முஸ்லிம் கட்சிகள் அவசியம்தானா என்று கேட்டால், அதற்கு “ஆம்”, “இல்லை” என்று இரண்டு விதமான பதில்களை அளிக்க முடியும். இவை இரண்டும் சரியான பதில்களே! ஆனாலும், குறிப்பிட்ட கட்சிகள், அரசியல்வாதிகளின் செயற்பாடுகளே அந்தப் பதில் சரியா, பிழையா என்பதைத் தீர்மானிக்கின்றன.
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாறு என்பது, நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது. சுதந்திரத்துக்கு முன்னரான அரசியல் செயற்பாடுகளிலும் முஸ்லிம் தலைவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளார்கள். அதன் பிறகும், அதே வகிபாகத்தைக் கொண்டிருந்தனர்.
அக்காலத்திலும், முஸ்லிம் சமூகத்துக்கான அரசியல் பற்றிய கருத்தியல்கள் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும், எழுபதுகளின் பிற்பகுதி வரைக்கும் தனியான ஓர் அரசியல் சக்தியாக முஸ்லிம்கள் தம்மை முன்னிறுத்துவதற்கான தேவைப்பாடு ஏற்படவில்லை.
பெரும்பான்மைக் கட்சிகளோடும் தமிழ்க் கட்சிகளோடும் இணைந்து அரசியல் செய்வதன் ஊடாக, முஸ்லிம்களின் காலமும் கடந்து கொண்டிருந்தது. இனவாதம் அப்போதும் இருந்தது. ஆனால், இந்தளவுக்கு மோசமாகத் தளைத்தோங்கி இருக்கவில்லை. ஆதலால், பெருந்தேசியக் கட்சிகள் ஊடாக, முஸ்லிம்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.
சமகாலத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் முஸ்லிம்கள் சேர்ந்தியங்கினர். ஒரு கட்டம் வரைக்கும் முஸ்லிம்கள் விடயத்தில் அவர்கள் மிகவும் நியாயமாகவும் சகோதர வாஞ்சையுடனும் செயற்பட்டனர் என்பதை யாரும் மறுக்கவியலாது.
வடக்கு, கிழக்கை மையமாகக் கொண்டு, யுத்தமும் ஆயுதங்களும் முன்கையெடுத்த பின்புதான், நிலைமைகள் மாறிப் போயின. ஆயுதம் தரித்தோரைச் சார்ந்து, தமிழர் அரசியல் செயற்படத் தொடங்கியதாக முஸ்லிம்கள் எண்ணும் அளவுக்கு, கசப்பான அனுபவங்கள் இடம்பெற்றன. தெற்கின் கொல்லைப்புறங்களில் இனவாதமும் பெருவளர்ச்சிகண்டது.
இந்தக் கட்டத்திலேயே, தனித்துவ அடையாள அரசியல் பற்றி முஸ்லிம் சமூகம் அதிகம் சிந்தித்தது. மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் இந்தச் சிந்தனையை சரியாகச் செயலுருப்படுத்தினார் அல்லது, மக்கள்மயப்படுத்தினார். ஆனால், தனித்துவ அடையாள அரசியலின் தோற்றுவாய்த் தலைமைத்துவமாக அவரைக் கருத முடியாது.
ஆய்வாளரும் அரசியல்வாதியுமான எம்.ஐ.எம். மொஹிதீன், இதில் முதலாமவர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச். சேகு இஸ்ஸதீன் போன்றோர் இரண்டாவது இடத்தில் உள்ளனர். இவ்வாறானவர்களே, முஸ்லிம் தேசியம், தனித்துவ அடையாளம், தனியான கட்சி பற்றிய சிந்தனைகளின் தோற்றுவாய்களாக இருந்தனர். அஷ்ரப் அந்தக் கனவை வெற்றிகரமாக நனவாக்கினார்.
தனித்துவ அடையாளத்தைத் தாரக மந்திரமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரான அஷ்ரப், கடைசி மட்டும் தனித்துவ அரசியலை மிகச் சரியாக முன்னெடுத்தாரா என்பது விவாதத்திற்குரியது. ஆனால், ஒப்பீட்டளவில் அந்தக் கோட்பாட்டின் ஊடாக,முஸ்லிம்களுக்கு ஏதாவது செய்த ஒரு தலைவர் இருக்கின்றார் என்றால், அது அவராகத்தான் இருக்க முடியும்.
ஆனால், அவரது மரணத்துக்குப் பிறகு அதன் போக்கு, எவ்வாறு தலைகீழாக மாறிப் போனது என்பதற்கு, நாம் எல்லோருமே கண்கண்ட சாட்சியங்களாக இருக்கின்றோம். முஸ்லிம்களின் உரிமைகளை, அபிலாஷைகளை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்ட பேரம் பேசும் அரசியல், இன்று சோரம் போகும் அரசியலாக மாறியிருக்கின்றது.
அஷ்ரபின் மரணத்துக்குப் பிறகு, அக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட றவூப் ஹக்கீமுக்கு இதில் முக்கிய பங்கிருக்கின்றது. தனித்துவ அடையாள அரசியலை, அதற்கான பாதையில் இருந்து திருப்புவதற்கான களச்சூழலை ஏற்படுத்திக் கொடுத்தவர் அவர் என்றும் சொல்லலாம். ஆனால், அவர் மட்டுமே இதற்குக் காரணமுமல்லர்.
இப்போது முஸ்லிம் காங்கிரஸிற்கு மேலதிகமாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், அஷ்ரபால் ஆரம்பிக்கப்பட்டு கைமாறிய கட்சியான தேசிய ஐக்கிய முன்னணி, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு உள்ளடங்கலாக சிறியதும் பெரியதுமாக பல முஸ்லிம் கட்சிகள் உள்ளன.
முஸ்லிம் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். காலாவதியான மாகாண சபைகளில் பிரதான முஸ்லிம் கட்சிகள் உறுப்பினர்களையும் கொண்டிருந்தது. அத்துடன், முஸ்லிம்கள் இருவர் முதலமைச்சர்களாகப் பதவி வகித்துள்ளனர்.
அதாவது, எண்ணிக்கையின் அடிப்படையில் கட்சிகளும் அரசியல்வாதிகளும் அதிகரித்துள்ளனர். ஆனால், முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ அடையாளம் காப்பாற்றப்பட்டுள்ளதா அல்லது இந்தக் கட்சிகளின் ஊடாக சமூகத்தின் பிரச்சினைகள், அபிலாஷைகள் தீர்க்கப்பட்டுள்ளனவா என்றால், “இல்லை” என்பதே, சரியான பதிலாக இருக்கும்.
இணக்க அரசியல் என்ற கோதாவில், பெரும்பான்மைக் கட்சிகளுக்கு முட்டுக் கொடுக்கின்ற வேலையை மட்டும், முஸ்லிம் கட்சிகள் இன்று கனகச்சிதமாகச் செய்து கொண்டிருக்கின்றன.
இதற்கு அவர்கள், அரசியல் வியூகம், சாணக்கியம், இணக்க அரசியல் நுட்பம் என்றெல்லாம் கற்பிதம் கூறுகின்றார்கள். ஆனால், அவர்களுக்கு ‘கைமாறாக’ எவையெல்லாம் கொடுக்கப்படுகின்றன என்பதை அறியாத அளவுக்கு மக்கள் முட்டாள்களல்லர்.
இந்த மோசமான அரசியல் நகர்வு, முஸ்லிம்களின் நீண்டகாலப் பிரச்சினைகள், குறுங்கால நெருக்கடிகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மேலும் சிக்கலாக்கியுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில், சிந்திப்பவர்களாக மக்களை மாற்றியிருப்பது மட்டுமன்றி, முஸ்லிம்களுக்குள்ளேயே பிரதேச, கட்சி ரீதியான பிளவுகளையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
இன்றும் இவ்வாறான நிலைமைகளே தொடர்வதைக் காணலாம். கட்சித் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், அதாவுல்லா ஆகியோர் முன்னைய காலங்களைப் போல, இப்போதும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனர். முதல் இரு கட்சிகளுக்கும், வேறு பல எம்.பிக்களும் உள்ளனர். ஆனால், இந்தத் தனிக்கட்சி அரசியலால் சமூகத்துக்கு என்ன பெரிய நன்மை கிடைத்திருக்கின்றது?
முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள், எம்.பிக்கள் ‘அந்தப் பக்கம்’ நிற்கின்றனர் அல்லது, ‘இந்தப் பக்கம்’ ஆதரவளிக்கின்றனர். இதன்மூலம், பெரும்பான்மைக் கட்சிகளின் விருப்பு வெறுப்புகளை நிறைவேற்றுகின்றவர்களாகவும், அவர்களுக்கு வாக்குச் சேகரித்துக் கொடுத்துவிட்டு, அதற்கு உபகாரமாகக் கிடைக்கின்ற எதையாவது பெற்றுக் கொள்கின்றவர்களாகவும் இருக்கின்றனர். இதுவே வாடிக்கையாகி இருக்கின்றது.
சிலவேளை, தலைவர்கள் கொஞ்சம் வேறுபக்கம் சிந்திப்பது போல பாசாங்கு காட்டினாலும், கட்சியின் ஏனைய உறுப்பினர்கள், திரைக்குப் பின்னால் ஒரு நகர்வைச் செய்து, விலைபோய்விடுகின்ற போக்கையும் காணலாம். தற்காலத்திலும் இந்நிலைமையை அவதானிக்க முடிகின்றது.
சிறுபான்மையினர் இந்த நாட்டில் தனித்து இயங்குவதன் மூலம், எதையும் சாதிக்க முடியாது என்பதே யதார்த்தமாகும். அந்த வகையில், இணக்க அரசியல் முஸ்லிம்களுக்கு ஒரு சிறந்த தெரிவு என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், அது முஸ்லிம் சமூகத்துக்கானதாக இருக்க வேண்டுமேயொழிய, அரசியல் வியாபாரமாக இருக்கக்கூடாது. அதை, அரசியல்வாதிகள் தமது வாழ்வாதாரமாகப் பயன்படுத்தப்படக் கூடாது.
முஸ்லிம்களுக்கான கட்சிகள் என்ற தோரணையில் கட்சிகளை ஆரம்பித்து, முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள், அபிலாஷைகளைப் பெற்றுத் தருவோம், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம் என்று மக்களை சூடேற்றி விட்டு, தேர்தல் முடிந்த பிறகு, எல்லாவற்றையும் மறந்து விடுகின்ற அரசியலை, ‘தனித்துவ அடையாள அரசியல்’ என்று இவர்கள் சொல்லித் திரிகின்றார்கள்.
பெரும்பான்மைக் கட்சிகளின் கிளைக் கட்சிகள் போல, முகவர்கள் போல செயற்படுவதற்கு எதற்காக தனிக்கட்சியும் முஸ்லிம் உரிமைக் கோஷங்களும்?
ஒரு குறிப்பிட்ட பெரும்பான்மைக் கட்சியை அல்லது தலைவர்களை விமர்சித்து, முஸ்லிம் மக்களின் உணர்வுகளைத் தூண்டி வாக்குகளைப் பெற்றுவிட்டு, தேர்தலுக்குப் பிறகு அந்தப் பெரும்பான்மை தலைவர்களிடமே சரணாகதி அடைவதைப் போல, ஒரு நக்குண்ட அரசியல் இருக்க முடியுமா?
முஸ்லிம் தனிக் கட்சிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், முஸ்லிம் சமூகத்துக்குப் பிரச்சினைகள் இருக்கவில்லை என்று யாரும் கூற முடியாது. நிறையவே தேவைப்பாடுகளும், விருப்பு வெறுப்புகளும் இருந்தன.
அன்று, தனியான முஸ்லிம் கட்சிகள் இல்லாத காலத்தாலும் பெரும்பான்மைக் கட்சிகளில் அங்கம்வகித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், அவற்றை மிகவும் சாதுரியமான முறையில் தீர்த்து வைத்தனர். அவசியம் ஏற்பட்டால், பெருந்தேசியத்தை எதிர்த்து நிற்கவும் தயங்கவில்லை. அந்த நிலைமை கூட இன்றில்லை.
அப்படியென்றால், இன்று தனிக் கட்சிகளின் ஊடாகத் தலைவர்களாகவும் எம்.பிக்களாகவும் இருப்பவர்கள் பெரும்பான்மைக் கட்சிகளைப் பலப்படுத்தும் பணிகளையே செய்து கொண்டிருப்பார்கள் என்றால், முன்னைய அரசியல்வாதிகள் செய்த சேவையைக் கூட இவர்களால் சமூகத்துக்குச் செய்ய முடியாது என்றால், இந்தக் கோட்பாடு எல்லாம் வீண்தானே?
முஸ்லிம் தனிக் கட்சிகள், அதற்கான தாற்பரியத்தை உணர்ந்து, முஸ்லிம் சமூகத்துக்கான அரசியலைச் செய்யத் தயாரில்லை. அல்லது, அதற்கான வாய்ப்பில்லை என்றால், அவை பெயரளவில் மட்டும் முஸ்லிம் கட்சிகளாக இருந்து சமூகத்துக்கு என்ன பயன்?