யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பிறந்த வரலாறு

யாழ் பல்கலைக்கழகம் உருவான 25ஆவது ஆண்டு நிறைவு 2002ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட பொழுது யாழ் பல்கலைக்கழகம் உருவான வரலாறு சம்பந்தமாக அப்பொழுது லேக்ஹவுஸ் நிறுவனம் வெளியிட்ட ‘அமுது’ மாத சஞ்சகையில் வெளிவந்த ஒரு நீண்ட கட்டுரையின் முதல் பகுதியைக் கீழே தந்துள்ளேன்.
நன்றி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனது இருபத்தைந்து வருடப் பூர்த்தியயை அண்மையில் கொண்டாடியது.

விழாவை முன்னிட்டு மலர் ஒன்று (ஆங்கிலத்தில் மட்டும்) வெளியிடப்பட்டதுடன் பல நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பல்கலைக்கழகத்தின் கடந்தகால பன்முக வளர்ச்சி பற்றியும், எதிர்காலத்தில் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும் பல கட்டுரைகள் அறிஞர் பெருமக்களால் எழுதப்பட்டன.

எல்லாம் நல்லபடியாக நடந்த போதிலும், இந்நிகழ்ச்சிகளின் போது வெளிவரத் தவறிய, இப்பல்கலைக்கழகம் பற்றிய முக்கிய விடயம் ஒன்று அதன் வளர்ச்சியில் அக்கறையுள்ளவர்களின் மத்தியில் விசனித்திருப்பதை அவதானிக்க முடிகிறது.
அது –

இப்பல்கலைக்கழகம் எவ்வாறு பலத்த போராட்டங்களின் மத்தியில் உருவானது என்பது பற்றிய வரலாறாகும். வெள்ளிவிழா ஏற்பாட்டாளர்கள் இதன் வரலாற்றை வெளிக்கொணரத் தவறியது அவர்களது அசட்டையீனம் மட்டுமின்றி, திட்டமிட்ட இருட்டடிப்பு என்று கருதுவதற்கு நியாயமான காரணங்கள் உண்டு.

ஒரு தனிமனிதனும் சரி, ஒரு ஸ்தாபனமும் சரி, ஒரு நாடும் சரி, தனது தோற்றத்தை அறந்திருக்க வேண்டும் என்ற ஒரு சாதாரண விடயம் கூட, தமிழ் சமூகத்தின் உயர்தன்மை வாய்ந்த புலமைச் சமூகம் ஒன்றுக்கு புலனுக்கு எட்டாமல் போனது தற்செயலான நிகழ்வாக இருக்க முடியாது.

இன்னொரு பக்க உண்மையும் இந்த விடயத்தில் உண்டு. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமின்றி, இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்கின்ற அநேக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்குக் கூட, இது தோற்றம் பெற்ற வரலாறு தெரியாது என்பது கவலைக்குரிய உண்மையாகும்.

ஒவ்வொரு தமிழ் மகனும் இப்பல்கலைக்கழகத்தின் வரலாற்றை அறந்திருப்பது வெறும் தகவல்களுக்காகவோ புலமைத்துவத்துக்காகவோ அல்ல. எமக்கு அன்றைய காலகட்டத்தில் தலைமைதாங்கிய தமிழ்த் தலைமைகள், தமது அப்புக்காத்துத் தொழிலிலும், சுயநல அரசியல் தேவைகளிலும் செலுத்திய அபரிமிதமான அக்கறையை, தமிழ்ச் சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் காட்டவில்லை என்பது மட்டுமின்றி, அதற்கு எதிராகவும் இருந்துள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்வதற்காகவுமே.

அவர்கள் தொடக்கி வைத்த இந்த தமிழ் மக்களின் நலன்களுக்கெதிரான அழிவுப்பாதை இன்றும் தொடரப்படும் தூரதிஸ்டத்தையும் பார்க்கிறோம். இப்பல்கலைக்கழகத்தை இயங்கவிடாதிருக்க எடுத்த முயற்சிகளும், இளம் சமுதாயத்தை கல்வியறிவற்றவர்களாக்கி கொடிய யுத்தத்தில் பலிக்கடாக்களாக்குவதிலுமிருந்து இதைப் புரிந்து கொள்ள முடியும்.

எனவேதான், இப்பல்கலைக்கழகத்தில் கற்கும் ஒவ்வொரு மாணவனும், ஏனையவர்களும் இதன் தோற்றத்தைப் பற்றிய வரலாற்றைத் தெரிந்து கொள்வது அவசியமாகின்றது.

தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு – கிழக்குப் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைய வேண்டும் என்ற தமிழ் மக்களின் அவா இலங்கை 1948 பெப்ருவரி 4இல் சுதந்திரமடைவதற்கு முன்பதாகவே உருவான ஒன்று.

ஆனால் அக்கோரிக்கையை தமது அரசியல் கோசங்களாக்கியவர்கள், மூத்த தமிழ் அரசியல் கட்சியான திரு.ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும், அதிலிருந்து பிரிந்து சென்ற திரு.எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சியுமே.

ஆனால் தம் வாழ்நாளின் பெரும் பகுதியை கீரியும் பாம்புமாக, எதிரெதிரான அரசியலை நடத்தி வந்த இந்தக் கனவான்கள், இந்தப் பல்கலைக்கழக விவகாரத்திலும் ஏட்டிக்குப் போட்டியான நிலையிலேயே செயல்பட்டனர். “தமிழ் மக்களுக்குத் தேவையானது இந்துப் பல்கலைக்கழகம்” என பொன்னம்பலம் கோர, செல்வநாயகமோ, தமிழ் பல்கலைக்கழகமே அமைக்கப்பட வேண்டும் எனக் கோரினார்.

இவர்கள் இருவரினதும் புத்திசாலித்தனமற்ற, தவறான, பிடிவாதமான நிலைப்பாடு, தமிழ்ப் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கும் கடமையைத் தட்டிக் கழிப்பதற்கு அரசாங்கத்திற்கு மிகவும் வசதியாக இருந்தது.

இரண்டு தமிழ்க் கட்சிகளும் ஒற்றுமைப்பட்டு, தமிழ்ப் பிரதேசத்தில் பல்கலைக்கழகம் அமைக்கும் கோரிக்கையை வலியுறுத்தினால் சாதகமான நிலைமை உருவாகும் என்றும், அவ்வாறு அமைக்கப்படும் பல்கலைக்கழகத்தில் இயல்பாகவே தமிழ் மக்களின் மொழி, கலாச்சார விடயங்களின் அபிவிருத்திக்கு களம் ஏற்படும் என்று (இன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இருப்பது போன்று) பல தமிழறிஞர்களும், முற்போக்கு அரசியல் சக்திகளும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்ட போதிலும், இரு தலைவர்களும் தமது நிலைப்பாட்டிலேயே அழுங்குப்பிடியாக நின்று காரியம் கைகூடாமல் பார்த்துக் கொண்டனர்.

இந்தச் சூழ்நிலையில் தமிழரசுக் கட்சியினரோ ஒருபடி முன்னே சென்று, தமது கற்பனைத் “தமிழரசு ராஜ்யத்தின்” தலைநகரான திரிகோணமலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கும் முயற்சியிலும் இறங்கினர். இதற்கென பல்வேறு குழுக்கள் அமைத்து பொதுமக்களிடமிருந்து அன்பளிப்பாகவும் மலிவு விலையிலும் பல ஏக்கர்க் கணக்கான காணிகளைப் பெற்றதுடன், ஆயிரக்கணக்கான ரூபா நிதியும் சேகரித்தனர். ஆனால் இன்றுவரை அம்முயற்சி கைகூடவில்லை. அதற்கெனப் பெற்ற காணிகளுக்கும் நிதிக்கும் என்ன நடந்ததென்பது மர்மமாகவே இருக்கின்றது.

இந்தகைய சூழ்நிலையில்தான் 1965ஆம் ஆண்டு திரு.டட்லி சேனநாயக்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தது. தீவிர சிங்கள இனவாதிகளான கே.எம்.பி.ராஜரத்ன, ஆர்.ஜி.சேனநாயக்க போன்றோரையும் உள்ளடக்கியிருந்த இந்த ஏழு கட்சி கூட்டணி அரசாங்கத்தின் பங்காளிகளாக தமிழ் காங்கிரஸ் – தமிழரசுக் கட்சிகளும் இணைந்து கொண்டன. தமிழ் காங்கிரஸ் சார்பாக திரு. மு.சிவசிதம்பரம் பிரதி சபாநாயகராகவும், தமிழரசுக் கட்சி சார்பாக திரு. மு.திருச்செல்வம் உள்ளுராட்சி அமைச்சராகவும் பதவி ஏற்றனர்.

தமிழர் பிரச்சினை சம்பந்தமாக இவ்விரண்டு கட்சிகளும் டட்லியுடன் இரகசிய உடன்படிக்கை ஒன்று செய்ததாகவும் கூறப்பட்டது. டட்லி – செல்வா உடன்படிக்கை ஒன்றின் மூலம் மாவட்ட சபைகள் அமைக்கவும் இணக்கம் காணப்பட்டது.

இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பல்கலைக்கழக நம்பிக்கை மீண்டும் துளிர்விடத் தொடங்கியது.

1947இல் அமைந்த, டட்லியின் பிதா டீ.எஸ்.சேனநாயக்கவின் அரசில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் மந்திரிப் பதவி பெற்று, அவ்வரசு இந்திய வம்சாவழி தோட்டத் தொழிலாளர்களின் பிரஜாவுரிமையையும் வாக்குரிமையையும் பறிக்கும் செயலுக்கு உடந்தையாக இருந்ததிற்காக அவரை விட்டுப் பிரிந்து சென்று தமிழரசுக் கட்சி அமைத்த செல்வநாயகம், இப்பொழுது பொன்னம்பலத்துடன் டட்லி அரசில் இணைந்து கொண்டதே மக்களின் இந்த நம்பிக்கைக்குக் காரணமாகும். தமிழர்களுக்கு நன்மையான விடயங்கள் ஏதாவது நடக்கலாம் என மக்கள் எதிர்பார்த்தனர்.

புதிய அரசாங்கம் அமைந்ததும் நடத்திய முதலாவது கொள்கை விளக்க உரையான சிம்மாசனப் பிரசங்கத்தில் மகாதேசாதிபதி (கவர்னர் ஜெனரல்) திரு.வில்லியம் கோபல்லாவ, யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அடையாள மானியமாக பத்து ரூபா ஒதுக்குவதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு அரசின் மனப்பூர்வமான அறிவிப்பு அல்லவென்றாலும் இரண்டு கட்சிகளும் நினைத்திருந்தால் அதைப் பயனுள்ளதாக மாற்றியிருக்க முடியும். ஆனால் ஐ.தே.க. நினைத்தபடியே விவகாரம் அவர்களுக்குச் சாதகமாக முடிந்தது. இரண்டு கட்சிகளும் வழமைபோலவே ‘இந்துப் பல்கலைக்கழகம்’, தமிழ்ப் பல்கலைக்கழகம்’ என்ற குஸ்தியில் இறங்கி காரியத்தைக் கெடுத்துக் கொண்டனர். ஐ.தே.க. என்ற குரங்கிற்கு அப்பம் பங்கிட வேண்டிய தேவையே இல்லாமல் போய்விட்டது.

நான்கரை ஆண்டுகள் டட்லி அரசில் இணைந்திருந்து தமதும் மற்றும் தமது நெருங்கிய உறவினர்கள் சகபாடிகளினதும் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொண்ட காங்கிரஸ், தமிழரசுத் தலைமைகள், தமிழ் மக்களுக்கென ஒன்றையும் பெற்றுக் கொடுக்கவில்லை.

மாவட்ட சபைகளும், பல்கலைக்கழகக் கோரிக்கையும் குப்பைக்கூடைக்குள் தூக்கி வீசப்பட்டன. இந்த முக்கிய விடயங்களை விடுத்து “திரிகோணமலையை புனித நகராகப் பிரகடனம் செய்யவில்லை” என்ற நொண்டிக் காரணத்தைக் கூறி, 1970ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் தமிழரசுக் கட்சி அரசிலிருந்து விலகிக் கொண்டது.

ஆனால், ‘சிங்களத் தலைமைகள் வழமைபோல் எமாற்றிவிட்டன’ என்று ஒப்பாரி வைத்து அடுத்த தேர்தலில் வாக்குக் கேட்க இக்கட்சிகள் ஆடிய கபட நாடகத்தை தமிழ் மக்கள் நன்கு விளங்கிக் கொண்டதை பின்னர் 1970 தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டின.

1970 பொதுத் தேர்தலில் திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான சிறீலங்கா சுதந்திர – சமசமாஜ – கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பதவிக்கு வந்தது. அதனால் தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் பல்கலைக்கழகம் பற்றிய நம்பிக்கை தோன்ற ஆரம்பித்தது.

அதிலும் குறிப்பாக, சமசமாஜ – கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டில் குறிப்பிடக்கூடிய செல்வாக்கு இருந்ததினால் அங்கிருந்த இக்கட்சிகளின் தலைமைகள் இவ்விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கக்கூடும் என மக்கள் எதிர்பார்த்தனர்.

இந்த இடத்தில், 1970 பொதுத் தேர்தலில் வட பகுதியில் காங்கிரஸ் – தமிழரசு கட்சிகளுக்கு மக்கள் வழங்கிய தீர்ப்பு வரலாற்றில் என்றென்றும் நினைவுகூரக்கூடிய ஒன்றாகும்.

தமிழரசுக் கட்சியின் ‘தளபதி’ என வர்ணிக்கப்பட்ட திரு.அ.அமிர்தலிங்கம் வட்டுக்கோட்டைத் தொகுதியில் தோல்வியுற்றதுடன், அது தனது கோட்டைகளாகவிருந்த நல்லூர், கிளிநொச்சி தொகுதிகளையும் இழந்தது. அதேபோல, உடுப்பிட்டித் தொகுதியில் தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ‘உடுப்பிட்டி சிங்கம்’ முன்னாள் உப சபாநாயகர் திரு.மு.சிவசிதம்பரம் தோல்வி கண்டதுடன், கட்சியின் தலைவர் ‘முடிசூடா மன்னன்’ திரு.ஜீ.ஜீ.பொன்னம்பலம் யாழ்ப்பாணத் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார்.

தமிழரசுக் கட்சியின் சார்பில் டட்லி அரசில் உள்ளுராட்சி அமைச்சராகவிருந்த திரு.மு.திருச்செல்வம் பாராளுமன்றத்தின் மூலம் தெரிவு செய்யப்படாது ‘செனட் சபை’ என்னும் மூதவை மூலம் கொல்லைப்புறம் வழியாக அமைச்சரானபடியால் 1970 தேர்தலில் போட்டியிடாது வந்த வழியே தப்பிக் கொண்டார்.

இந்த பாரதூரமான தோல்விகளுக்குக் காரணம் இந்த இரு கட்சிகளும் ஐ.தே.க. அரசுடன் இணைந்து தமிழ் மக்களுக்குத் துரோகமிழைத்தது மட்டுமல்லாமல், வட பகுதி தமிழ் மக்களில் மூன்றிலொரு பிரிவினரான தாழ்த்தப்பட்ட மக்கள் இக்காலகட்டத்தில் நடத்திய ஆலயப் பிரவேச, தேநீர்க்கடைப் பிரவேச, பொது இட சமத்துவப் போராட்டங்களை அடக்க முற்பட்டவையுமே.

தேர்தலின் பின்னர் சிறீமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு அமைந்ததைத் தொடர்ந்து அது நிறைவேற்ற எண்ணிய வேலைத்திட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அமைவும் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றது.

வட பகுதியில் அக்காலகட்டத்தில் இயங்கிய மக்கள் நலன் மீது அக்கறையும், செல்வாக்கும், தீர்க்கதரிசனமும், திறமையும் வாய்ந்த இடதுசாரித் தலைமைகளும், பிற ஜனநாயக சக்திகளுமே இதற்குக் காரணம்.
(அமுது – 2001 ஜனவரி இதழ்)

  • தொடரும்…..