மே 18 (பகுதி 10)

(அருண் நடேசன்)

ஆனால் யாராலும் விளங்கிக் கொள்ள முடியாத விசயமாக இருப்பது புலிகளின் கரும்புலிகள் அணிகள் ஏன் செயற்பட முடியாமல் ஆகின என்பதே. படைத்தரப்பு புலிகளின் ஒவ்வொரு கோட்டையையும் கைப்பற்றி முன்னேறும்போது புலிகளின் உறுப்பினர்களின் மத்தியிலும் சனங்களின் மனதிலும் கரும்புலிகளின் தாக்குதல்கள் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தவிரவும் பிரபாகரன் அரசியல்ரீதியாகச் சாணக்கியமோ கெட்டிக்காரத்தனமோ அக்கறையோ இல்லாதவராக இருந்தாலும் இராணுவரீதியாக மிகவும் ஆற்றலுள்ளவராக மதிக்கப்பட்டவர். ஆனால், எவருக்கும் தெரியாத, விளங்காத ஒரு புதிராக அவர் அமைதி காத்தபடி பின்வாங்கிக்கொண்டிருந்தார்.

கண் முன்னே பல ஆயிரக்கணக்கான சனங்கள் செத்து மடிந்துகொண்டிருந்தனர். அப்போதும் அவர் தனது நடவடிக்கையைக் கைவிடவில்லை. முன்னேறும் படையினரைத் தடுக்கும் அதே மாதிரியான ஒரே வகையான தாக்குதலையே தொடர்ந்தார். இந்தத் தடுப்பு நடவடிக்கையை எப்படி எதிர்கொள்வது, எவ்வாறு முறியடிப்பது என்று படைத்தரப்பு மிக நன்றாகப் படித்திருந்தது. அதன்படி அது எல்லா எதிர்ப்புகளையும் மிக லாவகமாகவும் இலகுவாகவும் முறியடித்தது.
இதன்போது நூற்றுக்கணக்கில் கட்டாய ஆட்சேர்ப்பில் பிடிக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளைப் பற்றிய எந்தக் கவலையும் புலிகளிடம் இருக்கவில்லை.

அவர்கள் வெறிகொண்டலைந்து இன்னுமின்னும் ஆட்களைப் பிடித்தார்கள். ஆட்பிடிப்பில் எந்தவிதமான மனிதாபிமானத்தையும் நாகரிகத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கவில்லை. இறுதிக் கட்டம் நெருங்கிவிட்டது என்று தெரிந்த பின்னர் தங்களுக்கு மக்கள் அபிமானம் தேவையில்லை என்று புலிகள் சிந்திக்கின்றனர் எனப் புலிகளின் முக்கிய ஊடக வியலாளர் ஒருவரே சொன்னார். அந்தளவுக்கு அவர்களின் உளநிலை மாறியிருந்தது.

மாத்தளன் தொடக்கம் வட்டுவாகல் வரையிலான முன்னூறு மீற்றர் அகலமும் 10 கிலோ மீற்றர் நீளமும் உள்ள கடற்கரையில் ஏறக்குறைய மூன்று லட்சம் மக்கள் செறிந்திருந்தனர். சாப்பாடு, குடிநீர், தங்குமிடம், பாதுகாப்பு, மருத்துவம், கழிப்பறை எனச் சகலத்துக்கும் பிரச்சினை. ஏற்கனவே இந்தப் பகுதி மிகவும் பின்தங்கிய பகுதி. இரண்டு கிராம அலுவலர்கள் பிரிவிலுமாக சுமார் முன்னூறு குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்த இடத்தில் இப்போது மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் என்றால் நிலைமை எப்படி இருக்கும்? அதுவும் எந்த அடிப்படை வசதிகளையும் செய்ய முடியாத சூழலில்!

சனங்கள் இந்தப் பகுதியில் தஞ்சமடைந்தபோது படையினர் புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, ஆனந்தபுரம் பகுதிகளில் மட்டும் முற்றுகைச் சமரில் ஈடுபட்டனர். புலிகளின் இறுதி எதிர் நடவடிக்கை இங்கேதான் நடந்தது. இந்த நடவடிக்கையை அவர்கள் மிகத் தீவிரமான முறையில் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். மக்களுக்கு ஏற்பட்டிருந்த உளச்சோர்வு, பேரவலம் எல்லாவற்றையும் இந்த நடவடிக்கை மூலம் போக்கிவிடலாம் என்று இறுதி நம்பிக்கையோடு புலிகளின் சில மூத்த தலைவர்கள் சொன்னார்கள். இந்தத் தாக்குதலில் அவர்களுடைய மூத்த முன்னணித் தளபதிகள் பலரும் கலந்துகொண்டனர். பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, பிரிகேடியர் மணிவண்ணன், கேனல் சேரலாதன், கேனல் ராகேஸ் உட்படப் பல தளபதிகள் இதன்போதே கொல்லப்பட்டனர்.

முழு நம்பிக்கையுடன் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் புலிகளின் வரலாற்றிலேயே பெரும் தோல்வியாகவும் மாபெரும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் முடிந்தது. இது பிரபாகனை நிலைகுலைய வைத்தது. கொல்லப்பட்ட தளபதிகளின் சடலங்களைக்கூட அவர்களால் எடுக்க முடியவில்லை. ஏற்கனவே இன்னும் பல தளபதிகள் கள முனைகளில் கொல்லப்பட்டிருந்தனர்.
சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, மாலதி படையணி போன்றவையும் முன்னரே பெருமளவுக்குச் சிதைந்துவிட்டன. இந்த நிலையிலும் அவர்கள் வெளியுலகுக்குத் தவறான தகவல்களையே சொல்லிக்கொண்டிருந்தனர். பதிலாக சிறிலங்கா அரசு இன்னும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது. இப்போது இறுதிக்கட்ட நடவடிக்கைக்குப் படைத்தரப்பு தன்னைத் தயார்படுத்தியது.

அதுதான் புதுமாத்தளன் மற்றும் அம்பலவன் பொக்களையில் படைத்தரப்பு நுழைந்து ஒருலட்சத்திற்கும் அதிகமான சனங்களை மீட்ட நடவடிக்கை. உண்மையில் புலிகளின் பிடியிலிருக்கும்போது தம்மை முழுதாகப் பணயக் கைதிகளாகவே அந்த மக்கள் எண்ணியிருந்தனர். அந்த நிலையிலேயே அவர்களைப் புலிகள் நடத்தினார்கள். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பணயக்கைதிகள். (இப்போது அத்தனை பேரும் தடுப்புமுகாம்களில் தடைக்கைதிகளாக அரசாங்கத்தால் வைக்கப்பட்டுள்ளனர்.) இந்தப் பணயக் கைதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஆயிரத்துக்கும் அதிகமான சனங்கள் கொல்லப்பட்டனர்.

இதேவேளை இன்னும் ஒரு தொகுதிச் சனங்களைப் புலிகள் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தை நோக்கிக் கட்டாயப்படுத்தி அடித்து விரட்டினர். அதுவும் பல வந்தமாகவே விரட்டினர். ஏற்கனவே உணவுப்பொருட்களைப் பெறுவதற்கே வசதியற்றிருந்த மக்கள் சாப்பாடு இல்லாமல் சாவதைவிடப் படையினரிடம் போய்ச்சாவது மேல் என்று மறுத்தார்கள். எனினும் புலிகள் அவர்களைவிடவில்லை. கட்டாயப்படுத்தி முள்ளிவாய்க்காலுக்கு அழைத்துச் சென்றனர். இந்த முள்ளிவாய்க்கால் பகுதிதான் புலிகளின் களமாகியது.

இறுதிநாட்கள் என்று சொல்லப்படும் ஏப்ரல் 18க்குப் பிந்திய மே 18 வரையிலான நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகியது. சனங்கள் ஏற்கனவே இரகசிய வழிகளைத் தேடித் தேடி மிகவும் ஆபத்தான வழிகளில் படைத் தரப்பிடம் தப்பிச்செல்ல முற்பட்டனர். சிலர் கடல் வழியாகப் படகுகளிலும் புறப்பட்டனர். ஆனால் புலிகள் உருவாக்கிய ஒரு படையணியினர் ‘பச்சை மட்டை’யுடன் நின்று சனங்களுக்கு அடிபோட்டுக் கலைத்தார்கள். சனங்கள் எதிர்ப்பைக் காட்டியபோது துப்பாக்கியால் சுட்டார்கள்.
(தொடரும்…..)