பின்னர் இலங்கை இந்திய ஒப்பந்தம் நடைமுறை செய்யப்பட்ட பொழுது இலங்கை அரசு முஸ்லிம் காங்கிரசை புறக்கணித்தாலும் , ( 1988 ஆம் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், 1989 ஆம் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ) வடக்கு கிழக்கு மாகாண சபையில் பதவி ஏற்ற காலகட்டங்களில் பிரேமதாசாவே ஆட்சியில் இருந்தார். முஸ்லிம் காங்கிரஸ் வெளிப்படையாக அரச பங்காளிகளாக இல்லாவிடினும் பிரேமதாசாவுக்கு ஆதரவளித்து ஜனாதிபதியாக்கியமை (!) , பிரேமதாசா மூலம் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான , தங்களுக்கு சவாலாக அமையும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்களை போட்டியிடாமல் தடுத்தமை என்பன மூலம் பரஸ்பரம் நன்மையடைந்திருன்தனர்.
ஆனாலும் பிரேமதாசா புலிகளுடன் பேச்சுவார்த்தை செய்த பொழுது வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் முஸ்லிம் காங்கிரசுக்கு தகுந்த இடமளிக்கவில்லை. இந்திய இராணுவம் முஸ்லிம்களுக்கு கிழக்கில் அநியாயங்கள் இழைத்த பொழுதும் (அடிப்படையில் இந்திய ஒப்பந்தம் அமுலில் இருக்கும் பொழுது) உதவ முடியவில்லை. ஆனாலும் ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பீடு கூற வேண்டி உள்ளது புலிகள் திகாமடுல்ல மாவட்டத்தில் பல முஸ்லிம் இளைஞர்களை ஜிகாத் இயக்க இளைஞர்கள் என்று கடத்திச் சென்ற பொழுது அஸ்ரபின் வேண்டுகோளுக்கு இணங்க பலரை பிரேமதாசா புலிகளுடன் பேசி விடுதலை செய்வித்தார்.
முஸ்லிம் காங்கிரசின் தொடர்ச்சியான முஸ்லிம் மாகாணத்துக்கான அல்லது முஸ்லிம் சுயாட்சிக்கான வாக்குறுதிகள் யாவும் இறுதியில் தேய்ந்து கரையோர மாவட்டமாகவும் தமிழ் தரப்பினரின் அங்கீகாரத்துடன் மட்டுமே நடைமுறையில் செயற்படுத்த இயலுமான ஒரு கோரிக்கையாகவும் முஸ்லிம் காங்கிரஸ் சமரசம் செய்து கொண்டது. பகிரங்க மேடைகளில் , பல அரசியல் அவைகளில் தனி முஸ்லிம் மாகாண சபைக்கான அல்லது அதை ஒத்த அலகுக் கான கோரிக்கைகளில் காட்டிய வீரியத்தை முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தரப்பினருடனோ அல்லது அரசுடனோ பேச்சுவார்த்தைகள் நடத்திய பொழுது முஸ்லிம் காங்கிரஸ் காட்டவில்லை , காட்டவும் முடியவில்லை.
வழக்கம் போலவே நடைமுறையில் பல சிக்கல்கள் நிறைந்த கோரிக்கையை முன் வைத்து அரசியல் செய்த போதும் வெளிப்படையாக முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் சார்பில் வரிந்து கட்டிக் கொண்டு அறிக்கைகளை விடுவதற்கு மட்டும் தயங்கவில்லை. குறிப்பாக அஸ்ரப் மறைவதற்கு ஒரு வருடத்திற்கு (1999) முன்னர் கூட ௭ம்.௭ச்.௭ம். அஷ்ரப் பத்திரிகையில் ” கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டால் அதில் முஸ்லிம்களுக்கான பங்கை வழங்கி விட்டுத்தான் ௭வரும் அதில் கை வைக்க வேண்டும் ” ௭ன்று பத்திரிகையில் பகிரங்கமாக பேட்டி அளித்திருந்தார்.
முன்னர் குறிப்பிட்டது போலவே கிழக்கு மக்கள் தொடர்பில் எத்தகைய பங்கு என்பது பற்றி அவர் தீர்க்கமான முடிவுக்கு வரவில்லை. தமிழ் தரப்புடனான பேச்சுவார்த்தை மூலம் வடக்கு முஸ்லிம்களைப் பற்றிய ஒரு சாத்தியமான ஒரு புரிந்துணர்வினை அஸ்ரப் கொண்டிருந்திருக்கலாம் , அதன் காரணத்தினால் அவர் கிழக்கைப் பங்கு போடுவது பற்றி பிரஸ்தாபித்திருந்தார்.
வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் ! (9)
(எஸ்.எம்.எம்.பஷீர்)