும் சுகங்களையும் உறுதிப்படுத்திக் கொண்ட அய்யூப் அஸ்மின், அவற்றின் ருசியைக் கண்ட பின்னர் அவற்றை விட்டுவிட முடியாத பேரவா நிலையில் தற்போது தத்தளித்துக் கொண்டிருக்கிறார்.
கூட்டமைப்புக்குப் பணம் கொடுத்தோ அல்லது கூட்டமைப்புக்காகப் பெரிதாக வாளேந்திப் போராடவோ வக்கில்லாத அவர் மிக மலிவானதும், இழிவானதுமான தந்திரங்கள் மூலம் தன்னைத் தக்க வைத்துக் கொள்ளத் தவியாய்த் தவிக்கிறார். அதன் பிரதான வெளிப்பாடுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பெரும் போட்டியாளனாக வட மாகாணத்தில் எழுச்சி பெற்றிருக்கும் அமைச்சர் றிசாத் மீதும், அபாயா உரிமைக்காக வெகுண்டெழுந்திருக்கும் முஸ்லிம் சமூகத்தின் மீதும் அண்மைக் காலங்களாக அவர் அள்ளி வீசும் நச்சுச் சொற்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் எதிர்ப்பதாக பாவ்லா காட்டிய சல்மான் ருஷ்தியை, தஸ்லிமா நஸ்ரினை நாம் கண்டு கொள்ளாமல் இருந்திருந்தால் இன்று அவர்கள் இத்தனை பிரபல்யமும் இஸ்லாத்தின் எதிரிகளிடமிருந்து இத்தனை சுகபோகங்களையும் பெற்றிருக்க முடியாது. நமது எதிர்ப்பும் அச்சுறுத்தலும்தான் அவர்களைப் பணத்தோடும் பாதுகாப்போடும், பந்தாவோடும் இன்று வாழச் செய்திருக்கிறது.
அய்யூப் அஸ்மினும் கூட அத்தகைய எதிர்ப்பையும் அச்சுறுத்தலையும்தான் இன்று முஸ்லிம் சமூகத்திடமிருந்து எதிர்பார்த்துக் காய்களைக் கனகச்சிதமாக நகர்த்திக் கொண்டிருக்கிறார். ஆக, அவரைக் கண்டு கொள்ளாமல்-கணக்கிலெடுக்காமல்-உதவாக்கரையொருவனின் உளறல்களாக அவரது கருத்து வெளிப்பாடுகளை ஊதித் தள்ளிவிட்டு, நமது பணிகளை நாம் மேற்கொள்வதன் மூலமே முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக் கொடுத்துத் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள எண்ணும் அய்யூப் அஸ்மின் என்னும் பிரகிருதியைத் தோல்வியடையச் செய்யலாம்!