மெத்தப் படித்தவர்கள் தலைமையில்! வடக்கு மாகாண சபையின் நிலை?

நெஞ்சு பொறுக்குதில்லையே என வெதும்பிய என் முப்பாட்டன், அந்த எட்டயபுரத்து முண்டாசு கவிஞன், 39 வருடங்களில் இவ் உலக வாழ்வை நீத்தவரின், மன நிலையில் இருந்து தான் இதனை பதிவு செய்கிறேன். பிள்ளையார் பிடிக்க என எடுத்த மண்ணை வீணடித்தோமா? என்ற தன்மானம் என்னை கேள்வி கூண்டில் நிறுத்துகிறது. சற்று மாற்று சிந்தனையுடன் செயல்பட்டிருந்தால் நாம் எடுத்த பொறுப்பை இன்று வரை நிலை நிறுத்த முடிந்திருக்குமோ? என்ற எனது இரு மனநிலை, என்னுள்  கேள்விக்கணை தொடுக்கிறது. காரணம் நூற்றுக்கணக்கான போராளிகள், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள், கோடிக்கணக்கான சொத்துக்கள் இழப்பின் பின், எம் இனத்துக்கு இந்தியா வலிந்து பெற்று தந்தது, தற்காலிக இணைப்புடனான தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுரீதியான வாழ்விடமான, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான சபை. அதை கூட நந்தவனத்து ஆண்டியாய் போட்டு உடைத்த பெருமை எங்களுக்கு வந்து சேரட்டும். நாபாவை விட்டு விடுவோம். அவருக்கு எல்லாமே நோ புறப்ளம்.

மக்களை அணிதிரட்டி அரசியல் மயப்படுத்திய, ஈழ விடுதலை போராட்டம் என ஆரம்பித்து, அது திருநெல்வேலியில் புலிகள் வைத்த கண்ணிவெடியால் தென்னிலங்கை கலவரமாகி, அவசரகதியில் ஆயுதபோராட்டமாக பரிணாம வளர்ச்சி கண்டு, எதிரி எங்கோ இருக்க, ஊரில் உறவுகள் தமக்குள் உரசிப்பார்க்க. டெலோ போராளிகள் தெருவில் எரிந்தனர். ஈ பி ஆர் எல் எப் தோழர்கள் கந்தன் கருணையில் காவியமாகினர். புளட் ஓரத்து நாட்டில் ஆரம்பித்த செயலால் தன்வினை தன்னை சுடும்படி செய்து கொண்டது, ஈரோஸ் புலி வாலில் சரணடைந்தது. எதிரி இலகுவாக வடமராட்சி வாசலை மிதிக்க, அபலைகளாய் மக்கள் இந்தியாவை அழைத்தனர். உணவு பொட்டலங்களுடன் அமைதிப்படையும் வந்தது. இடைக்கால நிர்வாகம் எமக்கு மட்டுமே என புலி உறும, புலிக்கும் அதன் வாலுக்கும் அது பங்கிடப்பட்டது. எமக்கு எதுவும் இல்லையா என கிழக்கின் கிருபாகரன் கலங்க கொஞ்சம் பொறு புலி குழப்பும் பந்து எம் பக்கம் வரும் என, ஒரு காலத்தில் மாத்தயாவுக்கு மாக்சிச அரசியல் வகுப்பு எடுத்த பெருமாள் ஆரூடம் கூறினார். அதுவே நடந்தேறியது.

இடைக்கால நிர்வாக தலைமை பதவிக்கு 3 பெயர்களை தந்திரி ஜே ஆர் கேட்க, புலிகளும் கொடுத்தனர். தனது தெரிவாக நரி மூளை புகழ் ஜே ஆர் அவர்கள் தெரிவு செய்தது சிவஞானம் அவர்களை. ஏற்கனவே உள்ளூராட்சி ஆணையாளராக இருந்த அனுபவஸ்த்தர். ஏனோ தெரியவில்லை புலிகள் எமக்கு கிழக்கை சேர்ந்த பத்மநாதன் தான் வேண்டும் என்றனர். அவரும்  உதவி அரச அதிபராக இருந்தவர். மட்டக்களப்பு சிறை உடப்பில் தப்பிய போராளிகள் பயணிக்க அரச வாகனத்தை கொடுத்து உதவிய குற்றச்சாட்டில் சிறை சென்று பொது மன்னிப்பால் மீண்டவர். அந்த நேர தகுதி//தொகுதி அடிப்படையில் பத்மநாதன் தெரிவு மிகவும் வேண்டப்பட்ட ஒன்றாகவே பார்க்கப்பட்டது. அதுவரை எங்கும் வடக்கு, எதிலும் வடக்கு முன்னிலைப்படுத்தப்பட்ட காலத்தில் கிழக்கின் துளிர்ப்பு தேவைப்பட்டது. ஆனால் ஜே ஆர் தன் தெரிவை மாற்ற தயாராக இல்லை.

திலீபன் வீணே பலிக்கடா ஆக்கப்பட்டான். இந்தியாவால் கூட எம் கோரிக்கையை பெற்றுத்தர முடியவில்லை என்ற செய்தி பரவுவதன் மூலம், அமைதிப்படை வரவை மக்களை கொண்டு எதிர்க்கும் மனநிலை மாற்றத்தை புலிகள் ஏற்படுத்தினர். அந்த நேரத்தில் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் நிருபராக கடமையாற்றிய காதிரி இஸ்மாயில் எனக்கு ஒரு தகவல் சொன்னார். திலீபன் உயிருக்கு ஏதாவது அபாயம் ஏற்படுமானால், எல்லைக் கிராமங்களில் வசிக்கும் சிங்கள பொது மக்களை புலிகள் தாக்குவார்கள். அதனால் நிலைமையை விளக்கி இந்திய தூதுவராலயத்துக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தினார். அப்போது உதவி தூதராக இருந்தவர் திரு. பூரி. கிடைத்த நம்பத்தகுந்த தகவலை நான் கூறியபோது பூரி அவர்கள் கூறிய சேதி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. புலிகள் இரவு நேரத்தில் திலீபனுக்கு இரகசியமாக செலைன் ஏற்றுவதாகவும், அவர்கள் நாடகமாடுவதாகவும் தனக்கு கிடைத்த உளவு அறிக்கைப்படி எனக்கு விளக்கம் அளித்தார். என்னால் ஏற்கவும் முடியவில்லை. மறுக்கவும் முடியவில்லை.

இருந்தும் அவரிடம் ஒருவேளை அவ்வாறு நடந்தால் அப்பாவி சிங்கள மக்கள் பலியாவார்கள் என்றபோது, திரு பூரி அதை அமைதிப்படை அனுமதிக்காது என்றார். அந்த நேரத்தில் கிழக்கின் ரட்ணம் என்னிடம் ஏற்கனவே கூறிய செய்தி என் நினைவில் வந்தது. புலிகள் ஈ பி ஆர் எல் எப் இயக்கத்தை தடைசெய்து தாக்கியபோது, கிழக்கில் ரட்ணம் தலைமையில் போராளிகள் உகந்தை காட்டில் முகாமிட்டனர். நாபா அவர்களுக்கு தேவையான ஆயுதங்களை அனுப்பும் முயற்சியில் இருந்த வேளைதான் இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டது. காட்டுக்குள் வானொலி செய்தியை கேட்ட உடன் இனி பிரச்சனை இல்லை என்ற நம்பிக்கையில், கொக்கட்டிச்சோலை சென்ற ரட்ணம் தலைமையிலான அணியை புலிகள் கைது செய்தனர். அப்போது கிழக்கில் செயல்ப்பட்ட அருணா என்கின்ற புலி பொறுப்பாளர் ரட்ணத்திடம், நாய் சங்கிலியில் எஸ் எல் ஆர் கொழுவிக்கொண்டு வந்திருக்கும் இந்திய ராணுவத்துக்கு இருக்குது அடி என கூறியதாக, பின்பு லண்டன் சாந்தன், நாபா, சாம் தம்பிமுத்து வழிநடத்தலில் என்னால் தொடர்புகொள்ளப்பட்ட இந்திய அமைதிப்படை கேணல் காண்ணா, மேஜர் முத்தண்ணா தலைமையிலான நேரடி நடவடிக்கையால், காரைதீவில் வைத்து புலி பொறுப்பாளர் ரோமியோ முன்னிலையில் விடுவிக்கப்பட்ட ரட்ணம் கூறினார்.

இந்த செய்தியை நான் திரு பூரி அவர்களிடம் கூறிய போது அந்த பெரிய அறை அதிர தன் தலைப்பா அசையும் அளவிற்கு கெக்கட்டம் விட்டு சிரித்தார். பின்பு நடந்தவை முழு இந்தியாவையும் உலகின் முன் சிரிப்பாய் சிரிக்க வைத்தது வரலாறு. காரணம் உலகின் வல்லரசு ராணுவம் கொரில்லா போராளிகளுடன் மோதவேண்டிய தீர்க்க தரிசனமற்ற இந்திய அரசியல் நிலைப்பாடு. இங்கு இரண்டு விடயங்கள் விநோதமானவை. ஒன்று புலிகள் எப்படிப்பட்டவர்கள் என்ற கணிப்பு இந்திய உளவுத்துறை வசம் இல்லாதது. மற்றையது இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களது அரசியல் அபிலாசையை எந்த உச்சம் வரை ஏற்படுத்தினால், நிரந்த தீர்வுக்கு அத்திவாரம் இடலாம் என்ற அரசியல் அவதானம் அற்ற இந்திய கொள்கை வகுப்பாளர் செயல். அரசியல், இராணுவ செயல்பாட்டில் இந்தியா பெரியண்ணன் என்ற தனது மேம்போக்கு சிந்தனையில் தான் செயல்ப்பட்டது. அதிலும் பெரிய தம்பி சின்னத்தம்மி அணுகுமுறைதான்.

மத்தியஸ்தம் வகிப்பதை விட தன் பிராந்திய நலன் சார்ந்து, பெரிய தம்பியை [சிங்கள] தாஜா பண்ணவும், சின்னத்தம்பியை [தமிழ்] காதை முறுக்கி காரியம் செய்யவும் தான், அது ஆரம்ப முதலே கொள்கையாக கொண்டிருந்தது. பல தலைமுறைகள் மலையகத்தை வளப்படுத்திய தமிழக தமிழரை சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் போட்டு பங்கு போட்டமை. கச்சதீவை தாரை வார்த்தமை, அமெரிக்க ஆளுமையில் இருந்து ஜே ஆர் வெளியே வர மட்டும் அனுராதபுரத்தில் புலிகளை நரபலிக்கு தூண்டியமை என, பெரியண்ணா தன் தேவைகளை தன் சினத்தம்பிகளின் பலகீனங்களை வைத்தே பயன்படுத்தி கொண்ட காலம் அது. பெரியண்ணாவின் பலவீனம் தெரிந்த ஜே ஆர், இடைக்கால நிர்வாக சபை தலைவர் பதவியில் தன் தெரிவான சிவஞானத்தை விடாகண்டனாகவும், புலிகள் கேட்ட பத்மநாதனை கொடாகண்டனாகவும் உறுதியாக நின்றார். புலிகள் 3 பெயர்களை கொடுத்ததும் அதில் தேர்வு செய்யும் அதிகாரம் ஜே ஆர் வசம் என்பதும் தெரிந்த விடயம். இருந்தும் புலிகள் தாமும் விடாகண்டர்களாக மாறி வீம்பு பண்ணினார்கள். விளைவு அனைவரும் அறிந்ததே.

தாம் கொடுத்த பட்டியலில் இருந்து தெரிவான சிவஞானத்தை புலிகள் தவிர்க்க நினைத்தது அவர் ஜே ஆர் சொற்படி நடக்கக்கூடும் என்ற சந்தேகம். பத்மநாதனை தெரிவு செய்ய ஜே ஆர் மறுத்தது அவர் பிரிவினை வாதிகளுக்கு உதவியவர் எனவே அவரும் ஒரு பயங்கரவாதி என்ற கணிப்பு. சிவஞானம் பற்றிய புலிகளின் கணிப்பு பற்றி என்னால் உறுதி செய்ய முடியாது. அது தவறாக கூட இருக்கலாம். ஆனால் அந்த காலத்தில் பல அரச ஊழியர்கள் அரசு சார்பாக செயல்பட்டது உண்மை. அதற்கு நான் அறுதியிட்டு கூறக்கூடிய உதாரணம் யாழ் அரச அதிபராக இருந்த பஞ்சலிங்கம் அவர்கள். வடக்கு கிழக்கு மாகாண சபை அமைந்த பின் முதல்வரின் கீழ் செயல்ப்பட விரும்பாத பஞ்சலிங்கம் பிரதமராக  இருந்த பிரேமதாசாவுடன் நெருக்கத்தை பேணினார். புலிகளுடன் நல்லுறவுடன் இருந்தார்.

முதல்வருடன் அவரை நெருங்க வைக்க குகன் [கமலாகரன்] தந்தையான பனை அபிவிருத்தி சபை நடராசா பெருமுயற்சி எடுத்து அது நிறைவேறும் நிலையில் புலிகள் வேட்டுக்களை தீர்த்து அது நிகழாமல் பஞ்சலிங்கத்தை பரலோகம் அனுப்பிவைத்தனர். பத்மநாதன் விடயத்தில் ஜே ஆர் கணிப்பு தவறு என்பதை அவரே இந்திய தூதுவர் ஜே என் டிக்சித் அவர்களிடம் விளக்க, அவரும் தூது சென்றதால் பத்மநாதன் மீண்டும் நிர்வாக சேவையில் இணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு மாகாணசபை நிர்வாகத்தில் செயலாளராக சேவையை திறம்பட தொடர்ந்தார். அப்போது முதல்வரின் செயலாளராக செயல்ப்பட்ட கலாநிதி விக்னேஸ்வரன் அவர்களுடன் இணைந்து பத்மநாதன் தயாரித்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு கையளிக்க தயாரிக்கப்பட்ட, மாகாண சபைக்கான உத்தேச அதிகார பகிர்வு ஆவணத்தை, இருவரும் இரவு பகல் என நேரம் பாராது தொடர்ந்து தயாரித்ததும் அதனை திருமலை பீட்டர் தட்டச்சு செய்ததும், வடக்கின் விக்னேஸ்வரன், கிழக்கின் பத்மநாதனின் கூட்டு தயாரிப்பாக உருவாக்கப்பட்ட ஆவணம், முதல்வரால் இந்திய பிரதமருக்கு வழங்கப்பட்டது பற்றிய பதிவு, வரலாற்றில் மறைக்கப்பட்டதை நினைவு மீட்டுகிறேன்.

புலிகள் கூறிய காரணத்தின் பின்புலம் சிதம்பர ரகசியம் என்றாலும் அன்றைய பேசு பொருளாக இருந்தவர் இன்றைய வடக்கு மாகாண சபை பேரவை தலைவர் சிவஞானம் அவர்களே. இடைக்கால நிர்வாக சபையை தாம் ஏற்க மாட்டோம் என கூறி முன்வைத்த காரணமும் சிவஞானத்தின் தெரிவே. அதனால் இடைக்கால நிர்வாக சபையும் ஏற்படவில்லை பிரச்சனையும் தீரவில்லை. கடலில் பிடிபட்ட தம் உறுப்பினருக்கு தாமே சயனைட் கொடுத்து அதனால் வந்த கோபத்தில் புலிகள் ஆடிய ஆட்டம், ஆயுத களைவில் ஈடுபட்ட அமைதிப்படையை ஆக்கிரமிப்பு ராணுவம் என மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது. புலிகள் காடுகளின் கண்ணிவெடி விதைப்பில் தம்மை தற்காத்து கொண்டனர். இந்திய இலங்கை ஒப்பந்தப்படி ஒரு வருட கால அவகாசத்துள் வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதுவரை மேடைகளின் ராசாக்களாகவும் பதவிகளின் பங்குதாரர்களாகவும் இருந்த பட்டு பீதாம்பர அரசியல் தலைமை தன்னை முன்னிலைப்படுத்த துணியவில்லை.

வரதராஜபெருமாள், பரந்தன் ராஜன் போன்றவர்கள் அணுகி அமிர் அண்ணன் ஆரம்பத்தில் சம்மதித்தும், சம்மந்தருக்கு சொர்ணம் மூலம் புலிகளால் கிடைத்த அறிவுறுத்தல்படி கூட்டணி தேர்தலில் போட்டியிடவில்லை. உற்சவம் நிறைவேற கோவில் மேளங்கள் முழங்கி [ஈ பி ஆர் எல் எப், ஈ என் டி எல் எப்]  பின் நாளில் நாயனங்களும் [முஸ்லிம் காங்கிரஸ், யு என் பி] இணைந்ததால் திருமலையில் தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண அரசு அமைந்தது. ஆனாலும் அந்த தற்காலிக இணைப்பு வருடாவருடம் புதிப்பித்தலுடன் பல பத்து ஆண்டுகள் தொடர்ந்தது. மகிந்த சிந்தனை அதனை தன் சொல்படி நடக்கும் பிரதம நீதியரசர் நளின் டி சில்வா அவர்களின் சூத்திர சூழ்ச்சியால் துண்டாடியது. இன்று வரை என்னிடம் 2 கேள்விகள் உண்டு. ஒன்று அன்று எம் மூத்த தலைவர்கள் தற்காலிகமாக தானும் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபையை பொறுப்பேர்க்காமல் எம் போன்ற கற்றுக்குட்டிகள் வசம் ஏன் விட்டு விட்டனர்?. எமக்கு உணர்ச்சி ஏற்றிய அடலேறுகள் தாம் வளர்த்த கடாக்களான புலிகளுக்கு பயந்து பதுங்கியது ஏன்?.

அப்படி இருந்தும் நாம், குருவி தலை பனங்காய் என எம்மீது வந்த வடக்கு கிழக்கு இணைந்த  மாகாண சபையை இயன்றவரை திறம்படவே அமைத்தோம். மத்திய அரசின் மாற்றான் தாய்  மனப்பான்னமையை எதிர்க்கும் வல்லமையை அன்று, தம் நெஞ்சுக்கு நேராக நீட்டப்பட்ட துப்பாக்கிகளை பற்றி கவலைப்படாது, நீண்டநாள் நிர்க்கதியாய் அலைந்த எம் சமூக விடிவிற்காக, தம் படிப்பறிவு, பட்டறிவை எம் போன்ற கற்றுக்குட்டிகள் தலைமையின் கீழ் பணியாற்றியாவது செயல்படுத்த முனைந்த நிர்வாக சேவை தரம் 1 தமிழ் அதிகாரிகள் தந்தனர். திரு சிவராஜா, திரு சிவதாசன், டாக்டர் நச்சினார்கினியன், எந்திரி விக்னேஸ்வரன், திரு வாமதேவன், திரு பஞ்சாச்சரவேல், திரு ஸ்ரீசண்முகராஜா, திரு கிஷ்ணமூர்த்தி திரு தர்மலிங்கம் திரு கணேசநாதன் திரு மன்சூர் போன்ற பெரும்தகைகள் வாழும் திசை நோக்கி வணங்குகிறேன். [அது மண்ணுலகமோ, விண்ணுலகமோ என் இறப்புவரை அவர்கள் நினைவு என் கூடவே வரும், வணக்கம் தொடரும்.],

என் எழுத்து அதீத உணர்ச்சி வயப்பட்டதல்ல. பாதி தின்கின்ற வேளையில் தட்டிப்பறித்த மாயக்கண்ணன் லீலைகள் பற்றிய பாரதியின் ஏக்கம் மட்டுமே. இதனை எனக்கு உணர்த்தியவர் பிரதம செயலாளர் திரு சிவராஜா ஐயா அவர்கள். திருமலலையில் எங்கள் இறுதி நாட்கள் நிர்ணயிக்கப்பட்ட வேளையில் எமது நிர்வாகம் அமைந்திருந்த திருமலை நகராட்சி கட்டிட முன்றலில் ஏக்கத்துடன் நின்ற என்னை செயமன் [chairman] என அழைத்த குரலால் திரும்பினேன். அங்கு சிவப்பழமாக நின்றார் பிரதம செயலாளர் திரு சிவராஜா ஐயா. மேனி சிலிர்க்க அவர் வாடிய முகம் பற்றிய என் கேள்விக்கு அவர் தந்த பதில் தான், பாரதியியின் பாதி தின்கிற போது தட்டிப் பறிப்பார் என்ற குற்றச்சாட்டு. இந்த இடத்தில் சிவராஜா ஐயாவின் அர்ப்பணிப்பை பற்றி நான் எழுதாவிட்டால் என் உடல் வெந்து சாம்பலாகாது என்பது என் முடிவு என்பதால், தயை செய்து இதனையும் உங்கள் மனதில் பதிவு செய்யுங்கள். மாசற்ற வாழ்க்கை வாழ்தல் அனைவர்க்கும் இலகுவல்ல. புனிதர்கள் எப்போதும் இனத்தின் முன்னேற்றம் பற்றிய சிந்தையில் இருப்பார் என்பதற்கு சிவராஜா ஐயா ஒரு நல் உதாரணம்.

மத்திய அரசு மனம் இரங்கி மாகாண நிதியாக 10  லட்சம் ரூபாவை ஒதுக்கியது. சிவராஜா ஐயா என்னை சந்திக்க எனது உத்தியோக அறைக்கு வந்தார். பெருமகனை கண்டவுடன் என் கதிரையில் இருந்து எழுந்து அவரை எதிர் கொள்ள சென்றவேளை அவர் கூறினார் தலைவர் [chairman]  நீங்கள் எழும்ப கூடாது என்று. அப்போது என் மனதில் உறைத்தது பெருமக்கள் பெருமக்கள் என்பதே. நானும் விட்டுக்கொடாமல் ஐயா இந்த கதிரை தான் தலைவர். இதில் யார் அமர்ந்தாலும் அவரை தலைவர் என அழைப்பது மட்டுமே வழமை [protocol] என கூறி அவர் அமர்ந்த பின்பே என் ஆசனம் அமர்ந்தேன். அப்போது எமது சபை அமர்வுக்கு திருமலை நகரசபை மண்டபத்தை நாம் பாவித்தோம். அந்த கட்டிடம் இந்திய கன்னட மானிலத்தை சேர்ந்த நரசிம்மன் என்பவரால் வடிவமைக்கப்பட்டது என்ற விபரத்தை கூறிய சிவராஜா ஐயா, அதன் ஒரு பகுதி பூர்த்தி அடையவில்லை என்றும் அதனை மாகாண சபை உறுப்பினர் அமர்வுகளுக்கான வடிவமைப்பில் பூர்த்தி செய்ய அந்த பணத்தை முன்பணமாக பேரவை செயலகத்துக்கு கையளித்தார்.

திரு நரசிம்மனை தேடி நான் கன்னடம் சென்றதும், சில ஆண்டுகள் முன்புதான் அவர் சிவபதம் அடைந்ததும் அறிந்த பின், அந்த பணியை சிரமேற்கொண்டு கோணேசர் மலையை நோக்கியவாறு 100 உறுப்பினர்கள் அமரக்கூடிய பாராளுமன்ற அமைப்பிலான வடிவமைப்பை [model] செய்து தந்தவர் கட்டிட கலைஞர் வி எஸ் துரைராஜா. கொழும்பில் திரு துரைராஜா அவர்களை நான் சந்தித்து எமது தேவையை கூறியபோது முதலில் அவர் சற்று தயங்கினார். திருமலைக்கான பயணம் அப்போது பாதுகாப்பானது இல்லை என்பதே அதற்கான காரணம். நான் எதுவித தயக்கமும் இன்றி இலங்கை விமானப்படை அப்போது நடத்திய ஹெலி டூர்ஸ் நிறுவன மூலம், கட்டணம் செலுத்திய பயணமாக அவர் கூடவே பயணித்ததால், அவர் அந்த நற்காரியத்தை செய்து தந்தார். குறுகிய கால அவகாசத்தில் மிக அழகான திராவிட மற்றும் மேற்கத்தைய கட்டிட அமைப்பில் அவர் செய்து தந்த அந்த மாதிரி வடிவம் [Model] எனது உத்தியோக அறையில் வருபவர்களை எல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அதற்கான அத்திவார கல் பதிக்க தெரிவு செய்த தினத்துக்கு முன் நாளில், ஜே வி பி இன் குமார் குணரத்தினம், திருமலை இறங்கு துறையில் இந்திய அமைதிப்படைக்கு வைத்த கண்ணிவெடியால் திருமலை நகரம் அமைதிப்படையின் பூரண கட்டுப்பாட்டில் வந்ததால், சிறிது காலத்துக்கு பொது நிகழ்ச்சிகளை ஒத்திவைக்கும்படி அவர்களால் கூறப்பட்ட பாதுகாப்பு ஆலோசனைப்படி, அந்த நிகழ்ச்சி  ஒத்திவைக்கப்பட்டு இறுதிவரை அது நிறைவேறாமல் போனது. இந்த சம்பவங்களை இன்று நான் நினைவு மீட்ட காரணமாக அமைந்தது வடக்கு மாகாண சபை ஆரம்பித்த நாளில் இருந்து முதல்வர், பிரதம செயலாளர், பேரவை தலைவர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் என அனைவரும் தமக்குள் நடத்தும் தொடர் மௌன யுத்தமே. நாம் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையை பொறுப்பேற்ற வேளை இவர்களுக்கு மத்திய அரசு செய்து கொடுத்தது போன்ற, எந்த வசதி வாய்ப்புகளும் செய்து தரப்படவில்லை.  நாம் திருமலையில் வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகத்தை அமைப்பதையே ஜே ஆர் விரும்பவில்லை. அதனால் அவர் பல விடயங்களில் கொடாகண்டராக இருந்த போதும் நாமும் ஏட்டிக்கு போட்டியாக விடாகண்டர்களாகவே இருந்தோம். [நீட்சி பகுதி  2ல்]

(ராம்)