(நியாஸ் கலந்தர்)
தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்திருக்கும் “எழுக தமிழ்”நிகழ்வானது 2017.01.21 ல் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.எழுக தமிழ் நிகழ்வானது தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிக்காட்டுவதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந் நிகழ்வுக்கு முஸ்லிம்களை அழைப்பது கருவேப்பிலை அரசியல் நகர்வாகும். தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் அதன் மூலம் முஸ்லிம் மக்கள் பயன் அடைய முடியுமா என்பதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளும், முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகளும் வேறுபாட்டு தன்மை கொண்டவை.
தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொள்ளுவதற்கு சர்வதேசத்தின் பார்வையை தமிழ் மக்கள் மீது திருப்பும் நோக்கமாகவே எழுக தமிழ் நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரிந்திருக்கும் வடக்கு, கிழக்கை இணைக்க வேண்டும் என விரும்பும் தமிழ் அரசியல் தலைவர்கள் எழுக தமிழ் நிகழ்வை முக்கியமான கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர். சமஷ்டி அரசியலமைப்பை ஏற்படுத்தவே ஆயுதம் மற்றும் அகிம்ஷை மூலம் தொடர்ச்சியாக போராட்டம் நடாத்தி வருகின்றார்கள்.
முஸ்லிம்களின் அதிகார அலகு,அதிகாரப் பரவல் மற்றும் அரசியல் அபிலாஷைகள் வேறுபட்டது. இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கில் தமிழ் தேசியத்துக்கென தமிழர் பெரும்பான்மை உள்ள நிலப்பரப்பில் ஒரு சமஷ்ட்டி ஆட்சியும், முஸ்லிம் தேசியத்திற்கென முஸ்லிம் பெரும்பான்மை உள்ள நிலப்பரப்பில் ஒரு சமஷ்ட்டி ஆட்சியையும் ஏற்படுத்த தமிழ் தேசியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் வடகிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம்கள் தங்களது ஆதரவை சில நேரம் வழங்குவார்கள். இதனை தமிழ் தேசியம் ஏற்றுக்கொள்ளாவிட்டால் வடக்கு, கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம்கள் ஒருபோதும் சம்மதம் தெரிவிக்கமாட்டார்கள். எனவே வடக்கு, கிழக்கு இணைப்பிற்கான ஒன்றினைந்த தீர்வை பெறாமல் முஸ்லிம் மக்களை எழுக தமிழ் நிகழ்விற்கு அழைப்பது நியாயமற்றது.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகள் இன்னும் தீர்த்து வைக்கபடாமலும், வடமாகாணத்தில் உள்ள முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் பக்கச் சார்பாக பகிந்தளிக்கப்பட்ட இந்திய அரசு வழங்கிய வீட்டுத்திட்டம் போன்ற குற்றச்சாட்டிற்கு சரியான தீர்வு எட்டப்படாத நிலையில் எழுக தமிழுக்கு முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்க முடியுமா என சிந்திக்க வேண்டி உள்ளது.
தமிழ் மக்களை தனி இனமாக பிரகடனப்படுத்த வேண்டும் என நினைக்கும் தமிழ் தலைவர்களுக்கு முஸ்லிம்களும் தனி இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதில் உடன்பாடு கிடையாது. யுத்தகாலத்தில் இடம்பெயர்ந்த மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் இன்னும் தங்களது இடங்களில் குடியமர்த்தப்படவில்லை. அம் மாவட்டத்தின் முஸ்லிம்களின் விகிதாசாரத்தின் படி அவர்களுக்கான காணிப்பகிர்வு இடம்பெறவில்லை. மேற்படி விடயங்களுக்கான சரியான தீர்வுகள் எட்ட முடியாமல் இருக்கும் நிலையில் வடக்கு,கிழக்கு இணைக்கப்படும் போது முஸ்லிம் மக்களுக்கு அநீதியை ஏற்படுத்தமாட்டோம் என தமிழ் அரசியல் தலைவர்கள் கூறும் வாக்குறுதிகளை எவ்வாறு நம்ப முடியும்.
எழுக தமிழ் என்பது முற்றுமுழுதாக தமிழ் மக்களை முன்னுருமைப்படுத்தி நடத்தும் செயற்பாடே தவிர முஸ்லிம்களுக்கு பிரயோசனமற்ற, கண்துடைப்பான ஒரு நிகழ்வாகும். தேவைக்கு மட்டும் முஸ்லிம்களின் பெயர்களை உச்சரிப்பதை தமிழ் தலைவர்கள் கைவிடவேண்டும் என்பது முஸ்லிம்களின் வேண்டுகோளாகும்.