அவை கால ஓட்டத்தில் ஒரு வாசிக சாலைகளாக மாறி வாசகர் சாலை என்றளவிற்கு பரிணாமம் அடைந்தன என்பதே நாம் எமது ஊர்களில் கண்டு வந்த காட்சிகள். ஒரு வலுவான சமூக அமைப்பாக இவை செயற்பட்டன. இன்று சில இடங்களில் செயற்படுகின்றன. புதிய இலத்திரனியல் தகவல் பரிமாற்றம் இவற்றிற்கான கூடல்களை சற்று தற்போது குறைத்திருக்கின்றது என்பதை மறுப்பதற்கும் இல்லை.
வாசிக சாலை என்றால் அங்கு வாசிப்பதற்கு புதினங்களை அறிவதற்கு தினசரி பத்திரிகைகள் கிழமை மாத சஞ்சிகைகள் என்று பலவும் உள்ள வாங்க வேண்டிய தேவையும் ஏற்பட்டன. இதன் தொடர்சியாக புதினங்களை தாங்கி கதைப் புத்தங்கங்களும் அதனைத் தொடர்ந்து மாணவர்கள் பயன்படுததும் அறிவியல் நூல்கள் என்ற உசாத்துணை நூல்கள் என்றும் பரிணாமம் அடைந்தவையே இந்த சனசமூக நிலையமாக இருந்து வாசிக சாலையாக மாறிய இடங்கள்.இதனால் இந்த வாசிக சாலைகள் எங்கள் வாழ்வில் பண்பாட்டில் கலாச்சாரத்தில் உணர்வில் உயிராக கலந்து விட்டது என்பதே உண்மை.
நாம் வாழும் பிரதேசங்களைத் தாண்டியும் இந்த வாசிக சாலைகளை ஒரு பொக்கிசமாக மரியாதைக்குரிய இடமாக ஏன் அடையாளமாக மாறிய வரலாற்றையும் கொண்டவர்கள் நாம்இதன் ஒரு தொடர்ச்சிதான் யாழ்ப்பாணத்தில் முற்ற வெளிக்கு அண்மையில் முன்னியப்பர் கோவில் சூழலில் சுப்ரமணியம் பூங்கா எதிரில் அமைந்திருக்கும் யாழ்ப்பாண நூலகத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த வாசக சாலையிற்கு சனசமூக நிலையத்திற்கு நூலகத்திற்கு என ஒரு நீண்ட வரலாறு உண்டு.இது ஒரு வாசிக சாலைக்கு அப்பால் இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று அடையாளங்களை அதற்கான ஆவணங்களை தனக்குள் சேகரித்து தாங்கி உயர்ந்து நின்றது. இதற்காக பல அறிஞர்களும் பொது மக்களும் தமது உழைப்பை பங்களிப்பை செய்தனர் அது பற்றிய சிறிய குறிப்பு…..
யாழ்ப்பாணப் பொது நூலகத்திற்கான கரு… யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த கே. எம். செல்லப்பா என்னும் ஆர்வலரொருவரால் உருவாக்கப்பட்டது. நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில், சில நூல்களுடன் இவர் நடத்திவந்த நூல் நிலையமே இது. இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், செல்லப்பா அவர்களும் வேறு சில பிரமுகர்களும் இணைந்து செயல்பட்டு, இந்த நூல் நிலையத்தை யாழ் நகரின் மத்தியில் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் இதற்கென வாடகைக்குப் பெறப்பட்ட ஒரு சிறிய அறையொன்றுக்கு மாற்றினார்கள்.
அக்காலத்தில் சில நூறு நூல்களே இங்கிருந்தன.1936க்குப் பின்னர், நூலகம் யாழ் நகரசபையிடம் கையளிக்கப்பட்டு, யாழ்ப்பாணக் கோட்டைக்கு அருகே, புதிதாகக் கட்டப்பட்ட நகர மண்டபத்துக்கு அண்மையிலுள்ள இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. யாழ்ப்பாண மாநகரசபை அந்தஸ்துக்குத் தரமுயர்த்தப்பட்டுப் புதிய சபை பதவியேற்றபின், இந்த நூலகத்துக்கான புதிய கட்டிடமொன்றைக் கட்டும் முயற்சிகள் 1952ஆம் ஆண்டு ஆனி மாதம் 14ஆம் திகதி சாம் ஏ. சபாபதி அவர்களின் தலைமையில், நடைபெற்ற ஒரு மாநாட்டினை அடுத்து ஆரம்பிக்கப்பட்டன.
பல்வேறு வழிகள் மூலம் இதற்கான நிதியைத் திரட்ட எடுத்த முயற்சிகள் பெரு வெற்றிபெற்றதாகச் சொல்லப்படுகிறது. புதிய நூலகக் கட்டடத்தை அமைப்பதில் அதி வண பிதா லோங் அவர்கள் மிகுந்த அக்கறை காட்டி வந்தார். அவர்களது முயற்சியின் மூலம் நூலகத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த கலாநிதி எஸ். ஆர். ரங்கநாதன் அவர்களின் ஆதரவும் கிடைத்தது.நிறுவனத்துக்கான அடிப்படைகளைத் தீர்மானித்து வழிநடத்தும் நோக்கில், அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த பல கல்வியாளர்களையும் பிரமுகர்களையும் உள்ளடக்கிய குழுவொன்று 1953 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
இக்குழு இது தொடர்பில் இந்திய நிபுணர்களினதும் உதவிகளைப் பெற்றுக்கொண்டது. இதற்கான கட்டிடத்தை வடிமைக்கும் பணியும் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் நரசிம்மனிடம் ஒப்படைக்கப்பட்டது. திராவிடக் கட்டிடக் கலைப் பாணியைத் தழுவி இரண்டு தளங்கள் கொண்ட அழகிய கட்டிடமொன்றை இவர் வடிவமைத்தார்.
கட்டிடத்தை இரண்டு கட்டங்களில் கட்டி முடிக்கத் தீர்மானித்து, முதற்கட்டமாக கட்டிடத்தின் முன்பகுதிக்கான அடிக்கல் 1953 மார்ச் மாதத்தில் நாட்டப்பட்டது. 1959 அப்போது யாழ்ப்பாண மேயராக இருந்த அல்பிரட் துரையப்பா நூலகத்தின் திறப்பு விழாவை நடத்தினார்.
கல்வியின் அறிவியலின் தேடலின் பண்பாட்டின் அடையாளத்தின் நிறமாக வெள்ளை வெளேர் என காட்சியளித்த இந்த நூலகம் சாதாரணமாக தீ வைத்து கொழுத்துதல் என்பதால் அழிக்கப்பட கூடிய கட்டக் கலையை தன்னகத்தே கொண்டிருக்கவில்லை. இதனை எரிக்க வேண்டின் இதற்குள் இருக்கும் புத்தங்கள் ஓலைச் சுவடிகள் வரலாற்று ஆவணங்கள் பெரும் தொகையாக எரிக்கப்பட்டாலேயே இது சாத்தியம் ஆகும்.
உண்மையில் எரியூட்டப்பட்டு அழிக்க முற்பட்ட சிமெந்து கட்டடத்தின் அத்திவாரமே ஆட்டம் கண்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் எவ்வளவு காகிதங்கள் இங்கு எரிக்கப்பட்டிருக்கும் என்று இதில் இருந்து இதற்குள் இருந்து நூல்களை பற்றி அதன் தொகை பற்றி அறியவும் முடியும்.எவ்வாறு எமக்கு கிராமங்கள் தோறும் சன சமூக நிலையமாக வாசிக சாலையாக எமமுடன் கலந்து உணர்வு இந்த யாழ் நூலகம் என்ற வகையில் எம் உணர்வுகளுடன் கலந்து உயிராக இருந்திருக்கும் என்பதில் ஐயம் இருக்காது.
இதன் எரியூட்டல் எமது உயிரை உணர்வை பண்பாட்டை அடையாளத்தை எரியூட்டியதாகவே தமிழ் பேசும் மக்களால் ஏன் முழு இலங்கை மக்களாலும் மனிதர்களாலும் பார்க்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயம் இல்லை. 40 வருடங்கள் தாண்டியும் எம் மனதில் எரியும் தணலாக.கொழும்பில் பிரிட்டிஸ் கவுன்சில் நூலகத்தின் ஒருவர் அங்கத்துவர் என்று சொல்வது ஒரு சமூக அந்தஸ்தை வெளிப்படுத்தும் உணர்வாக இருந்தாலும் யாழ் நூலகத்தில் எனக்கு உறவு இருக்கின்றது ஒரு உணர்வாக வாழ்வாக தான் சார்ந்த தேசிய இனைத்தின் அடையாளமாக உணரப்பட்டதை நாம் புரிந்தே கொள்ளவேண்டும்.
இந்த கொடிய செயலை ஜேஆர் ஜெயவர்தனாவின் ஆட்சியில் நடைபெற்றது….
ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அரசின் பிரதான அமைச்சர்களான காமினி திசாநாயக்க, சிறில் மத்தியு தலைமையில் மே 31ஆம் திகதி 300 பேர் கொண்ட காடையர் குழு ஒன்று யாழ்ப்பாணத்தில் வந்து இறங்கியது. தமிழ் மக்களை இனவாத ரீதியாக அச்சுறுத்தும் எண்ணத்தையும் கொண்டிருந்தது. அவர்கள் ஜுன் 01 ஆம் திகதி இரவு யாழ் நகரிலிருந்த மதுபானக் கடைகளை உடைத்து மது அருந்திவிட்டு தமது காடைத்தனத்தை ஆரம்பித்தனர்.
முதல் நாள்(மே 31) மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலில் நடந்த அனர்த்தங்களை காரணமாக முன்நிறுத்தியே இது செய்யப்பட்தாக மடை மாற்ற முயல்கின்றனர். ஆனால் இது உண்மையில்லை. ஏற்கனவே திட்டமிடப்பட்ட விடயம் இது.
யாழ்ப்பாண பொது நூலகம், ‘ஈழநாடு’ பத்திரிகைக் காரியாலயம், யாழ் நகரிலிருந்த பழைய சந்தை, யாழ் பஸ் நிலையக் கடைகள், யாழ் எம்.பி. யோகேஸ்வரனின் வீடு, நாச்சிமார் கோயில் தேர் என்றும் மறுதினம் சுன்னாகம் சந்தையில் தமது கை வரிசையைக் காட்டினர்.
‘மே 31ஆம் திகதி இரவே, நூலகம் எரிக்கப்பட்டது’ என்ற தகவல், இன்று ஆழப் பதிந்துள்ளது. ஆனால், ஜூன் மாதம் முதலாம் திகதி இரவே, யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது. பொதுத்தளத்தில் அது, மே 31ஆம் திகதி என்று, இன்றும் பதியப்படுகிறது.
மே 31ஆம் திகதியே யாழ், நூலகம் எரிக்கப்பட்டது என்று சொல்வோர் வைக்கின்ற வாதம், அதனோடு சேர்த்து ‘ஈழநாடு’ பத்திரிகையும் எரிக்கப்பட்டது என்பதாகும். ஆனால், யாழ்ப்பாண நூலகத்தோடுதான் ‘ஈழநாடு’ பத்திரிகை அலுவலகமும் எரிக்கப்பட்டது.
சிலர் வாதிடுவது போல, அது 31ஆம் திகதி இரவாக இருந்திருந்தால், ஜூன் முதலாம் திகதி பத்திரிகை அச்சாகி வெளியாகியிருக்காது. ஆனால், ஜூன் முதலாம் திகதி ‘ஈழநாடு’ வெளியாகியிருக்கிறது. அதில், யாழ்நகரில் நடந்த கொடுமைகள் பதிவாகியுள்ளன. ஜூன் ஆறாம் திகதி மீண்டும் ‘ஈழநாடு’ வெளிவந்தது. அதில், ‘கடந்த சில நாள்களாகப் பத்திரிகையைக் கொண்டுவர இயலாமைக்கு வருந்துகிறோம்’ என்ற குறிப்பும் இருக்கிறது.
யாழ்ப்பாண பொது நூலகம், ‘ஈழநாடு’ பத்திரிகைக் காரியாலயம், யாழ் நகரிலிருந்த பழைய சந்தை, யாழ் பஸ் நிலையக் கடைகள், யாழ் எம்.பி. யோகேஸ்வரனின் வீடு, நாச்சிமார் கோயில் தேர் என்றும் மறுதினம் சுன்னாகம் சந்தையில் தமது கை வரிசையைக் காட்டினர்.
கொழும்பை மையப்படுத்தி வரும் தமிழ் தினசரி பத்திரிகைகள் மத்தியில் அன்றைய காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி தமிழ் மக்ளுக்காக வெளிவந்த ஒரே ஒரு தினசரி பத்திரிகை ஈழநாடு. அதுவும் சபாரத்தினம் போன்ற தேர்ந்த பத்திரிகையாளர் ஆசிரியரைக் கொண்டு வெளிவந்த அந்த காலங்கள் மகத்தானவை.
பலவேறு விமர்சனங்களுக்கு அப்பாலும் ஈழத் தமிழர்களின் அடையாளமாக யாழ்ப்பாணம் இருந்ததது என்பதுவும் அதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி வெளிவந்த ஈழநாடும் தனது பெயரில் மாத்திரம் அல்ல செயற்பாட்டிலும் எங்கள் பத்திரிகை என்ற உணர்வை ஏற்படுத்தியே இருந்தது. அதனாலேயே இந்தப் பத்திரிகை காரியாலயமும் எரிக்கப்பட்டது.
கூடவே விவசாயத்தைiயும் கடற்தொழிலையும் பெருபான்மையான மக்கள் தமது தொழிலாக் கொண்டிருந்த ஈழத் தமிழர் சூழலில் விவசாய விளை பொருட்களை விற்பனை செயற்வதற்கு கிராமங்கள் தோறும் அமைந்திருந்து சந்தைகள் எங்கள் வாழ்வில் ஒன்றாக கலந்திருந்தன.
எங்கள் அம்மாக்களின் பண்டப் பரிமாற்றப் பொருளாதாரமும் சமூக உறவுகளை மேம்படுத்திய செயற்பாடுகளும் ஏன் முந்தனையிற்குள் பிள்ளைகளை அரவணைக்க தேவையான கைச் செலவு உருவாக்கத்தையும் இந்த கிராமிய சந்தைகளே அதிகம் செய்திருந்தன.இதனால்தான் குடும்பம் சமூகம் என்று உறவுகள் நன்றாக இறுகி பின்னிப் பிணைந்த ஒரு வாழ்வியலை எம்மால் அன்று கொண்டிருக்க முடிந்தது.
இடைத் தரகர் அற்ற பண்ட பரிமாற்றம் விற்பனை வாங்குதல் என்று நியாயவிலை இடமாகவே இந்த கிராமிய சந்தைகள் இருந்தன.அன்றைய காலத்தில் இந்த கிராமிய சந்தைகளுக்கு எல்லாம் தலமைச் சந்தையாக அடையாளப்படுத்தப்பட்டது சுன்னாகம் சந்தை என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். இதே அளவு இடக் கொள்ளவை உடைய பல நகரச் சந்தைகள் பொது சந்தைகள் இருந்தாலும் பெரிய சந்தை என்றால் அது சுன்னாகச் சந்தை என்பதே எல்லோராலும் உணரப்பட்ட ஒன்றாக இருந்தது.
அதனால்தான் எமது தொழில்களின் அடையாளமாக யாழ்ப்பாண விவசாயத்தின் பொருளாதாரத்தின் அடையாளச் சின்னமாக இருந்த சுன்னாகம் சந்தையும் எரியூட்டப்பட்டது.ஆழமாக பார்த்தால் புரியும் பெரும் தேசிய இனவாதத் ‘தீ’ அவர்களின் வேலைத் திட்டத்தின் படி சரியாகவே திட்டமிட்டு இலங்கையில் வாழும் பல மிக்க ஒரு தேசிய இனத்தின் அழிப்பை முழுமையாக செய்வது என்ற புறப்பட்ட செயற்பாடுகளே இந்த எரித்தல்கள ஆகும்.
யாழ் பல்கலைக் கழகத்தில் இறுதி ஆண்டில் கல்வியை தொடர்ந்து கொண்டிருந்த எனக்கு நன்றாக நினைவு இரு;கின்றது இந்த அனர்த்தங்கள் எரியூட்டல்கள் நடைபெற்ற அந்தத் தினங்கள்.சில தினங்கள் கடந்து சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக கொழும்பு பல்கலைக் கழக சுதந்திர மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் யாழ் பல்கலைக் கழகம் வந்தனர்.
இவர்களை எனது விடுதி அறையில் தங்க வைத்து யாழ் பல்லைகலைக் கழகத்தில் இருந்த ஒரே ஒரு வாகனமான ஜீப் ஒன்றை வாடகையிற்கு அமர்த்தி எரியூட்டப்பட்ட பகுதிகளுக்கு அவர்களை அழைத்துச் சென்று புகைப்படங்கள் எடுக்க செய்திகள் சேகரிக்க உதவிகளை செய்தோம்.
இதற்கு ‘சிங்களவன் வந்திருக்கின்றான்…” என்ற இனவாதக் கத்தல்கள் எம்மைப் போன்றவர்களுககு எதிராக எழுந்ததையும் மீறி எனது அறையில் அவர்களை தங்க வைத்து அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்து சேகரிகப்பட்ட ஆவணங்களுடன் அனுராதபுரம் வரை கொண்டு பத்திரமாகவும் அனுப்பி வைத்தோம்.
அவர்கள் தங்களால் சேகரிக்கப்பட்ட செய்திகள் புகைப்படங்களின் அடிப்படையில் அன்றைய நிலமையில் கொழும்பு பலகலைக் கழகத்தில் இலங்கை அரசின் செயற்பாடுகளை அம்பலப்படுத்திய செயற்பாட்டை இவ்விடத்தில் பதிவு செய்ய வேண்டி இருக்கின்றது.
இந்த சுதந்திர மாணவர் அமைப்பின் தலைவராக செயற்பட்ட தயா பத்திரன பிறிதொரு காலத்தில் ஜேவிபி மாணவர் அமைப்பினால் கொல்லாப்பட்டார் என்பதுவும் இந்த வரலாற்று சம்பவங்களுடன் பதிய விரும்புகின்றேன்.
இந்த ‘தீ’யிற்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் ஈழவிடுதலைப் போராட்டத்தில் இடதுசாரி சிந்தனைகளை தீயிட்டுக் கொழுத்திய சம்பவம் சிவப்பு புததகங்களுக்கும் நடைபெற்றன. தனி ஒரு இயக்கமாக செயற்படுதல் என்பதன் இறுதிக் கட்டமாக 1986 டிசம்பர் மாதம் இறுதியாக அரங்கேறி சம்பவங்களில் முக்கியமானது. இந்த சிவப்பு என்ற பொதுவுடமை கருத்துகளை அடங்கிய அறிவுக் களஞ்சியங்கள் புத்தகங்கள் யாழ் வீதி எங்கும் பெரும் அளவில் நல்லூர் வீதி ஈறாக எம்மில் ஒரு சாரரால் கொழுத்தப்பட்டன. இந்த ‘தீ’ உம் ஒரு பொதுவுடமை கருத்தியலை இல்லாமல் செய்யும் ஏகபோக சிந்தனையின் வெளிப்பாடுதான்.
நிலமைகள் மாற்றம் அடையை பெரும் போராட்டத்தின் பின்பு சர்வதேச கடும் கண்டனங்கள் எழுந்தன. யாழ் பொது நூலகத்தை சர்வ தேச உதவிகளால் மீண்டும் கட்டியமைக்கப்பட்டது. அரிய ஆவணங்கள் புத்தகங்கள் ஓலைச்சுவடிகள் ஏதும் இல்லாத நிலையில் தமிழ் மக்களின் அடையாளமானக உணர்வாக பண்பாட்டாக இதனை கட்டியடைத்து அதனைத் திறப்பதற்காக 2004 ஆம் ஆண்டில் திகதியும் குறிப்பிடப்பட்டது.
அன்றை யாழ் நகர் முதல்வர் செல்லையன் கந்தையன் திறந்து வைப்பதாக இருந்த நூலகம் இறுதியில் யாழப்பாண மேலாதிக்க சாதியத் ‘தீ” கொடுமையனால் திட்டமிட்டபடி திறக்கப்படாமல் தடுத்து நிறுதப்பட்டது.பெரும் தேசியவாதத்தின் ‘தீ’ சாதியத் ‘தீ’ என்று எல்லாவுமாக ஒரு அறவுக் களஞ்சியத்தை சின்னா பின்னாமாக்கியிருந்தாலும் வரலாறு ஒரு போது பின்னோக்கி நகருவதில் என்பதற்கு ஏற்ப பிறிதொரு தினத்தில் அது திறந்து வைக்கப்பட்டு இன்று எழுந்து நிற்கின்றது.
ஆனாலும் இதற்குள் பல்வேறு ‘தீ’ கள் கனற்று கொண்டுதான் இருக்கின்றன. அது பேரிவாதமாக… யாழ் மேலாதிக்கவாதமாக… சாதியமாக…. இவற்றை எல்லாம் கடந்து ஒரு பொதுவுடமையாக அறிவுக்களஞ்சியாக மனிதகுலத்திற்கான அறிவுத் தேடலை பூர்த்தி செய்யும் இடமாக யாழ் நூலகம் தொடர்ந்தும் விளங்க வேண்டும் என்பதே எமது அவா.