யாழ்ப்பாணம் பெயர்பெற்ற வரலாறு !

அதுகுறித்து இணையத்தில் தேடி சரிபார்த்தபோது சிறிய வித்தியாசத்துடன் ஒத்த சில செய்திகள் அவைகளிலும் இடம்பெற்றிருந்தது .எனினும் 1901 இல் நிலவி வந்த நம்பிக்கைகளை இந்த புத்தகத்தின் மூலம் தெரிந்து கொள்வது வரலாற்றின் சில பகுதியில் அறிமுகம் ஏற்படுத்திக்கொள்வது ஆகும். இப்போது அந்தபுத்தகத்தில் இடம்பெற்றுள்ள யாழ்ப்பாணம் குறித்த செய்திகளைக் காணலாம் .

கிறிஸ்துவுக்கு 544 வருடங்களுக்கு முன், இலங்கையை ஆண்ட விஜயராசன் என்பவன் மரபில் தோன்றிய உக்கிரசிங்கம் எனும் மன்னன் அப்போது சோழ நாட்டை ஆண்ட திசை உக்கிர சிங்க சோழனின் மகளான மாருதபுர வீகவல்லியை மணந்து இன்புற்றிருக்கும் போது அவர்களுக்கு, ஜெயதுங்கவர ராசசிங்கம் எனும் மகனும், சண்பகவதி எனும் மகளும் பிறந்தனர் .

தக்க வயது வந்ததும் மன்னனும் தனது மகனான ஜெயதுங்கவர ராசசிங்கத்திற்கு முடிசூட்டி மனமகிழ்வுடன் மறைந்தான் .

இந்த செய்தி சோழநாட்டிற்கு எட்டியதும், அங்கிருந்த புகழ்மிக்க ஒரு புலவரான அந்தக் கவி வீராகவன் இலங்கை வந்து அந்த மன்னன் மீது ஒரு காப்பியம் இயற்றி, அதை அரசவையில் யாழ் இசையுடன் சேர்த்துப்பாடினான்.

அந்த காப்பியத்தின் அழகிலும், யாழின் இனிமையிலும் மன்னனும் மற்றோரும் மகிழ்ந்தனர். இந்த காப்பியத்திற்கு பரிசாக அக மகிழ்ந்த மன்னன் மணற்றிடல் எனும் பகுதியை பரிசாக வழங்கினான். பின்பு யாழ் இசைத்து பரிசாகப்பெற்றதால் அந்தப்பகுதி யாழ்ப்பாணம் என்று பெயர் பெற்றதாம்.

பரிசுபெற்ற அந்த பாணனும் தமிழ் நாட்டில் இருந்து பல குடிகளை பெருவாரியாக அழைத்துவந்து குடியமர்த்தினான் .

இவனுக்குப் பிறகு திசை உக்கிர சிங்க சோழனனின் குடும்பத்தை சேர்ந்த சிங்கையாரியன் என்பவன் மன்னராகி பரம்பரைத் தொடர்ந்தது. அப்போது மிக அதிக பல்வேறு குடிகள் அங்கே குடியேறினர் .இவ்வாறு யாழ்ப்பாணம் உருவான கதை அந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது .

இணையத்திலும் கிடைக்கும் செய்தி யாழ்ப்பாண வைபவமாலையில் மயில்வாகனப்புலவர் “யாழ்பாடி” உடன் இணைத்துக் காட்டப்பட்டுள்ள கதை மரபின் அடியாக யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்த வரலாறென எடுத்துக் காட்டியுள்ளார். “அந்தகக்கவி” என்று அழைக்கப்பட்ட வீரராகவன் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து தனது யாழ் வாசிக்கும் திறமையால் மன்னரிடமிருந்து வடபகுதியிலுள்ள மணற்றிடறை பரிசாகப் பெற்று யாழ்ப்பாணம் என்ற பெயரையும் இட்டு தன்குடிகளை வருவித்து ஆட்சி நடத்தினான் என மயில்வாகனப்புலவர் குறிப்பிடும் ஐதீகம் நீண்டுசெல்கின்றது.

கி.பி 17 ஆம் நூற்றாண்டிற்குரிய திருமாணிக்குழிக் கல்வெட்டொன்றிலே தென்னிந்தியாவில் யாழ்ப்பாணம் என்ற இடப்பெயர் பொறிக்கப்பட்டுக் காணப்படுகின்றது.

இலங்கையில் எவ்விடத்திலேனும் யாழ்ப்பாணம் என்ற சொல்லாட்சி கல்வெட்டுக்களில் பொறித்திருக்கக் காணப்படவில்லை.

அருணகிரிநாதரின் திருப்புகழில் “யாழ்ப்பாணாயன் பட்டிணமேவிய பெருமாளே” எனக் குறிப்பிட்டுள்ளமையை காணக் கூடியதாக உள்ளது. அருணகிரிநாதர் வாழ்ந்த காலம் கி.பி 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டாரம்பம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள சோழன் திசை உக்கிர சிங்க சோழன் என்பவர் யார் என்பது ஆராயப்படவேண்டும் கிமு 544 வருட சோழ வம்சாவளி கண்டறியப்படவேண்டும் .இந்த கதையின் உண்மைத்தன்மைஅது உண்மையாகின் நிறுவப்படவேண்டும் .எனக்கு இது புதிய செய்தியாக இருந்ததால் இதை பகிர்கிறேன் .

(அண்ணாமலைசுகுமாரன்)

படம்: யாழ்ப்பாணத்தில் பிறந்த ராவ் பகதூர் சி . வை .தாமோதரம் பிள்ளை