உலகளாவிய ரீதியில், உழைக்கும் மக்கள் போராடிப் பெற்ற சுதந்திரமே, மே தினமெனப்படுகின்ற சர்வதேச தொழிலாளர் தினமாகும். நீண்ட போராட்டங்களின் பின்னரே, உழைக்கும் மக்கள் தங்களைக் கொண்டாடுதற்கும் தங்கள் உரிமைகளுக்கான குரலை எழுப்புவதற்குமான தினமாக, இது அங்கிகரிக்கப்பட்டது.
எனினும், பல நாடுகளில் மே தினம் என்பது, வெறும் சடங்காகவும் கேளிக்கைகளுக்கும் கோஷங்களுக்குமான நாளாகவும் மட்டுமே உள்ளது; இலங்கையும் இதற்கு விலக்கல்ல.
அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பரவலைக் காரணம் காட்டி, இம்முறை மே தினத்தை இரத்து செய்ய வேண்டும் என அரசாங்கம் கோரியிருக்கிறது. மே தினத்தை முன்னிட்டு, பொதுக்கூட்டங்களையும் பேரணிகளையும் நடத்தாமலிருக்க அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
“ஏற்கெனவே நிறுத்தப்பட்டிருக்க வேண்டிய பல நிகழ்வுகளுக்கு அனுமதி அளித்த அரசாங்கம், மே தினத்தை மட்டும் நிறுத்தச் சொல்வது, அரசியல் நோக்கங்களுக்காகவேயன்றி, கொரோனா வைரஸ் பரவுகை காரணமாக அல்ல” என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. இலங்கையில் மே தினத்தை மையப்படுத்தி ஆடப்படும் அரசியல் ஆட்டங்களுக்கு, நீண்ட வரலாறு உண்டு.
2007ஆம் ஆண்டு பௌத்த மத பண்டிகையான வெசாக் தினம், மே முதலாம் திகதி என்பதால், மே தினத்தை ஏப்ரல் 30 ஆம் திகதியே ஆளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் அதனோடு இணைந்திருந்த இடதுசாரிக் கட்சிகளும் நினைவு கூர்ந்தன.
ஜே.வி.பியும், மே 30 ஆம் திகதியே நினைவு கூர்ந்தது. மலையகப் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களும் ஏப்பிரல் 29ஆம் திகதி கொண்டாடின. இதை அன்று முன்மொழிந்தது, ஜே.வி.பி என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி, அவ்வாண்டு மே தினத்தைக் கொண்டாடாது, வெசாக் மத அனுட்டானங்களைச் செய்தது.
இதே போன்று, 1965ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம், மே முதலாம் திகதி கொழும்புக்கு வெளியே மே தினக் கூட்டங்களுக்குத் தடை விதித்தது.
இதேபோலவே, 1969ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையைச் சாட்டாகக் காட்டி, ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம், மே தினக் கூட்டங்களுக்கு மீண்டும் தடையை விதித்தது. இவ்விரு சந்தர்ப்பங்களிலும் தடைகளை மீறி, அன்று மிகவும் பலமாக இருந்த புரட்சிகர கட்சியான இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி, சண்முகதாசன் தலைமையில் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் கூட்டங்களை நடத்தியது.
1995ஆம் ஆண்டு, கொழும்பு நகரில் மே தின ஊர்வலங்களுக்கு ஜனாதிபதி சந்திரிகா தலைமையிலான அரசாங்கம் தடைவிதித்தது. 2006ஆம் ஆண்டு, மே தின ஊர்வலங்களுக்குத் தடை விதிக்காவிடினும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இவ்வாறு, மே தினத்தைக் கொண்டாடுவதற்கு தடைகளும் கட்டுப்பாடுகளும் இலங்கையின் ஆளும் கட்சிகளால் தொடர்ந்து விதிக்கப்பட்டு வந்துள்ளன. அவற்றையும் மீறி, மே தினத்தை உழைக்கும் மக்கள் கொண்டாடிய வண்ணமே உள்ளனர்.
இலங்கையில் மே தினம் நீண்ட போராட்டங்களினூடாக வென்றெடுக்கப்பட்ட ஒன்றாகும். 1956ஆம் ஆண்டு, எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் அரசாங்க காலத்திலேயே மே தினம் அங்கிகரிக்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை தினமாக்கப்பட்டது.
இப்போது இலங்கையில் மே தினமானது, அரசியல் கட்சிகளின் பேச்சுகளுக்கான மேடையாகி உள்ளது. உழைக்கும் மக்களின் பிரச்சினைகள் ஓரங்கட்டப்பட்டு, அரசியல் தலைவர்களின் வெறும் உரைகளின் தினமாகியுள்ளது. அதனிலும் ஒருபடி மேலேசென்று, தொழிலாளர் உரிமைகளை மறுக்கின்ற கட்சிகளே, பெரும் செலவில் மே தினத்தைக் கொண்டாடுகின்றன.
‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்; உங்கள் அடிமைச் சங்கிலிகளைத் தவிர, இழப்பதற்கு வேறு எதுவும் இல்லை. ஆனால், வெல்வதற்கோர் உலகம் உள்ளது’ என்று, 1848ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி, வெளியிடப்பட்ட கொம்யூனிஸ்ட் பிரகடனத்தில், மேற்படி அறைகூவலை கார்ள் மார்க்ஸூம் பிரெட்ரிக் ஏங்கல்ஸூம் விடுத்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து, உலகின் கவனத்தை ஈர்த்த மாபெரும் ‘பாரிஸ் கம்யூன் எழுச்சி’ 1871இல் இடம்பெற்றது. பிரான்ஸின் தொழிலாளி வர்க்கம், தனது பலத்தால் முதலாளி வர்க்கத்தைப் புறமுதுகிட வைத்து, ‘பாரிஸ் கம்யூன்’ ஆட்சியைத் தனது தலைமையில் எடுத்துக் கொண்டது.
72 நாள்கள் மட்டுமே அந்த ஆட்சி நிலைத்திருந்தது. முதலாளித்துவ சக்திகள், அவ்வாட்சியை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தனர். ஆனால், இனிவரப் போகும் எழுச்சிகளுக்கான உந்துசக்தியாகவும் நம்பிக்கையாகவும் ‘பாரிஸ் கம்யூன்’ விளங்கியது.
அதனைத் தொடர்ந்தே, அமெரிக்கத் தொழிலாளர்கள் 15 முதல் 20 மணி நேரம் வேலை வாங்கிய அமெரிக்க முதலாளிகளிடமிருந்து, எட்டு மணி நேர வேலைக்கான போராட்டத்தைத் தொடங்கினார்கள். அக்கோரிக்கையை முறியடிக்க, கொடிய அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
ஆனால், வீறுபெற்று எழுந்த அமெரிக்கத் தொழிலாளர்கள், வருடா வருடம் தமது கோரிக்கைக்கான போராட்டங்களை வலுப்படுத்தி, விரிவாக்கி வந்தனர். 1886இல் சிக்காகோ நகரில், இப்போராட்டத்தில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ‘பூகம்பம்’ என வெடித்துக் கிளம்பினர். எட்டுமணி நேர வேலைக் கோரிக்கையை, அமெரிக்க முதலாளிகள் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்க முனைந்தார்கள். தொழிலாளர்களும் அவர்களது தலைவர்களும் சுடப்பட்டும் தூக்கிலிடப்பட்டும் கொல்லப்பட்டனர்.
ஆனால், அவர்களின் தியாகம் வீண்போகவில்லை. எட்டுமணி நேர வேலைக்கான போராட்டம், உலகம் முழுவதும் விரிவடைந்தது. எட்டுமணி நேர வேலைக்கான கோரிக்கையை, அரசியல் கோரிக்கையாக முன்வைத்து, உலகத் தொழிலாளர்கள் மே முதலாம் திகதியை, போராட்ட நாளாக முன்னெடுக்க வேண்டும் என, 1889ஆம் ஆண்டில் ‘இரண்டாவது அகிலம்’ தீர்மானித்தது. இதுவே, இன்றுவரை நாம் கொண்டாடும் தொழிலாளர் தினமான மே முதலாம் திகதியாகும்.
இன்று, 132 ஆண்டுகள் கடந்து விட்ட பிறகும், சில நாடுகளில் இன்னும் மே தினம், விடுமுறையுடன் கூடிய தொழிலாளர் தினமாக்கப்படவில்லை. அமெரிக்காவில் மே தினம் அங்கிகரிக்கப்படவில்லை.
இந்தியாவில் சென்னை மாநகரில் தான் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான ம. சிங்காரவேலர் தான் 1923இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில், தொழிலாளர் தினத்தைக் கொண்டாடினார்.
ஒவ்வொரு மே தினமும் வருகின்ற போது, மே தினம் யாருக்கானது என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
இன்று பல நாடுகளில், மே தினம் அதன் உள்ளார்ந்த பொருளை இழந்துள்ளது. கட்சிகள் ஒரு சடங்காக இதைக் கொண்டாடுகின்றன. ஆனால் முன்னெப்போதும் இல்லாதளவு, உலகளாவிய ரீதியில் தொழிலாளர்கள் பாரிய நெருக்கடிகளை இப்போது எதிர்நோக்குகிறார்கள்.
சரிவில் இருக்கின்ற உலகப் பொருளாதாரமும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றும் தொழிலாளர்களையே மோசமாகத் தாக்கியுள்ளது. தொழிலாளர் வேலை பறிக்கப்படல், உற்பத்தியை நிறுத்துதல், தொழிற்சாலைகளை மூடுதல் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகளால் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கிறார்கள்.
உள்நாட்டிலும் உலகம் முழுவதிலும், உழைக்கும் மக்கள் முன் நிற்கும் சவால்கள் பற்றி ஆழ்ந்து சிந்திக்கவும் இழந்து போன உரிமைகளை மீட்டெடுக்கவும், இருக்கும் ஒன்றிரண்டு உரிமைகளைக் காப்பாற்றிக்கொள்ளவும் நாம் என்ன செய்ய போகிறோம் என்ற கேள்வி எழுகிறது.
சேவைத் தொழிற்றுறை அதிகரித்துள்ள இலங்கை போன்ற நாடுகளில் தொழிற்சங்கமாவதற்கான உரிமை மறுக்கப்படுகிறது. வலுவற்ற தொழிலாளர்கள் சட்டங்களை நாம் கொண்டிருக்கிறோம். குறைந்தபட்ச தொழிற்பாதுகாப்பு என்பது இல்லாத ஒன்றாகவே இருக்கிறது. எமது உரிமைகளுக்காக நாம் போராடப்போகிறோமா இல்லையா என்ற வினாவுக்கான பதில், மே தினம் யாருக்கு என்ற கேள்விக்கான விடையாகவும் அமையும்.
இலங்கைச் சூழலில் இனம், மொழி, மதம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து, உழைக்கும் மக்கள் என்ற வகையில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்காகப் பொதுத்தளத்தில் ஒன்றிணைந்து போராடுவதற்கான வாய்ப்பைத் தரும் மே தினமானது, மனித உரிமைகளும் அடிப்படை உரிமைகளும் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களுக்கு வெவ்வேறு விதங்களில் மறுக்கப்படுவதைப் பரந்தநோக்கில் காணும் வாய்ப்பை, நமக்கு வழங்குகிறது. அதைப் பயன்படுத்த நாம் தயாராக இருக்கிறோமா?