மோடி செய்த இருபதாயிரம் கோடி எரிவாயு ஊழல்

(அ.மார்க்ஸ்)

நரேந்திர மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்த காலத்தில் நடைபெற்ற 19,716 கோடி ரூபாய் அளவிலான ஊழல் ஒன்றை CAG யின் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சென்ற மார்ச் 31 அன்று இந்த அறிக்கை குஜராத் சட்டமன்றத்தில் வைக்கப்பட்டபோதும் இது உரிய அளவில் கவனம் பெறவில்லை. திங்கள் கிழமை ஆங்கில இந்து நாளிதழில் இது குறித்த ஒரு விரிவான கட்டுரையை காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ் எழுதியுள்ளார்.

‘குஜராத் அரசு பெட்ரோலியம் கார்பொரேஷன்’ (GSPC) என்பது குஜராத் மாநில அரசுக்குச் சொந்தமான ஒரு பொதுத்துறை நிறுவனம். எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கென இப்படி மாநில அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம் குஜராத்தில் மட்டுமே உண்டு.

சென்ற 2005 ஜூன் 26 அன்று அன்றைய குஜராத் முதல்வர் மோடி ஒரு அதிரடியான அறிவிப்பைச் செய்தார். இந்தியாவின் மிகப் பெரிய எரிவாயுச் சேமம் ‘கிருஷ்ணா கோதாவரி பேசினில்’ இருப்பதைத் தமது பெட்ரோலியம் கார்பொரேஷன் கண்டுபிடித்துள்ளதாகச் சொன்னார். சுமார் 2,20,000 கோடி ரூபாய் பெறுமானம் உள்ள 20 ட்ரில்லியன் கன அடி அளவு எரிவாயு அங்கிருப்பதாக அந்த நிறுவனம் கணக்கிட்டுள்ளதாகவும் கூறினார். இது இத்துறை வல்லுனர்கள் உட்பட எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது

டிசம்பர் 2007இல் எரிவாயு உற்பத்தியைத் தமது நிறுவனம் தொடங்கிவிடும் எனவும் அவர் வாக்குறுதி அளித்தார். இனி நமது நாடு எண்ணெய் – எரிவாயு ஆற்றலில் யாரையும் நம்பியிருக்கத் தேவையில்லை என்றும் அவர் அசத்தினார்.

அவர் இதைச் சொல்லி இப்போது 11 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் இன்று வரை அவரது பெட்ரோலிய கார்பொரேஷன் ஒரு துளி எரிவாயுவையும்கூடத் தோண்டி எடுக்கவில்லை. ஏனெனில் அங்கு அப்படி அவர் சொன்ன மாதிரி எரிவாயுவே இல்லை. ஆனால் இந்த இல்லாத எரிவாயுவைத் தோண்டி எடுக்க இதுவரை குஜராத் பெட்ரோலிய கார்பொரேஷன் செய்துள்ள செலவு 19,716 கோடி ரூபாய்.

இங்கொன்றைச் சொல்வது முக்கியம். எண்ணெய், எரிவாயு முதலான இயற்கை வளங்களைப் பொறுத்தமட்டில், ஓரிடத்தில் அது கிடைக்கும் என்பதற்கான தடயங்களைக் கொண்டு தோண்டத் தொடங்கினால் நிச்சயமாக நாம் எதிர்பார்த்ததுபோல அங்கு அவை கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. எதிர்பார்த்தது நடக்காமல் போவதும் உண்டு. ஆனால் அப்படியாகும் பட்சத்தில் அத்திட்டத்தை ஒன்று நிறுத்திக்கொள்ள வேண்டும், அல்லது திட்டச் செலவை கிடைக்கக் கூடிய எண்ணெய் அல்லது எரிவாயுவின் அளவுக்குத்தக்க சுருக்கிக்கொள்ள வேண்டும்.

ஆனால் மோடி செய்தது என்ன?

அவர் இப்படியான கண்டுபிடிப்பு குறித்து அதிரடி அறிவிப்பைச் செய்தது ஜூன் 2005இல். எரிவாயு உற்பத்தி தொடங்கும் என அவர் சுட்டிக்காட்டிய இலக்கு 2007 டிசம்பர். ஆனால் 2009 வரை என்ன நடந்து கொண்டிருக்கிறது என யாருக்கும் தெரியாது. வாயுவும் வரவில்லை, ஏப்பமும் வரவில்லை. ஜூன் 2009 இல் ஒரே ஒரு அறிக்கைதான் வெளிவந்தது. அது ‘கள வளர்ச்சித் திட்ட அறிக்கை’. ஆனால் இந்த நான்காண்டுகளில் ஒரு துளி வாயு உற்பத்தி ஆகாவிட்டாலும் குஜராத் அரசின் பெட்ரோலிய நிறுவனம் இதற்குள் 4800 கோடி ரூபாய் இதற்கென கடன் வாங்கி இருந்தது. அத்தனையும் நமது பொதுத்துறை வங்கிகளிடமிருந்தும் இதர சில நிதி நிறுவனங்களிடமிருந்தும் பெறப்பட்டது.
இந்தக் கள ஆய்வு அறிக்கை உண்மையை ஒத்துக் கொண்டது. மோடி கதையளந்த அளவிற்கு அங்கு எரிவாயு இல்லை எனச் சொல்லி திட்டமிட்ட உற்பத்தியை 90 சதம், ஆம் 90 சதம் குறைத்துக் கொள்வதாக அறிவித்தது. அதாவது திட்டமிட்டதில் 10 சதம்தான் உற்பத்தி செய்ய இயலும். அது மட்டுமல்ல; அறிக்கை சொன்ன இன்னொரு செய்தி இன்னும் அதிர்ச்சியானது. உற்பத்தி செய்யப்படும் இந்த 10 சத வாயுவையும் $5.7MMBtu என்கிற விலைக்கு விற்றால்தான் கட்டுப்படியாகும் என்பதுதான் அது. ஆனால் சந்தையில் அப்போதைய விலை $4.2MMBtu தான். ஆக இந்தத் திட்டம் முற்றிலும் கட்டுப்படியாகாத ஒன்று என்பதைத் திட்ட அறிக்கை உறுதி செய்தது

இப்போது மோடி அரசு என்ன செய்திருக்க வேண்டும்?
திட்டம் கட்டுப்படியாகாத ஒன்று எனச் சொல்லி நிறுத்தியிருக்க வேண்டும்.
ஆனால் என்ன நடந்தது?

பணி தொடர்ந்தது. ‘ட்ஃப் ட்ரில்லிங்’ எனும் நிறுவனத்திடம் எரிவாயுவைத் தோண்டி எடுப்பதற்கான மேடை அமைக்கும் பணி அளிக்கப்பட்டது இத்தகைய பணியில் எத்தகைய முன் அனுபவமும் இல்லாத நிறுவனம் அது. மோடி தன் மெகா திட்டத்தை அறிவித்து இராண்டாண்டுகளுக்குப் பின் 2007ல் தான் அந்த நிறுவனமே தொடங்கப்பட்டது. மார்ச் 2015க்குள் இந்த நிறுவனத்திற்காகவும் அதை ஒட்டிய பிறவற்றிற்காகவும் 5000 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
ஆக மொத்தம் 19,716 கோடி ரூபாய்கள் இதுவரை மோடியின் இந்த இல்லாத எரிவாயுவைத் தோண்டும் திட்டத்திற்கெனச் செலவிடப்பட்டுள்ளது. எரிவாயு அங்கு இல்லை என்பது ஒரு பக்கம். அப்படியே இருந்திருந்தாலும் அது கட்டுப்படியாகாத முட்டாள்தனமான முயற்சி என்பது இன்னொரு பக்கம்.

‘குஜராத் மாநில பெட்ரோலியம் கார்பொரேஷன்’ 1979 ல் தொடங்கப்பட்டது. மார்ச் 31, 2007 வரை அது எந்தக் கடனையும் பெறவில்லை. ஆனால் 2008 லிருந்து 2015 க்குள் 19,716 கோடி ரூபாயை 13 பொதுத்துறை வங்கிகளிடமிருந்து கடனாகப் பெற்றுள்ளது.
மார்ச் 2011 இல் 7126.67 கோடியாக இருந்த கடன் மார்ச் 2015 ல் 19,716 கோடியாக உயர்ந்துள்ளது. நான்கு ஆண்டுகளில் 177 சதம் கடன் அதிகரித்துள்ளதையும் அதனால் அதன் வட்டிச் சுமை 2011-12 ம் ஆண்டில் 981.71 ஆக இருந்தது; 2014 -15ம் ஆண்டில் 1804.06 கோடியாக உயர்ந்து மாநில அரசின் பெட்ரோலிய நிறுவனத்திற்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் தணிக்கை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

இப்படிக் கடனாகப் பெற்ற இந்தப் பணம் அனைத்தும் ஐயத்திற்கிடமான பல ஒப்பந்த நிறுவனங்களுக்குச் செலவிடப்பட்டுள்ளது என்கிறார் ஜெயராம் ரமேஷ். குஜராத் மாநில பெட்ரோலியம் கார்பொரேஷனின் தொழில்நுட்ப ‘பார்ட்னர்’ பார்படோசில் உள்ல ‘ஜியோ குளோபல்’ எனும் நிறுவனம். இது பின்னர் மொரிஷியசில் உள்ள ‘ராய் குரூப்’பையும் கூட்டாகச் சேர்த்துக் கொண்டது. இந்தக் கூட்டு ஒப்பந்தங்கள் எல்லாமே ஐயத்திற்கு இடமானவையாகவே உள்ளன. இந்த நிறுவனங்களுக்கெல்லாம் இந்தத் துறையில் எத்தகைய முன் அனுபவங்கள் உள்ளன என்பதெல்லாம் புலனாய்வு செய்யப்பட வேண்டியவையாக உள்ளன. CAG அறிக்கைகள் தொடர்ந்து இந்த எரிவாயுத் திட்டச் செலவுகள் குறித்துக் கேள்விகளை எழுப்பி வந்துள்ளன. கூட்டு நிறுவனங்கள் தர வேண்டிய ரூ 2,329.52 கோடியை வசூலிக்காததற்காகவும் பெட்ரோலியம் கார்பொரேஷனை தணிக்கை அறிக்கை கண்டித்துள்ளது.

நான் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் இந்திரா காந்தி வங்கிகளை நாட்டுடமை ஆக்கினார். மிகப் பெரிய புரட்சி நடந்ததாகவும், இனி இந்த வங்கிகள் மூலம் எளிய மக்கள் பயனடையப் போகிறார்கள் எனவும் நம்பினோம். ஆனால் இன்று நாட்டுடமை ஆக்கப்பட்ட வங்கிகளினால் பயனடைபவர்கள் மல்லையாக்களாகவும் அரசுக்கு வேண்டிய இத்தகைய கார்பொரேட்களாகவும்தான் உள்ளனர். பொதுத்துறை வங்கிகளுக்கு இதனால் ஏற்படும் இழப்புகள் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் மூலம் சரி செய்யப்படுமானால் அதன் பொருள் என்ன? நமது பணம், மக்களின் பணம் இப்படியான ஊழல்களில் வீணடிக்கப்படுகின்றது. இதன் மூலம் பயனடைவது ஊழல் கார்பொரேட்களும் நரேந்திர மோடி போன்ற அரசியல்வாதிகளும்தான்.