என்னும் கோரிக்கைகளை வலியுறுத்தி அமெரிக்க நாட்டுத்
தொழிலாளி வர்க்கம் போராடியது. அப்போராட்டத்தின்
விளைவாகத்தான் இன்று எட்டு மணி நேர வேலை என்பது
உலகெங்கும் சட்டமாக்கப் பட்டுள்ளது.
மேற்கூறிய எட்டில், எட்டு மணி நேர ஒய்வு என்பதுதான்
மிகவும் முக்கியமானது. தான் படைத்த உலகை, தான் நுகர்வதற்கு தொழிலாளி வர்க்கத்திற்கு வாய்ப்பளிப்பது
இந்த எட்டு மணி நேரமே.
கலை, அறிவியல், பண்பாடு, நாகரிகம் ஆகிய யாவும்
ஒய்வு நேரமான இந்த எட்டு மணி நேரத்தில்தான்
உருவாயின. மானுடத்தின் கோர முகத்தை அழகு
படுத்தியது இந்த எட்டு மணி நேரம்தான்.
மந்திரத்தில் மாங்காய் விழுந்ததைப் போல இந்த
எட்டு மணி நேர ஒய்வு கிடைத்ததாக குட்டி
முதலாளித்துவ தாசர்கள் கருதக்கூடும். ஆனால்
உண்மை அதுவல்ல. கணக்கற்ற, முகம் தெரியாத
பல தொழிலாளர்களின் உயிர்த் தியாகத்திற்குப்
பிறகே எட்டு மணி நேர வேலை என்ற சட்டபூர்வ
நிர்ணயத்தை மானுடம் பெற்றது.
எட்டு மணி நேர வேலைக்காகப் போராடி, தூக்கு
மேடையில் உயிர் நீத்த
1) ஸ்பைஸ் (August Spies)
2) ஃபிஷர் (Adolf Fisher)
3) பார்சன்ஸ் (Albert Parsons)
4) எங்கல் (George Engel)
ஆகிய நான்கு மேதினத் தியாகிகளை இந்நாளில்
நினைவு கூர்வோம்.
மேதினத்தின் சுருக்கமான வரலாறு!
இன்றைக்கு 133 ஆண்டுகளுக்கு முன்பு, 1886ல் அமெரிக்காவின்
சிக்காகோ நகரம் ஒரு தொழில் நகரமாக விளங்கியது.
எனினும் தொழிலாளர்கள் மனிதத் தன்மையற்ற
நிலைமைகளிலேயே இருத்தப் பட்டிருந்தனர். வேலைநேரம்
வரையறுக்கப் படவில்லை. 10 மணி நேர, 12 மணி நேர
வேலை என்பது மீற முடியாத சட்டமாக இருந்தது.
காரல் மார்க்ஸ் 1883ல் மறைந்தார். அவர் மறைந்த
மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், 1886ல் சிகாகோவில்
தொழிலாளர்களின் போராட்டம் வெடித்தது. தொழிலாளர்
நடுவில் மார்க்சின் சோஷலிஸக் கருத்துக்கள் வேகமாக
செல்வாக்குப் பெற்றன. சோஷலிஸ்டுகளும்
அனார்க்கிஸ்டுகளும் தொழிலாளர்களை வழிநடத்திக்
கொண்டிருந்த காலம் அது.
எட்டு மணி நேர வேலை கேட்டு 1886 மே 4ல் சிகாகோ
தொழிலாளர்கள் ஒரு பேரணியை (mass rally) நடத்தினர்.
பேரணிக்கு முந்திய நாளன்று (மே 3) இலினாய்ஸ்
மாகாணப் போலீஸ் போராடிய தொழிலாளர்களைச்
சுட்டுக் கொன்று இருந்தது. கொந்தளிப்பான சூழலில்
தொழிலாளர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
அன்று மாலை (மே 4) தொடங்கிய பேரணி முன்னிரவில்
ஹே மார்க்கட் சதுக்கத்தை அடைந்தது. தொழிலாளர்
தலைவர்கள் எழுச்சியுரை ஆற்றினர். உரையின்போதே
கூட்டத்தில் குண்டுகள் வெடித்தன. ஐந்தே நிமிடத்தில்
கூட்டம் மொத்தமும் கலைந்து விட்டது. ஒரு போலீஸ்
அதிகாரி குண்டு வீச்சில் இறந்து போனார்.
இதைத் தொடர்ந்து போலீஸ் அடக்குமுறை கட்டவிழ்த்து
விடப்பட்டது. பலரும் கைது செய்யப்பட்டனர். எட்டுப்பேர்
மீது கொலை வழக்கு தொடரப்பட்டது. இதில் ஏழு பேருக்கு
மரண தண்டனை விதிக்கப் பட்டது. எட்டாவது நபருக்கு
15 ஆண்டு சிறை!
மேல்முறையீட்டில் ஏழு பேரில் இருவருக்கு ஆயுள்
தண்டனையாகக் குறைக்கப் பட்டது. ஐந்து பேருக்கு
மட்டுமே மரண தண்டனை. இதில் குண்டு தயாரித்ததாகக்
குற்றம் சுமத்தப்பட்ட லிங் (Louis Lingg) சிறையிலேயே
தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்.
மீதி நான்கு பேரான 1) ஸ்பைஸ் 2) ஃபிஷர் 3) பார்சன்ஸ்
4) எங்கல் ஆகிய நால்வரும் 1887 நவம்பர் 11 அன்று தூக்கில்
இடப்பட்டனர்.
தூக்கில் இடும் முன்னர் ஆகஸ்ட் ஸ்பைஸ் பேசியது
உலக வரலாற்றில் இடம் பெற்று விட்டது.
“எங்களைப் பேச விடாமல் நீங்கள் எங்கள் குரல்வளையை
நெரிக்கலாம்; ஆனால் பேச்சை விட எங்களின் மௌனம்
மிகவும் வலிமையானது” என்றார் ஸ்பைஸ்.
சிக்காகோவின் தெருக்களிலே
ரத்தம் சிந்திய தோழர்களே
நீங்கள் சிந்திய ரத்தத்தில்
தோய்த்து எடுத்த கொடியின்கீழ்
அணிசேருங்கள் தோழர்களே!
எட்டு மணி வேலை கேட்டு
சிக்காகோவின் தெருக்களிலே
ரத்தம் சிந்திய தோழர்களே
இன்னுயிர் நீத்த தோழர்களே
நீங்கள் சிந்திய ரத்தத்துக்கு
ஒவ்வொரு சொட்டு ரத்தத்துக்கும்
ரத்தச் செங்கொடி பழிவாங்கும்!
உயருது பார் உயருது பார்
வானில் செங்கொடி உயருது பார்!
ஸ்பைஸ் பிஷர் பார்சன்ஸ் எங்கல்
மேதினத் தியாகிகள் நாமம் வாழ்க!
தியாகிகள் நாமம் ஜிந்தாபாத்!
இன்குலாப் ஜிந்தாபாத்!
இன்குலாப் இன்குலாப் இன்குலாப் ஜிந்தாபாத்!
மேதின முழக்கங்களால் காற்றும் கனத்துக் கிடக்கிறது.
பாதை நீள்கிறது! பயணம் தொடர்கிறது!
நாளை நமதே!
நன்றி : தோழர் . Ilango Pichandy