ஆனால் ‘ஹார்வெஸ்டர்’ என்று அழைக்கப்படுகின்ற அறுவடைக்கு மட்டுமான இயந்திரங்கள் அறுவடைக் காலத்தில் மாத்திரமே பயன்படுகின்றன. அறுவடைப் பருவகாலம் வந்து விட்டால் வெளியில் எடுத்து, மினுக்கி பயன்படுத்தி விட்டு பிறகு அப்படியே மாதக் கணக்காக மூடி வைத்து விடுவார்கள். அரசியல்வாதிகள் அதிலும் குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளும் இதுபோவே அமைந்துள்ளன.
முஸ்லிம் தலைவர்களும் ஏனைய அரசியல்வாதிகளும், தேர்தல் காலத்தில் வாக்குகளை அறுவடை செய்வதற்காக பெரும் வீரர்கள் போலவும், சமூக அக்கறையுள்ளவர்கள் போலவும், செயல் வீரர்களாகவும் தம்மை பிரதிவிம்பப்படுத்துகின்றனர்.
ஆனால், தமது தேவை முடிந்தவுடன் அரசியல் செயற்பாட்டுக் களத்தில் காணாமல் போய், ஒரு மூலையில் ஒதுங்கிக் கொள்கின்றனர். காரியம் முடிந்த பிறகு சமூகத்திற்கும் அவர்களுக்கும் இடையிலான உண்மையான தொடர்பு என்பது மருவிப் போய்விடுவதையே ஆண்டாண்டு காலமாக காண்கின்றோம்.
அரசியல் என்பது ஒரு சீசனுக்கான தொழில் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதிகாரத்தில் இருக்கின்ற எம்.பி.க்கள் மட்டுமன்றி இதற்கு முன்னர் அதனைச் சுகித்தவர்கள் மற்றும் எதிர்காலத்தில் அப்பதவிகளை அவாவி நிற்பவர்களும் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருப்பது அவசியமாகும்.
அதுபோலவே, நாங்கள் அரசியல் விடயங்களில் மட்டுமே கவனம் செலுத்துவோம் என்று அரசியல்வாதிகள் சொல்லவும் முடியாது. குறிப்பாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் தலைவர்களுக்கும் இதில் தார்மீகப் பொறுப்பிருக்கின்றது.
அரசியல் சார்ந்த விவகாரங்களில் மட்டுமன்றி, நாட்டில் இடம்பெறுகின்ற எல்லா சமூக, பொருளாதார, சுகாதார, பாதுகாப்பு விவகாரங்களிலும் தமது கடமையைச் சரிவர நிறைவேற்ற வேண்டும். இது சேவை அல்ல. மாறாக, வாக்களித்த மக்களுக்கு, பெறுகின்ற சம்பளம் மற்றும் வரப்பிரசாதங்களுக்காக செய்ய வேண்டிய பிரதியுபகாரம் ஆகும்.
இன்று இலங்கையில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இது இதற்கு முன்னர் ஏற்பட்ட நெருக்கடிகளை விட வேறுபட்டதும் தீவிரமானதுமாக இவை காணப்படுகின்றன. கொவிட்-19 வைரஸ் பரவல் மட்டுமே இதற்கு காரணம் என்பதான ஒரு தோற்றப்பாட்டை அரசாங்கம் ஏற்படுத்த முனைந்தாலும், உண்மை அதுவல்ல.
நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது. ஆளும் தரப்பிற்குள்ளேயே ஆயிரத்தெட்டு கருத்து முரண்பாடுகள் உள்ளன. ஓவ்வொரு பெருந்தேசியக் கட்சியும் அதன் தலைவர்களும் தங்களுக்கு ‘வசதியான புள்ளியில்’ நின்று கொண்டு, நடப்பு விவகாரங்களை கையாள நினைக்கின்றனர்.
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக நல்ல திட்டங்கள் வகுக்கப்பட்டாலும் காலதாமதமான முடிவுகளும், அத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சுகாதார தரப்பினருக்கு முன்னுரிமை கொடுக்கப்படாமையாலும் எதிர்பார்த்த பெறுபேறுகளைப் பெறுவது கல்லில் நார் உரிக்கின்ற காரியமாகியுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றுக்கு நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல பொருட்களுக்கு உத்தியோகபூர்வமாக விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சிலவற்றுக்கு பதுக்கல் வியாபாரிகள் விலைகளை உயர்த்தியுள்ளனர்.
“பொருட்களுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை; விலையை அதிகரித்து விற்பனை செய்ய முடியாது” என்று அரசாங்கம் என்னதான் கூறினாலும், யதார்த்தம் என்பது வேறு விதமாகவே உள்ளது. இந்தச் சூழல் இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கப் போகின்றது என்பதை எளிதில் முன்கணிக்க முடியாதுள்ளது.
ஆனால், முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூகத்தின் வழக்கமான பிரச்சினைகளை அல்லது மேற்குறிப்பிட்ட சமகால நாட்டுப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக என்ன முயற்சிகளை எடுத்துள்ளனர். எந்தவிதமான பங்களிப்பை வழங்கியுள்ளனர்? இந்தக் கேள்விக்கு அவர்களிடமே விடை இருக்காது.
ஓர் அரசியல் கட்சியின் தலைவர் என்றால், நாடாளுமன்ற உறுப்பினர் என்றால், முதற்கண், தாம் சார்ந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். சமகாலத்தில் இனம், மதம் கடந்து ஏனைய மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் பங்களிப்புக்களை வழங்க வேண்டும். இந்த அளவுகோல்களின் படி முஸ்லிம் அரசியல்வாதிகள் எதனைச் சாதித்திருக்கின்றார்கள் என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
முஸ்லிம்களுக்கு நீண்டகால மற்றும் குறுங்கால பிரச்சினைகள் உள்ளன. இப்படிச் சொன்னால் சில அரசியல்வாதிகள் அந்தப் பிரச்சினைகளை என்னவென்று நம்மிடமே கேட்பார்கள். ஏனெனில் இந்தச் சமூகத்தின் பிரச்சினைகளை எந்த முஸ்லிம் கட்சித் தலைவரும் எம்.பியும் முறையாக ஆவணப்படுத்தவில்லை.
நாட்டின் எல்லாப் பாகங்களிலும் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு காணிப் பிரச்சினைகள் உள்ளன. முஸ்லிம்களின் சனத்தொகைப் பரம்பலுக்கு ஏற்ப காணிகள் இல்லை என்பது ஒருபுறமிருக்க, இலட்சக்கணக்கான ஏக்கர் காணிகளின் உரிமைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு உள்ளன.
அரசாங்கங்கள் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக பேசி வருகின்றன. இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பது அண்மைக்காலமாக விதமாக அணுகப்படுவதாக தெரிகின்றது. அரசியலமைப்பு மறுசீரமைப்பு, அரசமைப்பின் 13ஆவது திருத்தம் அல்லது அதற்குச் சமமான அதிகாரப் பகிர்வை வழங்குதல் பற்றியெல்லாம் பேசப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றியும் சமஷ்டி முறையை ஒத்த ஓர் அதிகார அலகு பற்றியும் தமிழ் தரப்பு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. இவ்வாறான ஓர் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டால் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றி தொடர்ச்சியாக தெளிவுபடுத்தும் வேலையை முஸ்லிம் தலைவர்கள் செய்திருக்க வேண்டும்.
இலங்கையில் நடைபெற்ற உரிமை மீறல்கள் இன்று உலக அரங்கிலேயே பேசப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு ஆயுதக் குழுக்களாலும் இனவாதிகளாலும் நிகழ்த்தப்பட்ட உரிமை மீறல்கள் பற்றி எடுத்துரைத்து, அதற்கான நீதியை கோர வேண்டியது அவசியமாகும். ஆனால், அதனை முஸ்லிம் எம்.பிக்கள் செய்யத் தவறிவிட்டனர்.
எத்தனை நெருக்கடிகள் வந்தாலும், அதனோடு இணைந்ததாக அரசியலை முன்கொண்டு செல்லும் கலையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போன்ற அரசியல் அணிகள் கற்றுக் கொண்டுள்ளன.
அந்த வகையில் இத்தனை குழப்பங்களுக்கு மத்தியிலும், அரசியலமைப்பு மறுசீரமைப்பு பணிகளை தாமதிக்க வேண்டாம் என்று இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு அண்மையில் கூட கடிதம் எழுதியிருந்தார். அத்துடன், கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.
ஆனால், முஸ்லிம் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று சொல்லப்படுபவர்கள் இதுபற்றி உருப்படியாக எதனையும் செய்ததாக தெரியவில்லை. மாறாக, தாம் சார்ந்த பெருந்தேசியக் கட்சிகளின் விசிறிகளாக இருப்பதற்கே அவர்கள் பிரயத்தனப்படுகின்றனர்.
ஒரு தரப்பு ‘எதிர்க்கட்சியில் இருந்தால் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது’ என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் ஆளும் கட்சியில் இருந்து கொண்டு ‘ஜால்ரா’ அடித்துக் கொண்டிருக்கின்றனர். வேறு சிலர் ‘அரசாங்கத்தை கவிழ்க்க யாரும் முயற்சிக்கக் கூடாது’ என்று அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
முன்னர், ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பான சிக்கல்கள் இருப்பதால் எதனையும் கவனமாகவே கையாள வேண்டும் என்று சொல்லி, மௌனியாக இருந்தார்கள். இப்போது, சமூகத்திற்காக எதையும் செய்யாதிருக்கின்றீர்களே என்ற குற்றச்சாட்டை முன்வைத்தால், ‘ரெடிமேட்’ ஆக ஒரு பதில் சொல்வார்கள்.
‘இது கொரோனா காலம்தானே. எப்படி இப்போது அரசியல் பேசுவது? என்பதே அப்பதில் ஆகும். இன்னும் சிலர், ‘இந்த அரசாங்கத்தில் நாம் குரல் கொடுத்தால் நடந்து விடுமா? அண்ணன் தம்பிமார் நினைப்பதையே செய்வார்கள்’ என்பார்கள்.
சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் இதுவெல்லாம் தெரியாமலா தமது அபிலாஷைகளை தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு அழுத்தமாக உரைக்கின்றனர்?
சரி! முஸ்லிம் அரசியல்வாதிகள் சொல்வது நியாயம் எனக் கருதினால், பொய்க் காரணங்களைக் கூறிக் கொண்டு வாழாவிருப்பதற்கு… தலைவர்களும் எம்.பி.க்களும் இத்தனை பந்தாக்களும் எதற்காக?
வடக்கு, கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் தமது அபிலாஷைகளை, பிரச்சினைகளை முன்வைப்பதற்காகவே தமது பிரதிநிதிகளை தெரிவு செய்கின்றனர். அப்பணியை சிங்கள, தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் நுட்பமாகச் செய்ய வேண்டும்.
இப்போது அதனைத்தான் செய்ய முடியாவிட்டால், கொரோனாவை கட்டுப்படுத்தும் விடயத்தில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கலாம். மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட களத்தில் இறங்கியிருக்க வேண்டும். அதனையும் காணமுடியவில்லை.
ஆனால் அடுத்த வாரம் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டால், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் மீட்பர்கள் எல்லோரும் மடித்துக் கட்டிக்கொண்டு களத்தில் குதிப்பார்கள் என்பது வேறுகதை.
உண்மையில், அரசியல் என்பது எல்லாக் காலத்திலும் தேனிலவாக, சாதகமான களமாக இருக்க மாட்டாது. அப்படி நினைப்பவர்கள் அரசியலில் அடிச்சுவடி கூடக் கற்காதவர்களாவர்.
எனவே, எல்லா விதமான சூழலிலும் மக்கள் சார்ந்த செயற்பாட்டு அரசியலை உயிரோட்டமாக வைத்திருக்க வேண்டும். ‘ஆடத் தெரியாதவன் மேடை கோணல்’ என்ற கதை இனியும் சரிப்பட்டு வராது.