காலம் – 23 ஆம் திகதி மார்ச் மாதம் 2018
நேரம் – மாலை 5 மணி
டுபாயிலிருந்து வந்த எமிரேட்ஸ் விமானசேவையின் EK 654 விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரை தட்டியது. வோஷிங்டனில் அமெரிக்க பிரதிநிதிகளுடன் இரண்டு நாள் பேச்சுக்களை முடித்துக்கொண்டு வந்திறங்கினார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் சர்வதேச விவகாரங்களை கையாள்பவருமான நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.
கடந்த தடவை யாழ்ப்பாணம் வந்திருந்தபோது விக்னேஸ்வரன் ஏறுப்பட்ட அம்மணி நிஷாவின் இடத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட தெற்காசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க பிரதிநிதியுடனான பேச்சுக்களையும் இன்னும் சில சந்திப்புக்களையும் நடத்திவிட்டு கொழும்பு வரவிருந்த சுமந்திரன் டுபாயில் விமானத்தை தவறவிட்டுவிட்டார். ஒருநாள் டுபாயிலிருந்துவிட்டு வந்த கையோடு நேராக கொழும்புக்கு சென்று நீலகண்டனின் அந்தியேட்டியில் கலந்துகொண்டார். பின்னர் கொழும்பிலுள்ள அவரது வீட்டில் இரண்டொரு சந்திப்புக்கள் நடைபெற்றன. சர்வதேச அரங்கில் தமிழர் விவகாரம் குறித்து பேசிவிட்டு, நாடு வந்து சேர்ந்தால் உள்நாட்டில் பெரிய அக்கினிப்பரீட்சை ஒன்று காத்திருக்கிறதே என்பதெல்லாம் அவருக்கு தெரிந்ததுதான். ஆனால், எந்த தடுமாற்றமும் அவரிடம் இருக்கவில்லை என்று நீலண்டனின்அந்தியேட்டி வீட்டில் அவருக்கு பக்கத்திலிருந்து சாப்பிட்டவரே சொன்னார். எல்லாம் அமைதியாகவே நடந்துகொண்டிருந்தது.
மறுபுறத்தில் மாவை யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருந்து தனது வியூகங்களின் ஊடாக காய்களை நகர்த்திக்கொண்டிருந்தார். இல்லை, பழம் ஒன்று காய்களை நகர்த்திக்கொண்டிருந்தது. அப்படியும் சொல்லலாம். பாவம் மாவை! பேஸ் புக் போராட்டங்களுக்காக எந்த முகாமிலும் பயிற்சி எடுக்காதவர். பேக் ஐடி பாசறைகளை இம்மியும் அறியாதவர். தெரிந்தது எல்லாம் மார்ட்டின் ரோட் வீடுதான். வீடே…….தான். அங்கு கதிரையின் மேல் சப்பாணி கட்டியிருந்து ஒவ்வொரு காய்களாக நகர்த்தி நகர்த்தி பேய்களை கலைத்துக்கொண்டிருந்தார். மார்ட்டின் ரோட் வீட்டிலுள்ள கதிரைகள் போல மேசையும் நல்ல பெலப்பு என்று போன கிழமை அங்கு போய் வந்த உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் சொன்னார்கள்.
கொழும்பு சந்திப்புக்களை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் போய் இறங்கினார் சுமந்திரன். எல்லோருக்கும் புரியும்படி சொல்லவேண்டும் என்றால், யாழ்ப்பாணம் போய் இறங்கினார் “சுத்துமாத்து” மந்திரன். அங்கு ஏற்கனவே நிகழ்தகவுகள் – ஆள்கூறுகள் – வரைபடங்கள் எல்லாவற்றையும் கீறி வட்டாரி, பாகைமானிகளோடு நின்றுகொண்டிருந்த மாவையை சந்தித்தார். கடந்த ஓரிரு வாரங்களாக நடந்துகொண்டிருக்கும் அனைத்து டிக்கிலோனா விளையாட்டுக்களையும் மாவை விலாவாரியாக விளங்க சொன்னார்.
இறுதியான ஓரிரு தொலைபேசி அழைப்புக்கள் மீதமிருப்பதாக சொல்லிய மாவையார், அவற்றையும் எடுத்து பேசினார்.
மாவையும் சுமந்திரனும் ஒருமித்து கூறிய ஒரு கருத்து –
“பெரும்பான்மை உறுப்பினர்கள் உள்ள சபைகளில் அந்தந்த கட்சிகளை ஆட்சியமைப்பதற்கு எதிர்த்தரப்புக்கள் அனுமதித்தால் ஏனைய அவைகளில் புரிந்துணர்வுடன் செயற்படுவதற்கு தமிழ் கூட்டமைப்பு தயார்”
இந்த உறுதிப்பாடானது பேச்சு நடத்திய அனைத்து தரப்பிடமும் திரும்ப திரும்ப தெரிவிக்கப்பட்டது. கட்சிகள் என்றால் ஈ.பி.டி.பி. உட்பட அனைத்து கட்சிகளும்தான். மக்கள் ஆதரவளித்த கட்சிகள் எவை வெற்றிபெற்றாலும் அவற்றுடன் பேச்சு நடத்துவதும் – அவற்றுக்கு நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தி அவற்றை ஆதரவான சக்திகளாக மாற்றுவதும்கூட அரசியல்தான். அவற்றில்தான் சாணக்கியம் இருக்கிறது. பேக் ஐடிகளில் சாணக்கியம் என்று ஒட்டிக்கொண்டால் மாத்திரம், சாணக்கியம் வராது.
ஆக, கூட்டமைப்பினரால் சொல்லப்பட்ட செய்திகளும் வலியுறுத்தப்பட்ட விடயங்களும் கட்சிகளுக்கு இடையில் சில தெளிவுகளை ஏற்படுத்தியது. இருந்தாலும் ஆர்னல்ட்டுக்கு எதிரான ரெமேடியஸின் தனிப்பட்ட பகை கடைசிவரை தீர்க்க முடியாத ஒன்றாகவே இருந்தது. கடைசியில் வாக்கெடுப்புவரை ஆர்னல்ட்டை விழுத்துவதற்கு ரெமேடியஸ் நுனிக்காலில் நின்றுகொண்டிருந்தார். ஆனால், அதற்கான ஏதுநிலை துப்பரவுக்கு இல்லை என்றவுடன் தனது நிலையிலிருந்து வாபஸ் பெற்றுவிடுவதாக அறிவித்துக்கொண்டார்.
முடிவாக –
புதிய தேர்தல் முறையின் கீழ் இம்முறை நடைபெற்ற உள்ளுராட்சி சபை தேர்தலில் மிகப்பெரிய அடியை நெஞ்சிலே வாங்கிய கூட்டமைப்பு, சொற்ப வாரங்களிலேயே தன்னை சுதாகரித்துக்கொண்டு குதிரை போல எழுந்து நின்றமைக்கு வரலாற்று சாட்சியாக இன்றைய வெற்றி அமைந்துவிட்டது.
அதேவேளை, கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சிபோலவும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு கிடைக்காத ஆதரவைக்கூட பெற்றுவிடுவோம் என்பதுபோல நிமிடத்துக்கு நிமிடம் அறிவிப்புக்களை வெளியிட்டுவரும் முகநூல் மாமணிகளின் தனிப்பெரும் கட்சியாகவும் திகழும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது –
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு முடியைக்கூட அசைக்கமுடியாது என்பது பின்னேரம் வந்த சாவகச்சேரி முடிவில் இன்னும் ஆழமாக தெளிவாகிவிட்டது.
யாழ். மாநகர சபை விவகாரத்தில், மக்கள் முன்னணியினர் கொஞ்சமாவது கிட்னியை பயன்படுத்தி கூட்டமைப்பினை வளைப்பதுபோல வளைத்திருந்தால், சாவகச்சேரியில் கூட்டமைப்பு நிச்சயம் விட்டுக்கொடுத்துப்போயிருக்கும். அதற்குரிய களநிலவரம் கடைசிவரை காணப்பட்டது. ஆனால், அன்று கஜேந்திரகுமார் என்ற ஒற்றை மனிதர் கூட்டமைப்பை விட்டு வந்ததுதான் தமிழீழ விடிவுக்காக போடப்பட்ட பிள்ளையார்சுழி என்று இன்னமும் திடமாக நம்புகிறவர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர். கூட்டமைப்பு மாத்திரம் இருந்திராவிட்டால் மகிந்த காலத்திலேயே ரொலக்ஸ் பாண் போல “ஒரு நாடு இரு தேசம்” – என்று கஜேந்திரகுமார் வெட்டி எடுத்துக்கொண்டு வந்து வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து தந்திருப்பார் என்று இன்னமும் கற்பூரத்தில் அடித்து சத்தியம் செய்பவர்கள் அவர்கள். அப்படியிருக்கும்போது இப்போது மாத்திரம் கூட்டமைப்பை அனுசரித்து குறைந்த பட்ச அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்கு அவர்கள் மண்டையை பயன்படுத்துவார்களா?
இல்லை.
கடைசிவரைக்கும் அந்த பேச்சுக்கே இடமிருக்காது. ஆக, கடைசிவரைக்கும் இப்படியே அருள்வாக்கு சொல்லிக்கொண்டு இருக்கவேண்டியது அவர்களது விதியென்றாகிவிட்டது.
அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டாம்நாள் பேச்சுக்களின்போது அமெரிக்க அதிகாரி ஒருவர், அதுவரை கேளாத முக்கியமான கேள்வி ஒன்றை சுமந்திரனை பார்த்து கேட்டார். அந்த கேள்வி இவ்வாறு அமைந்தது.
“தற்செயலாக மகிந்த ஆட்சிக்கு வந்தால், தமிழர் தரப்பினர் அவரது அரசாங்கத்தோடும் பேச்சுக்களை நடத்துவதற்கு தயார்நிலையில் உள்ளீர்களா” – என்றார்.
இதே கேள்வியை முன்னணியினரிடம் கேட்டிருநதால் மேசைக்கு மேலால் பாய்ந்து அதிகாரியை கடித்திருப்பார்கள்.
ஆனால், அந்த அதிகாரிக்கு பதிலளித்த சுமந்திரன் –
“சிறிலங்காவில் நடைபெறுகின்ற அனைத்து அரசியல் மாற்றங்களுக்கும் ஏதுவாகத்தான் எங்களது நகர்வுகளை முன்னெடுத்துவருகிறோம்” – என்றார்.
ஆம்!
அனைத்து மாற்றங்களுக்கும்!!
எனக்கு இன்னும் சந்தேகம், எப்படி இந்த மனுசன் டுபாயில் அந்த விமானத்தை மாத்திரம் தவறவிட்டார்..
(ப. தெய்வீகன்)