யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 3 ஆம் திகதி முதல நாளை வரை நடைபெற்றி வரும் சர்வதேச திரைப்பட விழாவான JIFF இல் திரையிடப்படவிருந்த, கனடா வாழ் இலங்கை இலங்கைத் தமிழரான ஜூட் ரட்ணத்தின் “Demons in Paradise” திரைப்படம், இறுதி நேரத்தில் திரையிடப்படும் படங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றது. விதிக்கப்பட்ட தடை குறித்த உரையாடல்கள் பல தளங்களில் இடம்பெற்று வருகின்றன.
தமிழரின் போராட்ட வரலாற்றில் ஏற்பட்ட சகோதரப் படுகொலைகளைப் பற்றிப்பேசுவதோடு, புலிகள் இயக்கம் அழிக்கப்படவேண்டிதொன்றென்பதையும் அத்திரைப்படம் வலியுறுத்துகின்றதென்பதே தடையை ஆதரிப்போர் தெரிவிக்கும் கருத்து.
“Demons in Paradise” திரைப்படத்தை திரையிட விதிக்கப்பட்ட தடையை எதிர்த்தும், ஆதரித்தும் வௌியிடப்பட்ட கருத்துக்களை வாசகர்களுக்காகத் தொகுத்துத் தருகின்றோம்.
கலாநிதி சுமதி சிவமோகன்
( படத் தெரிவுக்குழு)
ஜூட் ரட்ணத்தின் திரைப்படம் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டமையை நான் கண்டிக்கின்றேன். அதற்காக திரைப்படவிழாவை புறக்கணிக்காதீர்கள். இது கண்டிக்கப்படவேண்டியதொரு முடிவுதான். அதற்காக புறக்கணிப்பு தீர்வாகாது. இது தனிநபர்கள் பற்றி விவாதமல்ல. யாழ் சமூகம் தன்னை கேள்வி கேட்க, மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் நான் சந்தித்தவர்களில் அனேகர் இத்திரைப்படம் நீக்கப்பட்டதை ஆதரித்தனர் என்பது மிகவும் கவலைக்குரியது.
ப. தெய்வீகன்
(எழுத்தாளர், ஊடகவியலாளர்)
தமிழ் ஆயுதக்குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற சகோரப்படுகொலைகளை பேசுகின்ற ஜூட் ரட்ணத்தின் ‘Demons in Paradise’ திரைப்படம் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச திரைப்பட நிகழ்விலிருந்து அகற்றப்பட்டது தொடர்பான சர்ச்சை வெடித்திருக்கிறது. காரணம் எதுவாக இருந்தாலும் Demons in Paradise திரைப்படம் அந்த நிகழ்விலிருந்து அகற்றப்பட்டது கண்டித்தக்கது. கேட்டவர்கள் யாராக இருந்தாலும் Demons in Paradise திரைப்படம் மீண்டும் நிகழ்வில் சேர்க்கப்பட வேண்டியதே படைப்பியலின் ஜனநாயகத்துக்கு நீதி சேர்ப்பது.
இங்கே, Demons in Paradise படத்துக்காக குரல் கொடுப்பவர்களில் சிலர் மிக நேர்மையாக படைப்பொன்றின் ஜனநாயக உரிமைக்கு குரல் கொடுக்கிறார்கள் என்பதை மறுக்கமுடியாது.
ஆனால், ஈழத்தின் எத்தனையோ படைப்புக்கள் பலவிதமான தடைகளுக்கு உட்டுபடும் போதும் நிராகரிப்புக்கு உட்படும்போதும் அவற்றை தங்கள் அரசியல் தராசில் போட்டுப்பார்த்துவிட்டு பொந்துக்குள் ஒளிந்திருந்த “போக்கிரிகள்” தற்போது நீதி – நியாயம் என்று விசிலடிப்பதை பார்க்கும்போது குபீர் குபீர் என்று சிரித்துவிட்டுப்போகலாம் போலுள்ளது.
முதலில், Demons in Paradise படமொன்றும் Big Boss நிகழ்ச்சியை தொகுத்து தந்திருக்கும் DVD அல்ல. அதிலிருப்பது அரசியல். ஆக, அந்தப்படத்தை அரசியல் உள்நோக்கத்துக்காக எதிர்க்கும்போது அதற்காக வக்காலத்து வாங்குபவர்கள் படைப்பியல் முகாமுக்குள் வந்து புகுந்து நின்றுகொண்டு குத்துது குடையுது என்று குழறக்கூடாது. அதையும் அரசியல் ரீதியாகவே கையாளவேண்டும். அந்த படம் பேசுகின்ற அரசியலுக்கு அருகில் நிற்கின்றவர்களுடன் இணைந்து நின்றுதான் போராட வேண்டும்.
இந்தப்படத்தை தடை செய்தமைகாக கொள்ளிக்கட்டையில் குழந்தையை போட்ட கணக்காக குழறுபவர்களில் முக்கால்வாசிப்பேர், மக்கள் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் குரல் கொடுப்பவர்கள் அல்ல.
கலைப்படைப்புக்களிலும் எல்லாவற்றுக்கும் குரல் கொடுப்பவர்கள் அல்ல. மக்களும் படைப்புக்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் தங்களுக்கு ஏற்ற அரசியல் கருத்து எங்கு உள்ளதோ அதற்கு மாத்திரம் தெரிவு செய்து குரல் கொடுப்பவர்கள். Selective activists, Selective demo seekers. இன்னொரு வகையில் சொல்லப்போனால், அந்த மக்களின் பிரச்சினைகளுக்காக போலிக்கண்ணீர் வடிப்பவர்கள்.
படைப்பை நிராகரிப்பது அல்லது தடைபோடுவது போன்ற எதேச்சதிகாரம் யாருக்கும் இருக்கக்கூடாது. இருக்கவும் முடியாது. அது எப்போதும் அடிப்படை ஜனநாயகத்துக்கு முரணானது. அப்படிப்பார்த்தால் எந்த ஒரு திரைப்படமும் எந்த ஒரு புத்தகமும் எந்தப்பாடலும் கூட வெளிவர முடியாது. ஒவ்வொரு படைப்பும் யாரோ ஒருவரை புண்படுத்திக்கொண்டு தானிருக்கும். மன உளைச்சலை கொடுத்துக்கொண்டுதானிருக்கும். ஆனால், சட்ட ரீதியாகவோ அல்லது சமூகமொன்றின் கூட்டு வெறுப்பின் அடிப்படையிலோ அப்படியானதொரு தடையை அல்லது நிராகரிப்பை குறிப்பிட்ட படைப்பின் மீது ஏற்படுத்தலாம் என்பது எனது நம்பிக்கை.
அது சம்பந்தப்பட்ட தரப்பினரைப்பொறுத்தது. மற்றும்படி, ஒரு படைப்பை நிராகரிப்பதற்கான சரியான – ஜனநாயக வழி – அதற்கு மாற்றான ஒரு படைப்பை முன்வைத்தலே ஆகும். இங்கு யாழ்ப்பாணத்தில் தற்போது நடைபறும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு திரைப்படங்களை தெரிவு செய்வது தொடர்பில் ஒரு குழு இருக்கிறது. அந்தக்குழுவின் கூட்டு முடிவின் பிரகாரமே திரைப்பட தெரிவுகள் நடைபெறுவதாக அறிகிறேன். அவர்கள் எப்படி செயற்பட வேண்டும் எதை உள்வாங்க வேண்டும் – நிராகரிக்க வேண்டும் என்ற எந்த கட்டளையையும் நாங்கள் போடமுடியாது. அது தொடர்பில் செயற்படுபவர்கள்தான் அந்தக்குழுவின் நீதி நியாயமான செயற்பாடுகள் குறித்து பேசவேண்டும்.
ராகவன்
(சமூக ஆய்வாளர்)
யாழ். திரைப்பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படமான Demons in Paradise எனும் திரைப்படத்தை திரையிடுவதில்லை என ஏதேச்சாரிகாரமான முடிவொன்று எடுக்கப்பட்டிருக்கிறது. பட இயக்குனர் அதற்கான காரணத்தை கேட்டு கடிதமொன்றை சமர்ப்பித்துள்ளார். ஏற்கெனவே தேர்வு விதிகளின் பிரகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு படத்தை ஒரு சிலரின் தூண்டுதல்களை கருத்தில் கொண்டு அப்படத்தை திரையிட மறுப்பது மிகவும் மோசமான நிலைப்பாடு. இவ்வாறான நிலைப்பாடு ஒரு அடக்கு முறை அரசின் தணிக்கை விதிகளை விட கேவலமானது. ஜனநாயகமற்ற ஒரு அரசு தனது இருப்பை காப்பதற்காக சில தணிக்கை விதிகளை கொண்டிருக்கும். அரசின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் படங்களை தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் தடை செய்யும். அதற்காற்கான காரணிகளை அது நியாயப்படுத்தும். ஆனால் அடக்குமுறை அரசை விட ஒரு மோசமான முடிவு இது.
சாத்திரி
(எழுத்தாளர்)
இந்தப்படத்தை கான் திரைப்பட விழாவில் சென்று பார்த்து அது பற்றி ஒரு விமர்சன பார்வையும் தினகரனில் எழுதியிருந்தேன். முதன் முதலில் தமிழில் வந்த விமர்சனம் அதுவாகத்தான் இருக்கும். ஜூட் ரட்ணதுடன் பல மணி நேரம் உரையாடியுமிருந்தேன். அப்போதெல்லாம் அவர் புலிகளைப்பற்றி கடும் விமர்சனங்களை வைக்கவேயில்லை, அதன் பின்னர் கனடாவிலும் இலங்கையிலும் திரையிட்டனர். யாரும் கவனிக்கவில்லை என்றும் சொல்லலாம் . ஆனால் திடீரென மக்கள் அழித்தாலும் பரவாயில்லை புலிகள் அழிய வேண்டும் என்கிற அவரது பி பி சி பேட்டியை படித்தபோது ஒரு பதிவும் போட்டிருந்தேன். அதன் பின்னர்தான் அதனை அனைவரும் திரும்பி பார்த்தனர். இப்போ யாழ். திரைப்பட விழா விலும் தடை என்றதும் அனை வரும் தேடி பார்ப்பார்கள் .
கிரிஷாந்
(எழுத்தாளர், சமூகச்
செயற்பாட்டாளர்)
படத்தின் இயக்குனர் ஜூட் ரட்ணம், ஏன் திரையிடல் நிறுத்தப்பட்டது என்பதற்கான காரணங்களை எழுத்து வடிவில் கோரி அனோமாவுக்கு எழுதிய கடிதம் ட்விட்டரில் வெளியாகியிருக்கிறது. அதில் அவரது தரப்பை அவர் முன்வைத்திருக்கிறார். அவரது கேள்விகளும் நியாயமானவை. அதற்கு பொறுப்பானவர்கள் நிச்சயம் பதிலளிக்க வேண்டும். ஆரம்பிக்கப்பட இருக்கின்ற விழாவில் படம் தடுக்கப்பட்டதற்கான இந்தக் கேள்வியை ஊடகங்கள் எழுப்ப வேண்டும். விழாக் குழுவிற்கு பதில் சொல்ல வேண்டிய தார்மீகமும் கட்டாயமும் இருக்கிறது.
திரைப்படம் திரையிடுவது மிக அவசியமான ஒன்று என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. அந்தப் படத்தை திரையிடுவதே ஜனநாயகமும் அறமும் என்பதே என் நிலைப்பாடு. இதைப் பார்க்கும் உரிமை எனக்கிருக்கிறது.
இளவாலை விஜயேந்திரன்
(கவிஞர்)
புலிகளை எந்தக் காரணத்துக்காக விமர்சித்தோமோ, அதே காரணங்களால் இவர்களையும் விமர்சிக்க வேண்டியுள்ளது. தாம் நினைப்பதைத் தவிர எல்லாமே பிழை என்று சொல்பவர்கள் இவர்கள். திரைப்படத்தைத் திரையிட்டு, அதன்பின் ஒரு விவாதத்தை நடாத்தினால், அது மிக ஆரோக்கியமான ஒன்றாக அமையும் வாய்ப்புள்ளது. ஒன்றைத் தடை செய்வது, இன்னொன்றைத் தடை செய்ய நியாயம் கற்பிக்கும் என்பதை நினைவு கொள்வோம்!
கருணாகரன்
(கவிஞர், ஊடகவியலாளர்)
Demons in paradise என்ற திரைப்படம் யாழ்ப்பாணம் சர்வதேசத் திரைப்படவிழாவில் திரையிடப்படுவதற்குத் தடுக்கப்பட்டிருப்பது தவறு என்பதை பின்னொருநாளில் தடுத்தவர்களே உணர்ந்து தலைகுனிவர். எதையும் தடுப்பதாலும் புனிதங்களைக் கட்டமைப்பதாலும் எதுவும் நடந்து விடுவதில்லை என்பது அனுபவம். மட்டுமல்ல, இன்று பெருகி வளர்ச்சியடைந்திருக்கும் தகவல் திறன்நுட்ப யுகத்தில் இந்த மாதிரியான தடைகள் என்பது கேள்விக்கும் கேலிக்குமுரியனவே. திரைப்பட விழாவில் தடுப்பட்ட சேதி இந்தப் படத்தைப் பார்க்கும் ஆவலைப் பல மடங்கு பலருக்கு உண்டாக்கும். அவர்கள் அதைத் தேடிப் பார்ப்பார்கள். ஆகவே தடை என்பது எதிர்விளைவுகளையே உண்டாக்குகிறது. இங்கே திரைப்பட விழாக்குழுவும் அதன் தலைவரும் தமக்கிருக்கும் அதிகாரத்தின் வழியே இந்த விடயத்தை அணுக முற்பட்டிருக்கின்றனர். அதிகாரத்துக்கு எதிராகச் செயற்பட வேண்டிய தரப்புகள் அதிகாரத்தைக் கட்டமைக்க முயற்சிப்பது தவறானது. கண்டனத்திற்குரியது.
ந. கேசவராஜன்
(திரைப்பட இயக்குநர்)
தென்னிலங்கையிலும் வெளிநாடுகளிலும் தன்னிச்சையாக திரையிட்ட ஜுட் ரட்னம் ஏன் இவ்வளவு காலம் யாழில் திரையிட நினைக்கவில்லை? அதை திவயின, தெரண ஊடகங்கள் கொண்டாடியதும், தெரண விருது இதற்குக் கிடைத்ததும் எந்தப் பின்னணியில் என்று புரிந்து கொள்ள முடியாத விடயமல்ல.
ஆனந்தா
படத்தைத் திரையிடுவதையோ பார்ப்பதையோ எவரும் தடுக்க முடியாது. ஜூட் ரட்ணத்துக்கு அதனைத் திரையிடுவதற்கான முழு உரிமையும் இருக்கிறது. யாழ்ப்பாணச் சர்வதேசத் திரைப்பட விழாவில் அதனைத் திரையிடுவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அந்த அமைப்புக்கு உண்டு. கடைசி நிமிடம் வரை அவ்வமைப்புக்கு தேர்வுக்கான உரிமை இருக்கிறது. மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்று சொன்ன (புலிகள் அழிவதல்ல இங்கு பிரச்சினை) ஒரு படைப்பாளியின் ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரம் பற்றிய அவருடைய பிரக்ஞை குறித்து சந்தேகப்பட ஒருவருக்கு உரிமை இருக்கிறது. அவ்வடிப்படையில் அவருடைய திரைப்படத்தை தனது பொறுப்பில் திரையிட மாட்டேன் எனத் தீர்மானிக்கும் ஜனநாயகபூர்வமான உரிமை ரகுராமிற்கு உண்டு. மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்று கூறுபவருடை ஜனநாயக உரிமையிலும் பார்க்க மக்களைப் பற்றி இவ்வளவு கீழ்த்தரமாக பொறுப்பின்றி கூறும் ஒருவருடைய திரைப்படத்தை தனது பொறுப்பில் திரையிட மாட்டேன் எனக் கூறுபவருடைய ஜனநாயக உரிமை விழுமியங் கொண்டதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமாகும்.
கற்சுறா (கவிஞர்)
நித்திய காலமும் அச்சத்துக்குள்ளாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழ்த் தேசியம் எப்போதுமே ஒற்றைக் கேள்விக்குக் கூடப் பயங்கொள்கிறது.
அந்த ஒற்றைக் கேள்வியையே அது துரோகம் என்கிறது. தமிழ் வீரம் காலம் பூராவும் துரோகத்துடனேயே கடந்து வருகிறது என அது இன்றும் அலற வேண்டியிருக்கிறது.
அது சொல்லும் வீரத்திற்கும் துரோகத்திற்கும் இடையில் இருக்கும் அளவை அது போதும் நிறுத்துப் பார்த்ததில்லை.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள், காட்டிக் கொடுத்தவர்கள், தலையாட்டிகள் என்று தனக்குரியதாக எந்தச் சொல்லைச் சொல்லும் போதும் அதற்கு இருவேறு அர்த்தங்களுக்கு மேல் இருக்கிறது என்பதனைத் தெரிந்து கொண்டதால் அது தொடர்ந்து அச்சத்துடனேயே வாழ நேர்கிறது. அதற்கு மற்றதைப் பார்க்க நேரிடும் போது அந்தக் கணமே நிராகரிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு அது காரணத்தைச் சொல்லத் தேவையில்லை.
பேசவிடாத தமிழரின் வீரமும் வாழவிடாத மாவீரமுமான கதைகளை மேலான காலங்களில் அது தொடர்ந்து கேட்கத்தான் வேண்டும்.
காதைப் பொத்திக் கொண்டாலும் கண்ணைமூடிக் கொண்டாலும் வரலாற்றை மூடமுடியாது.
Demons in Paradise திரைப் படத்தை நீங்கள் திரையிடமுடியாதுதான். உங்களால் ஒருநிமிடம் கூட குந்தியிருந்து பார்க்கமுடியாது.
சுகு ஸ்ரீதரன்
(தலைவர், தமிழர் சமூக
ஜனநாயகக் கட்சி)
நூலகம் பன்முக அறிவுக்கருவூலம். நூலகம் எரிப்பு கலாச்சாரப்படுகொலையால் நொந்து போனவர்கள் நாம். அதேபோல் பன்முக சினிமா. அது வெகுஜனங்களுடன் உறவுகொண்ட ஊடகம். பொதுவெளியில் இயங்கவிடாமல் நிறுத்த முயல்வதை எவ்வாறு அர்த்தப்படுத்துவது?
சோபாசக்தி
(எழுத்தாளர், திரைப்பட நடிகர்)
புலிகளை விமர்சிக்கும் படங்களைத் திரையிடக் கூடாதா! புலிகளை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லையா என்ன? மகத்தான கலைஞன் பிரசன்னா விதானகேயின் ‘ஓகஸ்ட் சண்’ படத்தில் யாழ். முஸ்லீம் இனச்சுத்திகரிப்பை உண்மைபடக் காட்சிப்படுத்திப் புலிகளை விமர்சித்திருப்பாரே! அந்தப் படத்தையும் நீங்கள் திரையிட விடமாட்டீர்களா? புலிகளை விமர்சிக்கும் படங்கள், நூல்கள், கவிதைகள், நாவல்கள், பத்திரிகைகள் எதையும் நீங்கள் அனுமதிக்கமாட்டீர்களா? எல்லாவற்றையும் மீள் பரிசீலனை செய்யவேண்டும், தோல்வியை ஆய்வு செய்ய வேண்டும், சுயவிமர்சனம் வேண்டும் என்று ஒருபக்கம் சொல்லிக்கொண்டே மறுபக்கம் ஜூட் ரட்ணத்தின் படத்தை வெளியிடக்கூடாது எனச் சொல்வதில் என்ன நியாயமிருக்கிறது. இல்லாத பொல்லாத எதையும் அவர் தனது ஆவணப் படத்தில் காட்டவில்லை. ராஜினி திரணகமவும் சி.புஸ்பராஜாவும் செழியனும் நிலாந்தனும் கருணாகரனும் சேரனும் ஜெயபாலனும் நானும் சொன்னவற்றில் ஒரு சிறு துளியை ஜூட் தனது படத்தில் காட்டியிருக்கிறார். அந்த உண்மையை முகத்துக்கு நேரே எதிர் கொள்ளுங்கள். கேள்வி கேளுங்கள். கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்!
படத்திற்கு வெளியே ஜூட் ரட்ணம் ஊடகங்களில் சொல்லிவருபவற்றில் பலருக்கு மாற்றுக்கருத்து இருப்பதாகத் தெரிகிறது. எனக்கே கூட அது இருக்கிறது. குறிப்பாக அவரது அண்மைய பிபிஸி செவ்வியில் எனக்குக் கடுமையான மாறுபாடு இருக்கிறது. அவற்றைப் பேச வேண்டுமென்பது வேறு, அவரின் படத்திற்கு தடை விதிப்பது வேறு. மாற்றுக் கருத்துள்ளவர்கள் திரைப்பட விழாவில் நேருக்கு நேரேயே அவரை விமர்சிக்கலாம். பாரிஸில் நடந்த திரையிடலில் நான் அதைத்தான் செய்தேன். சுயாதீன திரைப்பட விழாக்களின் பண்பே எதிர் விமர்சனங்களிற்கும் கேள்விகளிற்கும் அங்கேயே தளம் அமைத்துக்கொடுப்பதுதான். அதைவிடுத்து அவரின் படைப்பைத் தடை செய்வது அப்பட்டமான கருத்துரிமைக் கொலை!
இன்று ஜூட் ரட்ணத்திற்கு நடப்பது நாளை நமக்கெல்லாம் நிகழும். சனநாயகத்தை நேசிப்பவர்கள், குறிப்பாகத் திரைப்படக் கலைஞர்கள் தமது கடும் கண்டனங்களை யாழ் சர்வதேசத் திரைப்பட விழாக் குழுவினருக்குத் தெரிவிப்பதோடு ஜூட் ரட்ணத்தின் ஆவணப்படத்தை இந்த விழாவில் திரையிடப் பகிரங்கமாகப் போராட வேண்டும். நாலு பத்து வருடங்கள் நமது வாய்கள் தைக்கப்பட்டிருந்தன. அதை இப்போது திறக்காமல் எப்போதுதான் திறப்பது!
விழா கமிட்டியின் ஏனைய உறுப்பினர்களான கவிஞர் சேரன் உருத்திரமூர்த்தி, டாக்டர் சுமதி சிவமோகன், கலாநிதி பவித்ரா கைலாசபதி போன்றவர்களுக்கு கலாநிதி ரகுராமின் முடிவில் உடன்பாடு உள்ளதா? இது நிச்சயமாக ஒருபக்கச்சார்பான படமல்ல. இரு தரப்பு அநியாயங்களையும் ஆவணமாக்கியுள்ளது. உண்மைக்கு மாறாக ஒரு காட்சி இப்படத்தில் உள்ளதென விழாக் குழுவால் நிரூபிக்க முடியுமா?
சோமிதரன்
(திரைப்பட / ஆவணப்பட
இயக்குநர்)
Jaffna international film festival 2018/எந்தவொரு படைப்பும் தடை செய்யப்படுவதிலும் தடுக்கப்படுவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. அதேவேளை இயக்குனரிடம் கேள்வி கேட்டகவும் படைப்பை நிராகரிக்கவும் ஒவ்வொருவருக்கும் உரிமையிருக்கிறது.
அபத்தமான திட்டமிட்ட அரசியல் நோக்கோடு படைப்பின் பெயரால் நிகழ்த்தப்படும் கலைப் பிரச்சாரத்தை எதிர்க்கவும் சகலருக்கும் உரிமை உண்டு.
நான் தெரிந்து கொண்ட வகையில் யாழ்ப்பாணத் திரைப்படவிழா அஜந்த 14 அமைப்பினால் சில அனுசரணையாளர்களுடன் இணந்து நடைபெறும் சுயாதீன விழா. அவ்வாறானதொரு விழாவில் படங்களத் தேர்வு செய்வது அந்த அமைப்பின் உரிமை.
பெரும்பாலான விழாக்களில் திரைப்பட விழா இயகுனரே படங்களின் தேர்வுகள் தொடர்பான பொறுப்புக் கூறல் பாத்திரத்தை வகிப்பார். அதேபோல விழாக்குழுவின் தலைவரும் திரைப்பட விழாப் படங்கள் அதன் கருப்பொருள் நோக்கம் தேர்வு குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் உடையவரே. இங்கேயும் விழாவுக்காக ஒரு அனுசரணையாளர்களால் அனுப்பட்ட திரைப்பட பக்கேஜில் இருந்த படத்தை தேர்வுக் குழு திரையிடாமல் தவிர்த்திருக்கிறது.
உலகம் முழுவது உள்ள பெரும்பாலான திரைப்பட விழாக்கள் தமக்கான அரசியலையும் சொந்த நிகழ்ச்சி நிரலையும் கொண்டே இயங்குகின்றன.
அவர்களின் அரசியலுக்கும் நிகழ்ச்சி நிரலுக்கும் உட்பட்டே படங்களின் தேர்வும் விருதுகளும் இருக்கும். அவற்றை விமர்சிக்கும் உரிமை மட்டுமே நமக்கு உண்டு கேள்வி கேட்கும் உரிமை நமக்கில்லை.
ஜூட் ரட்ணம் என்ற கொழும்பு வாழ் தமிழர் எடுத்திருக்கும் படமும் கான்ஸ் திரைப்பட விழா வரை சென்றிருக்கிறது. ஜூட் ரட்ணம் பின்புலம் அரசியல் என்பவற்றைப் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமானதல்ல. அதே போல படத்தின் பிரதான கதை சொல்லி மனோரஞ்சன் தன் தரப்புக் கதையைச் சொல்லியிருக்கிறார். இப்படி ஒவ்வொருவருக்கும் நம் ஈழத் தேசத்தில் கதைகள் உண்டு.
எல்லாப்பக்கமிருந்தும் நீண்டிருந்த துப்பாகிகள் அந்த கதைகளைப் பேசவும் படைப்பாக்கவும் முடியதபடி சூழலைக் கடினமாகியிருக்கிறது.
இப்போதும் ‘சோக கந்தகமவின் ‘இனிஅவன்’ உள்பட ராணூவம் போர் குறித்த கதைக் களத்தை கொண்ட படங்களை எடுப்பதற்கு இருக்கும் அனுமதியும் வாய்ப்பும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒருவருக்கோ அல்லது வெளியே இருந்து செல்லும் தமிழருக்கோ இருக்குமா என்பது ஐயமே.
புருஷோத்தமன் தங்கமயில்
(பத்திரிைகயாளர்)
‘Demons in Paradise’ படத்தை, கொழும்பில் உள்ளகத் திரையிடலொன்றின் போது பார்த்திருந்தேன். அதன்பின்னர், ‘Demons in Paradise: மீட்க முடியாத குறைப்பிரசவம்’ என்கிற தலைப்பில் விமர்சனக் கண்ணோட்டத்தையும் எழுதி இருந்தேன். ஆனால், படைப்பாளியின் சுதந்திரம் மீதோ, வெளியீட்டுக்கான உரிமை சார்ந்தோ எந்த அச்சுறுத்தலும் விடுக்கப்படுவதை ஆதரிக்கவில்லை.
குறிப்பாக, ‘Demons in Paradise’ தமிழ்ச் சூழலில் காட்சிப்படுத்தப்பட்டு, அது முன்வைக்கும் ஒரு பக்க அரசியல் தொடர்பில், நியாயமான கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். அதுதான், தமிழர் அரசியல், இயங்குநிலை குறித்து வெளியாரும், வெளியாருக்கு இணக்கமானவர்களும் முன்வைக்கும் கீழ்மையான பார்வையை அகற்றம் செய்ய உதவும். ஆனால், தற்போது நிகழ்ந்திருப்பது என்ன?
யாழ். சர்வதேச திரைப்பட விழாவின் இயக்குநராக அனோமா ராஜகருண இருக்கிறார். விழாக் குழுவின் தலைவராக கலாநிதி எஸ்.ரகுராம், உறுப்பினர்களாக கலாநிதி சேரன் ருத்ரமூர்த்தி, கலாநிதி சிவமோகன் சுமதி உள்ளிட்ட கல்வியாளர்களும் இன்னும் சிலரும் இருக்கிறார்கள்.
திரைப்பட விழாவில், திரையிடப்பட வேண்டிய படங்கள் எவை என்பது தொடர்பில், இறுதித் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பெற்றவர்களாக இவர்களே இருக்கின்றார்கள்.
அப்படிப்பட்ட சூழலில், ஒவ்வொரு படத்தையும் தனிப்பட்ட ரீதியில் பார்வையிட்டு, அதன் தரம், தகுதி ஆராய்ந்து, இறுதிப்பட்டியலை வெளியிட்டிருக்க வேண்டும்.
படங்கள் பேசுகின்ற அரசியல், சமூக ஒழுக்கம் உள்ளிட்ட நிலைப்பாடுகளால் எழும் ஆதரவையும் எதிர்வினைகளையும் எதிர்கொள்ளும் தைரியமும் இருக்க வேண்டும். அதுதான், ஆக்கபூர்வமாக யோசிக்கின்றவர்களின் அடிப்படை.
இலக்கிய விழாக்கள், திரைப்பட விழாக்களின் அடிப்படைகளே சமூகத்தை முன்னோக்கி நகர்த்துவதுதான்.
அதுவும், போருக்குப் பிறகான சமூகமாகப் பெரும் பாய்ச்சலோடு முன்னோக்கிச் செல்ல வேண்டிய சூழலில், நிறைவான உரையாடல்கள் நிகழ்த்தப்பட வேண்டும்; ஜனநாயக ரீதியிலும் கருத்தியல் ரீதியிலும் மேல்நோக்கி எழுந்து வரவேண்டும்; அதன் ஒவ்வொரு கட்டங்களிலும் பங்களிக்க வேண்டிய பொறுப்பு, தமிழ்ச் சூழலில் கல்வியாளர்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் உண்டு.