இந்திய அமைதிப் படை வடக்கு கிழக்கில் இருந்து வெளியேறத் தொடங்கிய ஆரம்ப நாள் (1989) அது. ஒரு நாள் பிற்பகலில் கதுருவெல யிலிருந்து காத்தான்குடிக்குப் போவதற்காக மட்டக்களப்பு வரை செல்கின்ற இபோச பஸ்ஸில் வந்துகொண்டிருந்தேன். செங்கலடி சந்திக்கு சமீபமாக ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் சிலரால் நான் வந்த பஸ் வழிமறிக்கப்பட்டது. மூன்று ஆயுத தாரிகள் பஸ் உள்ளே வந்து “சோனிக் காக்காமார் யாரும் இரிக்கிறீங்களாடா? இரிந்தா இறங்கிடா எல்லாரும்” என்று கூறிக்கொண்டு சந்தேகமானவர்களிடம் அடையாள அட்டையை கேட்டு பெயர்களை பரிசோதித்தார்கள்.
ஆட்கடத்தல், படுகொலை, வழிப்பறி, கொள்ளைகள் என தினமும் மனித குலத்திற்கு எதிரான வன்முறைகள் இடம்பெறுவது அப்போது வழக்கமாக இருந்தது. ஒரு பயணம் மேற்கொண்டால் அதை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சேரும் வரை உயிருக்கு உத்தரவாதம் இல்லாத காலம் அது .
சிவில் நிருவாகம் முற்றாக முடங்கிப் போய் இருந்தது. சட்டம், ஒழுங்கை காப்பாற்றும் எந்த ஒரு அக்கறையும் இந்திய அமைதிப் படையினரிடம் அப்போது இருக்கவில்லை. அவர்களோடு இணைந்திருந்த ஈழ விடுதலை இயக்கங்களின் அராஜகங்களே கேட்பார் பார்ப்பாரின்றி அரங்கேறிக்கொண்டிருந்தன.
குறிப்பாக இந்தியப் படையினர் வெளியேறிக் கொண்டிருந்த அந்த கடைசி ஒரு சில நாட்களில் இயக்கங்களின் வெறியாட்டம் உச்சத்தில் ஏறி நின்றது. விடுதலைப் புலிகளிடம் காணப்பட்ட தலைமைத்துவக் கட்டுப்பாடு, ஒழுக்கநெறி(?) ஏனைய விடுதலை இயக்கங்களிடம் கொஞ்சமும் இருக்கவில்லை. தத்தம் விருப்பப்படி தான்தோன்றித்தனமாக ஒவ்வொரு உறுப்பினரும் செயற்பட்டுக் கொண்டிருந்தனர்.
காலம் சென்ற முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா, அவரின் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் காலம் சென்ற ரஞ்சன் விஜேரத்ன ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு மாவட்டத்தைக் கைப்பற்றுவதற்காக மன்னம்பிடிய வரை முன்னேறி வந்து முகாமிட்டிருந்தார்கள். இந்தியப் படையினரின் வெளியேற்றம் துரிதமாக இடம்பெற்றுக் கொண்டிருந்தது. இன்னும் ஓரிரு தினங்களுக்குள் முழுக் கிழக்கு மாகாணமும் புலிகளின் வசமாகப் போகிறது என்ற நிலை. இந்தியப் படையினரின் பாதுகாப்பிலும் அரவணைப்பிலும் அதிகாரம் பண்ணிக்கொண்டிருந்த இயக்கங்களின் உறுப்பினர்கள் தலைமைத்துவங்களால் கவனிக்கப்படாத அல்லது கைவிடப்பட்ட நிலையில் தம்வசம் வைத்திருந்த ஆயுதங்களை கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் பயன்படுத்திக்கொண்டு புலிகளிடமிருந்து தப்பியோடுவதற்கான வழிகளைத் தேடி தடுமாறிக்கொண்டிருந்தார்கள்.
இதன் தொடராக வழிப்பறி, கொள்ளை, புலிகளுக்கு உதவுவோரெனக் கூறி அப்பாவிகளை சித்திரைவதை செய்தல் மற்றும் கொலை செய்தல் போன்றவற்றில் தன்னிச்சையாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.
சரி, எனது கதைக்கு வருகிறேன்.
ஏதோ விபரீதம் இடம்பெறப் போகிறது என்பது மட்டும் எனக்கு நன்றாக விளங்கியது. நா, உதடுகள் வறண்டு அச்சத்தில் உறைந்து போனேன். எனது அடையாள அட்டையை அவர்கள் கேட்பதற்கு முன்பாகவே நான் பஸ்ஸை விட்டு கீழே இறங்கினேன். எனக்கு முன்னதாக ஒரு சகோதரர் இறங்கி நின்றார். அவர் ஒரு முஸ்லீமுக்குரிய கலாச்சார அடையாளங்களோடு காணப்பட்டார். தாடி, தொப்பியுடன் நீளக்கை சேட்டும் வெள்ளை சாரனும் அணிந்திருந்தார். மற்றுமொரு சகோதரரை அந்த வெறியர்கள், அடையாள அட்டை மூலம் முஸ்லிம் எனக் கண்டு பிடித்து அவரைத் தாக்கிய வண்ணம் பஸ்ஸுக்குள் இருந்து கீழே இறக்கி எடுத்தார்கள்.
செங்கலடி பிரதான வீதி முழுக்க ஆயுததாரிகளே கூடுதலாகக் காணப்பட்டார்கள். மிகச் சமீபமாக, வெளியேறிக்கொண்டிருந்த இந்திய அமைதி காக்கும் படையினரின் பெரிய முகாம் இருந்தது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி EPRLF, ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி ENDLF, தமிழ் ஈழ விடுதலைக் கழகம் TELO ஆகிய இயக்க உறுப்பினர்களுடன் தமிழ் தேசிய இராணுவத்தினரும் TNA தான் அந்த ஆயுத நபர்கள்.
எங்கள் மூவரையும் ஒருவன், அவ்விடத்தில் உள்ள ஒரு கிறவள் ஒழுங்கை வழியாக அழைத்துச் சென்றான். சுமார் நூற்றி ஐம்பது மீற்றர் தூரம் சென்றதும் அங்கு ஒரு ஆயுதக் குழுவே நின்றது. அவர்களில் ஒருவனிடம் எங்களை அவன் ஒப்படைத்து “இந்த மூணு காக்காமாரையும் அண்ணன் ஒங்களுக்கிட்ட குடுக்கச் சென்னாரு” என்று சொல்லிவிட்டுப் போனான்.
துணியால் தைத்த இராணுவ தொப்பி அணிந்திருந்த அவன் SLR எனப்படும் ஆயுதம் வைத்திருந்தான். எங்களுக்கு கடுமையான தூஷண வார்த்தைகளால் ஏசிக்கொண்டே இருந்தான். ஒழுக்கம், நாகரிகம் அற்ற அந்த வார்த்தைகளை பொது வெளியில் பதிவிட முடியாது.
ஏசிவிட்டு “வரட்டும் அண்ண, வந்த உடன ஒங்கள போடாம (கொல்லாமல்) உர்ரல்லடா சோனிப் ………” என்று தனது ஆயுதத்தை தயார் நிலைக்கு கொண்டுவந்து எங்களது உயிரை உறைய வைத்துக் கொண்டிருந்தான்.
இன்னொருத்தன் வந்து எனக்குப் பக்கத்தில் நின்றிருந்த சகோதரரை (சம்மாந்துறை) செருப்புக் காலால் உதைக்க முயற்சித்தான். அவர் தற்காத்துக் கொண்டதால் உதை படவில்லை. மற்ற சகோதரருடைய (கோட்டைமுனை, மட்டக்களப்பு) பிரயாணப் பையைப் பறித்து அதில் உள்ள பொருட்களை கீழே கொட்டினான். அதற்குள் உடுப்பும் ஒரு டோச் லைட்டும், பொக்கெட் ரேடியோவும் இருந்தது. ரேடியோவை அவன் களவாடிக் கொண்டான்.
அந்த இடத்தில் இன்னும் இரண்டு தமிழ் சகோதரர்களின் பணம் கொள்ளையடிக்கப் பட்டதையும் கண்டேன். ஆனால் எங்களிடம் பணம் கேட்கவில்லை. எங்களைக் கொலை செய்வது சம்பந்தமாகத்தான் பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். எங்களைக் கொல்லுவதற்கு அவன் தூஷண வார்த்தைகளால் சொன்ன காரணம் இதுதான்.
முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். உணவு கொடுக்கிறார்கள். முஸ்லிம் பணக்காரர்கள் காசு பொருட்கள் கொடுத்து உதவுகிறார்கள். இந்தியப் படையினர் சுற்றி வளைத்துத் தேடும் போது புலிகள் பதுங்கிக் கொள்வதற்கு காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய ஊர்களை சேர்ந்த முஸ்லிம்கள் வீடுகளில் இடம் கொடுக்கிறார்கள். ஏனைய இயக்கத்தினருக்கு இவ்வாறான எந்த உதவிகளுமே செய்வதில்லை.
தரையில் நாங்கள் மூவரும் உட்கார்ந்து இருக்கிறோம். மரணம் கண்ணெதிரே தெரிகிறது. பயம் உறைந்து முகங்கள் வாடிப்போன நிலையில் ஒருவரை ஒருவர் பரிதாபமாகப் பார்ப்பதைத்தவிர வேறொன்றும் செய்ய முடியாத நிலை. ஒருவர் மற்றவருடன் ஏதாவது பேச முயற்சித்தாலும் துவக்குப் பிடியால் ஓங்கிக் குத்த வருகிறார்கள்.
இதயத் துடிப்பு அதிகரித்து ஈரல் குலை கருகிச் சாம்பலாவது போல உணர்கிறேன். குர் ஆன் வசனங்களை ஓதியும், இந்த ஆபத்திலிருந்து மூவரையும் காப்பாற்றுமாறும் அல்லாஹ்விடம் வேண்டிக் கொண்டும் இருக்கிறேன்.
ஒவ்வொரு இயக்கக் காரனாக வந்து எங்களைத் திட்டுவதும் அச்சுறுத்துவதுமாக அவர்களது வெறியைத் தீர்த்துச் செல்கிறார்கள்.
பிரதான வீதியில் பயணிக்கும் முஸ்லிம்களை கடத்துவது, பணம் பொருட்களுடன் செல்வோரை முஸ்லிம் – தமிழ் என்று பாராமல் ஊருக்குள் இழுத்து வந்து கொள்ளையடிப்பது என்று அந்த இடம் வன்முறைகளால் நிறைந்திருக்கிறது.
ஆயுதம் ஒன்றை தோளில் போட்டுக்கொண்டு பதினைந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ஓடி வந்து எங்களை வைத்துக் கொண்டிருந்தவனிடம் சொல்கிறான் ” இவனுகள கூட்டிட்டுப் போகட்டாம்” என்று.
கொல்லுவதற்குத்தான் கூட்டிப் போகப்பார்க்கிறார்கள் என்பது எங்களுக்கு தெளிவாகப் புரிகிறது. உடலியக்கங்கள் நின்று போனது போல எனக்குப் புலப்படுகிறது. மரண பயத்தில் விறைத்துப் போகிறேன். “டேய்…..! எழும்பிப் போங்கடா மூணு பேரும் அந்த ஊட்டுக்குள்ள ” என்று பக்கத்தில் இருந்த ஒரு சிறிய பழைய வீட்டைக் காட்டுகிறான். நாங்கள் எழுந்து செல்கிறோம். அந்த வீட்டின் வளவை நோக்கி நடந்து போய்க் கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்து நிற்கும் சத்தம் கேட்கிறது. திரும்பிப் பார்க்கிறேன். அதில் வந்த இருவரும் அவசரமாக இறங்கி நாங்கள் போகும் வீட்டை நோக்கி வருகிறார்கள். எனக்கு திடீரென அதிர்ச்சியும் மிகச்சிறியதொரு நம்பிக்கையும் உண்டாகின்றது. அந்த இருவரில் ஒருவர் எனக்கு நன்கு அறிமுகமானவர். என்னருகில் வந்ததும் அவரும் அதிர்ந்து போகிறார், வெட்கம் வந்திருக்க வேண்டும். சங்கடத்துக்குள்ளானவராக ஒரு கையை தலையில் வைத்து மறுகையை தனது தொடையில் இரண்டு தடவைகள் அடித்துக் கொள்கிறார்.
நான் காத்தான்குடி ஆறாம் குறிச்சி மெயின் வீதியில் ஸ்டார் முதலாளியின் வீடியோக் கடையில் அப்போது வேலை செய்து வந்தேன். அந்தக் கடைக்கு படம் வாடகைக்கு எடுத்துச் செல்வதற்காக இந்திய அமைதிப் படையினரும் இயக்கங்களைச் சேர்ந்த பொடியன்களும் அதிகமாக வருவார்கள். இவர்கள் யாரும் வாடகைக் காசு தருவதில்லை. சில வேளைகளில் பலாத்காரமாகவும் எடுத்துச் செல்வார்கள் . அதிக நாட்கள் தாமதித்துத்தான் படக் கேசட்டையும் திருப்பித் தருவார்கள். சிலர் தராமலும் விட்டிருக்கிறார்கள்.
EPRLF இயக்கத்தைச் சேர்ந்த சுதா என்று அழைக்கப்படும் ஒருவரும் அடிக்கடி வந்து படங்கள் எடுத்துச் செல்வார். நாட்கள் தாமதமானாலும் உரிய வாடகைக் காசை தந்துவிடுவார். அது மட்டுமல்லாமல் இயக்கத்தின் உத்தியோக பூர்வ பத்திரிகையான “புதிய கண்ணோட்டம்” இதழையும் எனக்கு இலவசமாக கொண்டுவந்து தருவார். அந்த சமயத்தில் தமிழ்ப் பிரதேசங்களிலும் சரி, முஸ்லிம் பிரதேசங்களிலும் சரி யாரும் இயக்கப் பத்திரிகைகளை காசு கொடுத்து வாங்கவதும் இல்லை, படிப்பதும் இல்லை. இலவசமாகக் கொடுத்தாலும் பெறுவதுமில்லை. ஆனால் நான் அந்தப் பத்திரிகையை கரிசனையோடு கேட்டு வாங்குவது, அதில் வரும் கட்டுரைகள் சம்பந்தமாக அவருடன் விவாதிப்பது போன்ற காரணங்களால் அவருக்கும் எனக்கும் இடையில் ஒரு நல்ல நட்பு உருவாகி இருந்தது. காத்தான்குடிக்கு பொருட்கள் வாங்க வந்தால் நான் வேலை செய்த கடைக்கு வந்து என்னோடு சிறிது நேரம் பேசிவிட்டுத்தான் போவார்.
அவர்தான் என்னையும் மற்ற இரண்டு சகோதரர்களையும் போட்டுத்தள்ளுவதற்கு அனுப்பப்பட்ட வீட்டை நோக்கி வந்தவர்.
எல்லாவற்றையும் உடனே சுதாகரித்துக் கொண்டவராக சில விடயங்களை என்னோடு தனியாக அழைத்துப் பேசிவிட்டு “நீங்க போங்க… நீங்க போங்க…” என்று எனது கையைப் பிடித்து அனுப்பி வைக்க முயன்றார் . நான் மற்ற இருவரும் என்னோடு வந்தவர்கள் என்று சொன்னேன். ” அவங்களும் காத்தான்குடியா? “என்று கேட்டார். “ஓம்” என்று சமாளித்துக் கொண்டேன்.
ஒழுங்கையில் கூட்டமாக நின்றிருந்த இயக்கப் பொடியன்களில் ஒருவனைக் கூப்பிட்டு “இந்த அண்ணன் மார் மூணு பேரையும் கூட்டிட்டுப் போய் பஸ்ஸில பத்திரமா ஏத்தி உட்டுட்டு வா” என்று கூறி என்னிடம் மன்னிப்பும் கேட்டுவிட்டு எங்கள் மூவரையும் விடுதலை செய்தார்.
நாங்கள் செங்கலடி பிரதான வீதியில் பஸ்சுக்காக காத்திருக்கையில் அந்த இடத்துக்கு சுதாவும் வந்தார். அப்போது மட்டக்களப்புக்குச் செல்லும் ELF ரக வேன் ஒன்று வந்தது. அதில் எங்கள் மூவரையும் ஏற்றி பாதுகாப்பாக கொண்டு சென்று விட்டுவிட்டு வரும்படி ஒரு இயக்கப் பொடியனையும் துணைக்கு வேனில் ஏற்றி அனுப்பிவைத்தார்
வேனில் ஏறும்போது கூட ” நான் கடைக்கு வந்து எல்லாம் பேசுறன் அண்ணே Sorry” என்று மீண்டும் மன்னிப்புக் கேட்டார் சுதா.
இச்சம்பவம் இடம்பெற்று மூன்று நாட்களில் இந்திய அமைதி காக்கும் படை வடக்கு கிழக்கை விட்டு முற்றாக வெளியேறிவிட்டது.
அமைதிப் படையோடு இணைந்திருந்த இயக்கப் பொடியன்களும் அவர்களோடு ஓடிப்போய் விட்டார்கள். அடுத்தடுத்த நாட்களில் விடுதலைப் புலிகள் முற்று முழுதாக கிழக்கை கைப்பற்றி இந்திய அமைதிப் படையுடன் இணைந்திருந்த சகோதர இயக்க உறுப்பினர்களை தேடித் தேடி கொலை செய்யத் தொடக்கி இருந்ததால் சுதா என்னை சந்திக்க வரவே இல்லை.
(எம்.எல்.எம். அன்ஸார்)