ஆகவே, ஜனாதிபதித் தேர்தலிலும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், பிரதான கட்சிகளின் ஆதரவுள்ள ‘பொது வேட்பாளர்களே’ முக்கியத்துவம் மிக்க போட்டியாளர்களாகிறார்கள். 1951இல் எஸ்.டபிள்யு.ஆர்.டீ. பண்டாரநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தொடங்கியது முதல், ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுமே அல்லது, அவற்றின் தலைமையில் அமைந்த கூட்டணிகளே இலங்கையின் இரு பிரதான கட்சிகளாக இருந்துள்ளன.
இடைக்காலத்தில், 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜே.ஆர். ஜெயவர்தன பெற்ற அதீத 5/6 பெரும்பான்மை வெற்றியால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ,தேசிய அரச சபையில் வெற்றிகொண்ட ஆசனங்களின் எண்ணிக்கை மிகக் குறைவடைந்ததால், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, பிரதான எதிர்க்கட்சியானது.
ஆயினும், நாடளாவிய ரீதியில் பெற்றுக்கொண்ட வாக்கு வீதாசாரத்தைப் பார்த்தால், ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுமே இரு பிரதான பலங்களாக இருந்துள்ளன.
ஆனால் இம்முறை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தன்னுடைய பலத்தையும் ஆதரவையும் தன்னுடைய முன்னாள் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் புதிய கட்சியிடம் இழந்துவிட்டமை தெட்டத்தௌிவாகத் தெரிகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்று அமைந்த இரட்டைக் குதிரைப் பந்தயத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஓரங்கட்டி இன்று மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண அந்த இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தச் சூழலில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கும்.ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிக்கும் வேட்பாளருக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கும் இடையிலான போட்டியாகவே அமையும் என்பதை, இலங்கையின் கடந்தகால அரசியல் பாணியின் அடிப்படையில் உணரக்கூடியதாக இருக்கிறது.
மஹிந்த ராஜபக்ஷ தரப்பிலிருந்து மஹிந்த ராஜபக்ஷவின் தம்பி கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்குவது நிச்சயமாகியுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் தன்னுடைய வேட்பாளரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில், சஜித் பிரேமதாஸவே ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பான வேட்பாளராக வேண்டும் என்று கட்சிக்குள்ளான ஆதரவும் அழுத்தமும் அதிகரித்தவண்ணம் வருவதையும் நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
ஆனால், கோட்டா, சஜித் ஆகிய இருவருமே போட்டியாளர்கள் என்றால், இருவரின் கொள்கைகள் எந்த அளவில் வேறுபடுகின்றன என்பதைப் பார்க்கும் போது, இருவருமே ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத அரசியலை, அதன் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பவர்களாகவே தென்படுகிறார்கள். அவர்களுடைய பேச்சுகளும் பிரசாரங்களும் இதை உணர்த்தி நிற்கின்றன.
இந்த நிலையில்தான், ஜே.வி.பி (மக்கள் விடுதலை முன்னணி) ‘தேசிய மக்கள் சக்தி இயக்கம்’ என்ற பதாகையின் கீழ், ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்று சில நாள்களுக்கு முன்னர் கொழும்பு காலிமுகத்திடலில் நடத்திய, தன்னுடைய மாநாட்டில் அறிவித்திருக்கிறது.
மிக நீண்ட காலத்தின் பின்னர், பிரதான கட்சியின் அல்லது கூட்டணியின் வேட்பாளரொருவரை ஆதரிக்காது, ஜே.வி.பி தன்னுடைய வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கியிருக்கிறது.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற ஜே.வி.பியின் ஆதரவு முக்கிய காரணம். ஜே.வி.பி தன்னை மார்க்ஸிய அரசொன்றை ஸ்தாபிக்க விளையும் இடதுசாரிக் கட்சியாக காட்டிக்கொண்டாலும், இலங்கையில் தமிழ் இளைஞர்கள் ஆயுதமெடுக்க முன்பே, இலங்கை அரசுக்கெதிராக ஆயுதம் எடுத்த இயக்கம் ஜே.வி.பி.
ஜே.வி.பியின் வன்முறை அட்டூழியங்களை எழுபது, எண்பதுகளில் வாழ்ந்த மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். படுகொலைகள் நிறைந்த இரத்தக்கறை நிறைந்த வரலாற்றைக் கொண்டது ஜே.வி.பி. அதன் தலைவர் ரோஹண விஜேவீரவின் மறைவைத் தொடர்ந்து, தன்னுடைய போராட்ட முகத்தைக் கைவிட்டு, ‘ஜனநாயக நீரோட்டத்தில்’ ஜே.வி.பி இணைந்துகொண்டது.
ஆனால், இந்த நாட்டின் மக்களிடையே, குறிப்பாக சிங்கள மக்களிடையே தன்னுடைய வன்முறை வெறியாட்டத்தால் ஜே.வி.பி ஏற்படுத்தியிருந்த அச்சப்பார்வையை மாற்ற வேண்டிய தேவை ஜே.வி.பிக்கு இருந்தது. அதை மாற்றாது விட்டால், ‘ஜனநாயக’ அரசியலில் ஜே.வி.பியால் தாக்குப்பிடிக்க முடியாது என்பதை ஜே.வி.பி உணர்ந்திருந்தது.
அண்மைக் காலத்தில் முன்னணி சோசலிஸக் கட்சியின் எழுச்சிவரை, இலங்கைப் பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்கள் ஜே.வி.பியின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. இலங்கைப் பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரையில், அங்கு இலங்கையின் பிரதான கட்சிகளுக்குப் பலமான இடமொன்று கிடையாது. மாறாக இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களைக் கட்டுப்படுத்தும் செல்வாக்கு மிக்க கட்சியாக ஜே.வி.பி இருந்தது. இதுவே ஜே.வி.பியின் பெரும் பலங்களுள் ஒன்று.
ஆனால், மாணவர் பலம் என்பது மட்டும் ஜனநாயக அரசியலில் தாக்குப்பிடிக்கப் போதாது. சிங்கள மக்களிடையே ஜே.வி.பி தொடர்பிலிருந்த அச்சவுணர்வையும் அவப்பெயரையும் மாற்றியமைக்க ஜே.வி.பி, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தைக் கையிலெடுத்தது.
சோசலிஸமும் இனத் தேசியவாதமும் எவ்வாறு ஒன்றுக்கொன்று இயைபானதல்லவே என்று தத்துவரீதியாகக் கேள்வி எழுப்புவர்கள், ஹிட்லர் தலைமையிலான நாஸிக்களின் ‘தேசிய சோசலிஸத்தை’ கருத்தில் கொண்டால், ஜே.வி.பி எடுத்துக்கொண்ட புதிய அவதாரத்தின் தாற்பரியம் தௌிவாகும்.
இந்தக் காலகட்டத்தில் தான், தமிழீழ விடுதலைப் புலிகளைக் கடுமையாக எதிர்க்கும், ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தைக் கடுமையாகப் பிரசாரம் செய்யும் அரசியலை, ஜே.வி.பி முன்னெடுத்தது. இதன் காரணமாகத் தெற்கில் ஜே.வி.பியின் ஆதரவுப் பலம் அதிகரித்தது.
இந்தக் காலத்தில்த்தான், விமல் வீரவன்ஸ போன்ற ‘சிங்கள-பௌத்த தேசியவாத சோசலிஸவாதிகள்’ ஜே.வி.பியால் உருவாக்கப்பட்டார்கள். சிங்கள மக்களிடையே, தனக்கிருந்த அவப்பெயரைச் சரிசெய்ய, தமிழ் விரோத அரசியலை ஜே.வி.பி முன்னெடுத்தது என்று சொன்னால் அது மிகையல்ல. தன்னுடைய இரத்தக்கறை தோய்ந்த ‘பயங்கரவாத’ வரலாற்றை மறைக்க, விடுதலைப் புலிகளே மிகப்பெரிய ‘பயங்கரவாதிகள்’ என்று நிறுவுவதில் ஜே.வி.பி கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டது.
ஏற்கெனவே வரையப்பட்ட ஒரு கோட்டைச் சிறியதாக்க வேண்டுமென்றால், அதைவிடப் பெரிய கோடொன்றை அருகில் வரையவேண்டும் என்ற உபாயத்துக்கு ஏற்றவாறாக, ஜே.வி.பியின் காய்நகர்த்தல் இது.
இதன்படி, 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில், தீவிர ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத சக்திகளில் ஒன்றாக ஜே.வி.பி மாறியிருந்தது. ஜே.வி.பியின் ஆதரவு என்பது, தேசியக் கட்சிகளுக்கு, குறிப்பாக தெற்கின் தீவிர ‘சிங்கள-பௌத்த’ வாக்கு வங்கியைக் கவர்வதற்கு, அவசியமானதொன்றாக மாறியிருந்தது.
ஆனால், மஹிந்த ராஜபக்ஷ கண்ட யுத்த வெற்றி என்பது, ‘சிங்கள-பௌத்த’ வாக்கு வங்கி முன்னிலையில், அவரை அசைக்க முடியாததொரு வீரனாக ஆக்கியது. இது ‘சிங்கள-பௌத்த’ வாக்குவங்கியைக் கவர்வதற்கு ஜே.வி.பியின் தேவையைக் கிட்டத்தட்ட இல்லாமலாக்கியது எனலாம்.
இந்த நிலையில்தான் 2005இல், தான் ஆதரித்துப் பதவிக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஷவை, அவருடன் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்து, 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி எதிர்த்து, எதிர்த்தரப்பின் பொதுவேட்பாளராகக் களமிறங்கிய சரத் பொன்சேகாவுக்குத் தனது ஆதரவை வழங்கியது.
ஆனால், யுத்த வெற்றி என்ற ஒன்று மஹிந்த ராஜபக்ஷவின் பெருவெற்றியை உறுதி செய்தது. மேலும் 2005க்கும் 2010க்கும் இடைப்பட்ட காலத்தில், ஜே.வி.பிக்குள் சில மாற்றங்களும் ஏற்பட்டன. 2008இல், உள்ளக முரண்பாட்டைத் தொடர்ந்து, விமல் வீரவன்ஸ கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவரும் அவரது ஆதரவாளர்களும் பிரிந்து சென்று, வேறொரு கட்சியொன்றை ஆரம்பித்து, மஹிந்த ராஜபக்ஷவுடன் சங்கமமானார்கள். ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் முகமாகவும், வெற்றி வீரனாகவும் மாறியுள்ள மஹிந்த ராஜபக்ஷவை, ‘சிங்கள-பௌத்த’ தேசியம் பேசித் தோற்கடிக்க முடியாது என்று உணர்ந்ததாலோ என்னவோ, ஜே.வி.பி. தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக் கொண்டது.
ஊழல் எதிர்ப்பு, குடும்ப ஆட்சி எதிர்ப்பு என்ற விடயங்களைக் கையிலெடுத்துக் கொண்ட ஜே.வி.பி, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது ஆட்சிக்கும் அரசாங்கத்துக்கும் எதிராகக் கடும் விமர்சனத்தை நாடாளுமன்றத்திலும் வௌியிலும் தொடர்ந்து முன்வைத்து வந்தது.
2010க்கும் 2015க்கும் இடைப்பட்ட காலம்தான், அநுர குமார திஸாநாயக்க பொதுஜனங்களிடையே பிரபலமடையத் தொடங்கிய காலம் எனலாம். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியையும் அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சித்து, ‘புட்டுப் புட்டு வைத்த’ அவருடைய பேச்சுகள் ஊடக, சமூக ஊடக வௌியெங்கும் பிரபலமாகின. இது ஜே.வி.பியை மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான பெரும் சக்தியாக முன்னிறுத்தியது.
பிரதான எதிர்க்கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி இருந்தாலும், ஜே.வி.பியினரைப் போன்ற பொதுஜன வசியம்மிக்க பேச்சாளர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கவில்லை. அந்த இடைவௌி ஜே.வி.பியால் பூர்த்தி செய்யப்பட்டது.
இந்த நிலையில்தான், 2014இல் அநுர குமார திஸாநாயக்க, ஜே.வி.பியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இது ஜே.வி.பியின் அரசியல் பயணத்தில் காலத்துக்குத் தேவையான இன்னொரு தந்திரோபாய நகர்வாகவே அமைகிறது.
அநுர குமாரவின் தலைமைத்துவத்துடன், ஜே.வி.பியில் ஏற்பட்ட மாற்றம் என்ன? எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமாரவின் வகிபாகத்தின் முக்கியத்துவம் என்ன? சிறுபான்மையினர், குறிப்பாகத் தமிழ் மக்கள் கோட்டாபய, சஜித் ஆகியோரை மீறி, அநுரவை ஆதரிப்பதற்கான நியாயங்கள் இருக்கின்றனவா?
(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)