என்ன செய்வது சில சந்தர்ப்பங்களில் பலரும் உண்மைக்கு வெகு தூரத்தில், இருளில்தான் நிற்கிறார்கள். உண்மையைத் தெரிந்து கொண்டாலும் அதைத் தெரியாதவர்களைப்போல பாவனைப் பண்ணிக் கொண்டு நிற்கிறார்கள் என்று அந்த “முக்கிய பிரமுகர்” தனக்குள் எண்ணிக் கொண்டார். வேறு என்னதான் வழி?
ஆனால், புலிகள் இல்லாத ஒரு சூழல் வரப்போகிறது என்று சொன்ன அந்தப் பிரமுகர் அதற்கான நாட்களைத் துயரத்தோடு எண்ணிக் கொண்டிருந்தார். அவரைப்பொறுத்தவரை அது அவருடைய விருப்பத்திற்கு அப்பலானது. ஏனென்றால் அந்த நாட்கள் சாதாரணமாக வரப்போவதில்லை. பெரியதொரு ரத்தக்களரியை உண்டாக்கிக் கொண்டே வரும். மிகக் கொடுமையான அளவில் உயிர்ப்பலியை எடுத்தே தீரும். பேரழிவின் வழியாகவே அந்த நாட்கள் முளைவிடும் என்ற துக்கம் அவரைப் போட்டுலைத்தது. அதனால் தனக்குத் தெரிந்த வழியில் எல்லாம் அதைக் குறித்து எச்சரிக்கை செய்வதற்கு முயன்று கொண்டிருந்தார். தனக்கு நெருங்கியவர்களிடமெல்லாம் இதைப் பற்றிப் பேசினார். அன்றைய அந்தச் சூழலில் இப்படிக் கதைப்பதெல்லாம் அபாயமானதே. நம்பிக்கையைச் சிதைப்பதாக, எதிர்க்கதை கதைப்பதாகக் கருதப்பட்டு அவருடைய தலையையே கொண்டு போகக் கூடிய ஆபத்துக்குரியது. ஆனாலும் தானறிந்த உண்மையை எப்படி மறைப்பது? எப்படி அதை விழுங்குவது? அதனால் அவர் அதையிட்டுக் கவலைப்படவில்லை. அவருக்குத் தன்மீதான கவலையை விடச் சமூகம் அழிவின் விழிம்பில் நிற்கிறதே என்பதே பெருங்கவலையாக இருந்தது. எதை எப்படிச் சொன்னாலும் அதையெல்லாம் புரிந்து கொள்ள மறுக்கிற ஒரு தீய நம்பிக்கைச் சூழல் (மிகை நம்பிக்கை) அப்படி விளைந்து கிடந்தது. இந்த யதார்த்தம் அவரைத் தொடர்ந்தும் கலவரப்படுத்தியபடியும் கவலைப்படுத்தியபடியுமிருந்தது.
யதார்த்தம் என்பது எல்லாவற்றையும் விட வலிய விலங்கு. பல சந்தர்ப்பங்களிலும் நாம் அதை எந்த நம்பிக்கையாலும் எந்தக் கற்பனையினாலும் வெற்றி கொள்ள முடியாமல் போய் விடுகிறோம்.
பல சந்தர்ப்பங்களிலும் அறிவு முன்னுணர்த்துவதை நடைமுறைகளும் யதார்த்தமும் இலகுவில் ஏற்பதில்லை. ஆனால் நடக்கப்போவதையெல்லாம் அறிவினால் முன்னுணர்ந்தவருக்கு அதையிட்டுப் பெருந்துக்கமே சூழும். “அறிவு பெற்றவரெல்லாம் நோவுடையவர்” என்ற தேவவாக்குச் சொல்வதும் இதையே. எப்படியோ இப்பொழுது புலிகளின் அந்தப் பிரமுகரும் இல்லை. புலிகள் அமைப்பும் இல்லை. வரப்போதும் அபாயத்தையும் அழிவையும் அவர் முன்னுணர்ந்தாலும் அதைக் கடந்து செல்லக் கூடிய யதார்த்தம் அவருக்கு அமையவில்லை. அவருக்கு மட்டுமல்ல புலிகளுக்கும் அமையவில்லை. தமிழ்ச்சமூகத்துக்கும் அமையவில்லை. யதார்த்தம் என்ற விலங்கின் பசிக்குக் கொடுமையான வகையில் எல்லோரும் இரையானதே மிச்சம்.
இப்பொழுதும் நம்முன் சில யதார்த்தங்கள் உள்ளன. அவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், சரியாகக் கையாளாமல் நம்மை அவை பலியெடுக்குமா? பசியாறுமா? அல்லது நாம் அவற்றின் மீதேறி, அதை நம் வசப்படுத்தி, வரலாற்றை நம்முடைய பக்கமாகத்திருப்பி அமைக்கப்போகிறோமா என்பது நம்முடைய கையில்தான் உள்ளது. ஆம், நம்முடைய சிந்தனையிலேயே உள்ளது. இதற்கு வெறுவாயைச் சப்பிக் கொண்டும், வெறுங்கையைப் பொத்திக் கொண்டும் வித்தை காட்ட முடியாது.
புலிகளின் அந்தப் பிரமுகர் அப்பொழுது முன்னுணர்ந்ததைப்போல, சொன்னதைப்போல இன்றைய – நாளைய நிலைமைகளைக் குறித்து இப்பொழுது அங்கங்கே அபாய மணிகள் எச்சரிக்கை ஒலி எழுப்பிக் கொண்டேயிருக்கின்றன.
ஆனாலும் அதையெல்லாம் எவருடைய காதுகளும் கொள்வதாயில்லை. எல்லோரும் கேளாச் செவியர்களாகி விட்டனர். இப்படி ஒரு சமூகமே கேளாச் செவியர்களாகவும் காணா விழியுடையோராகவும் இருந்தால் அந்தச் சமூகத்தின் நிலை என்னாகும்?
இப்போது பாருங்கள், இன்னும் இரண்டு மாதங்களில் புலிகளும் யுத்தமும் இல்லாமல் போய்ப் பத்தாண்டுகள் முடியப்போகின்றன. பத்தாண்டுகள் என்பது சாதாரணமான கால அளவல்ல. ஒரு தசாப்த காலம். தென்னை வைத்திருந்தால் பத்து ஆண்டுகளில் நிறைகாய் காய்க்கும். பிள்ளையொன்று ஐந்தாம் வகுப்பில் படிக்கும். பத்து ஆண்டுகளில் உலகில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அறிவியலில், பொருளாதார நடவடிக்கைகளில், அரசியற்சூழலில் என எல்லாத் தளங்களிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஆனால், இலங்கையில்? அதுவும் தமிழ்ச்சூழலில்?
இந்தப் பத்தாண்டுகளிலும் எந்தவிதமான வில்லங்கங்களும் இல்லாத தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் தரப்பில் முன்னணி அரசியற்தரப்பாக இருக்கிறது. எந்தப் பக்கம் வளைத்தாலும் வளைக்கக் கூடிய நெகிழ்ச்சி மிக்க தலைமை. அந்தக் கூட்டமைப்பில் உள்ளவர்களின் வார்த்தைகளில் சிலவேளை சூடிருந்தாலும் நடைமுறையில், உள்ளியல்பில் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எதிர்த்தரப்பில், எதிர்க்கட்சியிலிருந்தாலும் எல்லாவற்றுக்கும் ஆமாம் என்று ஒத்தோடி, ஆதரளிக்கும் சிறப்புக்குணமே உள்ள அமைப்பு.
அப்படியிருந்தும் என்ன நடந்திருக்கிறது? எப்படியான முன்னேற்றமெல்லாம் ஏற்பட்டிருக்கிறது?
வடக்குக் கிழக்கில் யுத்த வடுக்களை அவசர அவசரமாக மறைக்க முற்படுகிற அரசாங்கத்துக்கு, இந்த ஊர்களிலும் நகரங்களிலும் பெருகிக் கிடக்கிற படையினரைக் குறைக்க முடியவில்லை. இங்கே நிலைகொண்டுள்ள படைகள் அப்படியேதான் உள்ளன. ஊர்களில் முகாம்களையும் தளங்களையும் வைத்திருப்பதற்கு நெருக்குவாரம் என்றால் கடலோரங்களிலும் காடுகளிலுமாக இடங்களை மாற்றி நிறைந்திருக்கிறார்கள். வன்னிக் காட்டில் யாரும் காலடியோ ஓரடியோ வைக்க முடியாது. அவ்வளவும் படைகளின் ஆட்சியில். “எங்களுடைய நிலங்களை விடுங்கள். வீடுகளைத் தாருங்கள்” என்று சனங்கள் படைகளின் வாசல்களில் மாதக்கணக்காகத் தவமிருக்கிறார்கள். யுத்தம் முடிந்து பத்தாண்டுகள் கடந்ததற்குப் பிறகும் படையினர் தங்களுடைய முற்றங்களில் நிலைகொண்டிருப்பது எதற்காக என்று சனங்களுக்கு விளங்கவேயில்லை.
இதைப்பற்றி யாரிடம் பேசுவது? அரசாங்கத்துக்கும் ஐ.நாவுக்கும் அனுப்பப்படும் மகஜர்களால் கொழும்பிலும் ஜெனிவாவிலும் ஒரு பெரிய கோட்டையே கட்டியிருக்கலாம். எந்தக் கோரிக்கைக்கும் எந்தப் பதிலும் இல்லை. எந்தத் தீர்வும் கிடையாது. அப்படியொரு கண்ணியம். அப்படியான மனிதநேயம்.
அரசியல் தீர்வோ எட்டாக்கனி. காணாக் கனவு என்றாகி விட்டது. அரசியலமைப்புத்திருத்தம் புரிந்து கொள்ளவே முடியாத ஒரு புகை மூட்டம்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்புச் சக்தியில்லாத வாய்ப்பை வைத்துக் கொண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு மேலும் தடிப்பைக் கூட்டுவதற்கு முயற்சிக்கிறது அரசு. கூடவே அங்கங்கே மளமளவென்று புத்தர் சிலைகளை அபிவிருத்தி செய்கிறது. எல்லாவற்றுக்கும் மருந்து இந்தப் புத்தர் சிலைகளிலிருந்து கிடைக்கும் என்று சொல்லப்போகிறார்களோ என்னவோ!
முன்பெல்லாம் எல்லாவற்றுக்கும் புலிகளையே தடைக்கற்களாகப் பழித்துரைப்பது இலங்கை அரசாங்கத்தின் இயல்பு. அரசியல் தீர்வுக்கும் புலிகள் இடைஞ்சல். அபிவிருத்திக்கும் தடை என்கிற மாதிரி. அப்படியென்றால் இப்போது என்ன பதிலைச் சொல்லப்போகிறது அரசாங்கம் Vs சிங்களத்தரப்பு? இப்பொழுது புலிகளே இல்லை. அதுதான் முன்பே சொன்னதைப்போல புலிகள் இல்லாமல் போய் பத்து ஆண்டுகளாகி விட்டது. அதாவது உங்கள் கையில் பத்து ஆண்டுகள். இந்தப் பத்து ஆண்டுகளிலும் என்ன மசிரைப் புடுங்கினீர்கள் என்று கேட்பதில் என்ன தவறு? இந்தக் கேள்வி இலங்கை அரசுக்கும் சிங்கள அதிகாரத் தரப்புக்கும் மட்டுமல்ல. ஒழித்துப் பிடித்து விளையாடும் சர்வதேச சமூகத்துக்கும்தான். ஏன் காலமெல்லாம் புலிகளை எதிர்த்துக் கொண்டிருப்போருக்கும்தான். எவ்வளவோ உலக அதிசயங்களையெல்லாம் நடத்துவதற்கிருந்தோம். ஒன்றுக்கும் புலிகள் விடவில்லை என்று கதை விட்டுக் கொண்டிருந்தது போதும். புலிகள் இல்லாமல் போய்ப் பத்து ஆண்டுகள் முடிகின்றன. இந்தப் பத்தாண்டுகளிலும் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? இன்னும் உறக்கம் கலைந்து எழுந்திருக்கவே இல்லையே என்றல்லவா கேட்கத் தோன்றுகிறது. சனங்கள் புதியதொரு சக்தியை, புதியதொரு கூட்டினை, புதியதொரு தலைமையை எதிர்பார்க்கிறார்கள். அதற்கு உங்களின் தலையைக் காட்டலாம் அல்லவா! அப்படிக் காட்டக்கூடிய அளவுக்கு ஒரு சிறியளவு புள்ளி அருக்கூட்டலாவது உங்களிடமுண்டா?
புலி எதிர்ப்பாளர்கள் மட்டுமல்ல, தீவிரப் புலி ஆதரவாளர்களையும்தான் இந்தக் கேள்வி சுற்றி வளைக்கிறது. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? புலிகளை விசுவாசிப்பதாக, தமிழ்த்தேசியத்தில் பற்றுக்கொண்டுள்ளதாக, இன விடுதலையில் பேரார்வமாகக் கதை விட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இதிலெல்லாம் உண்மையாகவே, விசுவாசமாகவே உங்களுக்கு ஈடுபாடிருந்தால், நம்பிக்கை இருந்தால் இந்தப் பத்து ஆண்டுகளிலும் நீங்கள் என்னவெல்லாம் செய்திருப்பீர்கள்? சனங்களோடு சேர்ந்து போராடி பல விடயங்களைச் சாதித்திருப்பீர்கள். அல்லது சனங்களுக்காகச் சிறையிலாவது இருந்திருப்பீர்கள். அப்படியெல்லாம் நடக்கவே இல்லையே. அதானால்தான் இந்தப் பத்து ஆண்டுகளிலும் புலிகளின் பேரால் என்ன செய்து கிழித்திருக்கிறீர்கள்? என்று கேட்கிறோம்.
இந்தக் கேள்வி சனங்களையும்தான் சுற்றி வளைக்கிறது. புலிகளும் போருமில்லாத இந்தப் பத்து ஆண்டுகளில் ஏன் எதுவும் நடக்கவில்லை? எதற்காக எந்தத் தீர்வும் கிட்டவில்லை. எல்லாவற்றுக்குமாக நீங்கள் தெருவிலே இறங்கிப் போராட வேண்டிய காரணமென்ன? இந்தக் கேள்வி என்னையும்தான் சுற்றி வளைக்கிறது.