இந்திய இராணுவ அதிகாரிகள் எல்லாம் ஆங்கில அறிவு கொண்டவர்கள் என்பதால் எனக்கு தெரியாத ஹிந்தியில் மாரடிக்கவேண்டிய நிலை ஏற்ப்படவில்லை. நான் யார், இந்திய தூதரகத்துடனான எனது தொடர்பு பற்றி கூறியபின்பே அமர ஆசனம் தந்தார் அந்த அதிகாரி. ஜோர்ஜ் பற்றி விசாரித்தபோது பல குற்றசாட்டுக்களை அடுக்கினார். அந்த நேரம் புலிகளின் எடுபிடிகள் சில காரியங்களை ஊரில் செய்து பழி எம்மவர் மேல் விழுந்து, இந்திய அமைதிப் படையுடனான எமது உறவை சீர்குலைக்கும் நரித்தனம் புரிந்தனர். அவ்வாறான புலிகள் செய்த நிகழ்வொன்றில் மாட்டிவிடப்பட்டவர் ஜோர்ஜ் என்பதை அவருக்கு விளக்கினேன். சிறிது நேரத்தில் ஜோர்ஜ் இராணுவ ஜீப்பில் அழைத்துவரப்பட்டார். முகம் சிவந்திருந்தது. அப்போது தங்கமகேந்திரனின் தங்கை சாந்தி என்னிடம் ஜோர்ஜை இந்திய அதிகாரி ஒருவர் செருப்பால் அடித்ததாக குற்றம் சாட்டினார்.
நான் ஜோர்ஜிடம் அதுபற்றி கேட்க அவன் அதை பெரிதுபடுத்த வேண்டாம். நாம் எம்மை பலப்படுத்தும் வரை இவர்களை பகைக்க கூடாது என்றான். சாந்தியிடமும் புலிகளின் எம்மை இவர்களிடமிருந்து பிரிக்கும் தந்திரத்துக்கு நாம் பலியாக கூடாது என சாந்தப்படுதினான். பின் நாளில் அவர்களிடையே மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது. மட்டக்களப்பு, அம்பாறையை கிருபா எப்படி மீளக் கட்டி எழுப்பினானோ அதே போன்றதே ஜோர்ஜின் அர்ப்பணிப்பு, திருமலையில் நாம் மீண்டும் காலூன்ற வழி சமைத்தது. மாகாண சபை நிர்வாகத்தை திருமலையில் எம்மால் அமைக்க முடிந்ததற்கான முழு முதல் உழைப்பும் ஜோர்ஜ் இட்ட அத்திவாரமே.
அதனால் அவன் பழிசுமந்த மேனியனாய் பலராலும் வெறுக்கப்பட்டான். உண்மையில் அவன் சுயனலமற்றவன். முழு நேரமும் மாகாண நிர்வாகத்தை கட்டி எழுப்ப அல்லும் பகலும் பாடுபட்டவன். அவனை இல்லாதொழிக்க புலிகளும் அதன் வால்களும் காத்திருந்து காரியம் சாதித்தனர். அவனுக்கான அனுதாப பிரேரணை சபையில் எடுக்கப்பட்ட வேளை முதல்வரால் பேசக்கூட முடியவில்லை. அன்று சபை அமர்வு மரண வீடுபோல மாறி இருந்தது. அந்தளவு தூரம் அவன் வடக்கு கிழக்கு மாகாண அரசு திருமலையில் அமைய மூல முதல் காரணமானான். அவன் பற்றிய பேச்சு வந்தபோது அப்போதைய ஆளுநர், இளைப்பாறிய ஆமி கொமாண்டர் லெப்டினன் ஜெனரல் நளின் செனிவரட்ன என்னிடம், ஜோர்ஜ் இலங்கை இராணுவத்தில் இணைந்திருந்தால் நிச்சயம் ஜெனரல் தரத்துக்கு உயர்ந்திருப்பான் என ஆதங்கப்பட்டார்.
திருமலையில் மாகாண நிர்வாகம் அமைய கூடாது என்ற ஜே ஆரின் விருப்பம், தம்மை மீறி எவரும் செயல்படக்கூடாது என்ற புலிகளின் தீர்க்க தரிசனமற்ற பார்வை, போதிய நிதி வளங்களை மட்டமல்ல அதிகார பகிர்வை கூட கால தாமதமாக்கி, தவறான வியாக்கியானங்களை மத்திய அரசுக்கு சாதகமாக எடுத்த மத்திய மந்திரிகள், அங்கும் இங்கும் என இரு நிலை கொண்ட அரச அதிகாரிகள் என பல்வேறு சவால்களுக்கு மத்தியில் எம்மை முன்னிலைப்படுத்தி, தம் துறைசார் வேலைத்திட்டங்களை திறம்பட செய்தவர்கள் எமது மாகாணஅரசின் முதல்தர செயலாளர்கள். எமக்குள் இருந்த ஒரே நோக்கு, ஒரே இலக்கு, ஒத்துப்போகும் தன்மை குறுகிய காலத்துள் பெருமாற்றங்களை ஏற்ப்படுத்திய வேளைதான் பிரேமதாச ஜனாதிபதியானார். அதற்கும் நாம் தான் உதவினோம் என்ற நன்றிமறந்த செயலை அவர் புலிகளுடன் கொண்ட புது உறவால் செய்தார்.
மத்தியுடன் முட்டி மோதி வடக்கு கிழக்கு மாகாண பொலிஸ் அதிகாரத்தை முதல்வர் வசமாக்க அதற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் ஆனந்தராஜா தலைமை ஏற்றார். கல்வி அமைச்சின் கீழ் மாகாண பாடசாலைகளை செயல்ப்பட செய்தார் செயலாளர் திரு மன்சூர். மாவட்ட வைத்தியசாலைகள் மாகாண சுகாதார அமைச்சின் கீழ்வரும் நற்பணியை டாக்டர் நச்சினார்கினியன் செய்து முடித்தார். திரு சிவதாசன் செயல்ப்பாடு கண்டு மகிழ்ந்த தொண்டைமான் பின் நாளில் தன்னோடு மத்திய அமைச்சில் அவரை இணைத்து கொண்டார். அத்தனை செயலாளர்களும் எம்மை அரசியல் பதவி கொண்டு பார்க்கவில்லை. நாமும் அவர்களை எம் பதவி நிலை கொண்டு நடத்தவில்லை.
மக்களுக்கு சேவை செய்யும் நல்மாணாக்கர்களாய் நாமும், தாம் கற்றதை எமக்கு கற்பித்து அதை மக்கள்நல காரியாமாக்கும் செயலளர்களாகவே அவர்கள் செயல்பட்டனர். நாம் சூழ்நிலை கருதி எடுத்த சில அரசியல் முடிவுகள் தவறானதாகி போனதால், எம்மால் 5 வருடங்கள் நிர்வகிக்க முடியவில்லை. நம்பிக்கை துரோகத்தால் ஏற்ப்பட்ட வெறுப்பு, எங்கள் இளவயது தந்த தைரியத்தில் எதையும் எதிர்கொள்ளலாம் என்ற தலைக்கனத்தால் வந்த சறுக்கல், எம்மை எம் இலக்கை நாம் அடைய முடியாமல் செய்தது. பிரேமதாசாவை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிக்கும் முடிவு நாம் எடுத்தல்ல. அது இந்தியா ஹவுசில் ஜே ஏன் டிக்சித் முன்னிலையில் அமைச்சர் ரஞ்சன் விஜயரத்தின தந்த உறுதிமொழியை, இந்திய தூதுவர் வழி மொழிந்ததால் முதல்வரால் மறுக்க முடியாத நிகழ்வு.
வார்த்தை தவறிய பிரேமதாசா வெற்றியின் பின் புலிகளை பயன்படுத்தி அமைதிப்படையை வெளிவேற்ற விளைந்ததால் அந்த வினைக்கு எதிர் வினையாக, எம் செயலும் அமைந்தது. அன்று நாம் இளைஞர்கள். வல்லரசின் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள். ஆப்கானில் இருந்து படைகளை ரஷ்யா வெளியேற்றியது போல, இந்திய அமைதிப்படையும் வெளியேறும் முடிவு எம்மையும் புரட்டி போட்டது. இன்று நிலை அப்படி இல்லை. கல்வியால், வயதால், அனுபவத்தால் மூத்தோரை கொண்டதாக உள்ளது தான் வட மாகாண சபை. சுற்றிவளைப்புகள் இல்லை. புலி பாச்சலும் இல்லை. காப்பற் வீதிகளும், கடுகதி ரயில்களும், வைபரும், வட்சப்பும் என, நிமிடத்தில் முடிவெடுக்கவும் அதை நொடிக்குள் பரிமாறவும் கூடிய சூழ்நிலைகளில்,
மக்கள் நல திட்டங்கள், அகதிகள் மீள் குடியேற்றம் என செயல்பட நேரமின்றி, நம்பிக்கை இல்லா தீர்மானம், அமைச்சர்கள் மேல் ஊழல் குற்றச்சாடு, தாம் விரும்பாத அதிகாரிகளை பந்தாடல், இரணைமடு நீர் பற்றிய இரு நிலைப்பாடு, சுன்னாகம் நிலத்தடி நீர் மாசுபற்றிய மளுப்பலான பதில்கள். போதைக்கு அடிமையாகும் மாணவர் பற்றிய கவலையீனம், பொருத்து வீடு பொருத்தம் இல்லை என்றால் மாற்று ஏற்பாடு என்ன என்ற முன்மொழிவை செய்யாமை, பொருளாதார மத்திய நிலையம் இங்கா அங்கா என்ற திரிசங்கு நிலை, மைத்திரிக்கு வரவேற்ப்பு ரணிலுக்கு முகசுளிப்பு, பேரவை அமர்வுகள் தொடங்கி சில ஆண்டுகள் கழிந்தும் அரை நாள் மட்டுமே என்னை சபை நடத்த அனுமதி தந்தார் பேரவை தலைவர், எனற பிரதி பேரவை தலைவரின் குற்றச்சாட்டு. என கேட்கும் செய்திகளால் இன்பத்தேனா வந்து பாயும் எம் காதில்?
எம்மை பற்றி பீற்றிக்கொள்ள அல்ல இந்த தகவல். எமக்குள் இருந்த விட்டுக்கொடுப்பு பற்றிய பரிமாறல் மட்டுமே. மாகாண சபைக்கு தவிசாளர், பிரதி தவிசாளர் பதவிகள் மட்டுமே உண்டு. ஆனால் சபை நடவடிக்கையில் சுமுக நிலை வேண்டி அனைத்து கட்சி சார்ந்தவர்களும், சபைக்கு தேவைக்கு ஏற்ப தலைமை தாங்கும் முடிவை வடக்கு கிழக்கு மாகாண சபையில் முன் மொழிந்த போது அதை அனைவரும் வழிமொழிந்ததால் ஈ பி ஆர் எல் எப் உறுப்பினர்கள் தவிசாளர், உதவி தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட போதும் சபை முடிவின்படி ஈ என் டி எல் எப் சூரியமூர்த்தி, முஸ்லிம் காங்கிரஸ் எஸ் எல் எம் ஹனிபா, யு என் பி மசூர் மௌலானா என அவ்வப்போது சபை அமர்வுகளுக்கு தலைமை தாங்கினர். இதனால் குறையொன்றும் வந்து விடவும் இல்லை, என்னை சபை நடத்த அரை நாள் மட்டுமே அனுமதித்தார் என்ற புலம்பலும் எழவில்லை. செயலாளர்களுடனான எமது உறவும் சீரானதாகவே இருந்தது. யாழில் அண்மையில் நடந்த தோழமை தினத்தில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபை செயலாளர்களை கௌரவப்படுத்திய நிகழ்வை யூ ரியூபில் பார்க்கலாம்.
அண்மையில் இணையங்களில் வைரலாக பரவிய செய்தி, தலைவர் மீது தாக்குதல் மயிரிளையில் உயிர் தப்பினார் என்பதே. மைக்கை எறிந்தவர் வடமாகாண சபை பிரதி தலைவர். மயிரிழையில் உயிர் தப்பியவர் தமிழரசு கட்சி தலைவர் என செய்தி விரிகிறது. இல்லை இல்லை நான் தலைவரை குறி வைத்து எறியவில்லை, ஆவேசத்தில் மைக்கை வைத்த போது அது கீழே வீழ்ந்ததை இணையத்தில் திரித்து எழுதிவிட்டனர் என சபைக்கு தன்னிலை விளக்கம் அளித்தார் பிரதி தலைவர். அப்படியே இருக்கட்டும். ஆனால் அவருக்கு ஆவேசம் வர காரணம் என்ன என்பது தான் இங்கு முக்கியமானது.
வன்னி பாராளுமன்றத்துக்கு தேசியப்பட்டியல் மூலம் தெரிவானனவர் பற்றிய, விமர்சனமாகவே அதனை பார்க்க வேண்டும். பேராசிரியர் சிற்றம்பலம் போன்ற தகுதியானவருக்கு அது கொடுக்கப்பட வில்லை என்பதே அவரை ஆவேசப்படுத்தியது. அப்படி என்றால் தெரிவு செய்யப்ட்ட அந்த உறுப்பினர் தகுதி அற்றவரா? ஸ்ரீலங்கா நிர்வாகத்துறை ஒன்றில் துறைசார் தலைமை பணியில் இருந்தவர். கொடிய யுத்தத்தில் ஒரு காலை பறி கொடுத்தவர் வன்னியின் மகள் இது தகுதி இல்லையா?
பாராளுமன்றில் அவரை பார்க்கும் வேற்று இனத்தவர் மனதில் ஏற்படும் குற்ற உணர்வு கூட இல்லாத இந்த வட மாகாணசபை பிரதி தலைவர் ஒரு கல்வியாளர், வயதில் அனுபவத்தில் மூத்தவர். அவர் செயல் கேள்விப்பட்டு நெஞ்சில் நெருடல் வருகிறது. தகுதி என்பது படிப்பில், வயதில், அனுபவத்தில் அல்ல நாம் வாழும் சூழலில் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதை பொறுத்தது. அகிலம் எல்லாம் அகதியாய் வாழ்பவர் காலநிலை மாற்றங்களை கவனியாது இரவு பகல் என எண்ணிப்பாராது உழைத்து உங்களுக்கு அனுப்பும் பவுண்ஸ்கள், டாலர்கள் உங்கள் தேர்தல் நிதியாக மாற வீர வசனங்கள் பேசி வெற்றி பெற்றபின், மூலைக்கு ஒருவராய் முகம் பாராது, நவக்கிரகங்கள் போல நீங்கள் நடத்தும் முரண் அரசியல் நீடிக்கும் வரை, இளஞ்செழியன் போன்று ஒரு நீதிமான் போதாது எம் சமூக விடிவிற்கு.
‘’நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி’’ – மகாகவி –
என் எழுத்தை விமர்சிப்பவர் வசதிக்காக என் மின் அஞ்சல் @ sooddram@gmail.com
[ராம்]