(அருண் நடேசன்)
மிஞ்சிய புலிகள் (நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட அணியினர் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டனர்) சனங்களோடு சனங்களாக இரட்டை வாய்க்காலிலும் வட்டுவாகலிலும் சரணடைந்தனர். சனங்கள், தாங்கள் உயிருடன் மீள்வோம் என்ற நம்பிக்கையே இல்லாமல், அதிர்ச்சியடைந்த முகத்தோடு – சவக்களை என்று சொல்வார்களே – இராணுவத்திடம் சரணடைந்தனர். 38 ஆண்டுகளாக நடந்த புலிகளின் போராட்டம் சரணடைவு நிகழ்ச்சியுடன் முடிவுக்கு வந்தது.
இப்போதுள்ள சில கேள்விகள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா? புலிகளின் எழுச்சி மீண்டும் நிகழுமா நிகழாதா? கொல்லப்பட்டு விட்டார் என்றால் தானே இறந்தாரா அல்லது படைத்தரப்பினால் கொல்லப்பட்டாரா என்பது. தானாக மரணித்தார் என்றால் எப்படி? படையினரால் கொல்லப்பட்டார் என்றால் அடித்துக்கொல்லப்பட்டாரா அல்லது சுட்டுக் கொல்லப்பட்டாரா? என்பது ஏனெனில் பிரபாகரனின் தலையில் அடிகாயமே காணப்படுகிறது என்று பலரும் கேட்கிறார்கள்.
உண்மையில் இந்தக் கேள்விகளையும்விட முக்கியமானவையும் தேவையான கேள்விகளும், பிரபாகரனால் தன்னைக் காப்பாற்ற முடியாமல் போனது எப்படி? அவரால் மக்களைக் காப்பாற்ற முடியாமல் போனது எவ்வாறு? அவருடைய போராட்டத்தை அவரால் இறுதியில் இந்த நிலைக்குக் கொண்டுபோக வேண்டி வந்த காரணம் என்ன? இதுபோல ஏராளம் உண்டு. இவற்றுக்கான பதில்கள் பிரபாகரனின் கடந்தகால செயற்பாடுகளிலும் அவருடைய மனவுலகத்திலுமே இருந்தன.
பிரபாகரனே சொல்வதைப் போல “வென்றால் சரித்திரம் தோற்றால் சம்பவம்” என்ற மாதிரியே இந்த நிகழ்ச்சிகளும் அமைந்துவிட்டன.
(அருண் நடேசன்)