உன்னதமான கருத்தொன்றை முன் வைத்திருக்கிறார், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. அவரால் அக்கருத்து நாட்டை நோக்கிச் சொல்லப்படவில்லை. அவரது கட்சியை நோக்கிச் சொல்லப்பட்டிருக்கிறது. மூன்றாந் தலைமுறைத் தலைவர்களை, இனி நாம் உருவாக்கவேண்டும் என்பதே அக்கருத்து. இது பிரதமரால் தனது கட்சியை நோக்கிச் சொல்லப்பட்ட கருத்து எனினும்,
இன்றைய நிலைமையில் இக்கருத்து, அனைத்துக் கட்சிகளாலும் கருத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்றேயாம். முக்கியமாக நம் தமிழர் தலைமைகள் இதுபற்றி ஆழச் சிந்திக்கவேண்டும்.
தலைமை என்பது பொறுப்புமிக்க ஓர் பதவி. அதனை ஏற்கவும், தாங்கவும், சரியாய் நடைமுறைப்படுத்தவும், ஒருவர் தன்னை இழந்து மிகவும் சிரமப்படவேண்டும்.
கிட்டத்தட்ட ஓர் துறவி போல, தன் தனிவாழ்க்கைச் சுகங்களை மறந்து, நேரம், காலம் நினையாமல் சமூகத்திற்காக வாழ எவரால் முடியுமோ, அவரே உண்மைத் தலைவராக முடியும். தலைமைப்பதவியின் பாரத்தை உணர்ந்ததால்தான், ‘ஆட்சி உனக்கில்லை’, என்று கைகேயி சொன்னதும், வண்டிலால் கழற்றி விடப்பட்ட எருது போல, சிலிர்த்துச் சிரித்துச் சென்றானாம் இராமன் கழுத்தில் ஏற்றப்பட்ட வண்டிச் சுமையாக அரசபாரத்தை இராமன் கருதியிருக்கிறான் என்பது, கம்பனது இவ் உவமையால்த் தெரியவருகிறது. இன்றோ நம் தலைவர்கள் தலைமைப்பதவிக்காய்ப் போராடி நிற்கின்றனர். பதவி வந்தால் ஒற்றுமையும், பதவி போனால் பகைமையுமாக, அவர்களின் சிறுமைச் செயல்கள் விரிந்து கொண்டே செல்கின்றன.
இராமனைப் போல தலைமைப் பதவியின் பாரம் அறிந்தவர்களாய், இன்று நம் தலைவர்கள் எவருமே இல்லை. பதவிக்காகக் கட்சி மாறுதல், பதவிக்காகக் காட்டிக் கொடுத்தல், பதவிக்காகக் காலில் விழுதல், பதவிக்காகப் பொய்ம்மை பேசுதல், பதவிக்காகப் போட்டுக் கொடுத்தல் என, இங்கு தலைமைப்பதவிக்காக, நம்மவர்கள் செய்யும் கூத்துக்கு ஓர் எல்லையில்லை. அவர்களது அத்தனை முயற்சிகளும், அவர்கள் தலைமைக்குப் பொருத்தமானவர்கள் அல்லர், என்பதனையே எடுத்துக்காட்டுகின்றன. தேர்தலில் தோற்றபின்னும், தனக்கு பதவி வழங்கப்படவில்லை
என்பதற்காக, ஒரு தலைவர் அதுவரை ஆதரித்தவர்களை எதிர்த்தும், எதிர்த்தவர்களை ஆதரித்தும் செய்த கூத்து சில நாட்களின் முன் நடந்தது.
வாக்கு எண்ணிக்கையின் போது தான் தோற்று வருவதாய் வந்த செய்தி கேட்டு, மற்றொரு தலைவர் மார்பைப் பிடித்து மயங்கி விழுந்தாராம். மக்களுக்காகப் பாடுபட எத்தனை துடிப்பு என்று பாருங்கள்? வேடிக்கை மனிதர்கள். இன்று இவர்கள் மத்தியில் தலைமைப் பதவி என்பதன் அர்த்தம், புகழ், வருமானம், வசதி என்பனவாய் ஆகிவிட்டது. உண்மைத் தியாகத்தலைவர்களாய் உள்ளவர்களை, தேடிக்காணும் அளவிற்கு இன்று நம் இனத்தின் நிலை உள்ளது. தமிழ்நாட்டில் காமராஜர் முதலமைச்சராய் இருந்தபோது, கிராமத்தில் இருந்த அவரது தாயாரிடம் இருந்து, அவருக்கு ஓர் கடிதம் வந்ததாம். ‘நீ முதலமைச்சராகி விட்டபடியால், என்னைப் பார்க்கப் பலரும் வருகிறார்கள், அவர்களை உபசரிக்க நீ மாதாந்தம் அனுப்பி வைக்கும், நூற்று ஐம்பது ரூபாய் பணம் போதவில்லை, முடிந்தால் இன்னும் ஓர் ஐம்பது ரூபாய் சேர்த்து அனுப்பு’ என்று, அக்கடித்தத்தில் அவர் கோரிக்கை வைத்திருந்தாராம்.
அதற்குக் காமராஜர், ‘இனி உன்னைக் காண வருகிறவர்களுக்கு, தேநீர் முதலியவை கொடுத்து உபசரிக்காதே, தேவைகளைப் பெருக்கிக் கொண்டால், வருமானம் எவ்வளவு வந்தாலும் போதாமல்தான் இருக்கும், எனவே வருமானத்தைப் பெருக்க நினைக்காமல், தேவைகளைச் சுருக்கப் பழகிக்கொள்’ என்று, பதில் எழுதினாராம். அவர்தான் உண்மைத் தலைவர். நம் நாட்டில் இனப்போர் மூளுவதற்கு முன்பான தமிழர்தம் அரசியலில், பேச்சாற்றல், சிறிதேனும் தியாகம், சமூகத் தொடர்பு, அறிவாற்றல் என்பவற்றை, அடிப்படையாய்க் கொண்டுதான் தலைமைப்பதவிகள் வழங்கப்பட்டிருந்தன. விடுதலைப்போர் தொடங்கிய பின்பு, ஆயுதந்தாங்கிய இளைஞர்களிடம், விரும்பியோ விரும்பாமலோ அத்தலைமைப்பதவிகள் கைமாற்றப்பட்டன.
ஆயுதப் போர் ஆரம்பித்ததன் பின்னர், தியாகம் மட்டுமே தலைமைப் பதவியின் தகுதியாய் மாற, அங்ஙனம் உருவாகிய தலைவர்களும் பின்னர் வேறு வேறு காரணங்களால், தமக்குள் தாமே மோதி ஒருவரை ஒருவர் அழித்தும், பிள்ளைப்பூச்சிகளாய் அடங்கி இருந்த பழைய ஜனநாயகத் தலைவர்களைக் கொன்றொழித்தும், தமிழர்தம் அரசியலில் தலைமைக்கான ஒரு வறுமையை உருவாக்கினர். ஆயுதப் போராட்டம் முனைப்புப் பெற்றிருந்த வேளையில், தம் பலத்தால் தலைமையைத் தம் கைக்குத் தனித்து வரப்பண்ணியவர்கள், உலகத் தொடர்புக்கு ஜனநாயக முகமும் தேவை என்றுணர்ந்து, அடங்கிக் கிடந்த முன்னைத் தமிழ்த் தலைவர்களையும், ஒதுங்கிக் கிடந்த ஆயுதப்போராட்டக் குழுத்தலைவர்களையும் ஒன்றிணைத்து,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் ஓர் கட்சியாக்கி, குறித்த சிலரை தலையாட்டிப் பொம்மைத் தலைவர்களாய், பாராளுமன்றத்துள் தம் சொல்கேட்டு இயங்க அனுப்பி வைத்தனர். அப்போது அவர்களால் நியமிக்கப்பட்ட சில தலைவர்களும், எத்தகுதி கொண்டு பாராளுமன்றத்துள் நுழைந்தனர் என்று, எவர்க்கும் தெரியவில்லை. நூற்றாண்டுகளாய் நீடிக்கப்போகிறது என எதிர்பார்த்த, ஈழத்தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்டம், யாரும் எதிர்பாராதவண்ணம் 2009 இல் திடீரென முடிந்துபோக, ஆளுமைமிக்க தலைவர்களைத் தேடி தமிழர்கள் அலைய வேண்டியதாயிற்று. அதுவரை ஒப்புக்குச் சப்பாணியாய் இயங்கி வந்த, கூட்டமைப்புத் தலைவர்கள் உயிர் பெற்று நிமிர்ந்தனர். தாமே தலைவர்கள் என மார்தட்டி மகிழ்ந்தனர்.
இருந்த ஓரிரு மூத்த தலைவர்களுக்கோ தாம் சார்ந்த அணியை ஒரு பெருங்கட்சியாக்கி, உலகுக்குத் தம் பலத்தைக் காட்டவேண்டிய தேவை. அதனால் புதியவர்கள் பலர் எந்தத் தகுதியுமின்றி, பாராளுமன்றத்தினதும் மாகாணசபையினதும் படியேறினர். இன்று தமிழர்தம் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்வோர் பலரும் இங்ஙனமாய் உள் நுழைந்தவர்களே. தேவைக்குத் தலைவர்களான, அல்லது தலைவர்களாய் ஆக்கப்பட்ட அவர்தம்மை, ஓரேயடியாய் நாம் குறைசொல்ல முடியாது. ஆனால் யானை தூக்கி முதுகில் வைத்த பட்டத்தரசர்களாய், அதிஷ்டத்தால் தலைவர்களாய் ஆக்கப்பட்ட அவர்கள், தம் தலைமைப் பதவியை தமது முதுசச் சொத்தாய் நினைந்ததோடு, தலைமைக்கான தமது தகுதியை வளர்த்துக் கொள்ளாமலும், மற்றவர்க்கு அத்தலைமையை விட்டுக்கொடுக்க மறுத்தும், உடும்புப் பிடியாய் அவ் இருக்கையில் உட்கார்ந்து செய்யும் சேட்டைகள் சகிக்கமுடியாதவை.
போர் முடிந்ததன் பின்பான இரண்டு தேர்தல்களிலும், பெரும்பாலும் ஆரம்பத்தில் இருந்த தலைவர்களே மீண்டும் இருக்கையை நிரப்பியுள்ளார்கள். இவர்களது இந்த மீள் பிரவேசம் பல கேள்விகளை நம் மனதில் கிளப்புகின்றன. இவர்கள், குறித்த பாராளுமன்றக் காலத்தில் சாதித்தவை எவை? இவர்கள்; சாதித்தவற்றைச் சாதிக்கக் கூடிய வேறு தலைவர்கள் இனத்துக்குள் இலரா?
குறித்த ஒரு துறையில் மாற்றீடு இல்லாத இவர்தம் ஆற்றல்தான் என்ன? இப்படியே இப்பதவிகள் குடும்பச்சொத்தாய் இவர்களுக்கு ஆக்கப்பட்டால் புதியவர்களுக்கான இடம் கட்சிக்குள் எங்ஙனம் வழங்கப்படும்? மேற்கேள்விகளுக்கு சரியான பதில் சொல்ல முடிந்தாலே அன்றி, ஒரு கட்சியின் ஒரே முகங்கள் திரும்பத் திரும்பப் பாராளுமன்றம் செல்வதற்கும், அவ் உரிமை அவர்களின் குடும்பச் சொத்தாக்கப்படுவதற்கும், எவராலும் எந்த நியாயமும் கூறமுடியாதென்பது திண்ணம்.
நம் இனம் வரலாற்றின் முக்கிய ஒரு திருப்புமுனையின் விளிம்பில் நிற்கிறது. கரணம் தப்பினால் மரணம் எனும் நிலை நம் இனத்தாருக்கு. இந்நிலையில் ஆற்றலும், ஆழ்ந்த சிந்தனையும், தியாக மனப்பான்மையும், உண்மைத் தொண்டும் நிறைந்த, பதவிமேல் ஆசையில்லாத தலைவர்களின் தேவை மிக அவசியமானது. அத்தகைய தலைவர்களை உருவாக்க நாம் என்ன முயற்சி செய்திருக்கிறோம்? இதுதான் இன்று நம்முன்னிற்கும் பூதாகரமான கேள்வி. ‘அரசியல் என்பது ஒரு சாக்கடை’ என்று சொல்லிச் சொல்லி, நல்லவர்கள் ஒதுங்கிக் கொள்ள புல்லர்கள் அவ் அரசியல் இடங்களை மெல்ல மெல்ல தமதாக்கிக் கொண்டுவிட்டனர். இந்நிலையில் மாற்றம் வராவிட்டால் நம் இனம் தாழப்போவது திண்ணம். தகுதி நிறைந்த இனப்பற்றுள்ளவர்களை,
நாம் தலைவர்களாக்கவேண்டும். இல்லாவிட்டால் மின்னிமுழங்கி வந்து சேர்ந்த, மாகாணசபை இன்று படும்பாடாய்த்தான் நம் இனத்தின் பாடும் முடியும்.
பிழைகளைச் சுட்டுவதோடு கடமைகள் முடிந்துவிடாது, சரி, நிகழ்வதற்கான வழியைச் சொல் என்பீர்கள். சொல்கிறேன். தேர்தல் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க சமூக அக்கறையும் நடுநிலையும் கொண்ட அறிஞர்களை உட்கொண்ட ஓர் குழு அமைக்கப்பட்டு அவர்களாலேயே தேர்தல் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அத்தேர்வுக்குழுவில் இருக்கும் எவரும் தேர்தலில் போட்டியிடக்கூடாது. ஒருதரம் பாராளுமன்றப் பதவி வகித்தவர் அப்பதவிக்காலத்தில் தான் செய்த சாதனைகளை எழுத்து மூலமாக அச்சபைக்கு வழங்கவேண்டும். அவருடைய மக்கள் ஆதரவு பற்றிய ஒரு கணிப்பீட்டை அவரது தொகுதியில் நடுநிலைகொண்ட ஒருகுழு கணித்து அவ் அறிக்கையை தேர்வுக்குழுவுக்குச் சமர்ப்பிக்கவேண்டும். பாராளுமன்றம் சென்று, தான் சாதிக்கப்போவது எதை? என்பது பற்றி குறித்த வேட்பாளரிடம் தேர்வுக்குழு நேர்முக விசாரணை நடத்தவேண்டும்.
குறித்த விடயத்தைச் சாதிக்க, இவரை விட்டால் ஆளில்லை எனும் நிலை இருந்தாலே அன்றி எக்காரணம் கொண்டும் ஒருவரை இரண்டு தரத்திற்கு மேல் தேர்தலில் நிற்க அனுமதிக்கக் கூடாது. ஒருவர் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் போதே குறித்த காலப்பகுதியில் அவரது செயற்பாடு சிறப்பாக இல்லையெனின் அவரை அப்பதவியிலிருந்து நீக்குவதாக நிபந்தனை விதித்து அதற்கு வாய்ப்பாக முன்னரே அவரிடம் ராஜினாமாக் கடிதத்தை கட்சி பெற்று வைத்துக் கொள்ளவேண்டும். ஆளுமையும் நேர்மையும் சமூக அக்கறையும் உள்ள இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர் அறிஞர்களைக் கொண்டு ஆளுமைப் பயிற்சி வழங்கப்படவேண்டும். ஆளுமைப் பயிற்சி பெற்றவரிடம் கட்சியின் சில பொறுப்புக்களைக் கொடுத்து அதன் பெறுபேறுகளைக் கொண்டு படிப்படியாக அவர்களைத் தரவரிசையில் உயர்த்தி வரவேண்டும்.
அத்தர வரிசையில் முதல்நிலை பெறுவோரை மெல்ல மெல்ல உள்ளூராட்சி சபை, மாகாணசபை போன்றவற்றில் அறிமுகப்படுத்தி அதிலும் அவர்களுடைய ஆற்றலை இனங்கண்டபின்னரே பாராளுமன்றத்தலைவர்களாய் அவர்களை ஆக்கவேண்டும். இங்ஙனமாய் நம் இனத்திற்கான புதிய தலைமை மாற்றத்தை, நாம் நெறிப்படுத்தத் தவறுவோமேயானால், சுயநலமிக்க முட்டாள்களின் கைவயப்பட்டு, குரங்கின் கைப்பட்ட பூமாலையாய் நம் இனம் உதிர்ந்து போகும். அதனால் இந்நேரத்தில், பிரதமர் தன் கட்சிக்குச் சொல்லியிருக்கும் அறிவுரையை, நம் இனத்தலைமைகளுக்குச் சொன்ன அறிவுரையாய் ஏற்று, உடன் நம் தமிழ்த்தலைமைகள் செயற்படவேண்டும். நல்ல விடயத்தை எவர் சொன்னால் என்ன? அதனை நமகு ஆக்கவேண்டும் என்பதே அறிவுடைமையாம். “எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.”
(கம்பவாரிதி ஜெயராஜ்)