முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை

“முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டுவரும் சிங்களவர்களது மனநிலையை முஸ்லிம் மக்கள் இனியாவது புரிந்துகொள்ளவேண்டும். சிறுபான்மையினருக்கு எதிரான அவர்களது ஆதிக்க மனநிலையை முழுமையாக தெரிந்து – தெளிந்து – தமிழர்களோடு இணையவேண்டும். இரண்டு சிறுபான்மையினங்களும் பேரினவாத்துக்கு எதிராக அணிதிரளவேண்டும். சிங்கள இனவாத சக்தியின் உண்மையான முகத்தை இனியாவது புரிந்துகொள்ளவேண்டும்” –

– இப்படி தமிழர் தரப்பிலிருந்து கடந்த சில நாட்களாக ஓயாமல் – ஒவ்வொரு நாளும் – முஸ்லிம்களை நோக்கி ஆலோசனை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இது உண்மையிலேயே முஸ்லிம் மக்கள் மீதான அக்கறையில் பதிவு செய்யப்பட்டதா இல்லையா என்பது ஒருபுறமிருக்க இந்த ஆலோசனைகள் எனப்படுகின்ற அரசியல் புரிதல் குறித்து இந்த இடத்தில் பேசுவது மிகவும் முக்கியமானது.

1) தமிழ் – முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான உறவெனப்படுவது அகவயமாக மிகுந்த காயங்களுக்கு உள்ளாகி பல காலமாக பழுத்துப்போயிருக்கும் ஒரு விடயம். சிங்கள பேரினவாத சக்திகளால் மேற்கொள்ளப்படும் இரண்டொரு காடைத்தனமான தாக்குதல்களால் ஒரே இரவில் ஒட்டவைக்கப்படக்கூடிய உராய்வுகள் அல்ல. இன்னொரு வகையில் சொல்லப்போனால், சிங்கள பேரினவாத சக்திகளின் அராஜகத்துக்கு உள்ளாகும் நிலையில்கூட தமிழ் மக்களோடு இலகுவில் வந்து ஒட்டிக்கொள்ளும் நிலையில் முஸ்லிம்களின் மன நிலையிலும் சரி – தமிழ் மக்களது மனங்களிலும் சரி பரிபூரணமான அக அரவணைப்புக்கள் இடம்பெறவில்லை. ஆக, தற்போது இடம்பெற்றிருக்கும் தாக்குதல்களை காரணம் காட்டி, தமிழ் – முஸலிம் இன ஐக்கியத்தை வலியுறுத்துவது என்பது, 2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர் “விடுதலைப்புலிகள் அழிந்துவிட்டார்கள். இனி எல்லோரும் சிறிலங்கர்களாக மாறி ஒரு குடையின் கீழ் வாருங்கள்” – என்று மகிந்த விடுத்த அழைப்புக்கு ஒப்பானது. அடிப்படை அரசியலுக்கும் – முற்று முழுதான இன ஐக்கியத்துக்கும் – நேரெதிரானது. எலும்பு முறிவுக்கு தண்ணீர் ஊற்றி கழுவி விடுவதுபோன்றது. புறவயமாக பூச்சிடுவதற்கு முயற்சிப்பது.

2) மறுபுறத்தில், தற்போது சிங்கள பேரினவாத சக்திகளால் மேற்கொள்ளப்படும் இந்த தாக்குதல்களின் விளைவு முஸ்லிம் மக்களை மேலும் மேலும் தனித்துவமுடைய ஒரு சக்தியாக உந்தி தள்ளக்கூடிய நிலைதான் காணப்படுகிறதே தவிர, அங்கு தமிழ்மக்களை அவர்களை எந்தப்புள்ளியிலும் உளமார நம்பிக்கைக்குரிய சக்தியாக பார்க்கவில்லை. ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை. கடந்த காலங்களில் அளவுக்கதிகமாக நடைபெற்றவைகளும் நடைபெறாதவைகளும் சேர்ந்து உற்பத்தி செய்திருக்கும் சூழ்நிலை இது. இன்னொரு வகையில் கூறப்போனால், தற்போதைய நிலை மேலும் மோசமடையும்போது – அவ்வாறான நிலை உருவானால் – அப்போது ஒரு காலத்தில் அரசுக்கும் தமிழர் தரப்புக்கும் இடையில் போர் இடம்பெற்றபோது முஸ்லிம்கள் வகித்த “பார்வையாளர்” – என்ற பங்களிப்பைத்தான் தமிழ்மக்கள் வகிக்க நேரிடும்.

3) அப்படியானால், தமிழ் – முஸ்லிம் உறவுக்கு இலங்கையிர் சாத்தியமே இல்லையா? இலங்கை தீவில் சிறுபான்மை இனங்களுக்கு இடையிலான நல்லுறவுக்கு இடமே இனி இல்லையா? என்று கேட்பவர்கள் சற்று அகன்ற பார்வையால் இந்த பிரச்சினையை தள்ளிநின்று பார்க்க வேண்டுமே தவிர, தற்போது எரிந்துகொண்டிருக்கும் கடைகளுக்குள்ளும் வீதியில் குறுக்காக வெட்டிப்போடப்பட்டிருக்கும் மரங்களுக்கு மீது ஏறி நின்றும் பார்க்கக்கூடாது. பார்க்கவும் முடியாது.

முதலில், நடைபெற்றுக்கொண்டிருக்கும் கலவரத்துக்கு காரணமானவர்கள் – “சிங்களவர்கள் அல்லர்” – என்ற அடிப்படை உண்மையை ஆழமாக மனதில் ஏற்றுக்கொள்ளவேண்டும். சனத்தொகையின் 70 சதவீத பெரும்பான்மை கொண்ட சிங்கள மக்கள் மத்தியிலிருந்து மிஞ்சி மிஞ்சிபோனால் ஒரு எழுபது – சரி எழுநூறு பேரை – அதிகார சக்திகள் தங்கள் கைப்பாவைகளாக பயன்படுத்தி ஆடுகின்ற இரத்தவெறியாட்டம்தான் இது. இதனை எவ்வாறு கையாள்வது என்ற தெளிவு அரசாங்கத்துக்கு இருக்கிறதா என்று மைத்திரியின் மண்டையை போட்டு எந்நேரமும் ஆட்டிக்கொண்டிராமல் நாட்டுமக்களுக்கு உள்ளதா என்பதை சுய மதிப்பீடு செய்துகொள்ளவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் “ஆவா” குழுவினர் அட்டகாசம் செய்கிறார்கள் – வாளோடு திரிகிறார்கள்கள் – என்பதற்காக ஒட்டுமொத்த தமிழர்களும் “வாள்வெட்டு குழுவினர்” என்றும் “கள்ளர் – காடையர்கள்” என்று விளிப்பது எவ்வளவு அபத்தமானதோ, அதேபோல தற்போது இடம்பெற்றிருக்கும் கலவர கடையர் கூட்டத்தை காரணமாக வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் ஒரு பக்கமாக ஒதுக்கிவைத்து குற்றவாளிகளாக கை நீட்டுவது மகா தவறானது. தமிழ் மக்களை பொறுத்தவரை, இவ்வாறு குற்றம் சுமத்துவது நீண்ட கால பகை உணர்ச்சியின் ஒரு பரிணாம வளர்ச்சியாக இருக்கலாம். இவ்வாறான குற்றப்பதிவுகளை செய்து முடிப்பதன் மூலம், ஒரு வித பழியுணர்ச்சியை தீர்த்துவிட்டதைப்போன்ற மனநிறைவுகூட ஏற்படலாம். அது இயற்கைதான். ஆனால், அந்தமாதிரியான போலி திருப்திகளால் நடைமுறையில் – அல்லது எதிர்காலத்தில் – என்னவிதமான ஆரோக்கியமான பாதையை அமைத்துவிடப்போகிறோம் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும்.

அப்படியானால், தற்போது தமிழ் மக்களால் செய்யக்கூடியதும் – செய்யவேண்டியதும் என்ன?

குறிப்பிட்ட நூறுகளில் மாத்திரம் எண்ணிக்கையிலிருந்துகொண்டு இனவன்முறைகளுக்கு தூபமிடும் பேரினவாத சக்திகளை எந்த இனத்திற்குள்ளேயும் ஊடுருவ அனுமதிக்காமல் துடைத்தெறியவேண்டும். அது தமிழ் மக்களால் மாத்திரமோ முஸ்லிம் மக்களால் மாத்திரமோ முடியாத காரியம். ஏன், சிங்கள மக்களால்கூட தனித்து நின்று செய்யமுடியாத காரியம்.

இந்த இடத்தில் –

பேரினவாத சக்திகளுக்கு எதிரான சிங்கள மக்களுடன் – தரப்பக்களுடன் – தமிழ்மக்கள் சேர்ந்து முஸ்லிம் மக்களை அரவணைத்துக்கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கவேண்டும். இதற்குரிய பரந்த முயற்சியை தமிழ் அரசியல் தரப்பினரும் தமிழ் சிவில் சமூகமும் முன்னெடுக்கவேண்டும். உண்மையான இன ஐக்கியமும் – நல்லிணக்கமும் நம்பிக்கையோடு வளரக்கூடிய புள்ளி இதுவாகத்தான் இருக்கமுடியும். இதற்குரிய பரந்த வெற்றிடம் இலங்கையில் இதுவரை காலத்தில் யாராலும் நிரப்பப்படமுடியாத – நிரப்ப விரும்பாத ஒன்றாகவே – இருந்திருக்கிறது. இதனை ஒரு பரீட்சார்த்த முயற்சியாகவாவது தமிழர் தரப்பு கையில் எடுக்கவேண்டும்.

இன்று காணப்படுகின்ற பதற்றநிலை தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியிலுள்ள படித்த இளைஞர்கள் – யுவதிகள் மத்தியில் நல்ல தெளிவு உள்ளது. நல்ல புரிதல் உள்ளது. இந்த நிலமைக்கு யார் காரணம், பின்னணி போன்ற உய்த்தறிதல்களைக்கூட நெத்திப்பொட்டில் அடித்தால்போல பேசுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுடன் – பல்கலைக்கழக மட்டத்தில் – சமூக அமைப்புக்களின் மட்டத்தில் – பொதுச்சேவைகளின் மட்டத்தில் – இணைந்து இந்த முயற்சியை தமிழ் தரப்பு முன்னெடுத்தால் வரலாற்றில் பெருமைக்குரிய சக்தியாக மாறலாம். தமிழ் மக்களும் இந்த நாட்டில் இவ்வளவு காலமும் போராடி வருகின்ற உரிமைகளின் தாற்பரியத்தை இதயசுத்தியுடன் செயலில் காட்டலாம். சிங்கள மக்களுக்கும் சிங்கள் மக்களின் ஊடாக முஸ்லிம் மக்களுக்கும் மிகப்பெரிய செய்தியை கூறலாம்.

இந்த நேரத்தில் இதனை சுயநலம் மிக்க ஏற்பாடாக யாரும் பார்க்கத்தேவையில்லை. ஏனெனில், பிரிக்கப்படமுடியாத இலங்கைக்குள் ஒரு தீர்வை விரும்பும் இனமாக தமிழர்கள் தங்களை பிரகடனப்படுத்திவிட்டார்கள். ஆக, இந்த மாதிரியான நேச அழைப்புக்களும் ஆதரவு முயற்சிகளும் இனங்களுக்கு மத்தியில் என்றைக்குமே அழிக்கமுடியாத இறுக்கத்தை உருவாக்கும். தமிழ் மக்களின் எண்ணப்பாடுகளின் மீது காணப்படும் கூர்மையை புரிந்துகொள்ளச்செய்யும்.

சுனாமி இடம்பெற்ற பின்னர், திருகோணமலை மாவட்ட அரசியல்துறை தலைவர் எழிலன் தலைமையில் தென்னிலங்கைக்கு உலருணவுப்பொருட்களை அனுப்பிவைத்த விடுதலைப்புலிகள் அன்று மேற்கொண்ட முயற்சியை யாரும் இலகுவில் மறந்திருக்கமாட்டார்கள்.

“இல்லை. இதுதான் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் பாடம் கொடுக்க நல்ல சந்தர்ப்பம். ஆளுக்காள் அடிப்பட்டு சாகட்டும்” – என்று இன்னமும் நகத்தை கடித்துக்கொண்டு வி.பி.என் வழியாக சுவாலைகளை பார்த்து மனநிறைவடைபவர்கள், பேசாமல் நீங்களும் முகத்துக்கு ஒரு துணியை கட்டிக்கொண்டு அந்த காடையர்களுடன் போய் சேர்ந்துகொள்ளுங்கள். அங்கு தீமூட்டிக்கொண்டிருக்கும் இரத்தக்காட்டேரிகளுக்கு மொழியொன்றும் பிரச்சினையில்லை. உடம்பால் சிந்திப்பவர்கள்தான் அவர்களுக்கு தேவை.

முடிவெடுங்கள்!

(தெய்வீகன்)