அன்று பொதுவாக வன்முறைகள் அற்ற பிரதேசம் என அழைக்கப்பட்ட யாழ் மாவட்டம் உண்மையிலேயே வன்முறைகள் மலிந்த பூமியாகவே இருந்தது.இந்த வன்முறைகளின் பின்னணியில் யாழ்ப்பாண மேல்தட்டு வர்க்கம் துணையாகவும் காவல் துறை பக்க பலமாகவும் இருந்தது.இவை செய்துகள்களின் வெளிவருவது இல்லை.
அந்த நாட்களில்கூட ஊருக்கு ஊர் சண்டியர்கள் இருந்தார்கள்.பெண்களை கடத்தி திருமணம் செய்த வழக்குகளும் ஏராளம்.பல ஊர்களில் இந்த கடத்தல்கதைகள் உண்டு.ஆனால் திருட்டுக்கள் குறைவு.ஏனென்றால் சமூகம் சாதீய கட்டமைப்புகளோடு இருந்தாலும் எல்லோரும் உழைப்பாளிகள்.பொருளாதார அளவில் சம்மானவர்களாகவும் இருந்தனர்.அங்கே பெரும் திருட்டுகள் நடக்கும் அளவுக்கு பொருட்களும் இல்லை.
சமூகம் கல்வியை நாடத்தொடங்கியதும் மத்தியதர வர்க்கம் ஒன்று வேகமாக உருவானது.இதன் பின்னரே திருட்டுக்கள் அதிகரித்தன.
கரையோர பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்தன.இவை பெரும்பாலும் காவல்துறை ,சுங்க இலாகா போன்றவற்றின் மறைமுக ஆதரவோடு நடப்பதாக கருதப்பட்டது.இப்படி பணம் சம்பாதித்த பலர் அரசியல்வாதிகள் பலரோடு நெருக்கமானவர்களாகவும் அதே நேரம் கோவில் சமூக சேவைகளோடு தொடர்புடையவர்களாக கௌரவம் பெற்றார்கள்.
வன்முறைகளைப் பொறுத்தவரை, கொடிகாமம், யாழ் பஸ்நிலையம், ஆரியகுளம், கரையூர், சுன்னாகம், நெல்லியடி, பருத்தித்துறை ,வல்வெட்டித்துறை , கிளிநொச்சி சந்தை, பரந்தன் ஆகிய இடங்கள் பொதுவெளியில் பேசப்பட்ட இடங்களாகும்.அந்த நாட்களில் இங்கு வன்முறைகள் நடந்தன.இந்த வன்முறைக் கும்பல்கள் சாதிக்குள் ஒழிந்துகொண்டன.இவர்களுக்கும் காவல்துறைக்கும் நட்பும் இருந்தது.இவர்களை காவல்துறை கண்டும் காணாமலும் போனது.
நேர்மையான பொலிஸ் அதிகாரி என தமிழ் அரசியல்வாதிகளாலும்,வர்த்தகர்களாலும் கருதப்பட்ட சுந்தரலிங்கம் அவர்களின் நம்பிக்கைக்கு உரியவராகவே மட்டும் இருந்தார். அவர் காலத்திலேயே தீண்டாமைக்கு எதிரான போராட்டம் ஆரம்பமானது. அவரது நேர்மை தடம் புரண்டது. சாதிவெறி பிடித்த வன்முறையாளர்களை சட்டத்்தஇல் இருந்து பாதுகாத்தார். அதே நேரம் ஒடுக்கப்பட்ட மக்களை அப்பாவிகளை சட்டத்தைப் பாவித்து மிரட்டினார். இவர் காலத்தில் உயர் சாதியினரால் நடத்தப்பட்ட வன்முறைகள் மூடி மறைக்கப்பட்டன. மேலும் வன்முறைக்கு புத்துணர்ச்சி கொடுத்தவர் எனலாம்.
இவர் 1971 இல் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியபோதும் சாதீய வன்முறையாளர்களை அங்கிருந்தே பாதுகாக்க உதவினார்.
குடாநாட்டுக்கான கள்ள மரக்கடத்தல் ஆனையிறவு ஊடாகவே பகிரங்கமாக நடந்தது.இங்கே சோதனைசாவடிக்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் அதிகாரிகளே துணைபோனார்கள். அனைவரும் தமிழர்களே. நேர்மையான பொலிஸ் அதிகாரி என பெயர் எடுத்த கதிர்காமநாதன் சாவகச்சேரியில் பணியாற்றியபோதும் இந்த மரக்கடத்தல்களை கண்டுகொள்ளவில்லை.1980 களில் தென்னக்கோன் என்ற சிங்கள பொலிஸ் அதிகாரி ஒருவரே சட்ட விரோத மரக்கடத்தல்களை நிறுத்தினார்.
அந்த நாட்களில் குடாநாட்டில் உள்ள ஒவ்வொரு வன்முறையாளர்,சமூகவுரோதிகள் அனைவருக்கும் தனியான சட்டத்தரணிகள் தொடர்பில் இருந்தனர்.ஜி.ஜி.பொன்னம்பலம் உட்பட அனைவருக்கும் தொடர்பு இருந்தது. கேட்டால் தொழில் என்பார்கள். அவர்கள் நினைத்தால் குறைத்து இருக்கலாம். பலரை திருத்தி இருக்கலாம்.
ஆயத இயக்கங்கள் வருகையோடு கொஞ்சம் அடங்கியே இருந்தார்கள். புலிகள் தனியாக எழுச்சி பெற்றதும் பல குற்றவாளிகள் ஊக்குவிக்கப்பட்டார்கள். இது பலர் ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை. அதன் தொடர்ச்சியே இவை.
இன்று பல போக்குவரத்து பொலிசார் பகிரங்கமாகவே இலஞ்சம் வாங்கும்போது இந்தப் பொலிசாரால் எப்படி குற்றங்களை கட்டுப்படுத்த முடியும். சட்டத்தைக் காப்பவர்கள்மீதான நம்பிக்கை போய்விட்டது. இவை சில நாட்கள் அமைதியாக இருக்கும். மீண்டும் தொடங்கும். அதற்கு நம்புக்கையான காவல் துறைதேவை.
இந்திய நாடுபோல எமது நாடும் மாறிவிடக்கூடாது. சமூகத்தில் இருந்த அயல் உறவுகள் பாதிக்கப்பட்டதன் விளைவுகளே இந்த வன்முறைகள் வளரக் காரணம். அந்தநாட்களில் இன்றைய வன்முறையாளர்களால் கிராமங்களுக்குள் நுழையவே முடியாது. அந்தளவுக்கு சமூக உறவுகள்பலமாக இருந்தன. அவை மீளக் கட்டி எழுப்பவேண்டும்.