முஸ்லிம்கள் பற்றி அமெரிக்காவின் இரு முக்கிய புள்ளிகள் வெளியிட்டிருக்கும் அறிக்கை உலகெங்கும் வாழும் இஸ்லாமிய மக்களிடையே மனக்கிலேசத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. உலக பொலிஸ்காரன் என்ற கற்பனைப் பதவியில் இருத்தப்படிருக்கும் ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின், ஒன்றுக்கொன்று முரணான இரு வௌ;வேறு முகங்களை இந்த கருத்துக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. இதில் ஒன்று- அழகான, அரவணைக்கும், இராஜதந்திர முகம். மற்றையது- விகாரமான, வெறுத்தொதுக்கும், மேற்குலக முகம்.
கலிபோர்னியா மாநிலத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 14 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு முஸ்லிம் கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றார்கள். இப் பின்னணியில் அமெரிக்காவில் பொதுவாகவே முஸ்லிம்கள் பற்றிய சந்தேகப் பார்வை ஒன்று உருவாகியுள்ளது.
சாதாரண குடும்பமாக வெளியில் தெரிந்த ஒரு கணவனும் மனைவியும் ஒரு பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணமாகியிருக்கின்றார்கள் என்பதால், முஸ்லிம்கள் விடயத்தில் என்றுமில்லாத எச்சரிக்கையை கடைப்பிடிக்க வேண்டிய நிலைக்கு அமெரிக்கர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்றும் சொல்ல முடியும். இவ்வாறான சூழ்நிலையிலேயே அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இருதினங்களுக்கு முன்னர் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கருத்தை வெளியிட்டார்.
முன்னதாக, அமெரிக்க குடியரசு கட்சியின் முக்கிய அரசியல்வாதியும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுபவருமான ரொனால்ட ட்ரம்ப், முஸ்லிம் எதிர்ப்பு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ‘அமெரிக்காவுக்குள் உள்நுழைவதற்கு முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்கப்படக் கூடாது.
அத்துடன் தற்போது நாட்டுக்குள் வசிக்கும் முஸ்லிம்களுக்கு தனியான ஆளடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். பள்ளிவாசல்கள் கண்காணிக்கப்படுவதும் அவசியமாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியாகும் கனவை சுமந்து திரியும் டொனால்ட், ‘ஐ.எஸ்.ஐ.எஸ். க்கும் பெற்றோல் வளத்துக்கும் இடையிலான தொடர்பை துண்டித்து அவ்வியக்கத்தை அழிப்பேன்’ என்று மேடைகளில் சூளுரைத்திருக்கின்றார்.
முஸ்லிம்கள் விடயத்திலும் பயங்கரவாதத்தைக் கையாளும் விடயத்திலும் அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை விமர்சித்துள்ள அவர், ஓரிடத்தில் – ‘ஈராக்கிலும் அமெரிக்காவிலும் மறைந்த இரு சர்வாதிகாரிகளும் உயிருடன் இருந்திருந்தால் அந்நாடுகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்’ என்று தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவும் கூட, அமெரிக்க அரசாங்கத்தின் மீதான அவரது நையாண்டியே தவிர, முஸ்லிம்கள் மீதான பற்றுதல் அல்ல என்பது கவனிப்புக்குரியது.
இந்நிலையிலேயே, அதாவது, டொனால்ட் ட்ரம்ப் மிதமிஞ்சிய இனவெறுப்பு பிரசாரத்தை ஆரம்பித்த போதே ஒரு பொறுப்புள்ள ஜனாதிபதி என்ற வகையில்; ஒபாமா கருத்தொன்றை தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பின் செயற்பாடுகளுக்கும் அவரது கொள்கையை வரவேற்கும் தரப்பினருக்கும் ஒபாமாவின் கருத்து, ஒரு சாட்டையாக அமைந்திருக்கின்றது எனலாம்.
தீவிரவாதத்தை வேரறுப்பது தொடர்பாக வெள்ளை மாளிகையில் இருந்தவாறு உரையாற்றிய ஜனாதிபதி பராக் ஒபாமா, ‘இஸ்லாத்துக்கு எதிராக போர் செய்ய அமெரிக்கர்கள் முயற்சி செய்யக் கூடாது என்று அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டில் தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெறுவதை அடிப்படையாகக் கொண்டு பிற மதத்தவரை ஒதுக்கி வைக்கக் கூடாது. கலிபோர்னிய தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட தம்பதியினரிடம் விசாரணை செய்த போது அவர்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.
மாறாக, இஸ்லாத்தை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அமெரிக்கா மீது தாக்குதல் நடாத்த மதத்துவேசம் என்ற இருண்ட பாதையை தேர்ந்தெடுத்திருக்கின்றனர். இதுபோன்ற செயல்களை அமெரிக்காவுக்கும் – இஸ்லாம் மதத்துக்கும் இடையிலான போராக மாற்றக் கூடாது. அவ்வாறு செய்ய வேண்டும் என்றுதான் ஐ.எஸ்.ஐ.எஸ். எதிர்பார்க்கின்றது’ என்று கூறியுள்ளார்.
மேலும், ‘இத் தீவிரவாதிகள் முஸ்லிம்களுக்காகப் பேசவில்லை. அமெரிக்க முஸ்லிம்கள் உள்ளடங்கலாக உலகெங்கும் வாழும் நூறுகோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் இத்தீவிரவாத சித்தார்ந்தத்தை வெறுக்கின்றனர். எனவே, தீவிரவாதத்தை ஒழிக்க முஸ்லிம்கள் எம்முடன் கைகோர்க்க வேண்டும்.
அத்துடன் நாட்டுக்குள் யாரை அனுமதிப்பது என்ற விடயத்தில் மத ரீதியான பரிசோதனைகளை புறக்கணிக்க வேண்டியதும், அமெரிக்க முஸ்லிம்களை வேறுமாதிரியாக நடாத்த வேண்டுமென்ற நோக்கத்தை நிராகரிக்க வேண்டியதும் எமது பொறுப்பாகும்’ என்றும் ஒபாமா அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கின்றார்.
அமெரிக்கா பற்றிய உலக முஸ்லிம்களின் பார்வை வேறு விதமானது. அந்நாட்டை அழிக்க வேண்டும் என்று எந்த சாமான்ய முஸ்லிமும் கருதவில்லை என்றாலும், உலகின் பல நாடுகளில் தீவிரவாத ஒழிப்பு என்ற கோதாவில் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு அமெரிக்காவும் அதன் சகாக்களுமே காரணம் என்பதில் பெரிதாக முஸ்லிம்களிடையே மாற்றுக் கருத்தில்லை.
எவ்வாறிருப்பினும், அமெரிக்காவின் ஜனநாயகத்ததை அவர்கள் மதிக்கின்றார்கள். அந்த வகையில், பரிஸ் தாக்குதலுக்கு பின்னர் உலகெங்கும் முஸ்லிம்கள் பற்றிய சந்தேகப் பார்வை வலுவடைந்து வருகின்ற ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க காலப்பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெளியிட்டிருக்கும் கருத்து மிகவும் முக்கியத்துவமானதாகும். இது இராஜதந்திரம் என்று விளங்கினாலும், முஸ்லிம்கள் பற்றிய தப்பபிப்பிராயத்தை இல்லாது செய்வதற்கு ஒபாமாவின் கருத்து வழிவகுக்கும் என்பதால் இக்கருத்தை, முஸ்லிம்கள் வரவேற்பார்கள் என்றே சொல்ல முடிகின்றது.
ஆனால், மறுபக்கத்தில் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்தும் முஸ்லிம் விரோத கருத்துக்களை கூறி வருகின்றார். அவர் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு எந்த முஸ்லிமும் பதிலளிக்கவில்லை. மாறாக அமெரிக்கர்களே அதிக கண்டனங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்திருக்கின்றனர்.
வெள்ளை மாளிகை இந்தக் கருத்தை மறுதலித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. டொனால்ட்டுக்கு போட்டியாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படும் ஜே‡ப் புஷ், ‘டொனால்ட் ஒரு மனநோயாளி’ என்று வர்ணித்திருக்கின்றார். பிரபல ஹரிபொட்டர் நாவலை எழுதியவரான ஜே.கே. ரவுலிங், தனது நாவலில் வருகின்ற வோல்டர்மார்ட் என்ற வில்லன் கதாபாத்திரத்தை விட டொனால்ட் கொடூரமானவராக தெரிகின்றார் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அது மட்டுமன்றி, அவருடைய கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பலைகள் ஏற்பட்டுள்ளன. இவர் சில பகுதிகளுக்கு செல்வதற்கு தடை விதிக்க மேயர்கள் தீர்மானித்துள்ளனர்.
வரலாற்று ஏடுகளின் பிரகாரம் 17ஆம் நூற்றாண்டில் இருந்து அமெரிக்காவில் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இன்றைய நிலைவரப்படி அமெரிக்காவில் கிட்டத்தட்ட முப்பது இலட்சம் முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். அந்நாட்டின் மொத்த சனத்தொகையில் இது 1 சதவீதம் என்றாலும், அங்கு வாழும் இந்துக்கள், பௌத்தர்களின் சனத்தொகையை விட முஸ்லிம்களின் சனத்தொகை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, 2000 இற்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
எனவே, நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல அமெரிக்கா நேரடியாகவே முஸ்லிம்களை இலக்குவைக்கும் ஒரு நாடாக இருந்திருந்தால், இத்தனை இலட்சம் முஸ்லிம்கள் அங்கு வாழ இயலாத நிலை ஏற்பட்டிருக்கும். இருப்பினும் ஜனநாயகம் என்ற அடிப்படையில் சில கட்டுப்பாடுகளுடனான மத உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவே கருத முடியும். எப்போதும் மிகச் சாதாரண ஒரு முஸ்லிமாக வாழும் வரைக்கும் பிரச்சினைகள் இருக்காது. எந்தவொரு முஸ்லிமும் எப்போது அளவுகடந்த மார்க்கப்பற்றை வெளிப்படுத்த ஆரம்பிக்கின்றானோ, அமெரிக்கர்களின் கண்ணை உறுத்தும் விதத்தில் மார்க்கத்தை கடைப்பிடிக்க தலைப்படுகின்றானோ, அப்போது அமெரிக்க புலனாய்வு பிரிவு அவனை பின்தொடர ஆரம்பிக்கும். குறித்த ஒரு முஸ்லிம் பயங்கரவாதத்துடன் ஏதேனும் உறவை வைத்திருப்பதாக எப்போது சந்தேகம் ஏற்படுகின்றதோ, அந்த வேளையில் பொலிஸ்காரன், வில்லனாக மாறுவான் இதுதான் யதார்த்தம்.
இது அமெரிக்காவில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, மிகக் கவனமாக அவர்கள் செயற்படுகின்றார்கள். கல்வியறிவில் இரண்டாவது- உயர்ந்த இடத்திலுள்ள அமெரிக்க முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் இராணுவத்தில் கூட அங்கம் வகிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. எனவே, அந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள், தமது மதத்தை பின்பற்றிக் கொண்டு சமகாலத்தில் அமெரிக்கர்களாக வாழப் பழகிக் கொண்டார்கள். தந்தைவழியில் முஸ்லிம் பரம்பரையை அடிப்படையாகக் கொண்டவராக அமரிக்க ஜனாதிபதி பராக் ஹுசைன் ஒபாமா இருந்தாலும், எந்த வேளையிலும் தன்னை ஓர் அமெரிக்கராகவே வெளிப்படுத்துகின்றார். இதுதான் அங்குள்ள எல்லா முஸ்லிம்களின் நிலைமையும்.
ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 1 இலட்சம் முஸ்லிம் குடியேறிகள் அமெரிக்காவுக்கு வந்து குடியேறுகின்றனர். இது இப்படியே போனால் 2050ஆம் ஆண்டில் முஸ்லிம்களின் சனத்தொகை பரம்பல் 2.1சதவீதமாக அதிகரிக்குமென ஆய்வுகள் கூறுகின்றன. இது இவ்வாறிருக்கத்தக்கதாக, பரிஸ் நகரிலும், பெய்ரூட்டிலும் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்கள் தாக்குதல்கள்- தீவிரவாதம் பற்றிய பாரிய எதிர்ப்பலையை உலகெங்கும் ஏற்படுத்தி இருக்கின்றன. வழக்கம்போல இது இஸ்லாத்தை பின்பற்றும் மதக்குழுமத்தின் மீதான சந்தேகப்பார்வைக்கு காரணமாகியிருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தை டொனால்ட் பயன்படுத்தி இருக்கின்றார் என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது.
பாரிஸ் தாக்குதலின் பின்னர் அந்நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இடம்பெற்ற தேர்தலில் இஸ்லாமிய எதிர்ப்புச் சிந்தனையுள்ள கட்சி வெற்றிவாகை சூடி இருக்கின்றது. இதே பாணியில் தானும் தன்னுடைய ஜனாதிபதிக் கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று டொனால்ட் டரம்ப் நினைக்கின்றார்.
கலிபோர்னிய தாக்குதல் அவரது முஸ்லிம் எதிர்ப்புக் கொள்கையை நியாயப்படுத்துவதற்கு நல்லதொரு கருவாகக் கிடைத்திருக்கின்றது. உலகிலும் அமெரிக்காவிலும் நன்றாக விலைபோகக்கூடிய ஒரு சரக்காக தீவிரவாதமும், முஸ்லிம் எதிர்ப்பும் இருப்பதால் டொனால்ட் தனது அதிகார ஆசைக்காக அதை பயன்படுத்துகின்றார். ஆயினும் ஜனாநாயகத்தை பற்றி உலகுக்கே பாடம் நடாத்தும் அமெரிக்காவில் இவ்வாறு ஒரு மதத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களை ஒதுக்குவதும், அதுபற்றி பகிரங்கமாக பேசுவதற்கு இடமளிப்பதும் ஜனநாயகத்தின் புனிதத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவதாகவே இருக்கும்.
அமெரிக்க அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில, தமது நலன், தீவிரவாத ஒழிப்பு, உலக அரசியல், முஸ்லிம்கள் என இன்னோரன்ன விடயங்கள் எல்லாவற்றையும் மிகவும் நுட்மான, சூட்சுமமான முறையில் கையாளவே முனைகின்றது. எல்லா விடயங்களையும் இராஜதந்திரமாகவே அணுகுவதற்கு அமெரிக்காவுக்கு நிகர் அமெரிக்காதான். தமது திரைமறைவும் கொள்கைகளை என்னவாக இருப்பினும் அந்த முகத்தை யாரொருவரும் வெளிப்படையாக காட்டுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது.
உலகுக்கு காட்டுவதற்காகவே வகுக்கப்பட்ட முகத்தையே எல்லோரும் வெளியுலகுக்கு காண்பிக்க வேண்டுமென்றே அது கருதுகின்றது என்றால் மிகையில்லை. பரிஸிலும், பெய்ரூட்டிலும், அமெரிக்காவிலும் இடம்பெற்ற தாக்குதல்களை பின்புலமாக வைத்துக் கொண்டு, தன்னுடைய ஜனாதிபதிக் கனவை நிறைவேற்றுவதற்கு குடியரசுக் கட்சி அரசியல்வாதியான டொனால்ட் ட்ரம்ப் எடுக்கின்ற இவ்வாறான முயற்சிகளுக்கு, அமெரிக்க அரசின் மேற்சொன்ன நிலைப்பாடு, விட்டுக் கொடுக்காது,
ஒருவேளை, எதிர்வரும் தேர்தலில் இனவாத சிந்தனையுள்ள டொனால்ட் அல்லது அவர் போன்ற இன்னுமொருவர் ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்காவின் மற்றைய முகம் வெளியில் வரக்கூடும், முஸ்லிம்களுக்கு அநேகமாக துரதிர்ஷ்டம் பிடிக்கலாம். அமெரிக்கா, எப்போது எந்த முகத்தைக் காட்டும் என்பதை அறிந்தவர் யாருமில்லர்.
(மொஹமட் பாதுஷா)