(அருண் நடேசன்)
புலிகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்குக் கொல்லப்படும் சனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் என்பதே இலக்கு. அப்படி என்றால்தான் இந்தப் படுகொலைகளை முன்னிட்டு ஐ.நாவோ இந்தியாவோ சர்வதேசச் சமூகமோ தலையிடக்கூடிய வாய்ப்பு உண்டாகும் என்று அவர்கள் நம்பினார்கள். அதை அவர்கள் முழுதாகவே எதிர்பார்த்தார்கள். எனவே கொலைப்பட்டியலை நீட்டிக் காட்டுவதற்கேற்ற முறையில் இராணுவத்தைச் சீண்டும் விதமாகக் கோப மூட்டும் வகையில் தமது தாக்குதல்களைத் தொடுத்தனர். படைத்தரப்புக்குத் தப்பியோடித் தங்களிடம் வரும் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்ட வேண்டிய அவசியம். சனங்களைப் புலிகளிடமிருந்து பிரித்துவிட்டால் புலிகளால் ஒரு நாளைக்குக்கூடத் தாக்குப்பிடிக்க முடியாது என்று அவர்கள் சரியாக மதிப்பிட்டிருந்தனர். எனவே சனங்களை மையமாக வைத்து, சனங்களின் உயிரைப் பணயமாக வைத்து இரண்டு தரப்பும் தமது தாக்குதல்களைத் தொடுத்தன.
ஒரு கட்டத்தில் இதுதான் உண்மை நிலைமை என்று சர்வதேச அமைப்புகளும் சர்வதேச ஊடகங்களும் கண்டுபிடித்திருந்தன. படைத்தரப்பு முன்னேற முன்னேற நிலைமை மோசமடையவே தொடங்கியது. இப்போது பங்கர்களும் பாதுகாப்பாற்றவையாகின. வெளியே நடமாட முடியாத அளவுக்கு ஓய்வில்லாத தாக்குதல். பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிக்குள்ளேயே தாக்குதல்கள். புலிகளும் இந்தப் பகுதிக்குள் இருந்தே தாக்குதல்களைத் தொடுத்தனர். எதிரியைச் சினமடைய வைக்கும் வகையிலான தாக்குதல்கள். புலிகளின் இந்த மாதிரியான பொறுப்பற்ற நடவடிக்கைகளைச் சனங்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.
ஏனெனில் தாக்குதல் எந்தப் பகுதியிலிருந்து வருகின்றதோ அந்தப் பகுதியை நோக்கி பதிலடியைப் படையினர் கொடுப்பார்கள். இதன்போது கொல்லப்படுவது சனங்களே.
முன்னரே குறிப்பிட்டுள்ளதைப் போலச் சனங்களின் சாவுப் பட்டியலில்தான் தமது எதிர்கால அரசியல் நலன் தங்கியிருக்கிறது எனப் புலிகள் நம்பினார்கள். இதற்கு ஏற்றமாதிரி அவர்கள் தம் வசமிருந்த இணைய தளங்களையும் செய்மதிற் தொலைபேசிகளையும் பயன்படுத்தினார்கள். அக்காலப் பகுதியில் வன்னியின் குரலாக வெளிப்பட்ட மருத்துவர்களின் வாக்கு மூலங்களில் பாதி உண்மைகள் மட்டுமே வெளிவந்தன. அதற்காக மற்றதெல்லாம் பொய் என்று பொருளல்ல. அவர்கள் மீதி உண்மையைச் சொல்லவில்லை. புலிகள் தரப்பு நடவடிக்கையைப் பற்றிப் பேசவில்லை. வெளி ஊடகங்கள் எதுவும் இல்லாத சூழலில் தாம் சொல்வதே வேத வாக்கு எனப் புலிகள் நிரூபிக்க முயன்றனர்.
புலிகளின் மரபின்படி எப்போதும் பிற தரப்பினரைக் குற்றம் சாட்டும் இயல்போடு தம்மைப் பற்றிய மீள் பரிசீலனை, சுய விசாரணை எதுவுமில்லாமல் அவர்கள் இயங்கினார்கள். இந்தக் குணாம்சத்துடனேயே அவர்களின் மீடியாக்களும் இயங்கின. புலிகள் களத்திலிருந்து கொடுக்கும் தகவல்களை எந்தவிதமான மறுவிசாரணைகளும் இல்லாமல் சுய சிந்தையே அற்றுப் புலம்பெயர் தேசங்களில் உள்ள – அவர்களின் ஏஜென்ஸிகளாக இயங்கும் – ஊடகங்கள் பரப்புரை செய்தன. இதுதான் அடுத்த பெரிய தவறாக அமைந்தது. முழுவதும் புனைவாகவே தமது கதையை அவர்கள் வளர்த்தனர்.
வன்னியில் என்ன நடக்கிறது? மக்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களின் உணர்வு நிலை என்ன? அவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? போராளிகளின் மனநிலை என்ன? படைத்தரப்பு எப்படி நகர்கிறது? கள யதார்த்தம் என்ன? இவை எதைப் பற்றியும் வெளிப்படையான எந்த ஆய்வுக்கும் செய்திக்கும் புலிகள் இடமளிக்கவில்லை. பதிலாகப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் முற்றிலும் பொய்களையே சொல்லி வந்தார். மீள முடியாத தோல்வியை நோக்கி முழுதாக இருத்தப்பட்ட பின்னரும் அவர் வெற்றி குறித்த பிரமைகளிலும் எந்த முகாந்திரமுமில்லாத புனைவுகளிலுமே ஈடுபட்டார்.
இரண்டு தரப்பினரும் சனங்களைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு மக்களைக் கொன்று குவித்தனர். அப்போது இந்த நிலைமைகள் தொடர்பாகச் சில கிறிஸ்தவமதக் குருமார்கள் சொன்னார்கள்: “உண்மையில் இரண்டு தரப்பினருமே போர்க் குற்றவாளிகள்தான். அதிலும் போராட்டம், விடுதலை என்று வந்த சக்தியான புலிகள் இப்படி மனிதகுல விரோதச் செயலுக்குப் போனதை வரலாறு மன்னிக்காது. பிரபாகரனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையையே இப்போது புலிகள் செய்கின்றனர். தனியொரு மனிதனுக்காக இத்தனை உயிரிழப்புகளா? இவ்வளவு கொடுமைகளா? இதைவிடக் கேவலமானது, ஜனநாயக அரசு என்று சொல்லிக்கொண்டு மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் இப்படிச் சனங்களை இலக்கு வைத்தே தாக்குவதை எப்படி அனுமதிப்பது”. இது பற்றி இரண்டு தரப்பினரிடமும் தமது ஆட்சேபனைகளை அவர்கள் தெரிவித்துமிருந்தனர். ஆனால் இரண்டு தரப்புமே அவர்களின் குரலைப் பொருட்படுத்தவில்லை. வெறிகொண்ட இரண்டு மதயானைகளைப் போலத் தொடர்ந்து மோதிக் கொண்டேயிருந்தனர் அவர்கள்.
(தொடரும்…..)