(எம். காசிநாதன்)
‘குட்டித் தேர்தல்’ போல், ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு கட்டங்களாக, டிசெம்பர் மாதம் வரை நடைபெறும் இந்தத் தேர்தல்களில், 669 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். மத்திய பிரதேசம், இராஜஸ்தான், தெலுங்கானா, சட்டிஷ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடக்கும் தேர்தல்கள், பாரதிய ஜனதாக் கட்சிக்கும், (பா.ஜ.க) காங்கிரஸ் கட்சிக்கும், ஏழாம் பொருத்தமான போட்டியை உருவாக்கியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் களத்தில் பரபரப்பான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
மத்திய பிரதேசத்தில் பா.ஜ.கவின் சார்பில், சிவ்ராஜ் சிங் சவுகான் நான்காவது முறையாகப் பதவிக்கு போட்டியிடுகிறார். தொடர்ந்து, மூன்று முறையாக முதலமைச்சராக இருக்கிறார். ‘வியாபம் ஊழல்’ வழக்கு, போன்ற புகார்கள் எழுந்த நிலையில் கூட, அவர் பா.ஜ.கவின் செல்வாக்கை, மத்திய பிரதேசத்தில் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
ஆனால், காங்கிரஸ் கட்சி, முன்னாள் மத்திய அமைச்சர் கமல்நாத், ஜோதியார்த்திய சிந்தியா ஆகிய தலைவர்களைக் களமிறக்கி, பா.ஜ.கவுக்கு எதிராகக் கடும் போட்டியைக் கொடுக்கிறது.
மூன்று முறை ஆட்சியிலிருந்த பா.ஜ.கவுக்கு எதிரான பிரசாரத்தைக் கடுமையாகத் தொடங்கியுள்ள ராகுல் காந்தி, ‘ரபேல் போர் விமான’ விவகாரத்தை முன்வைத்து, பிரசாரத்தில் நிற்கிறார். சவுகான் பற்றிப் பேசுவதை விட, பிரதமர் மோடி பற்றி, ராகுல் பேசுவது எந்த அளவுக்குக் கை கொடுக்கப் போகிறது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
தேர்தல் கணிப்புகள், காங்கிரஸுக்கு ஆதரவாக இருப்பதாக வெளிவந்தாலும், பா.ஜ.க தலைவர் அமித்ஷாவும் பிரதமர் மோடியும் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். 230 சட்டமன்றத் தொகுதிகளில் 116 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே, ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில், பா.ஜ.க போராடிக் கொண்டிருக்கிறது என்பதே, மத்திய பிரதேசத்தின் நிலைமை.
இராஜஸ்தான் மாநிலத்தில், 200 சட்டமன்றத் தொகுதிகளில், 101இல் வெற்றி பெற்றால் மட்டுமே, ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள, பா.ஜ.க முதலமைச்சர் வசுந்திரராஜே சிந்தியா, கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார்.
இரண்டாவது முறையாக, ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்ற அவரது போராட்டம், வெற்றி பெற வாய்ப்பில்லை என்பதுதான் தற்போதைய நிலைமை.
இராஜஸ்தானில் முழுக்க முழுக்க அவர் செல்வாக்கை இழந்து விட்டதால், பா.ஜ.கவின் வெற்றி வாய்ப்பு, கேள்விக்குறியாகி விட்டது. இங்கு பா.ஜ.கவுக்கு ஆட்சி, கைகழுவிப் போய்விடும் என்பதை, அம்மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டட பா.ஜ.கவினரே ஒப்புக்கொள்ளும் நிலையில்தான், அங்கு தேர்தல் நிலைவரம் இருக்கிறது.
காங்கிரஸைப் பொறுத்தவரை, ஆட்சிக்கு வந்து விட முடியும் என்ற, நம்பிக்கையுள்ள மாநிலம் இராஜஸ்தானாக மாறியிருக்கிறது. ஆட்சிக்கு எதிரான வெறுப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த, சமூக வலைதளங்களிலும், பிரசார மேடைகளிலும் ‘வெளுத்துக் கட்டி’, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட வேண்டும் என்ற துடிப்புடன், காங்கிரஸ் பணியாற்றுகிறது.
தெலுங்கானா மாநிலத்தில், 109 சட்டமன்றத் தொகுதிகளில், தற்போது ஆட்சியிலிருக்கும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில், தேர்தலை முன்கூட்டியே நடத்தச் சம்மதம் தெரிவித்தார்.
ஆறு மாதத்துக்கு முன்பே தேர்தலைச் சந்திக்கும் அவர், காங்கிரஸ், தெலுங்கு தேசம், கொம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணியை, எதிர்பார்க்கவில்லை. இந்தக் கூட்டணி, சந்திரசேகர ராவை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
முதலில் 109இல், 100 தொகுதிகளைக் கைப்பற்றுவோம் என்று சொன்ன தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதித் தலைவர்கள், இப்போது ஆட்சி அமைக்கத் தேவையான 55 சட்டமன்றத் தொகுதிகளிலாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்று, கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
தேர்தலை முன் கூட்டியே அறிவித்தவுடன், ராகுலை விமர்சித்தது, தெலுங்கானா மாநிலத்துக்குச் சந்திரபாபு நாயுடு எதிர்ப்பாக இருக்கிறார் என்றெல்லாம் சந்திரசேகர் ராவ் பேசியது, அவருக்கே தலைவலியாக மாறியிருக்கிறது.
இப்போது, சந்திரபாபு நாயுடு அங்கு, எதிர்க்கட்சிகளை எளிதில் ஒருங்கிணைத்து விட்டார். அதுவே, சந்திரசேகர் ராவுக்கு மீண்டும் முதலமைச்சர் பதவியைக் கொடுக்குமா என்ற கேள்வியைத் திடீரென்று எழுப்பி விட்டது.
ஆகவே, தெலுங்கானா தேர்தல் முடிவுகள் சந்திரசேகர் ராவுக்குச் சாதகமாக இருக்கலாம் என்று இருந்தாலும், அவருக்கும் பா.ஜ.கவுக்கும் இடையில் இரகசியக் கூட்டணி இருப்பதாக, காங்கிரஸ் செய்துள்ள பிரசாரம், சிறுபான்மை மக்களிடம் நன்கு எடுபட்டிருக்கிறது. அது சந்திரசேகர் ராவின் வெற்றிக்கு, உலை வைத்து விடுமோ என்ற அச்சத்தை அக்கட்சிக்கு ஏற்படுவது, தவிர்க்க முடியாததாகி விட்டது.
சட்டிஷ்கர் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது. குறிப்பாக, அம்மாநில முதலமைச்சர் ராம் சிங், மக்களிடம் செல்வாக்கு உள்ளவர். மூன்றாவது முறையாக, முதலமைச்சராக மக்களிடம் செல்கிறார். இருக்கின்ற ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று, பா.ஜ.க எதிர்பார்க்கும் மாநிலங்களில் சத்திஷ்கர் முக்கியமான மாநிலம்.
இங்குள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில், 46இல் வெற்றி பெற்றால், ஆட்சி என்ற நிலையில், “நக்ஸல் தீவிரவாதத்தை ஒழித்து விட்டோம்” என்றும், “நல்லாட்சி வழங்கியுள்ளோம்” என்றும் பா.ஜ.க பிரசாரத்தை முன் வைக்கிறது.
சமீபத்தில் நாட்டுக்கு எதிராகச் செயற்பட்டதாகவும், மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக இருந்ததாகவும் கைது செய்யப்பட்ட பிரபல எழுத்தாளர் விவகாரத்தில், காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததைச் சுட்டிக்காட்டும் பிரதமர் மோடி, “ஏன் காங்கிரஸ் கட்சி நகர்ப்புற மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறது” என்று கேள்வி எழுப்பி, பிரசாரம் செய்துள்ளார். இந்தப் பிரசாரம் காங்கிரஸ் கட்சிக்கு சற்று பிரச்சினைக்கு உரியதுதான்.
ஏனென்றால், நக்ஸலைட் தீவிரவாதத்தின் பிடியில், இந்த மாநில மக்கள் சிக்கிக் கொண்டிருந்ததை, ஓரளவுக்காவது பா.ஜ.க ஆட்சி மீட்டு எடுத்திருக்கிறது. ஆகவே தீவிரவாதத்தை முன் வைத்து, இங்கே காங்கிரஸ் கட்சியின் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சிக்கு, ‘செக்’ வைத்துள்ளது பா.ஜ.க.
இந்த மாநிலத்தில், அஜித் சோகி தனிக்கட்சி தொடங்கிய பிறகு, காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துள்ளது. ஆகவே, இந்த முறை மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரப் பிரசாரம் செய்யும் பா.ஜ.கவின் வியூகங்களை, முறியடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மிகச்சிறிய மாநிலமான மிசோரம் மாநில காங்கிரஸ் முதலமைச்சராக இருக்கும் லால் தன்ஹவ்லா, கடும் சவாலைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார். அங்குள்ள மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியே சரியில்லை என்று மாற்றி, அதிரடி வைத்தியம் செய்திருக்கிறது தேர்தல் ஆணையம்.
வெறும் 40 சட்டமன்றத் தொகுதிகளில், 21 தொகுதிகளைக் கைப்பற்றினால் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில், களத்தில் நிற்கும் இவரை, பா.ஜ.க எதிர்கொள்கிறது.
காங்கிரஸுக்குள் நடைபெறும் கோஷ்டி பூசலால், இங்கு அக்கட்சியின் வெற்றி வாய்ப்புக் கேள்விக் குறியாகலாம். ஆனாலும், அஸ்ஸாம் மாநிலம் போல், குடியேற்றப் பிரச்சினையைக் கையிலெடுத்து, காங்கிரஸுக்கு இறுதி கட்டத்தில் தலைவலியை கொடுத்துள்ளது பா.ஜ.க.
மாநிலத்தில் இன்னொரு கட்சியும் களத்தில் நிற்கிறது. இப்போதைக்கு மாநிலத்துக்குள் உள்ள காங்கிரஸுக்கும் பிற கட்சிகளுக்கும் போட்டியிருக்கிறதே தவிர, பா.ஜ.கவுக்கு அவ்வளவாகக் களம் கனியவில்லை.
ஆகவே, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், மூன்றில் பா.ஜ.க ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்; முடிந்தால் மிசோரமில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும். வடக்கு, கிழக்கு மாநிலங்களுக்குப் பல்வேறு பொருளாதார திட்டங்களை, வளர்ச்சித் திட்டங்களைச் செய்திருக்கிறோம் என்பதை பா.ஜ.க இதற்காக முன்வைக்கிறது.
காங்கிரஸைப் பொறுத்தமட்டில் நான்கு மாநிலங்களில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும். ஒரு மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டும்.
மொத்தத்தில் வெற்றி பெறப் போவது, பிரதமர் மோடியின் தலைமையா அல்லது, ராகுல் காந்தியின் தலைமையா என்ற கேள்விதான் எழுந்திருக்கிறதே தவிர, அங்குள்ள முதலமைச்சர்கள் ஆட்சியில் நல்லது செய்தார்களா, நிர்வாக ரீதியாகத் தோல்வி அடைந்தார்களா என்ற கேள்வி அல்ல.
பிரசாரங்களும் அந்தத் திசையை நோக்கி நடைபெறவில்லை. காரணம், பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே, இந்தத் தேர்தலை 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பாகக் கருதுகின்றன.
இரு கட்சிகளும் மட்டுமல்ல, பா.ஜ.கவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கவோ, இருக்கின்ற கூட்டணியைத் தொடரவோ இந்தத் தேர்தல் முடிவு, முக்கிய காரணியாக அமையப் போகிறது.
அதேபோல், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் வியூகத்துக்கு ஐந்து மாநிலத் தேர்தல்களில், ராகுலின் தலைமைக்கு உள்ள செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதே தீர்மானிக்கப் போகிறது.
2019 ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு, இந்த ஐந்து மாநிலங்களினதும் தேர்தல் முடிவுகள், மிக முக்கியமான ‘அபாயச் சங்கை’ ஊதப் போகிறன. அது பா.ஜ.கவுக்கா, காங்கிரஸ் கட்சிக்கா என்பது தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்து விடும்.