உங்களது வெல்லும் தமிழீழம் மாநாடு பற்றிய விளம்பரம் பார்த்தேன். பிரமிக்க வைத்தது. இலங்கைத் தமிழ் மக்களுக்காக எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் உங்கள் இயக்கமும் அதன் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களும் இடைவிடாது போராடி வருகிறீர்கள். இலங்கைத் தமிழ் மக்களுக்காக உங்களது கரிசனை எம்மைப் புல்லரிக்கச் செய்கிறது.
எனினும் எனது பொல்லாத மனதில் சில இல்லாத? சந்தேகங்கள் வந்து தொலைக்கிறது.
இந்த மாநாடு கூட்டுவதற்கு திருமுருகன் காந்திக்குப் பணம் எங்கிருந்து வந்தது? யாரிடமிருந்து தொடர்ந்தும் பணம் வந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு தொகை வருகிறது?
தமிழீழப் போராட்டத்தை மேலும் தொடர்ந்து நடத்துவது எப்படி என பிரபாகரனிடமிருந்து நேரடியாக அறிவுறுத்தப்பட்ட சீமான் அண்ணன் மாநாட்டுக்கு வரமாட்டாரா?
சீமான் தமிழீழப் போராட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்டு விட்டாரா?
சீமானுக்குப் பணப்பட்டுவாடா நிறுத்தப்பட்டு விட்டதா?
தமிழ்நாட்டில் உள்ள தமிழீழ உணர்வாளர்களில் தொடர்ந்தும் ஈழப் பணம் பெற்று வருபவர்கள் யார்? யார்?
இந்த மாநாட்டில் கலந்து கொள்பவர்களில் எத்தனை பேருக்கு ஈழப் பணம் கிடைத்து வருகிறது?
ஈழப் போராட்டத்தில் இரத்தமும் சதையுமாக இருந்து, எமது உறவுகளை, எமது உடைமைகளை எல்லாம் இழந்து இன்று இந்தப் போராட்டமே போதும் என்று ஒதுங்கி இருக்கும் ஈழத்துத் தமிழர்களை உசுப்பேத்த வேண்டாம்.
இலங்கையில் இந்த மாதம் நடந்த உட்கட்டமைப்புக்களுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் 70 வீதத்துக்கும் அதிகமானவர்கள் வாக்களித்து, ஐக்கிய இலங்கையில் தமது இருப்பை பதிவு செய்துள்ளார்கள்.
இனவாதம் பேசும் தமிழ் கட்சிகள் கூட ஐக்கிய இலங்கைக்குள் தமது ஈடுபாட்டை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார்கள். உங்களது இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் திரு.சுரேஸ் பிரேமசந்திரன், திரு சிவாஜி லிங்கம், திருமதி.அனந்தி சசிதரன் ஆகியோர் சார்ந்துள்ள, தேர்தலுக்காக இனவாதம் பேசும் கட்சிகளும் தேர்தலில் மிக மிக உற்சாகமாகப் பங்குபற்றி இருந்தன.
தமிழ்நாட்டுத் தமிழர்களிலும் பார்க்க இலங்கைத் தமிழர்கள் தற்போது மகிழ்ச்சியாகத் தான் வாழுகிறார்கள். யுத்த பயமின்றி வாழுகிறார்கள். இந்த சமாதான சூழ்நிலையை உங்களைப் போன்ற பொறுப்பற்ற கூட்டங்களின் செயற்பாடுகளினால் கெடுத்துவிட வேண்டாம்.
தமிழ்நாட்டில் மக்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன.
நேற்றுக் கூட காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டுக்குப் பாதகமான தீர்ப்பு வந்துள்ளது. உங்களது மாநாட்டை அந்தத் தீர்ப்புக்கு எதிராகத் திருப்பி விடலாமே.
விவசாயிகள் பிரச்சனை, விலைவாசி உயர்வு, மாணவர் பிரச்சனை, சாதியப் பிரச்சனை, மதவெறி, இந்துத்துவா பிரச்சனை இப்படி எத்தனையோ பிரச்சனைகள் உங்கள் நாட்டில் இருக்கும் போது, அவற்றைத் தீர்க்க வக்கில்லாத நீங்கள், எதற்காக எமது விடயங்களுக்குள் மூக்கை விடுகின்றீர்கள்.
இந்தப் பிரச்சனைகளுக்காக என்றால் யாரும் பணம் தரமாட்டார்கள்.
இலங்கைப் பிரச்சனை என்றால் ஈழப் பணம் கிடைக்கும் என்பதால், முன்னர் நெடுமாறன் ஐயா தொடங்கி இப்போ திருமுருகன் காந்தி ஈறாக பணம் பார்க்கிறீர்கள்.
‘ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.’ இப்படியாக பிரபாகரன் சொன்னதாக விளம்பரத்தில் போட்டுள்ளீர்கள்
இப்படியெல்லாம் கோர்வையாகச் சொல்ல அந்த மனுசனால் முடியவே முடியாது. சரி அப்படியே அவர் சொன்னதாக வைத்துக் கொண்டாலும், எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம் ஆகியவற்றைப் பாதி மறுத்தது சிங்களம் என்றால், மீதியைப் பறித்தது விடுதலைப் புலிகள் தான்.
தமிழ் மக்கள் செத்தது போதாது என்று சொன்னது யார்?