யூன் 04ஆம் திகதி நடைபெறவிருந்த யாழ். மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் ஐ.தே.கவின் வெற்றிக்காக மோசடிகளில் ஈடுபடுத்தப்படவென அமைச்சர்கள் லலித் அத்துலத் முதலி, காமினி திசாநாயக்க ஆகியோரின் தலைமையில் தென்னிலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 300 வரையிலான குண்டர்கள் அன்றைய இரவு யாழ் நகரத்தை எரித்துச் சுடுகாடாக்கினார்கள். (நேரில் பார்த்தவர்கள் சிலர் வழங்கிய ஒரு தகவலின்படி ஐ.தே.கவைச் சேர்ந்த அன்றைய பொல்காவல எம்.பி. சுனில் ரஞ்சன் ஜெயக்கொடி தனது ஆதரவாளர்கள் சிலரை இந்தக் குண்டர்படையுடன் சேர்த்து பொல்காவல புகையிரத நிலையத்தில் வைத்து வழியனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது)
யாழ் இந்துக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டிருந்த இக்காடையர்கள் அன்றிரவு முதலில் யாழ் நகரில் கஸ்தூரியார் வீதியில் அமைந்திருந்த ‘சுப்பையா அன்ட் சன்ஸ்’ மதுபானக் கடையை உடைத்து மதுபானப் போத்தல்களை எடுத்து மூக்குமுட்ட மதுபானம் அருந்திய பின்னர் தமது கைவரிசையை ஆரம்பித்தனர்.
இக்காடையர்கள் அன்றிரவு யாழ் பொது நூலகம், ‘ஈழநாடு’ பத்திரிகைக் காரியாலயம், யாழ் நகரக் கடைகள், பழைய சந்தை கட்டிடத் தொகுதி, யாழ்ப்பாண எம்.பி. வெ.யோகேஸ்வரனின் வீடு (யோகேஸ்வரன் மயிரிழையில் உயிர் தப்பி பின் மதிலால் தப்பியோடிவிட்டார்), தமிழர் விடுதலைக் கூட்டணி காரியாலயம், யாழ் நகரில் அமைக்கப்பட்டிருந்த தமிழ் அறிஞர்களின் சிலைகள் என்பவற்றை எரித்தும் உடைத்தும் பெரும் களேபரத்தில் ஈடுபட்டனர். இந்தச் செயல்களில் ஈடுபட்ட காடையர்களுக்கு பொலிசார் பாதுகாப்பும் உதவியும் வழங்கினர். இவர்கள் செய்தவற்றை அமைச்சர்கள் லலித் அத்துலத் முதலியும், காமினி திசாநாயக்கவும் தாம் தங்கியிருந்த விடுதியில் நின்று பார்த்து ரசித்தனர்.
1933இல் ஒரு சில புத்தகங்களுடன் தனியார் கட்டிடம் ஒன்றில் சில நலன் விரும்பிகளால் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் பலரது முயற்சியால் கட்டி முடிக்கப்பட்டு நிறைவு பெற்ற யாழ் பொதுநூலகம் 1959இல் அப்போதைய யாழ் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா அவர்களால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. நூலகக் கட்டிடத்தை திராவிடக் கட்டிடக் கலையில் வடிவமைத்தவர் சென்னையைச் சேர்ந்த எஸ்.நரசிம்மன் ஆவார். பிரபல இந்திய நூலகர் எஸ்.ஆர்.ரங்கநாதன் கட்டிடத்தின் தரம் சர்வதேச தரத்துக்கு ஏற்றமாதிரி அமையும் பொருட்டு ஆலோசகராகப் பணிபுரிந்தார்.
இந்த நூலகம் ஐ.தே.க. காடையர்களால் எரிக்கப்பட்ட பொழுது பல நூறு வருடங்களுக்கு முந்தைய அரிய பனையோலைச் சுவடிகள் உட்பட 95,000 நூல்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவற்றில் இலங்கையின் பிரபல தத்துவவியலாளரும், கலைஞருமான கலாஜோதி ஆனந்த குமாரசாமி மற்றும் பிரபல அறிஞர் டாக்டர் ஐசாக் தம்பையா போன்றோரின் கையெழுத்துப் பிரதிகளும் இருந்ததாகவும் தெரிய வருகிறது.
1981 மே 31 நள்ளிரவு நடைபெற்ற இந்த மிலேச்சத்தனமான செயல்கள் ஐ.தே.க. அரசுகள் பதவியில் இருந்த காலங்களில் தமிழ் மக்களுக்கெதிராகத் திட்டமிட்டுத் தொடர்ந்து செய்து வந்த சிங்களப் பேரினவாதச் செயல்களின் தொடர்ச்சி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இதில் மிகவும் மோசமான செயல் என்னவென்றால், இந்த நாசகரமான செயல்கள் குறித்து அன்றைய தேசியப் பத்திரிகைகள் என வர்ணிக்கப்பட்ட பத்திரிகைகள் எவ்வித செய்திகளும் வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்ததுதான்.
இந்த நாசகாரச் செயல்கள் குறித்து 1981 யூலையில் நாடாளுமன்றத்தில் சிலர்
கேள்வி எழுப்பிய பொழுது ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்
டபிள்யு.ஜே.எம்.லொக்குபண்டார (இந்த இனவாதி பின்னர் இலங்கை நாடாளுமன்றத்தின்
சபாநாயகராகவும் பதவி வகித்திருக்கிறார்) பின்வருமாறு கூறியிருக்கிறார்:
“இந்த மண்ணில் தமக்கு எதிராகப் பாகுபாடு காட்டப்படுவதால் இது தமது
தாய்நாடு என அவர்கள் கருதவில்லை என்றால், பிறகேன் அவர்கள் இங்கு இருக்க
வேண்டும்? பாகுபாடு காட்டப்படாத தமது தாய்நாடான இந்தியாவுக்குச் செல்லலாம்
தானே? அங்கு உங்களது கடவுள்களும் கோயில்களும் உண்டு. அங்கே உங்களது
கலாச்சாரம், கல்வி, பல்கலைக்கழகங்கள் எல்லாம் இருக்கின்றன. அங்கு உங்கள்
தலைவிதியைத் தீர்மானிக்கும் எஜமானர்களாக நீங்கள் இருக்க முடியும்.”
இந்தக் கருத்துக்கள் ஒரு ஐ.தே.க. முக்கியஸ்தரின் கருத்து என்ற வகையில்,
அந்தக் கட்சி தமிழ் மக்கள் குறித்து கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு வேறு
விளக்கம் தேவையில்லை.
ஐ.தே.க. ஆட்சியின் போது நடந்த இந்த அட்டூழியங்களுக்கு அந்தக் கட்சியின் ஆட்சியில் எவ்விதமான இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை. ஆனால் ஜே.ஆர். ஜனாதிபதி பதவியிலிருந்து நீங்கி ஆர்.பிரேமதாச ஜனாதிபதியாக வந்த பின்னர், அவருக்கு எதிராக ஜே.ஆரின் விசுவாசிகளான லலித் அத்துலத் முதலியும், காமினி திசாநாயக்கவும் 1991இல் பதவி நீக்கம் செய்யும் (இம்பீச்மென்ற்) தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர முயன்றனர். அதனால் ஆத்திரமடைந்த பிரேமதாச, அந்த நேரத்தில் மட்டும் தனக்கு எதிராகச் செயல்படும் சிலர்தான் யாழ் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலின் போது யாழ் நூலகம் எரித்தது உட்பட அங்கு குழப்பங்களை விளைவித்தவர்கள் என மறைமுகமாகக் குற்றம் சாட்டினார்.
இந்தச் சம்பவங்கள் குறித்து 2006இல் கருத்துத் தெரிவித்த அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பின்வருமாறு கூறியிருக்கிறார்:
“யாழ் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலின் போது யாழ் நூலகத்தை
எரித்ததிற்கும், தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டதிற்கும், 1983இல் பெரிய அளவில்
இன வன்செயலைத் தூண்டி தமிழர்களைப் படுகொலை செய்ததிற்கும் ஐ.தே.க தான்
பொறுப்பேற்க வேண்டும்”.
இந்தச் சம்பவங்கள் பற்றி அமெரிக்காவின் கண்காணிப்புக் குழுவின் தலைவரும், சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைவருமான Orville H.Schell கூறுகையில், 1981 மே மற்றும் யூன் மாதங்களில் நடைபெற்ற கொலைகள் பற்றி சுதந்திரமான விசாரணை மூலம் தகவல் திரட்டுவதற்குச் சென்ற குழுவினருக்கு ஐ.தே.க. அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும், இவற்றுக்குப் பொறுப்பானவர்கள் இனங்காணப்பட்டு தண்டிக்கப்படவில்லை எனவும் கூறியிருக்கிறார்.
இந்த எரிக்கப்பட்ட நூலகத்தின் கட்டுமானப் பணிகள் சந்திரிக குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 2001இல் ஆரம்பிக்கப்பட்டு 2003இல் பூர்த்தி செய்யப்பட்டது. இதற்காக நாடு முழுவதும் மக்களிடமிருந்து வீட்டுக்கு ஒரு புத்தகமும், செங்கல்லும் சேகரிக்கப்பட்டது. இந்த இயக்கத்துக்கு தென்னிலங்கை மக்கள் மனமுவந்து உதவினார்கள். அதன் காரணமாக சுமார் 25,000 புத்தகங்கள் சேகரிக்கப்பட்டன.
இதில் விசேடமாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விடயம் என்னவென்றால், காலஞ்சென்ற இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பீட்டர் கெனமன் தன் வாழ்நாள் முழுவதும் சேகரித்த புத்தகங்களை அவர் இறந்த பின்னர் அவரது மனைவி யாழ் பொது நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கியமைதான். (அப்பொழுது இருந்த பிரதம நூலகர் எனது நண்பராகையால் கெனமனின் சேகரிப்பிலிருந்த பெறுதற்கரிய பல நூல்களை என்னால் பார்க்க முடிந்தது)
இந்த நூலகத்தை ஐ.தே.க. காடையர்கள் எப்படி எரித்து நாசமாக்கினார்களோ, அதே பாசிசத் தன்மையுள்ள செயல் புலிகளாலும் புனரமைக்கப்பட்ட நூலகத்தின் திறப்பு விழாவின் போது நிகழ்த்தப்பட்டது. அப்போது நூலகத்தை நிர்வகிக்கும் யாழ் மாநகர சபையின் முதல்வராக தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான செல்லன் கந்தையன் இருந்தார். அவரே நூலகத்தைத் திறப்பதாக இருந்தது. ஆனால் நூலகத்தைத் திறக்க முடியாதபடி புலிகள் அதன் சாவியை முதல்நாள் இரவு பறித்துச் சென்றுவிட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முதல்வர் செல்லன் கந்தையன் உட்பட மாநகர சபையின் 21 உறுப்பினர்களும் பதவி விலகத் தீர்மானித்ததால் திறப்பு விழா ஒத்தி வைக்கப்பட்டது.