மே தினம் அது தொழிலாளர் தினம்

எட்டு மணி நேரம் வேலை என்பதை உடலியல் சமூக விஞ்ஞானத்தின் அடிப்படையில் 19ம் நூற்றாண்டின் இறுதியில் போராடிப் பெற்றததை கூட தள்ளி வைத்து விட்டு ஒரு அவசர கால நிலமையில் வருடம் ஒன்றிற்கு மேலாக சலிக்காது அர்ப்பணிப்புடன் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக பணியாற்றிவரும் உங்களுடன் நானும் ஒருவனாக இருப்பதில் பெருமையடைகின்றேன்.

இதற்கும் அப்பால் நோயாளிகளுடன் நேரடியாக தொடர்புகளை மேற்கொண்டு அவர்களின் உயிர்களைக் காப்பாற்ற அத் தொற்று ‘எமக்கும் ஏற்படலாம்… மரணமும் சம்பவிக்கலாம்…” என்பது கூட மருத்துவ விஞ்ஞான அடிப்படையில் தெரிந்திருந்தாலும் ஒரு நூற்றாண்டில் மனித குலம் சந்தித்;திராக இந்த பேரிடரில் பணியாற்றும் அனைத்து சுகாதாரப் பிரிவினரும் அவர்களுக்கு உறுதுணையாக செயற்படும் அனைவரும் எமது மரியாதைக்குரியவர்கள்.

மனித குலம் வரலாற்றில் பல்வேறு பேரிடர்களை தனது வரலாற்றில் சந்தித்திருந்தாலும் அவை எல்லாவற்றிற்கும் உச்சமான இந்த கொரானா என்ற உயிர் கொல்லியை நீங்கள் இல்லாமல் இந்த மனித குலம் தற்காத்திருக்க முடியாது…. வெற்றி கொள்ள முடியாது

தேசங்கள்…. நாடுகள்… மொழிகள்…. இனங்கள்…. நிறங்கள் பணக்காரர்கள்… ஏழைகள் என்ற எந்த வேறுபாடும் இன்றி மனிதன் என்ற ஒற்றைச் சொலிலிற்காக பகலை இரவாகவும் இரவை பகலாகவும் என்று மாறி மாறி ஓய்வு உறக்கமின்றி உழைப்பில் அர்பணிப்பில் ஈடுபடும் அனைத்துத் தொழிலாளர்கள்தான் இந்த உலகின் முதன்மை சக்தி.

இதனை மீண்டும் நிருபித்திருக்கும் இவ்வேளையில் இந்த ஏற்புடமையை சகலரும் புரிந்து கொண்டு சகல உழைப்பாளிகளையும் சமமாக பாவித்து உருவாகும் சமதர்ம உலகை கட்டியமைக்கும் தார்மீக செயற்பாட்டில் தொடர்ந்தும் முன்னேறுவோம்.

இதனை இந்த மனித குலத்திற்கு உரக்கக் கூறும் தங்கள் சேவையே உண்மையான தொழிலாளர் தினத்தின் அர்த்தத்தை நிறுவி நிற்கின்றது என்பதை வரலாறு அழியாது பதிந்து வைக்கத்தான் போகின்றது.இந்த பேரிடர் காலத்திலும் உலக இயக்கத்திற்கு தமது உணவைக் கூட பெறமுடியாத அவலங்களிலும் இருக்கும் நிலமைகளுக்கு ஏற்ப தமது உழைப்பை செலுத்திக் கொண்டிருக்கும் கோடான கோடி உழைப்பாளர்களே இந்த பூமிப் பந்தின் வாழ்வை தக்க வைத்திருக்கின்றனர்.

இவர்களின் உழைப்புகள் இன்றி ஏதும் அசையாது என்பதை மீண்டும் நிறுவி நிற்கும் உழைப்பாளர் வலிமை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் மதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கான ஆட்சிகளை நிறுவ இந்த தொழிலாளர் தினத்தில் உறுதி பூணுவோம்