அவ்வாறு கடந்த தேர்தலில் கொடிகட்டிப் பறந்த கட்சியான மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவித்தல் தொடர்பில் பல சுற்று பேச்சு வார்த்தைகளின் பின்னர், நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த பிரபல வர்த்தகரான தம்மிக பெரேராவின் பெயர் மற்றப்பட்டு, நாமல் ராஜபக்சவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
கள நிலைவரம் என்று ஒன்று உள்ளது. மக்கள் மத்தியில் காணப்படும் பிரச்சனைகளுக்கு இந்த மொட்டுக் கட்சியினால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பெருமளவு தாக்கம் செலுத்தியுள்ளன. ஒரு கட்டத்தில் பொறுத்துக் கொள்ள முடியாத மக்கள் வீதியில் இறங்கி, மொட்டுக் கட்சியின் சாதனை வீரராக வர்ணிக்கப்பட்ட கோதாபய ராஜபக்சவை விரட்டியடித்த நிலை ஏற்பட்டது.
இவ்வாறு, ராஜபக்சர்களுக்கான செல்வாக்கு தற்போது மக்கள் மத்தியில் பெரிதும் குறைந்துள்ளது என்பது மறுப்பதற்கில்லை. மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் வேட்பாளர்களில் மூன்று பிரதான போட்டியாளர்களின் பெயர்களே அதிகம் அடிபடுகின்றன. அதிலும், தற்போதைய ஜனாதிபதிக்கு மொட்டுக் கட்சியின் பெருமளவான உறுப்பினர்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு கட்சியின் நலனை கருதாமல், நாட்டின் நலன் கருதி அவ்வாறான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர்கள் கூறும் நிலையில், மொட்டுக் கட்சி மாத்திரம், ராஜபக்சர்களை மையப்படுத்தி, கட்சியை மையப்படுத்தி, குடும்பத்தை மையப்படுத்தி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளமை தற்போதைய சூழலில் தமக்குத் தாமே குழிதோண்டிப் புதைக்கும் செயற்பாடாக அமைந்துள்ளது.
குறிப்பாக இந்த மொட்டுக்கட்சியின் வேட்பாளர் அறிவிப்புடன், ராஜபக்சர்கள் தனித்துவிடப்பட்டுள்ளமை தெளிவாகின்றது. கடந்த காலங்களில் ராஜபக்சர்களுடன் ஒரு கூட்டம் இருந்தது. இம்முறை அதில் 90 சதவீதமானவை எதிரணியில் அல்லது மாற்று அணியில் தஞ்சம் புகுந்துள்ளன.
அத்துடன், கடந்த தேர்தல்களைப் போலல்லாமல், இம்முறை தேர்தல் என்பது, மக்கள் தமது வாழ்நாளில் முகங்கொடுத்திராத மோசமான இன்னல்களுக்கு முகங்கொடுத்து, அதன் வடுக்களுடன் வாழ்ந்து வரும் காலப்பகுதியில் நடைபெறவுள்ளது.
இந்த நிலைக்கு காரணமானவர்களுக்கு பொது மக்கள் மத்தியில் எந்தளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பது மற்றைய கேள்வி. அத்துடன், மொட்டுக் கட்சியின் அடையாளம் மஹிந்த ராஜபக்ச என்பதே. யுத்த வீரன் என்பதைக் கொண்டு, மஹிந்த ராஜபக்சவுக்கு பெரும்பாண்மை மக்கள் மத்தியில் ஓரளவு செல்வாக்கு இருந்தாலும், அவரின் மகனுக்கு அந்த செல்வாக்கு உள்ளதா, தகப்பனுக்கு இருப்பதால், மகனுக்கு அது செல்லுமா என்பதும் பாரிய கேள்வியாகவே அமைந்துள்ளது.
ஆக மொட்டு தற்போதைக்கு கருகி வருவதையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அந்த சாமபலிலிருந்து மீண்டும் மலருமா?
(Tamil Mirror)