(Gopikrishna Kanagalingam)
இலங்கையின் சுமார் 15 மாவட்டங்களைத் தாக்கியுள்ள வெள்ளம், மண்சரிவுகள் காரணமாக, முழு இலங்கையுமே சோகத்தில் மூழ்ந்திருக்கும் நிலையில், திருகோணமலையின் மூதூர்ப் பகுதியில் இடம்பெற்ற இன்னொரு சோகம், பெருமளவு கவனத்தை ஈர்த்திருக்கவில்லை. பாடசாலை செல்லும் 3 சிறுமிகள், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்பது தான் அச்செய்தி. கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவத்தில், பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற இந்தச் சிறுமிகளை, பெரியவெளிக் கிராமத்திலுள்ள சிலரே, வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகத் தெரியவருகிறது. இந்தச் சிறுமிகள் அனைவருக்கும், 9 வயதை விடக் குறைவு எனவும் அறிவிக்கப்படுகிறது.
சாதாரண நிலைமையில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தால், பலத்த அதிர்வலைகளை இது ஏற்படுத்தியிருக்கக் கூடும். ஆனால், அதிர்ஷ்டவசமாகவோ அல்லது துரதிர்ஷ்டவசமாகவோ, வெள்ள அனர்த்தத்துக்கு மத்தியில் இது இடம்பெற்றது.
வெள்ளத்தின் காரணமாக, இந்தச் செய்தி, போதியளவு கவனத்தைப் பெறவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் அந்த 3 சிறுமிகளைப் பொறுத்தவரை, வழக்கமான கொசுறுச் செய்திகளை வெளியிடும், ஊடக தர்மத்துக்கு அப்பாற்பட்டுச் செயற்படும் சில ஊடகங்கள், அவர்களது அடையாளங்களையும் குடும்பப் பின்னணிகளையும் தேடி அலையவில்லை என்பது, அதிர்ஷ்டவசமானது.
இந்த நிலையில் தான், இந்தக் கொடூரம் பற்றிய அலசல்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகியிருக்கிறது.
எமக்கு நினைவுதெரிந்த நாட்களிலிருந்து, வன்புணர்வுகள், எம்மைக் கோபப்பட வைக்கின்றன. ஆனால் சில நாட்களில் எமது கவனம், இன்னொன்று நோக்கிச் சென்றுவிடுகிறது.
கிருஷாந்தி தொடக்கம் வித்தியா வரை, அவர்களின் உடலுரிமை மீறப்பட்டு, அவர்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர், பின்னர் படுகொலை செய்யப்பட்டனர். கிருஷாந்தி விடயத்தில் தண்டனை வழங்கப்பட்டது. வித்தியா விடயத்தில், விசாரணை தொடர்கிறது. ஆனால், இந்தக் குற்றங்களும் தான் தொடர்கின்றன.
மூதூர் விடயத்தில், அந்த மாணவிகளின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படவில்லை என்பது, ஓரளவு திருப்திப்பட்டுக் கொள்ளக்கூடிய விடயம். ஏனென்றால், அவர்களது வாழ்வை, மீளக் கட்டியெழுப்பக்கூடிய சந்தர்ப்பத்தை, இது ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
வன்புணர்வு என்பதே மிகக் கொடூரமானது. இதில், 9 வயதிலும் குறைந்த, விவரம் தெரியாத சிறுமிகளை வன்புணர்வுக்கு உட்படுத்துவது என்பது, மிகப்பெரிய மனநோயின் அறிகுறி, இல்லாவிடில், ஆணாதிக்கப் பாலியல் உரித்துடமை உணர்வின் வெளிப்பாடு.
ஏனெனில், 9 வயதுச் சிறுமியொருத்தியைப் பார்த்து, பாலியல் ரீதியான உணர்வைக் கொண்டிருப்பது என்பது, மிக மிக மிக அசாதாரணமானது.
இந்தச் சம்பவத்தில் முக்கியமாக, சில சமூக ஊடகத் தளங்களிலும் சில ஊடகங்களிலும், இந்தக் கொடூரத்தைப் புரிந்ததாகக் கூறப்படும் நபர்களின் இனத்தையும் விளித்துக் கருத்துகள் பதிவாகியிருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.
புங்குடுதீவில் வைத்து, மாணவி வித்தியா, வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டபோது, “தமிழ்க் காடையர்களால்” அவர் வன்புணர்வு உள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார் என்று நாம் கூறவில்லையே? வித்தியா விடயத்தில், குற்றம் புரிந்தவர்களுக்கு இனம் கிடையாது என்றால், மூதூர் மாணவிகள் விடயத்தில் மாத்திரம், எவ்வாறு இனம் சம்பந்தப்படுகிறது?
சில இடங்களில், அடைமொழி தேவைப்படுகிறது தான். குறிப்பாக, பொலிஸ், இராணுவத்தைச் சேர்ந்தவர்கள், இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, அல்லது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் ஆகியோர் இவ்வாறு செயற்படும் போது, அவர்களுக்கான அடைமொழி தேவைப்படுகிறது.
ஏனெனில், இவர்கள் அனைவரும், மக்களுக்காகச் செயற்படுவோமென உறுதியெடுத்தவர்கள். தங்களுடைய அதிகாரத்தை இவர்கள் துஷ்பிரயோகம் செய்கின்றனர். இவர்களால் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது, “இராணுவ வீரரால் வன்புணர்வு” என்பதில் தவறு கிடையாது.
ஆனால், சாதாரண நேரங்களில், இனத்தை முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை, கிடையவே கிடையாது.
அதேபோல், இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக ஊடகத் தளங்களின் கருத்துகளில், “விடுதலைப் புலிகளின் காலத்தில், வன்புணர்வில் ஈடுபட்டவர்களுக்கு, பகிரங்கமாக மரண தண்டனை, துப்பாக்கியால் சுட்டு நிறைவேற்றப்பட்டது.
இதனால், அங்கு வன்புணர்வுச் சம்பவங்கள் இடம்பெறவில்லை. அந்தச் சட்டம் தான் இப்போதும் தேவை” என்ற பாணியிலான கருத்துகளையும் காண முடிந்தது.
நாங்கள் விரும்புகின்றோமோ, இல்லையோ, ஜனநாயக நாடொன்றில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நிறுவனரீதியான அரசியலில் நம்பிக்கை இல்லாதவர்கள், போலி/பாசாங்கு ஜனநாயகம் என்று கூறுவார்கள்.
அதாவது, ஜனநாயகம் இருப்பது போன்று வெறுமனே பாசாங்கு செய்துகொண்டிருந்தாலும், உண்மையில் ஜனநாயகமென்பது, உலகில் எங்குமே கிடையாது என்பது அவர்களது கருத்து.
அவர்களது கருத்தின்படி பார்த்தாலும், போலி ஜனநாயக நாடாக இருந்தாலும், ஜனநாயகப் பண்புகளை, போலியாகவென்றாலும் வெளிப்படுத்த வேண்டிய தேவை, எமக்கு உண்டு.
ஜனநாயகப் பண்புகளின் அடிப்படையில், மரண தண்டனைகளே, சமூகத்துக்கு ஒவ்வாதவை, மனித உரிமைகளுக்கு எதிரானவை என்பது, உலகம் முழுவதிலும் எட்டப்பட்டுவரும் ஓர் உடன்பாடு ஆகும்.
முன்னேற்றம்மிகுந்த அனேகமான நாடுகள், இந்தக் கொள்கையை ஏற்று வருகின்றன. அப்படியிருக்கும் போது, பகிரங்கமான மரண தண்டனையை நிறைவேற்றுதல் என்பது, மிலேச்சத்தனமான ஒரு நடவடிக்கை. நாகரிகமடைந்த ஒரு சமுதாயத்துக்கு, அறவே பொருத்தமற்ற ஒன்று.
அதேபோல், விடுதலைப் புலிகளின் காலத்தில், இவ்வாறான தண்டனைகள் காரணமாக, உண்மையாகவே குற்றங்கள் குறைந்தன என்று வைத்துக் கொண்டாலும், தற்போது மீள அதிகரித்துள்ளமை, அவ்வாறான தண்டனைகள் மூலம், குற்றங்களுக்கான மனநிலையை இல்லாது செய்ய முடியாது, வெறுமனே, அச்சம் காரணமாகக் குற்றம் புரிவதை அவர்கள் ஒத்திவைக்கிறார்கள் என்பதைத் தானே காட்டுகிறது? எமக்குத் தேவை, நிரந்தரமான தீர்வல்லவா?
ஆனால், என்ன காரணத்துக்காக, “பகிரங்க மரண தண்டனை” என்பதை முன்வைக்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இளம் பிஞ்சுகள் – வன்புணர்வு – இயலாமை போன்றன, ஒரு வகையான கோபத்தை ஏற்படுத்துவது நியாயமானது.
ஆனால், இதனால் தான், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பக்கத்திலிருந்து மட்டும் பார்க்காமல், நீதிமன்றங்கள், வழக்கு, விசாரணை எனச் சென்று, இறுதியில், ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக நீதியை வழங்குமாறு கூறினால், அநேகமான நேரங்களில் அநேகமான குற்றங்களுக்கு, தலையைக் கொய்துவிடுங்கள் என்பது தான் அவர்களின் கோரிக்கையாக இருக்கும்.
இப்படியான குற்றங்களைக் குறைக்க வேண்டுமாயின், சமுதாய ரீதியான பாரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவையிருக்கிறது. முதலாவதாக, பாலின சமத்துவம் என்ற பண்பை, எமது சமுதாயங்களில் போதிக்க வேண்டியிருக்கிறது.
பழைமையை விரும்புகின்ற சமுதாயங்களாக இருந்தாலும், கடந்த காலங்களில் என்னவாறான நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தாலும், ஆணும் பெண்ணும் (ஏனைய பாலினங்களும்) சமமானவை என்ற உணர்வு, சிறிய வயதிலிருந்தே, எண்ணங்களில் விதைக்கப்பட வேண்டும்.
பெண்களுக்கு அதிகாரமளித்து, பெண்களை உயர்த்தாமல், எந்தவொரு சமுதாயமும் உயர்ச்சியடைய முடியாது என்பது யதார்த்தமானது.
அடுத்ததாக, இரண்டு முக்கியமான செயற்பாடுகளை, ஒரே நேரத்தில் செய்ய வேண்டியிருக்கிறது. அதிலொன்று, விசிலடிப்பது, கண்ணடிப்பது தொடக்கம் பாலியல் வன்முறை வரை, அனைத்துமே பாரிய குற்றங்கள் என்பதை, ஆண்களிடத்தில் விதைக்க வேண்டும்.
வீதியில் செல்லும் பெண்ணின் அங்கங்களை வர்ணிப்பதொன்றும், ஆண்மையின் வெளிப்பாடு அல்ல என்பதை, சமுதாயத்தில் பதியவைக்க வேண்டும். பாலியல் வன்முறையென்பது, வெறுமனே கடந்துவிட்டுப் போகக்கூடிய, சிறிய குற்றமல்ல என்பதை, உறுதியாகக் கூற வேண்டும்.
அதேநேரத்தில், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படுவதொன்றும், பெண்களின் தவறு கிடையாது என்பதை, பெண்களிடத்தில் கொண்டுசெல்ல வேண்டும். பெண்களின் ஆடை, நடத்தை, வார்த்தைகள், செயற்பாடுகள் எவையுமே, பாலியல் வன்முறைகளைக் கேட்டுப் பெற்றுக் கொண்டதாக அமையாது என்பதைப் புரிய வைக்க வேண்டும்.
ஆங்கிலத்தில், “குட்டையான பாவாடைகள், வன்புணர்வை மேற்கொள்வதில்லை. வன்புணர்வாளர்கள் தான் வன்புணர்வை மேற்கொள்கிறார்கள்” என்றொரு சொற்றொடர் உள்ளது. அதேபோன்ற மனநிலை ஏற்பட வேண்டும்.
ஏனெனில், தங்களுக்கெதிராக வன்முறைகளுக்கு, தங்களின் நடத்தையோ அல்லது ஆடையோ, ஒரு காரணமாக அமைந்திருக்கலாமோ எனப் பெண்கள் எண்ணுவது தான், ஆண்களின் பலமாக அமைகிறது.
மூன்றாவது முக்கியமான விடயமாக, பெண்களின் அந்தரங்க உறுப்புக்குள் தான், முழுக் கௌரவமும் காணப்படுகிறது என்ற மனநிலையை ஒழிக்க வேண்டும். ஏனெனில், நிகழும் வன்புணர்வுகளில் குறிப்பிட்ட சதவீதமானவை, பழிவாங்கல் நோக்கத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
குடும்பத்தின் மீது காணப்படும் கோபத்தை, அக்குடும்பத்திலுள்ள பெண் மீது காட்டினால், அக்குடும்பமே கஷ்டப்படும் அல்லது அவமானப்படும் என்ற எண்ணம் காணப்படுகிறது.
வன்புணர்வு என்பது, மிக மோசமான குற்றம். ஒருவரின் உடல் உரிமைகளை மீறுதலென்பது, அப்பட்டமான மனித உரிமை மீறல். ஆனால், வன்புணர்வு நிகழ்ந்தாலேயே, அப்பெண்ணின் வாழ்வு முடிந்ததென்பது, மோசமான முட்டாள்தனம்.
வன்புணர்வுகளிலிருந்து மீண்டு, ஏராளமான சாதனைகளை மேற்கொண்டவர்கள், உதாரணங்களாக உள்ளனர். புகழ்பெற்ற ஊடகவியலாளரும் தொலைக்காட்சித் தொகுப்பாளருமான ஒப்ரா வின்பிரே, எழுத்தாளரும் நடிகையிலும் பாடகியும் செயற்பாட்டாளருமான மாயா ஏஞ்சலோ, பாடகி லேடி ககா ஆகியோர், பல்லாயிரக்கணக்கான உதாரணங்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
இன்னும் ஏராளமானோர், அமைதியாக, தங்கள் பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கின்றனர்.
எனவே, வன்புணர்வுகளிலிருந்து எமது சமுதாயத்தை விடுவிக்க வேண்டுமாயின், எம் ஒவ்வொருவரிலும் மாற்றங்களும் புரட்சிகளும் ஏற்பட வேண்டும்.
அதற்கான மாற்றத்தை, ஏனையவர் ஆரம்பிக்கும் வரை காத்திருக்காமல், நாமாக ஆரம்பித்தோமானால், அதுவே பொருத்தமானதாக அமையும். அவ்வாறு இருக்கும் போது தான், மூதூரில் நடைபெற்றவை, அரிதானவையாக மாறி, பெண்களை மதிக்கின்ற சமுதாயமாக நாம் மாற முடியும்.
இந்த மாற்றம், 21ஆம் நூற்றாண்டில், நாங்கள் நிச்சயமாக அடைந்தே தீர வேண்டிய மாற்றமாக இருக்கிறது.