மே 18 (பகுதி 8)

(அருண் நடேசன்)

இதேவேளை படைத்தரப்பின் தாக்குதல்கள் மேலும் மேலும் மோசமடைந்தன. தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பல நூற்றுக் கணக்கிலானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மருத்துவ சிகிச்சைக்காக வெளியே கப்பல் மூலம் எடுக்கும் நடவடிக்கையைச் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் ஆரம்பித்தது. இதற்கு முன்னர் புதுக்குடியிருப்பு மருத்துவமனை அங்கே இயங்கியபோது சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் பாதுகாப்பு உத்தரவாதத்துடன் அங்கே நிலைகொண்டிருந்தது. சிறிலங்கா அரசும் விடுதலைப்புலிகளும் ஏற்றுக்கொண்ட விதிகளின் பிரகாரம் செஞ்சிலுவைச் சங்கக் குழு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
ஆனால், ஒரு கட்டத்தில் மருத்துவமனைப் பகுதியை அண்மித்து நின்று விடுதலைப்புலிகள் கனரக ஆயுதம் மூலமாகப் படையினர் மீதும் விமானப் படையின் மீதும் தாக்குதல்களைத் தொடுத்தனர்.

இதை சிறிலங்கா அரசின் வேவு விமானம் (இது அமெரிக்கத் தயாரிப்பு, ஆளில்லா வேவு விமானம். அமெரிக்கா இந்த விமானத்தை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தது) வட்டமிட்டு நோட்டமிட்டது. (இந்த விமானம் எப்போதும் வானத்தில் பறந்து கொண்டேயிருக்கும். இந்த வேவுக் கண்ணை வைத்தே சிறிலங்கா அரசு போரில் பெரும் வெற்றியைப் பெற்றது.) வேவு விமானத்தின் தரவுகளின் படி புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் மீது படைத்தரப்பு தாக்குதல் நடத்தி அதைத் தரைமட்டமாக்கியது. பின்னர் புதுமாத்தளன் பகுதி கடற்கரையிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சையும் மேலதிக மருத்துவத்துக்காகக் கப்பல் மூலம் திருகோண மலைக்கும் காயமடைந்தவர்களும் நோயாளிகளும் எடுத்துச் செல்லப்பட்டனர். ஒவ்வொரு கப்பலிலும் 400க்கு மேற்பட்டவர்கள் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டனர். கை கால் இழந்தவர்கள், கண் பறிபோனவர்கள் உறவுகளை இழந்தவர்கள் என்றே இவர்கள் இருந்தனர்.

தினமும் தெருவிலும், ஆஸ்பத்திரியிலும், தார்ப்பாலின் கூடாரங்களின் மத்தியிலும் சாவடைந்த பிணங்கள் தொகை தொகையாகக் கிடந்தன. மரணம் எல்லோருடனும் குதித்து விளையாடியது. தாம் உயிர் பிழைப்போம் என்று அந்த நாட்களில் எவரும் நம்பியிருக்கவில்லை. சாவு அந்தக் கணம்வரைத் தங்களை நெருங்கவில்லை என்பது மட்டுமே உண்மை. மற்றபடி கொலை வலயத்தினுள்ளேதான் எல்லோரும் இருந்தனர்.

ஒரு சிறு அமைதியோ இடைவெளியோ வராதா; இந்தியாவோ தமிழகமோ ஐ.நாவோ பிற சர்வதேசச் சமூகமோ சிறியதொரு அமைதிச் சூழலை உருவாக்கித் தரமாட்டாதா என்ற ஏக்கம் எல்லோர் மனதிலுமிருந்தது. இதேவேளை புலிகளின் கடுமையான கண்காணிப்பையும் மீறிப் பொதுமக்கள் எப்படியோ வன்னியைவிட்டு வெளியேறிக்கொண்டேயிருந்தனர். ஆனால் அந்தத் தொகை பெரியதல்ல. புதிய புதிய காட்டுவழிகள், கடல்வழிகள், சதுப்பு நிலப்பாதைகளினூடாக மிக உச்சமான அபாயங்களின் மத்தியில் சனங்கள் ஓடி ஒளிந்துகொண்டிருந்தனர்.

வன்னியிலிருந்தால் மரணத்தைத் தவிர வேறு மார்க்கமே இல்லை என்ற நிலை. ஆனால் வன்னியை விட்டு எளிதில் வெளியேற முடியாது. அப்படிச் சுழித்துக்கொண்டு வெளியேறும்போது புலிகளின் கண்களில் சிக்கினால் அவ்வளவுதான். நெற்றிப்பொட்டுச் சிதறும். சுட்டுக் கொன்றுவிடுவார்கள் கொல்லப்படுவோர் தவிர இளவயதுடைய பெண்களையும் ஆண்களையும் பிடித்துச் செல்வார்கள். இளவயதினர் போருக்காகப் பிடித்துச் செல்லப்படுவர். இதைவிடப் பெரும் எண்ணிக்கையில் மக்கள் ஏதாவது வழியில் செல்லத் தொடங்கினால் கண்டமேனிக்குத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிவிடுவார்கள். இப்படிக் கொல்லப்பட்டவர்களும் காயப்படுத்தப்பட்டவர்களும் அதிகம்.

என்றாலும் சனங்கள் தப்பியோடுவதை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. சில சந்தர்ப்பங்களில் புலிகள் சுடச்சுடப் பலர் தப்பியோடி இராணுவத்தினரிடம் சரணடந்தார்கள். சிலர் தப்பியோடும்போது அவர்களுடைய குடும்பத்தில் ஏனைய உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். சிலர் கைதுசெய்யப்பட்டனர். சிலர் காயமடைந்தனர். புலிகள் தடுக்கத் தடுக்கப் பொதுமக்கள்மீதான இராணுவத்தின் தாக்குதல்களும் அதிகரித்தன. மருந்துத் தடை, உணவுப்பொருட் தடை என்பனவும் தீவிரமடைந்தன. சனங்களின் கையில் பணமில்லை, உற்பத்திகளில்லை வருமானமில்லை, சேமிப்பில்லை. வங்கிகள், பாட சாலைகள் எதுவுமில்லை. தூங்குவதற்கோ சமைப்பதற்கோ குளிப்பதற்கோ அவகாசமில்லாமல் எரிகணைகள் வீழ்ந்து வெடித்தன. சனங்களை இலக்குவைத்து இரண்டு தரப்புகளும் தாக்குதல்களை நடத்தின.

(தொடரும்…..)