மே 18 (பகுதி 4)

(அருண் நடேசன்)

இப்படிப் போரின் தீவிர நிலை சனங்களை இறுக்கிக் கழுத்தை நெரித்துக்கொண்டிருந்தபோதுதான் புலிகளின் கெடுபிடிகளும் மிக உச்ச நிலையில் அதிகரித்தன. படையினர் நெருங்க நெருங்க அதைத் தமது பரப்புரைக்கு வாய்ப்பான ஆயுதமாக்கி ‘எதிரி வருகிறான்; நீங்கள் அவனிடம் மண்டியிடப் போகிறீர்களா?’, ‘உயிரினும் மேலானது தாய்நாடு’, ‘சிங்கள வெறியனின் கைகளில் சிக்கிச் சாவதைவிட அதற்கெதிராகப் போரிட்டுச் சாவது மேல்’, ‘எங்கள் குலத்தமிழ்ப் பெண்களே உங்கள் கற்பு சிங்கள வெறியனுக்கென்ன பரிசா?’ என்று சனங்களின் மனதில் கலவரத்தையும் அச்சத்தையும் ஊட்டினார்கள்.

படைத் தரப்பின் தாக்குதல்களும் சனங்களை அச்சமடையவே வைத்தன. இதனால் கடந்த காலங்களில் சிங்கள இராணுவத்தின் தாக்குதல்களால் மிகவும் கசப்பான அனுபவத்தைப் பெற்றிருந்த சனங்கள் இன்னும் இன்னும் அச்சமடையத் தொடங்கினார்கள். இது ஒருவகையில் புலிகளுக்குச் சாதக நிலையைத் தோற்றுவித்தது. மன்னாரிலிருந்து சிறிலங்கா படையினர் தமது நடவடிக்கையை ஆரம்பித்து ஒன்றரை வருடமாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஏறக்குறைய இரண்டரை லட்சம் மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இந்தக் காலத்தில் மிக மூர்க்கமாக விமானத்தாக்குதல்கள் நடந்தன. இதன்போது பல நூற்றுக்கணக்கான சனங்கள் கொல்லப்பட்டிருந்தனர். செஞ்சோலைப் படுகொலை, தமிழ்ச்செல்வன் கொலை என்பவை பலருக்கும் நினைவுக்கு வரலாம். கிளிநொச்சியில் நடந்த பிறிதொரு தாக்குதலில் 26.11.2007 அன்று பிரபாகரன் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார்.

படைத்தரப்பின் தாக்குதல் வலயத்திற்கு அப்பால் மக்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். அப்படி ஓடிப் பாதுகாப்புத் தேடிக்கொள்வ தற்கான இடம் சனங்களுக்கிருந்தது. ஆனால், இப்படி ஓடிக்கொண்டிருந்தபோது அவர்களுக்கான உழைப்பு, வருமானம், இருப்பிடம், பொருட்கள் என்பன இல்லாத நிலை உருவாகியது. பொருட்களைக் கொழும்பில் இருந்து வன்னிக்குள் எடுத்துவருவதற்கான தடையும், கட்டுப்பாடுகளும் உணவுப்பொருட்களைப் பெறுவதற்கே பெரும் நெருக்கடியை உருவாக்கியது. பஞ்சம் பட்டினியும் தலைவிரித்தாடின. ‘வன்னி’ இலங்கையின் நெற்களஞ்சியம் என்று வர்ணிக்கப்படுவதுண்டு.

சனங்கள் தங்களின் சேமிப்பிலும் சேகரிப்பிலுமிருந்த பொருட்களையே எடுத்துச்செல்ல முடியாத நிலையில் படை நடவடிக்கைகள் தீவிரமடைந்ததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் கட்டாய ஆட்சேர்ப்பைத் தவிர்க்கும்படியும், போருத்திகளை மாற்றி அமைக்குமாறும், அமைதிப் பேச்சுக்குத் திரும்பும்படியும் இந்தியாவோடு இணக்கத்துக்குப் போகுமாறும் சிலர் புலிகளை வலியுறுத்தினர். ஆனால் புலிகளின் தலைமையோ பிடிவாதமாக மரபுவழி இராணுவ நடவடிக்கையிலேயே குறியாக இருந்தது. வேறு எவருடைய எந்தவிதமான அபிப்பிராயங்களையும் அது பொருட்படுத்தத் தயாராக இருக்கவில்லை.

சனங்கள் படுகின்ற அவலத்தையோ அவர்களின் துயரத்தையோ புலிகள் பொருட்படுத்தவில்லை. சிங்களத் தரப்பை மிகக் கொடூரமான வரலாற்று எதிரி என்று வர்ணித்து அதற்குத் தக்க பாடம் படிப்பிக்க வேண்டும் என்று தமது நடவடிக்கையை மேற்கொண்டனர். கிளிநொச்சியைப் படைத்தரப்பு கைப்பற்றும் வரையில் புலிகள் ஏதாவது உத்திகளைக் கையாண்டு படைத் தரப்பைச் சிதைத்து வெல்வார்கள் என்ற நம்பிக்கை சனங்களுக்கிருந்தது உண்மையே. அந்த நம்பிக்கையோடு தான் அவர்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். தமது ஆட்சி, அதிகாரம் அரசுக் கட்டுமானம் என்ற கனவு குலைந்துபோகும் எனப் புலிகள் அஞ்சினார்கள். அதனாலேயே அவர்கள் மரபுவழியான நடவடிக்கையைத் தொடர்ந்தனர்.

கிளிநொச்சியைக் கைப்பற்றிய படையினர் ஆனையிறவினூடாக யாழ்ப்பாணத்துடன் இணைந்தனர். இந்த இணைவோடு யாழ்ப்பாணத்திற்குள் முடக்கப்பட்டிருந்த 40 ஆயிரம் இராணுவத்தினரும் படை நடவடிக்கையில் ஈடுபடும் நிலை உருவானது. உடனேயே தொடர்நடவடிக்கையைப் படைத்தரப்பு மேற்கொண்டு புலிகளை மேலும் விரட்டத் தொடங்கியது. ஜனவரி 15ஆம் திகதிக்குப் பின்னரான நிலைமைகள் இதனுடன்தான் ஆரம்பிக்கின்றன. உலகைக் குலுக்கும் நிலைமைகள் 2009 ஜனவரி 15க்குப் பின்னரான நடவடிக்கை வன்னி கிழக்கை நோக்கியது. ஏற்கனவே மணலாற்றில் இருந்து முல்லைத்தீவுப் பட்டிணம் வரையான பகுதியைப் படைத்தரப்புக் கைப்பற்றியிருந்தது. இதற்குள் புலிகளின் முக்கியமான தளபதிகள் பலரும் கொல்லப்பட்டிருந்தனர். அடுத்தது புலிகளின் உறுப்பினர்களிடமும் சனங்களிடமும் பெருமதிப்பைப் பெற்றிருந்த தாக்குதல் தளபதி பிரிகேடியர் பால்ராஜின் மரணம். (இவர் மாரடைப்பால் உயிரிழந்திருந்தார்.) இவை புலிகளைக் கடுமையாகப் பாதித்திருந்தன.

(தொடரும்…..)