மூவினங்களும் வாழும் திருகோணமலையில்

ஏற்கனவே பல கட்சிகளின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஐந்தாயிரம் ரூபாய் பணம், ப்ரைட் ரைஸ் பார்சல் மற்றும் சப்பட்டை போன்றவை இலவசமாக வழங்கப்படுவதாக பல்வேறு இடங்களில் வாசித்தது, பார்த்தது வேறு மனதுக்குள் வந்து தொலைத்தது.

சரி. நமது அதிஷ்டத்தை முயற்சி செய்து பார்ப்போம் என்று கூட்டத்துக்குள் உள்நுழைந்தேன்.
நுழையும்போதே பாதுகாப்புக் கெடுபிடிகள். இருந்தாலும் அந்த ஐந்தாயிரம் ரூபாய் கண்ணுக்குள் நின்றதால் எதனையும் நான் சட்டை செய்யவில்லை.
உள்ளே நுழைந்து பிரதான அரங்கத்துக்கு சென்றால் அங்கு உட்காரவே இடமில்லை. ஏன் உள்ளே நிற்கவும் கூட இடமில்லை. ஏற்கனவே அது நிரம்பி விட்டது.

அது நண்பகலை அண்மிக்கும் நேரம். மழை மேகங்கள் கூடியிருந்தாலும் அதிக நேரம் வெயிலே சுட்டெரித்தது.
அந்த ஐந்தாயிரத்தைப் பெற்றுக் கொள்ள சிறிது நேரம் வெயிலை தாங்குவதில் என்ன பிரச்சனை என்று தோன்றியது.
பிரதான அரங்கத்துக்கு வெளியே சுட்டெரிக்கும் வெயிலையும் பாராது நின்று கொண்டேன்.

நின்று கொண்டே அப்படியே தலையைத் திருப்பி கொஞ்சம் சுற்றி முற்றி நோட்டம் விட்டுப் பார்த்தால், ஏராளமான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இனம், மதம், மொழி என்று எந்த பேதங்களும் இல்லாமல் சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்கள் எல்லோரையும் காணக் கூடியதாக இருந்தது.

குறிப்பாக அங்கு கலந்து கொண்டிருந்த பல தமிழ் முகங்களைக் காண எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. எனக்குத் தெரிந்த பல தமிழ் முகங்களின் வருகைகளை நான் அங்கு எதிர்பார்த்திருக்கவில்லை.

தேர்தல் காலங்களில் மட்டும் வானிலிருந்து குதித்தது போல வந்து, தமிழ்த்தேசியம் பேசி ஓட்டுக் கேட்கும் பலர் வேட்பாளர்கள் ஏனோ ஞாபகம் வந்து தொலைத்தனர்.

“மெதுவாக உங்கள் மனதை பெரும் ஏமாற்றம் ஒன்றிற்கு தயார் படுத்துங்கள்” என்று அவர்களுக்கு சின்னதாக ஒரு எச்சரிக்கையை போட்டு வைப்போம். மற்றபடி நான் அதுகுறித்து எதுவும் பேசவில்லை.

நான் உள்ளே நுழைந்தபோது பேசிக் கொண்டிருந்தது ஒரு சகோதர மொழிப் பேச்சாளர். கைதேர்ந்த ஒரு பேச்சாளர் போல பேசிக் கொண்டிருந்தார்.

எனக்கு சகோதர மொழி புரியும் என்றாலும், நான் அதில் தேர்ச்சி பெற்றவனல்ல. இருந்தாலும் நானும் புரிந்து கொள்ளும் அளவுக்கு அவரது மொழிநடையும், பேச்சும் மிகச் சிறப்பாக இருந்தது.

வசியம் செய்யப்பட்டவன் போல சிறிது நேரம் அவரது உரைக்கு கட்டுப்பட்டு நின்றேன். அப்போது பேசிக் கொண்டிருந்தவர் ரொஷான் அக்மீமன என்று சொன்னார்கள்.

பேச்சாளர்கள் பேசும்போது கூட்டத்தில் இருந்தவர்களின் பங்களிப்பு மிகவும் அபாரமாக இருந்தது. குறிப்பாக பாராளுமன்றத்தைச் சுத்தம் செய்ய வேண்டும், எமது நாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று பேதங்கள் இனிமேலும் இல்லை, நாம் எல்லோரும் ஒற்றுமையாக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும், புதியதொரு அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும் என்றெல்லாம் கூறும்பொழுது கூடியிருந்த மக்களின் வரவேற்பு அமோகமாக இருந்தது.

வெறும் பார்வையாளனாக கூட்டத்துக்குச் சென்றவன் மெதுவாக பங்காளனாக மாற ஆரம்பித்து விட்டேன்.
எனது ஆர்வம் வேட்பாளர்கள் மீது மட்டுமல்ல. அங்கு கலந்து கொண்டிருந்த மக்கள் மீதும் இருந்தது.

கூட்டத்தின் போது எந்தவிதமான உணவுப் பொருட்களோ, தண்ணீர் போத்தல்களோ வழங்கப்படவில்லை.
மக்களுக்குத் தேவையானவற்றை அவர்களே கொண்டு வந்திருப்பார்கள் என்று தோன்றியது.

மழைக்காலம் என்பதால் பலர் குடைகளுடன் வந்திருந்தனர். குறிப்பாக பலர் குழந்தைகளுடனும் குடும்ப சகிதமாகவும் வந்திருந்தனர்.

வெயில் கொளுத்தினாலும் எவரும் சட்டை செய்யாமல் மகிழ்வுடன் அமைதியாக இருந்து உரைகளை செவி மடுத்தனர்.
குறிப்பாக சப்பட்டை கிடைக்குமா என்ற நப்பாசையில் இருந்த எனக்கு அங்கு எவருமே மது போதையில் இருக்கவில்லை என்பது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

ஏற்கனவே பல தேர்தல் கூட்டங்களில் மப்பு தலைக்கேறி பாம்பு நடனம் ஆடியவர்களையும், வேலிக்கு முட்டுக் கொடுத்து நின்றவர்களையும் பார்த்திருந்த எனக்கு இது புதிதாகத் தோன்றியது.

சூழ்நிலையைப் பார்த்து சப்பட்டை இன்று கிடைக்கப் போவதில்லை என்பதை தெரிந்து கொண்டபோது சிறிது ஏமாற்றம் இருந்தாலும் அதனை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களின் சுய ஒழுக்கம் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நீண்ட நேரம் கதிரையில் அமர்ந்திருந்தவர்கள் தாமாகவே எழுந்து மற்றவர்களையும் அமர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள்.

சிறிது நேரத்தில் எனக்கு அருகில் இருந்த இரண்டு கதிரைகளில் அமர்ந்து இருந்தவர்கள் எழுந்து சென்று நின்று கொண்டார்கள்.
அந்தக் கதிரையில் என்னை உட்காருமாறு ஒருவர் கூறியதை நான் நன்றியுடன் மறுத்து விட்டேன். எனக்குப் பின்னால் இருந்த ஒருவர் தான் அதில் அமர்ந்து கொள்ளலாமா என்று என்னிடம் அனுமதி கேட்டு சென்று அமர்ந்து கொண்டார்.

நிகழ்வுகளுக்குச் செல்லும்பொழுது கதிரைகளுக்கு கைக்குட்டை போட்டு பிடித்து வைத்துக் கொள்ளும் மக்களையே பார்த்து வந்த எனக்கு இந்த விடயங்கள் மிகவும் ஆச்சரியமாகவே இருந்தன.

பேச்சாளர்கள் மாறி மாறிப் பேசிக் கொண்டிருந்தார்கள். எவரது பேச்சுமே குறை சொல்லும் அளவில் இல்லை.

எல்லோரது உரைகளையும் நான் உட்பட எல்லோரும் ஆர்வத்துடன் செவி மடுத்துக் கொண்டிருந்தோம். பேச்சாளர்கள் அனைவரும் பெரும்பாலும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களாக இருந்தனர்.

ஒவ்வொரு தொகுதி வேட்பாளர்கள் சார்பாகவும் அந்தந்தப் பகுதியிலிருந்து மக்கள், கூட்டத்திற்கு வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர்கள் உரையிலிருந்து அறிந்து கொண்டேன்.

எல்லோரது பேச்சுக்களையும் தொடர்ந்து முதன்மை வேட்பாளர் அருண் ஹேமச்சந்திரா அவர்கள் உரையாற்ற அழைக்கப் பட்டார்.

இங்கு அருண் அவர்களின் உரை பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அவர் அரசியலுக்குள் தன்னை இணைத்துக் கொண்ட நாள்முதல் அவரை அவதானித்து வருபவன் என்ற ரீதியில், பேச்சாற்றலில் அவரின் வளர்ச்சி மிகவும் அபரிமிதமாக இருந்தது.

தமிழ், சிங்களம் என்று இரண்டும் மொழிகளிலும் மாறி, மாறி மடை திறந்த வெள்ளம் போல பேசிக்கொண்டு சென்றார்.
அருண் உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுது கூட்டத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

மக்கள் எல்லோரும் ஒரு பகுதியில் சென்று குவியத் தொடங்கினார்கள். அப்போது நேரமும் நண்பகலை நெருங்கி விட்டிருந்தது.

“ஆஹா, ப்ரைட் ரைஸ் பார்சல்கள் வந்து சேர்ந்து விட்டன” என்று உள்ளுக்குள் ஒரு பட்சி சொல்லியது.

அந்தப் பகுதிக்குச் சென்று கொஞ்சம் எட்டிப் பார்த்தால் ஜனாதிபதி அவர்கள் அப்போது வருகை தந்து கொண்டிருந்தார்.
தேசிய மக்கள் சக்தியின் பாடலும் ஒலிக்க, மக்களின் ஆரவாரத்தின் மத்தியில் மிடுக்காக நடந்து வந்து உள்ளே அமர்ந்த ஜனாதிபதியைப் பார்க்கவே மக்கள் முண்டியடித்தனர்.

அவரைக் கண்டபோது அவர்களின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. அந்த முகங்களில் தெரிந்த மக்ழிச்சி எனக்குப் போலியானதாக தெரியவில்லை.
பெரும் திரளான மக்கள் ஜனாதிபதியைப் பார்ப்பதெற்கென்றே பஸ் பிடித்து வந்திருக்கிறார்கள் என்று புரிந்தது.

ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளை நன்கு படித்து பட்டம் வாங்கும்பொழுது அந்தக் குடும்ப உறுப்பினர்கள் எப்படி மகிழ்ச்சி அடைவார்களோ, அது போலவே அனுர குமார அவர்கள் ஜனாதிபதியாக தெரிவானதை இவர்களும் தங்கள் பிள்ளையே ஜனாதிபதி ஆனது போலக் கொண்டாடிக் கொண்டு இருந்தனர். மிகவும் அமைதியாக.

அருண் அவர்களின் உரையைத் தொடர்ந்து எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஜனாதிபதியின் உரையும் ஆரம்பமானது.

ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயக்க அவர்களின் பேச்சுவன்மை பற்றி முழு நாடுமே அறியும்.

கம்பீரமான குரல், சிறிது ஹாஸ்யம் கலந்த தெளிவான அழுத்தம் திருத்தமான பேச்சு என்று அவரது உரை ஆரம்பமான பின்பு எல்லோரது கவனமும் அவர்மீதே குவிந்திருந்தது.

அதிகமாக தேசிய ஒற்றுமை, சமாதானம், நாம் எல்லோரும் இலங்கையர், எல்லோரும் இந்த நாட்டில் சம உரிமை கொண்டவர்கள் போன்ற விடயங்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி பேசினார்.
அதற்கு மக்களின் ஆதரவும் கரகோஷமும் அமோகமாக இருந்தது.

ஜனாதிபதியின் பேச்சு முடியும்வரை மக்கள் அனைவரும் கட்டிப் போட்டது போல அவ்வளவு ஈடுபாட்டுடன் கேட்டுக் கொண்டு இருந்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அருண் அவர்கள் ஜனாதிபதியின் உரையை மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார்.

இவர் ஜனாதிபதியாக மாட்டாரா என்று பல வருடங்களாக ஏக்கத்தில் இருந்த எனக்கு, அவரே ஜனாதிபதியாக எனக்கு முன்னால் உரையாற்றிக் கொண்டு இருந்தது உண்மையில் பேரானந்தமாக இருந்தது.

எனக்கு பல அவசர அலுவல்கள் இருந்ததால் ஜனாதிபதியின் உரை முடிந்தது உடனடியாகக் கிளம்பி விட்டேன்.

நேற்றுத்தான் நான் வாழ்க்கையில் முதன் முதலாக ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தேன். நான் பார்வையாளனாக கலந்து கொண்ட முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம். ஆனால் அந்தக் கூட்டம் கொஞ்சமும் என்னை ஏமாற்றவில்லை.

என்ன நான் தேடிப்போன ஐந்தாயிரம் ரூபாயும், ப்ரைட் ரைஸ் பார்சலும் கடைசிமட்டும் எனக்குக் கிடைக்கவேயில்லை.

காசு கொடுக்காமல், ப்ரைட் ரைஸ் பார்சல், சப்பட்டை இல்லாமல் இதெல்லாம் என்ன சாதி தேர்தல் பிரச்சாரமோ தெரியவில்லை. ச்சே…

Leave a Reply