கடினமான முடிவுகள்
மத்தியக் கிழக்கின் சமீபத்திய நிகழ்வுகள், குறிப்பாக இரு தரப்பு உறவை இயல்பாக்கிக் கொள்ள இஸ்ரேலும் ஐக்கிய அரபு அமீரகமும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒப்பந்தம், சவுதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் ஆகியவை முஸ்லிம் உலகில் நிகழ்ந்துவரும் அரசியல் நெருக்கடியின் அடிநீரோட்டங்கள்தான். புவிசார் வியூகத்தை மாற்றியமைத்துக் கொள்ளும் வகையில் வளைகுடா நாடுகள், குறிப்பாக சவுதி அரேபியா சில கடினமான முடிவுகளை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, முஸ்லிம் உலகத்தின் பாதுகாவலர் எனும் பொறுப்பிலிருந்து விலகும் நிலையை நோக்கி அவை நகர்வதாகக் கருதப்படுகிறது.
புவிசார் அரசியலில் நிகழ்ந்துவரும் வேகமான மாற்றங்கள், அதிகரித்துவரும் பொருளாதாரச் சிக்கல்கள், சமூக அரசியல் கொந்தளிப்புகள், இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆகியவற்றின் காரணமாகத் தங்கள் புவிசார் வியூகத்தையும், அரசியல் அணுகுமுறைகளையும் மாற்றியமைத்துக்கொள்ளும் நிலைக்கு வளைகுடா நாடுகளின் தலைவர்கள் தள்ளப்பட்டிருப்பதாகப் பலர் வாதிடுகிறார்கள். எனினும், முஸ்லிம் உலக அரசியலிலும் அதன் கருத்தாக்கத்திலும் சவுதி அரேபியாவும் அதன் வளைகுடா கூட்டாளிகளும் நம்பிக்கையை இழந்துவிட்டன என்று சொல்லிவிட முடியாது.
முஸ்லிம் உலகத்தின் தலைமைப் பொறுப்பு என்பது பிராந்திய அரசியலிலும் உலக அரசியலிலும் மிகப் பெரிய அளவிலான அரசியல் மற்றும் வியூக மதிப்பை வழங்கக்கூடியது. எனவே, அதைக் கைவிடுவது என்பது அந்நாடுகளுக்குக் கடினமான விஷயம்தான். தவிர, தலைமைப் பொறுப்புக்குத் துருக்கி, ஈரான், கத்தார், மலேசியா போன்ற நாடுகள் போட்டியிடுவது குறித்த கவலையும் அந்நாடுகளுக்கு உண்டு.
அரசியலும் மதமும்
முஸ்லிம் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சாமானிய மக்கள் மத்தியில் முற்றிலும் மாறுபட்ட ஓர் உலகப் பார்வையை மத நிறுவனங்களும், அவற்றின் தலைவர்களும் உருவாக்கி வந்திருக்கின்றனர். அந்தப் பார்வை அந்தந்த நாடுகளின் அரசுகள் உருவாக்கி வைத்திருக்கும் கருத்தாக்கத்துக்குப் பொருத்தமில்லாதது. ஆனால், வன்முறை சார்ந்த அல்லது வன்முறை சாராத அரசு அல்லாத அமைப்புகளின் சிந்தனையுடன் ஒத்துப்போகக்கூடியது.
ஒரு சாமானிய முஸ்லிமைப் பொறுத்தவரை, அரசியலை மதத்திலிருந்து பிரித்துப் பார்ப்பது என்பது அத்தனை எளிதான விஷயமல்ல. ‘உம்மா’ என்பது உலகளாவிய முஸ்லிம் சமூகத்தைப் பற்றி விவரிக்கும் மத ரீதியிலான ஒரு கருத்தாக்கம் ஆகும். அதையொட்டி ஒரு அரசியல் மாயையை இஸ்லாமிய இயக்கங்களும், சகோதரத்துவ இயக்கங்களும் கட்டமைத்திருக்கின்றன. அரசுகளையும் சமூகங்களையும் உள்ளடக்கிய முஸ்லிம் உலகமும் பல தசாப்தங்களாக அந்தக் கருத்தாக்கம் குறித்த கற்பனையில் ஆழ்ந்திருக்கிறது. முஸ்லிம் அரசியல் சமூகத்தைக் கட்டமைக்க அது முயன்று வருகிறது. அந்த முயற்சிகளில் ஒன்று இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓஐசி) ஆகும்.
அந்தக் கருத்தாக்கத்தை வளைகுடா நாடுகள் நன்றாகவே பயன்படுத்திக்கொண்டன. 1960-கள் முதல் கடந்த தசாப்தம் வரையிலான காலகட்டத்தில் சமூகப் பொருளாதார ரீதியில் மாற்றங்கள் ஏற்பட்டபோது, அந்தக் கருத்தாக்கத்துடன் அரபு தேசியவாதத்தை அந்நாடுகள் கலந்துவிட்டன. சவுதி அரேபியா தலைமையிலான பல வளைகுடா நாடுகள் வஹாபி இஸ்லாம் எனும் அளவில் உம்மாவின் நோக்கங்களைக் குறுக்கிவிட்டன. மேலும், முஸ்லிம் உலகத்துக்கும், முஸ்லிம் புலம்பெயர் சமூகத்துக்கும் அதை ஏற்றுமதி செய்யப் பெரிய அளவில் முதலீடு செய்தன. தங்கள் அரசுகளுக்கான அரசியல் ஆதரவையும் உருவாக்கிக்கொண்டன.
உம்மாவுக்குத் தலைமை வகிக்கும் எண்ணத்தை சவுதிகள் கைவிட்டுவிட மாட்டார்கள். ஏனெனில், அப்படிச் செய்வது சர்வதேசத் தொடர்புகளில் அவர்களது வியூக மதிப்பைப் பெருமளவில் குறைத்துவிடும் என்பது அவர்களுக்குத் தெரியும். உம்மாவின் தலைவர்களாக இருப்பதன் மூலம் கிடைக்கும் செல்வாக்கு, முக்கியமான சர்வதேசப் பங்கேற்பாளர்கள் எனும் அந்தஸ்தை அவர்களுக்குத் தந்திருக்கிறது. அமெரிக்காவுடன் அவர்கள் கொண்டிருக்கும் வலிமையான கூட்டணி, முஸ்லிம் நாடுகள் மத்தியில் அவர்களைச் சக்திவாய்ந்தவர்களாக ஆக்கியிருக்கிறது.
இஸ்லாமிய ராணுவக் கூட்டணி
இந்த இருமுனை வலிமையை மேலும் பெருக்கிக் கொள்ள, 40 முஸ்லிம் நாடுகளைக் கொண்ட அமைப்பான பயங்கரவாதத்துக்கு எதிரான இஸ்லாமிய ராணுவக் கூட்டணியை சவுதி அரேபியா உருவாக்கியது. ஏமன் நாட்டுக்கு எதிராகப் போரிட, படைகளை அதிகரிப்பதும், ஈரானை எதிர்கொள்வதும்தான் அந்த அமைப்பை உருவாக்கியதன் உண்மையான நோக்கம் என பலர் வாதிடலாம். சொல்லப்போனால் மதச் சேவையாகவோ, உம்மாவின் கூட்டுநலன்களுக்குத் துணைபுரியவோ சவுதி அரேபியா அதை மேற்கொள்ளவில்லை. இருந்தாலும், சவுதி தலைமையிலான முஸ்லிம் நேட்டோ படையாக உருவான அந்த ராணுவக் கூட்டணியில் தமது பொருளாதார நலன்களுக்காகப் பல சிறிய முஸ்லிம் நாடுகள் சேர்ந்துகொண்டன. எனினும், அந்தக் கூட்டணி தோல்வியையே தழுவ நேர்ந்தது. மிகக் குறுகிய நோக்கத்துடனும், குறிப்பிட்ட ஒரு நாட்டின் நலனின் அடிப்படையிலுமே அது இயங்கி வந்ததுதான் அதற்குக் காரணம்.
மதத்திலிருந்து அரசியலைப் பிரித்துப் பார்ப்பது என்பது சாமானிய முஸ்லிம்களைப் பொறுத்தவரை எளிதான காரியமல்ல. இஸ்லாமிய இயக்கங்களும், சகோதரத்துவ இயக்கங்களும் பல முஸ்லிம் சமூகங்களின் உலகப் பார்வையை மாற்றிவிட்டன. கல்வித் துறையைக் குறிவைத்ததன் மூலம் முஸ்லிம் சமூகங்களின் அரசியல் பார்வையை அவர்கள் மாற்றியமைத்திருக்கும் விதத்தைப் பார்க்கும்போது, உம்மா எனும் கருத்தாக்கத்தின் மதரீதியிலான விழுமியத்தை மீட்டெடுக்க மிக நீண்டகாலம் பிடிக்கும் என்பதை உணர முடிகிறது.
அரசு அல்லாத அமைப்புகளின் முயற்சிகள்
பாலஸ்தீனப் பிரச்சினைதான் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பிரதான அம்சமாக இருந்துவருகிறது. பாலஸ்தீனத்துக்கு வளைகுடா நாடுகள் தொடர்ந்து ஆதரவு நல்கி வருகின்றன. இந்தச் சூழலில், பாலஸ்தீன- இஸ்ரேல் பிரச்சினை தொடர்பான கருத்தை உருவாக்கியிருக்கும் அரசு அல்லாத அமைப்புகள், அந்நாடுகளின் அரசுகள் ஊழல் மயமானவை என்றும், இரு தரப்புப் பிரச்சினையில் அவை அக்கறை காட்டவில்லை என்றும் குற்றம்சாட்டுகின்றன.
அரசு அல்லாத அமைப்புகளும், அவற்றின் கருத்தை எதிரொலிக்கும் மதத் தலைவர்களும் பரப்பிவரும் இந்தக் கருத்துகளைப் பொதுமக்களில் பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால், படித்தவர்கள் மத்தியில் இந்தக் கருத்து எடுபடவில்லை. அரசு அல்லாத அமைப்புகள் முன்வைக்கும் மாற்று அரசு அமைப்பானது, ஜனநாயகத்துக்கும் சுதந்திர உரிமைகளுக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அவர்கள் கருதுகிறார்கள். அரபு வசந்த எழுச்சிப் போராட்டங்களுக்குப் பிறகு மாற்று அரசு அமைப்பு என அரசு அல்லாத அமைப்புகள் முன்வைத்த கருத்தாக்கங்கள் தோல்வியைத் தழுவியிருக்கின்றன. எனினும், அரபுச் சமூகங்களின் அரசியல், மதம் தொடர்பான விவாதங்களில் அந்தக் கருத்தாக்கங்கள் இன்றைக்கும் தொடர்புடையவையாகவே இருக்கின்றன.
தற்போது உருவாகிவரும் அரசியல் போக்குகளைத் தங்களுக்குச் சாதகமாக அரசு அல்லாத அமைப்புகள் பயன்படுத்திக்கொள்ளக்கூடும். ஐக்கிய அரபு அமீரகம்- இஸ்ரேல் இடையிலான ஒப்பந்தம் குறித்து, முக்கியமான வன்முறைக் குழுக்களான அல் கொய்தாவும், ஐஎஸ் அமைப்பும் இதுவரை வாய் திறக்கவில்லை. இரண்டு குழுக்களும் மிகவும் பலவீனப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றால் உடனடியாகப் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்த முடியாது. ஆனால், முஸ்லிம் அரசுகளுக்கும் இஸ்ரேலுக்கும் எதிரான தங்கள் வாதங்களுக்குச் சாதகமாக இந்தச் சூழலை அவை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
பலவீனமான நிலையில் பயங்கரவாத அமைப்புகள்
இஸ்ரேலை அழிப்பதும், முஸ்லிம் உலகத்தில் உள்ள நம்பிக்கைத் துரோக அரசுகளை எதிர்ப்பதும்தான் அல் கொய்தாவின் முக்கிய வேலையாக இருந்துவருகிறது. வியூகங்கள், தந்திரங்கள் அடிப்படையில் ஐஎஸ் அமைப்பும், அல் கொய்தாவும் வேறுபட்டாலும், இரண்டுக்கும் சில பொதுவான அரசியல் பார்வைகள் இருக்கின்றன. மீண்டுவருவதற்காகக் கடுமையான பிரயத்தனங்களில் அவை ஈடுபட்டிருந்தாலும், அரசியல் அடிப்படையிலான கட்டாயச் சூழல்கள் அவற்றைப் பலவீனப்படுத்தியிருக்கின்றன.
உதாரணமாக, ஆப்கானிஸ்தானில் அல் கொய்தா முடங்கிப்போய்க்கிடக்கிறது. ஏனெனில், அந்த அமைப்பின் கூட்டாளியான தலிபான் அமெரிக்காவுடன் வெற்றிகரமாக ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது. ஆப்கன் அரசுடனும் சிவில் சமூகத்துடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறது. தாலிபானுடனான உறவைத் துண்டித்துக்கொள்ளாத பட்சத்தில் அல் கொய்தாவின் நிலை இப்படியேதான் இருக்கும்.
ஆதரவும் தடுமாற்றமும்
மறுபுறம், மத்தியக் கிழக்கின் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து வன்முறை சாராத மதக் குழுக்களும் தலைவர்களும் விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மாறுபட்ட குறுங்குழுவாத சூழல்களைக் கொண்ட பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இது ஆபத்தான சூழலாக அமையலாம். சவுதி மற்றும் ஈரானியத் தரப்புகள் தத்தமது மதச் சமூகங்களில் பெரிய அளவில் முதலீடு செய்திருக்கின்றன. அவற்றை அறுவடை செய்வதற்கான காலம் வந்துவிட்டது.
சவுதி ஆதரவு மதத் தலைவர்கள், தங்கள் அரபு முன்னோடிகளை ஆதரித்துக்கொண்டே யூத எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பது எப்படி எனும் மிகப் பெரிய தடுமாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
(முகமது அமீர் ரானா, நன்றி: டான் (பாகிஸ்தான் நாளிதழ்)
தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்)