இந்தப் பிரசன்ன ரணதுங்க, மேல்மாகாண முதலமைச்சராக இருந்தபோது, வணிகர் ஒருவரை மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற குற்றச்சாட்டில், கொழும்பு மேல் நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்டு, ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையும், 25 மில்லியன் ரூபாய் தண்டப்பணமும் தண்டனையாக விதிப்பட்டுள்ள ஒரு குற்றவாளி. குறித்த தீர்ப்புக்கெதிராக மேன்முறையீடு செய்துவிட்டு தனது அரசியல் பயணத்தைத் தடையின்றித் தொடர்கிறார்.
பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராகச் சொல்லப்படும் ஒரே குற்றச்சாட்டு இதுவல்ல. இவ்வருட ஆரம்பத்தில், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையரான அனுஷ்கா ரஞ்சீவி டி சில்வா என்பவர், ஓர் ஊடக சந்திப்பை நடத்தி பிரசன்ன ரணதுங்க, தலவத்துகொடையில் உள்ள அரசுக்கு சொந்தமான காணியை அண்மித்துள்ள இரண்டு காணிகளை பலவந்தமாக சுவீகரிக்க முற்பட்டுள்ளார் என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் தாண்டி பிரசன்ன ரணதுங்க தேர்தல்களில், இலங்கையின் சனத்தொகை அதிகமான மாவட்டங்களில் ஒன்றாக கம்பஹா மாவட்டத்தில், அதிகப்படியாக விருப்பு வாக்குகளைப் பெற்று வெல்கிறார்.
பலமுறை அடிதடி அடாவடிக் குற்றச்சாட்டுக்களில் கைதாகியவர் இன்றைய இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த. இவரும் இவரது தம்பியாரும் செய்து வரும் அடாவடித்தனங்கள் மிகப் பிரபல்யமானவை. இவருக்கும், இவரது தம்பிக்கும் எதிராக சுற்றுச்சூழலை அழித்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கட்டுள்ளன. இன்று (12) நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் இவருக்கெதிராக வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
ஆனால்? இந்த சனத் நிஷாந்த தான் 2015 மற்றும் 2020இல் நடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் புத்தளம் மாவட்டத்திலேயே அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.
பிள்ளையான் என்றறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஜோசப் பரராஜசிங்கம் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் இருந்துகொண்டே கடந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிக விருப்பு வாக்குளைப் பெற்று வெற்றியீட்டியிருந்தார். பின்னர் 2021இல் குறித்த குற்றச்சாட்டிலிருந்து நீதிமன்றத்தால் அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார். ஆயினும் சிவில் சமூகம் பிள்ளையான் மீது கடுமையான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. ஆனால், அப்படியான சூழலிலும், அவர் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியிருக்கிறார்.
எத்தனையோ வழக்குகள், குற்றச்சாட்டுகள் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காடழிப்பு தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் மீண்டும் தனது சொந்தச் செலவில் மரம் நாட்டவேண்டும் என்ற தீர்ப்பும் அளிக்கப்பட்டிருந்தது. இத்தனையையும் தாண்டி கடந்த பொதுத் தேர்தலில் ரிஷாட் பதியுதீன் வன்னி மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
பொதுத் தேர்தலுக்கு முன்பதாக ஜூலை 31, 2020இல் இரத்னபுரி மேல் நீதிமன்றத்தால் கொலைக்குற்றவாளியாகக் காணப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர, 2020 ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில், இரத்னபுரி மாவட்டத்தில் இரண்டாவது அதிகபட்ச விருப்பு வாக்குகளாக 104,237 வாக்குகள் பெற்று வெற்றியீட்டியிருந்தார். ஆயினும் இவர் 2021இல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் மேன்முறையீட்டில் கொலைக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் மக்கள் வாக்களித்தபோது, அவர் கொலைக்குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டவராக இருந்தார்.
டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவில் தேடப்படும் ஒரு குற்றவாளி. டக்ளஸ் தலைமையிலான துணை இராணுவக் குழு மீது படுகொலை, ஆட்கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை பல தரப்பினரும் முன்வைத்து வருகிறார்கள். ஆயினும் கூட, கடந்த பொதுத் தேர்தலில், யாழ். மாவட்டத்தில், தமிழரசுக் கட்சியின் ம.ஆ சுமந்திரன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சீ.வீ விக்னேஸ்வரன் ஆகியோரைவிட அதிக விருப்பு வாக்குளை டக்ளஸ் தேவானந்தா பெற்றிருந்தார்.
மேற் சொன்ன எல்லாவற்றிலும் ஒரு விடயம் துலங்கி நிற்பதை நாம் அவதானிக்கலாம். மேற்சொன்ன அனைவரதும் வரலாறும் நடத்தையும் இயல்பும் என எல்லாவற்றையும் அறிந்தும், அந்த மக்கள் மேற்சொன்னவர்களை தமது பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மேற்சொன்ன எவரும் போட்டியிட்ட முதல் தேர்தல் கடந்த பொதுத் தேர்தல் அல்ல. அதற்கு முன்னர் மக்களை அவர்களை அறியாதவர்களாக இருந்தவர்களும் அல்ல. ஆனால் அம்மக்கள் குறித்த நபர்களை, அவர்கள் பற்றிய விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள், அவர்களது நடத்தைகளைத் தாண்டி, ஏகபோகமாக வாக்களித்து, தமது பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால், அது குறித்தவர்களைத் தேர்தலில் போட்டியிட அனுமதித்த சட்டத்தின் குற்றமா, அவர்களுக்கு தேர்தல் பட்டியலில் இடமளித்த கட்சியின் குற்றமா? யார் குற்றம்?
குறித்த நபர்கள் மீது கடுமையான விமர்சனத்தை, படித்த, தம்மை அறிவு வாய்ந்த சிவில் சமூகமாக முன்னிறுத்தும் கூட்டமொன்று தொடர்ந்தும் முன்வைத்து வருகிறது. குறித்த நபர்கள் தெரிவுசெய்யப்படுவது ஜனநாயக விரோதமானது என்றுகூட சிலர் கருத்துரைக்கிறார்கள். குறித்த நபர்களுக்கு அமைச்சுப் பதவிகள் தரப்படக்கூடாது என்றுகூட சிலர் வாதிடுகிறார்கள்.
ஆனால், இந்த ‘சிவில் சமூகம்’ என்றும், தாம் ‘மக்களின் குரல்’ என்று தம்மை முன்னிறுத்தும் இவர்கள் மறந்துவிடுகிற ஒரு விடயம், இதே மக்கள்தான் மேற்சொன்னவர்களுக்கு விருப்பு வாக்களித்து மேற்சொன்னவர்களை தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். மேற்சொன்னவர்கள் படித்த, தம்மை அறிவுவாய்ந்த சிவில் சமூக முன்னிறுத்தும் கூட்டத்தின் பிரதிநிதியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மாவட்ட மக்கள், அவர்களை தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதுதான் நாம் ஏற்க விரும்பாவிட்டாலும் முகத்திலறையும் உண்மையாக இருக்கிறது.
இவர்கள் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்று கர்ஜிப்பதை விட, குறித்த மக்கள் இவர்களுக்கு ஏன் வாக்களிக்கிறார்கள் என்று ஆராய்ந்தால், சிலவேளைகளில் இதுபற்றிய மேலதிகப் புரிதல் ஏற்படும்.
ஆனால், இது முறையான வழியில் செய்யப்பட வேண்டியதொரு ஆராய்ச்சியாகும். இங்கு ‘சிவில் சமூகமாக’ தம்மை முன்னிறுத்துகிறவர்களுக்கும், உண்மையான மக்களுக்கும் இடையில் கணிசமான இடைவெளி காணப்படுவது பல சந்தர்ப்பங்களில் உணரப்படுகிற ஒன்று.
இது, ‘சிவில் சமூகமாக’ தம்மை முன்னிறுத்துவோர் உண்மையின் மக்களின் குரலாக இருக்கிறார்களா என்ற கேள்வியை நிச்சயமாக எழுப்பவே செய்கிறது.
பிரதிநிதித்துவ ஜனநாயகக் கட்டமைப்பு ஒன்றில், மாற்றம் என்ற ஒன்று வரவேண்டுமானால், அது கட்சிகளில், அரசியல்வாதிகளில் இருந்து வருவது என்பது சாத்தியக்குறைவானது. மாற்றம் என்பது மக்களிலிருந்து வரவேண்டும்.
அதேவேளை, தன்னைத்தானே ‘சிவில் சமூகமாக” முன்னிறுத்தும் கூட்டமொன்று விரும்புகிறவர்கள்தான் பொருத்தமானவர்கள், ஏனையோர் பொருத்தமற்றவர்கள் என்ற சிந்தனையும் ஒருவகையில் பார்த்தால் ஜனநாயக முரணானதுதான். அது, ‘உயர் குழாம் ஆட்சியின்’ பாற்பட்ட சிந்தனையே அன்றி, பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்கு விரோதமானது.
மறுபுறத்தில், குற்றவாளிகள், ஊழல் பேர்வழிகள் ஒரு குறிப்பிட்ட மக்கள் குழு மீது சலுகை, இன, மத, அல்லது சாதி அடையாளம், தமக்கான நன்மைகள், அல்லது பயம் போன்றவற்றின் காரணத்தால் பெற்றுக்கொண்டுள்ள செல்வாக்கால் வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவது ஜனநாயகமா என்ற கேள்வியிலும் நியாயம் இல்லாமல் இல்லை.
ஜனநாயகம் என்பது முழுத்திருப்திகரமானதோர் ஆட்சிமுறையல்ல; மாறாக, அது உள்ளவற்றில் சிறந்தது என்பதுதான் உண்மை.
குற்றவாளிகள், ஊழல்வாதிகள், நேர்மையற்றவர்கள் அரசியலுக்கு வரக்கூடாதென்றால், அதனைச் செய்வதற்கான பலம் மக்களிடம்தான் இருக்கிறது.
மக்கள் நினைத்தால், ஒரே தேர்தலில் அதனைச் செய்துவிடலாம். மக்கள் அதனைச் செய்யாவிட்டால், அதுதான் மக்கள் விருப்பம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.