(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
ஒரு நாட்டின் உருவாக்கம் காலச்சுழலால் மட்டுமன்றி அதன் வரலாற்றின் வரைபினாலும் தீர்மானிக்கப்படுகிறது. மக்கள் அல்லாத அனைத்தும் முக்கியம் பெற்ற காலத்தில் நாடுகள் கொலனிகளாகின. தசாப்தங்கள் கடந்த பின்னும் கொலனியாதிக்கம் விட்டுச்சென்ற வலித்தடங்கள் இன்னும் துயருடன் தொடர்கின்றன. குரங்கு அப்பம் பிரித்த கதையாய் ஆபிரிக்காவைக் கொலனியாதிக்க சக்திகள் கூறுபோட்டதன் துர்விளைவுகளை ஆபிரிக்க மக்கள் இன்னமும் அனுபவிக்கிறார்கள்.
மேற்கு சகாரா, வட ஆபிரிக்காவின் மெக்ரெப் பிராந்தியத்தில் உள்ள பிரதேசமாகும். இது வடக்கே மொராக்கோவையும் வடகிழக்கே அல்ஜீரியாவையும் கிழக்கிலும் தெற்கிலும் மொரிட்டானியாவையும் மேற்கே அத்திலாந்திக் சமுத்திரத்தையும் எல்லைகளாகக் கொண்டது. ஐந்து இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டமைந்த இப் பிரதேசத்தைத் தனிநாடாக அங்கீகரித்த நாடுகளும் அங்கீகரிக்காத நாடுகளும் என நீண்டகால நிச்சயமின்மையின் உறைவிடமாக மேற்கு சகாரா உள்ளது.
கடந்த வாரம் மொராக்கோ நாட்டு மன்னர், மொராக்கோவை மீண்டும் ஆபிரிக்க ஒன்றியத்தில் மீள இணைப்பதற்கான விருப்பத்தைத் தெரிவித்தார். இது மேற்கு சகாராவை மீண்டும் கவனிப்புக்குரித்தாக்கியது. 32 ஆண்டுகளுக்கு முன்னர் ஆபிரிக்க ஒன்றியம், மேற்கு சகாராவை உறுப்பு நாடாக ஏற்றதை எதிர்த்து மொராக்கோ ஆபிரிக்க ஒன்றியத்திலிருந்து வெளியேறியது. முடிவற்றுத் தொடரும் மொராக்கோவுக்கும் மேற்கு சகாராவுக்கும் இடையிலான நெருக்கடியில் எந்தப் பங்களிப்பையும் ஆற்றவியலாத நிலையை இவ்வெளியேற்றம் ஆபிரிக்க ஒன்றியத்துக்கு ஏற்படுத்தியது. இந்நிலையில் மீள இணையும் விருப்பம் புதிராக மட்டுமன்றி மாறிவரும் ஆபிரிக்க அரசியலின் சிக்கலையும் கோடிட்டுக் காட்டுகிறது.
ஆபிரிக்கக் கண்டத்திலும் மத்திய கிழக்கின் அரபுப் பிரதேசங்களிலும் நாடுகளின் உருவாக்கம், தேசங்களை அடையாளப்படுத்தும் இனம், மொழி, பண்பாடு, பொருளியல் என எந்த அடிப்படை காரணிகளையும் சார்ந்ததல்ல. அதை விட, ஒரே இனக்குழுவைச் சேர்ந்த மக்கள் அக்கண்டத்தின் பெரும் நிலப்பரப்புக்களில் பிற இனக்குழுவினருடன் அருகருகாக வாழ்வதையும் நிரந்தரமாக ஒரு பிரதேசத்தில் வாழாத, ஆனால் ஒரு பெரும் நிலப்பரப்பினுள் பருவத்திற்குப் பருவம் இடம்பெயர்ந்து வாழும் மசாய் போன்ற மந்தை மேய்க்கும் இனக் குழுக்களையும் காணலாம்.
ஆபிரிக்காவில் கொலனிய ஆட்சிக்கு முன் சில பேரரசுகள் இருந்துள்ளன. வேண்டின், அவற்றை மத்திய, தென்அமெரிக்கப் பகுதிகளில் இருந்த மாயா, அஸ்ற்றெக், இன்கா போன்ற சமூகங்களின் பேரரசுகளுடன் ஒப்பிடலாம். எவ்வாறும், முதலாளிய வளர்ச்சியுடன் தோன்றிய தேசங்களுடனும் தேச அரசுகளுடனும் அவற்றை ஒப்பிட இயலாது. அவை ஆசியக் கண்டத்தில் தோன்றி மறைந்த பேரரசுகள் போன்றவையுமல்ல.
மேற்கு சகாரா பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஸ்பெயினின் ஆட்சியதிகாரத்துக்கு உட்பட்டு அதன் கொலனிகளில் ஒன்றாகியது. தன்னாட்சி அதிகாரமற்ற பிரதேசங்கள் என ஐ.நா சபையினால் குறிக்கப்பட்டவற்றின் பட்டியலில் மேற்கு சகாரா நிலப்பரப்பில் மிகப் பெரியதும் சனத்தொகையை அதிகம் கொண்டதுமாகும். 1963 முதல் மொராக்கோ இப்பகுதிக்கு உரிமை கொண்டாடுகிறது. அதைத் தொடர்ந்து ஐ.நா சபை அப் பிரதேசத்தில் இருந்து வெளியேறுமாறு ஸ்பெயினைக் கோரியது. 1975 ஆம் ஆண்டு, பிரங்கோ சர்வாதிகார ஆட்சியின் முடிவின் பின்பு, ஸ்பெயின் தனது நிர்வாக அதிகாரத்தை விலக்கிக்கொள்ளத் தீர்மானித்தது. வழமையாகத் தேவைப்படும் ஒரு சர்வசன வாக்கெடுப்பைத் தவிர்க்கும் விதத்தில் மேற்கு சகாராவை மொராக்கோவும் மொரிட்டானியாவும் இணைந்து நிர்வகிக்கும் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தி ஸ்பெயின் அப்பிரதேசத்தை அவ்விரு நாடுகளிடமும் கையளித்தது.
இதன் விளைவால் அப்பகுதியில் வாழும் சஹாரா (ஸஹ்ரவி) பழங்குடியினர் மொராக்கோவுக்கும் மொரிட்டானியாவுக்கும் எதிராகப் போராடினர். இது பாரிய உள்நாட்டு யுத்தமாகியது. தனிநாட்டுக்கான கோரிக்கையை முன்வைத்து ஸஹ்ரவி மக்களின் பொலிசாரியோ முன்னணி என அறியப்பட்ட விடுதலை இயக்கம் ‘ஸஹ்ரவி அரபு ஜனநாயக் குடியரசை’ பிரகடனப்படுத்தி நாடு கடந்த அரசாங்கத்தையும் நிறுவியது. இந்நாடுகடந்த அரசாங்கமானது அல்ஜீரியாவிலிருந்து செயற்பட்டது. 1979 ஆம் ஆண்டு மொரிட்டானியா தனது நிர்வாகத்தில் உள்ள பகுதிகளில் இருந்து விலக, மொராக்கோ அப்பகுதிகளையும் கைப்பற்றியது. அதன்பின், பொலிசாரியோ முன்னணிக்கும் மொராக்கோவுக்கும் உள்நாட்டு யுத்தம் தொடர்ந்தது. பொலிசாரியோ முன்னணியின் பிரதான ஆதரவாளராக அல்ஜீரியா உள்ளது. 1991 ஆம் ஆண்டு ஐ.நா தலையீட்டால் ஒரு போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது.
இவ்வுடன்படிக்கை ஏற்பட இரண்டு அடிப்படை நோக்கங்கள் இருந்தன. முதலாவது, போர்நிறுத்தத்தைக் கண்காணிக்க ஐ.நா அமைதிகாக்கும் படைகளை அனுமதிப்பது. இரண்டாவது, மேற்கு சகாரா மக்கள் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு மூலம் சுயநிர்ணய உரிமையைப் பிரயோகித்து தனிநாட்டுக்கான அங்கீகாரத்தை வழங்குவதோ அன்றி மொராக்கோவுடன் இணைவதோ என முடிவெடுப்பது. இதற்காக ‘மேற்கு சகாராவில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் ஐ.நா பணிக்குழு’ அமைக்கப்பட்டது. ஆனால் வாக்களிப்பதற்கு உரித்துடையவர்கள் பற்றிய இழுபறியால் சர்வஜன வாக்கெடுப்பு திட்டமிட்டபடி நிகழவில்லை. ஐ.நாவின் அமைதி காக்கும் படைகள் மேற்கு சகாராவில் இன்னமும் நிலைகொண்டுள்ளன.
தீர்வு எதுவுமற்ற நிலையில், விரக்தியுற்ற மேற்கு சகாரா மக்கள் 2005 ஆம் ஆண்டு ‘சுதந்திரத்துக்கான இன்டிபாடா’ எனும் மக்கள் எழுச்சியில் ஈடுபட்டனர். அதையடுத்துச் சில தன்னாட்சி அதிகார உரிமைகளை மேற்கு சகாராவிற்கு வழங்குவதாக அறிவித்த மொராக்கோ அவற்றை வழங்கவில்லை.
மேற்கு சகாராவில் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை பொலிசாரியோ முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து விலக்கவும் பாதுகாக்கவுமாக மொராக்கோ 2,700 கிலோமீட்டர் நீள மணற் சுவரை அமைத்தது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய சுவரெனப்படும் இச்சுவர் மேற்கு சகாராவின் மீதான மொராக்கோவின் அடக்குமுறையின் சின்னமாகும்.
வெறும் பாலைவனமாகத் தெரியும் ஒரு பிரதேசத்துக்காக ஏன் மொராக்கோ தீராத முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளது என்பதும் பொலிசாரியோ முன்னணியை அல்ஜீரியா ஏன் ஆதரிக்கிறது என்பதும் நியாயமான கேள்விகள். சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டுத் தளத்தில் நின்று ஸஹ்ரவி மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அவர்கள் மேற்கு சகாரா எனும் தனிநாடாக இயங்க உரிமையுடையோர் என்ற நிலைப்பாட்டை அல்ஜீரியா எடுக்கிறது. அதைவிட,மொராக்கோவுடன் தனது எல்லை முரண்பாடுகளிலிருந்து விடுபட மேற்கு சகாரா விடுதலை உதவலாம் என்பதோடு அவ் விடுதலை அத்திலாந்திக் சமுத்திரத்தின் கடல் வழிப்பாதையை அல்ஜீரியாவுக்கு திறந்தும் விடலாம்.
பாலைவனமாகத் தெரியும் மேற்கு சகாரா இயற்கை வளம்மிகுந்த ஒரு பிரதேசமாகும். எண்ணெய் வயல்களும் பொஸ்பேற் கனிமச் சுரங்கங்களும் நிறைந்த பகுதியாகும். அது மேலும் 1,100 கிலோ மீட்டர் நீளமான கடற்கரையையும் அதையண்டி அத்திலாந்திச் சமுத்திரத்தின் முக்கியமான மீனினங்கள் உள்ள பெருங் கடற்பரப்பையும் கொண்ட பொருளாதார வளம் நிறைந்த பிரதேசமாகும். இப்பகுதியின் எண்ணெய்க் கிணறுகளுக்கு உரிமை கொண்டாடும் மொராக்கோவைப் பொறுத்தவரை இவ்வளவு வளமுள்ள பகுதியைக் கைவிடுவது இயலாத காரியம். எண்ணெய் அகழும் பல்தேசியக் கம்பெனிகளுடன் மொராக்கோ உடன்படிக்கைகளை மேற்கொள்கிறது. பொஸ்பேட் சுரங்கங்களைக் குத்தகைக்கு விடுகின்றது. சர்வதேசச் சட்டங்களை மீறி, ஐரோப்பிய ஒன்றியம், மேற்கு சகாராக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு மொராக்கோவுடன் உடன்படிக்கை மேற்கொண்டுள்ளது.
இப்பின்னணியிலேயே ஸஹ்ரவி அரபு ஜனநாயக் குடியரசின் விடுதலைக் கோரிக்கையை நோக்க வேண்டும். ஆபிரிக்காவின் ஏதோவொரு மூலையில் உள்ள ஒரு மக்கள் தொகுதியின் சுயநிர்ணய உரிமை பற்றி உலகம் அலட்டிக் கொள்ளாது. மேற்குலக நாடுகட்கு வேண்டியது மொராக்கோவின் ஊடாகக் கிடைக்கிறது. அவர்களது இலாபத்தில் குறைவு ஏற்படாதவரை அங்குள்ள ஸஹ்ரவி இன மக்களின் துயரமோ கோரிக்கைகளோ கவனிப்புக்குரியனவல்ல. ஐக்கிய நாடுகள் சபை அமைதி காக்கும் படைகளை அனுப்பிவிட்டு வாளாவிருக்கிறது.
ஆபிரிக்க ஒன்றியத்தில் மீள இணையும் மொராக்கோவின் விருப்பம் இயல்பானதல்ல. இன்று ஆபிரிக்கா எங்கும் தலையெடுக்கும் இஸ்லாமியப் பயங்கரவாதத்தைக் கண்டு மொராக்கோ அஞ்சுகிறது. எனவே ஆபிரிக்க யூனியனில் இணைவது நல்லதெனக் கருதுகிறது. தனது பிராந்தியத்தில் தன் பரம வைரியான அல்ஜீரியாவை தோற்கடிக்கும் இராஜதந்திர வழிமுறையாகவும் மீளிணைவைக் கருதுகிறது. பொருளாதார நலன்கள் அரசியல் நலன்களைப் பின்தள்ளி மேலெழுவதால் மேற்கு சகாராவின் வளங்களைக் குறிவைக்கும் ஆபிரிக்க ஒன்றிய நாடுகள் மொராக்கோவுடன் நெருங்கி உறவாடும் என எதிர்பார்க்கலாம். அதன் மூலம் ஆபிரிக்க ஒன்றியத்தில் ஸஹ்ரவி அரபு ஜனநாயக் குடியரசின் உறுப்புரிமையை இல்லாது ஆக்கலாம் என மொராக்கோ கணக்கிடுகிறது.
மொராக்கோ நிபந்தனைகள் எதுவும் விதியாது மீள வேண்டும் என்றும் ஸஹ்ரவி அரபு ஜனநாயக் குடியரசை வெளியேற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அல்ஜீரியா அறிவித்துள்ளது. ஆபிரிக்க ஒன்றியம் மொராக்கோவை நிபந்தனைகளுடன் ஏற்க வேண்டும் எனச் சில உறுப்பு நாடுகள் கோருகின்றன. ஸஹ்ரவி அரபு ஜனநாயக் குடியரசில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த மொராக்கோ உடன்பட்டால் மட்டுமே மீளலாம் என்பது அந்நாடுகளின் நிலைப்பாடு.
நான்கு தசாப்தங்கட்கு மேலாகத் தொடரும் இழுபறியைப் யுத்தத்தினால் முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை. பொருளாதார நலன்கள் முக்கியம் பெறும் உலக அரசியல் சூழலில் பொருளாதாரச் சலுகைகளைக் காட்டி இராஜதந்திர வெற்றியைப் பெற மொராக்கோ முனைகிறது. ஒரு புறம் மனித உரிமைகள், சர்வதேச சட்டம் என வாய்கிழியப் பேசியபடி அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் மேற்கு சகாராவின் வளங்களைச் சூறையாடுதற்கான உடன்படிக்கைகளை மலிவுவிலையில் மொராக்கோவுடன் மேற்கொள்கின்றன. அதை ‘அரசியல் வேறு பொருளாதாரம் வேறு. இரண்டையும் இணைத்துப் பார்க்கக் கூடாது’ என நியாயப்படுத்துகின்றன.
விடுதலைப் போராட்டங்கள் எதிர்நோக்கும் சவால்களின் இன்னொரு பரிமாணம் இன்று மேற்கு சகாராவில் தெரிகிறது. நண்பர்கள் எனக் கருதியோரும் பொருளாதார நலன் கருதி எதிரிகளாக மாறலாம் என்பதையும் காண்கிறோம். விடுதலைப் போராட்டங்கள் நண்பர்களைத் தேர்தெடுப்பது பற்றிய சில பாடங்களை நாம் இதிலிருந்து கற்கிறோம். கிடைக்கும் ஆதரவு ஏன் கிடைக்கிறது என அவதானமாயிருப்பது அவசியம்.