அதுவும், ஐந்து வருடங்களுக்குள்ளேயே, ‘ராஜபக்ஷக்கள் எதிர் இன்னொருவர்’ என்கிற நிலையை, ஜனாதிபதித் தேர்தல் களத்தில் உருவாக்கி இருக்கிறார்கள்.
ஆட்சியில் இருக்கும் தரப்புக்கு எதிராக, வேட்பாளர்களைக் கண்டுபிடிப்பதும், அவரை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதும்தான், எப்போதுமே சிக்கலானது. ஏனெனில், எப்போதுமே ஆட்சியில் இருக்கும் தரப்பு, தங்களுடைய ஆட்சிக்காலம் பூராவும், அடுத்த வேட்பாளரை முன்னிறுத்தும் செயற்றிட்டங்களைச் செய்ய முடியும்.
ஆனால், இன்றைக்குத் தென் இலங்கையில் நிகழ்ந்திருப்பது தலைகீழானது. கோட்டாவுக்கு எதிராக யாரை நிறுத்தினால், வெற்றிபெற முடியும் என்கிற விடயத்தை, ஆட்சித் தரப்பான ஐக்கிய தேசியக் கட்சி, எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.
ராஜபக்ஷக்கள் தங்கள் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் கடப்பதற்கான ஒற்றை ஆயுதமாக, போர் வெற்றிக் கோசத்தை முன்வைக்கிறார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலில், போர் வெற்றிக் கோசத்தை தாண்டிய அதிருப்தி, ராஜபக்ஷக்கள் மீது நாட்டு மக்களுக்கு இருந்தது.
அது ஓர் அலையாக எழுந்த போது, ராஜபக்ஷக்களின் தோல்வி தவிர்க்க முடியாமல் போனது. ஆனால், இறுதிப்போர் முடிவுக்கு வந்து, பத்து வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், போர் வெற்றிக் கோசம், தென் இலங்கையில் தன்னுடைய தாக்கத்தை குறிப்பிட்டளவில் செலுத்திக் கொண்டே இருக்கின்றது.
அதற்கு, நூற்றாண்டு காலமாகப் புரையோடிப் போயிருக்கின்ற பௌத்த சிங்கள அடிப்படைவாத சிந்தனை, முக்கியமான காரணியாகும். அத்தோடு, ராஜபக்ஷக்களைத் தோற்கடித்துக் கொண்டு, ஆட்சி பீடமேறியவர்கள், செய்து முடித்திருக்க வேண்டிய வேலைகளைவிட்டு, தங்களது பலவீனங்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தமை, நாட்டு மக்களிடம் எரிச்சலை ஏற்படுத்திருக்கின்றது. அதுவே, ராஜபக்ஷக்கள் மீளெழுவதற்கான பெரும் சுவடாகவும் மாறியிருக்கின்றது.
கோட்டா, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு மறுநாள், அரச நிகழ்வொன்றில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, “…மஹிந்த ஆட்சிக் காலத்தில், இடம்பெற்ற கொலைகள், கடத்தல்கள் உள்ளிட்ட பாரிய குற்றங்களுக்காக ராஜபக்ஷக்கள், (குறிப்பாக கோட்டா) மன்னிப்புக் கோரிவிட்டார்களா…?“ என்றொரு கேள்வியை எழுப்பினார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் கால பிரசார மேடைகளில் ரணிலும் அவரது பரிவாரங்களும் ராஜபக்ஷக்களுக்கு எதிராக, என்னென்ன குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்களோ, அதனையேதான், எந்தவித மாற்றங்களும் இன்றி, ஐந்து வருடங்களுக்குப் பின்னரும், இப்போதும் முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
அந்தப் பாரிய குற்றங்கள் தொடர்பில், நீதியான விசாரணைகளை நடத்தி, குற்றவாளிகளைத் தண்டித்து, பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்க்கும் நீதியை வழங்கக் கூடிய அனைத்துச் சந்தர்ப்பங்களும் ரணிலுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் இருந்தது.
ஆனால், அதற்கான வாய்ப்புகளை எல்லாம் ஒத்திப்போட்டு, ராஜபக்ஷக்கள் மீதான குற்றச்சாட்டுகளை, அரசியல் ரீதியாக மாத்திரம் கையாண்டது ரணிலும் மைத்திரியும்தான்.
ராஜபக்ஷக்கள் நிகழ்த்திய குற்றங்களும் அதற்கான ஆதாரங்களும் இன்னமும் அனைவர் முன்னாலும் இருக்கின்றன. அப்படியான நிலையில், ரணில் மீண்டும் மீண்டும், பழைய பல்லவியைப் பாடுவது, அபத்தமான ஒன்றாகவே மக்களால் உணரப்படும்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், ராஜபக்ஷக்கள் வெற்றி பெறுவது, அவ்வளவுக்கு இலகுவான ஒன்றல்ல. ஆனால், அவர்கள் வெற்றிக்கு அருகில் வந்திருப்பதாக, தென் இலங்கையை நம்ப வைத்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட, அது என்னமாதிரியாகப் பிரதிபலிக்க ஆரம்பித்திருக்கிறது என்றால், ‘…ஆம் ராஜபக்ஷக்கள் நாட்டைக் கொள்ளையடித்தார்கள்; சர்வாதிகார ஆட்சி நடத்தினார்கள்; ஆனால், அவர்களால் நாட்டின் பாதுகாப்பும் ஸ்திரத்தன்மையும் காக்கப்பட்டது. பலவீனமான ஆட்சியாளர்களைக் காட்டிலும், சர்வாதிகாரி மேல்…’ என்கிற நிலைக்கு வந்திருக்கின்றது.
இந்த நிலை, படித்த, மத்தியதர வர்க்க சிங்களவர்களே, ராஜபக்ஷக்களை ஏற்றுக்கொள்வதற்கான நியாயப்படுத்தல்களாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அப்படியான நிலையில், பாமர மக்கள் ராஜபக்ஷக்களைக் கொண்டாடுவதற்கான காரணங்களைத் தேட வேண்டியதில்லை.
ராஜபக்ஷக்களின் கடந்தகால வெற்றிகளிலும் தோல்விகளிலும் ரணிலின் பங்கு கணிசமாக இருந்திருக்கின்றது. 2005ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், மஹிந்தவைக் கணிக்கத்தவறி, சில இலட்ச வாக்குகளில் ராஜபக்ஷக்களிடம் வெற்றியைக் கையளித்தார்.
அதுபோல், 2015இல் அவர்களிடத்தில் இருந்து வெற்றியைப் பறித்தெடுத்ததிலும் ரணிலின் பங்கு முதன்மையானது. இந்த முறையும், ராஜபக்ஷக்களின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் கட்டத்தில் ரணில் இருக்கிறார்.
கோட்டாவுக்கு எதிராகத் தகுதியான வெற்றி வேட்பாளரை, அவரின் சுயநல கட்டங்களைத் தாண்டி நின்று, ரணில் முன்மொழியவில்லை என்றால், அது பெரும் தோல்வியாகவே முடியும். அது, ஐ.தே.கவின் வரலாற்றுத் தோல்விகளுக்கும் மீண்டும் வித்திடும். எப்போதுமே, வெளியில் ராஜபக்ஷக்களும் ரணிலும் எதிரெதிர் துருவங்களில் நின்று அடித்துக் கொண்டாலும், தனிப்பட்ட ரீதியில் இணக்கமான நட்புறவைப் பேணுபவர்கள்.
ஐ.தே.க தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாஸவிடம் கையளிக்க வேண்டும் என்ற கோசம், 2010களுக்குப் பின்னராக பெருமெடுப்பில் எழுந்த போது, ரணிலைக் காப்பாற்றிவிட்டதில் மஹிந்தவின் பங்கு கணிசமானது. (குறிப்பாக, சிறிகொத்தாவில் ரணிலுக்கு எதிராகத் திரண்ட, ஐ.தே.க தொண்டர் படையை விரட்டியடித்து, ரணிலைக் காப்பாற்றினார் மஹிந்த)
அதுபோல, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதும், மஹிந்த உடனடியாகத் தேடியது, ரணிலையேதான். தன்னையும் தன்னுடைய குடும்பத்தினரையும் காப்பாற்றும் பொறுப்பை, ரணில் ஏற்றுக்கொள்வார் என்று மஹிந்த நம்பினார். இன்றளவும் அதை, ரணில் நிரூபித்து வந்திருக்கிறார்.
தற்போதும், தேர்தல் களத்தில் நேரடியாக மோதிக்கொள்வது போல, ரணில் காட்டிக் கொண்டாலும், ராஜபக்ஷக்களுடன், குறிப்பாக கோட்டாவுடன் இணக்கமான உறவொன்றை இரகசியமாகப் பேணும் கட்டத்தில், அவர் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
குறிப்பாக, ஜனாதிபதித் தேர்தலில் கோட்டா வெற்றிபெற்றால், தேசிய அரசாங்கமொன்றை அமைத்துக் கொண்டு, தான் மீண்டும் பிரதமராக முடியும் என்கிற எண்ணத்தின் போக்கிலும், அவர் காய்களை நகர்த்தி வருவதாகக் கூறப்படுகின்றது.
அதனூடாக, கட்சியின் தலைமைத்துவத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் தன்னால் தக்க வைக்க முடியும் என்றும் ரணில் நம்புகிறார். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பொறுப்பில், கால் நூற்றாண்டு காலம் இருந்திருக்கின்ற ரணிலால், அந்தக் கட்சியை, சுமார் ஏழு ஆண்டுகள் மாத்திரமே ஆட்சியதிகாரத்தில் (அதுவும் முழுமையாக அல்லாமல்) வைத்திருக்க முடிந்திருக்கின்றது. 18 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக, அதுவும் மிகவும் பலவீனமான எதிர்க்கட்சியாகவே வைத்திருந்திருக்கிறார்.
அப்படியான நிலையில், கட்சியின் தலைமைப் பொறுப்பைத் தொடர்ந்தும் பேணுவதற்காக, வெற்றியை ராஜபக்ஷக்களிடம் கையளிப்பதற்கும் தயாராகிவிட்டாரா என்கிற கேள்வி, ஐக்கிய தேசியக் கட்சியினரிடம் எழுந்திருக்கின்றது.
அதுதான், அவரின் வழக்கமான வாக்குறுதி, சமாளிப்புகளைத் தாண்டிய ஒரு நிலையை, கட்சிக்குள்ளும் கூட்டணிக்குள்ளும் எடுக்கும் கட்டங்களைத் தூண்டியிருக்கின்றது.
கோட்டாவைத் தோற்கடிக்கக் கூடிய பலத்துடன், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கும் ஒரே தலைவர் சஜித் என்பதே, கட்சித் தொண்டர்களின் நம்பிக்கை; தென் இலங்கையிலும் அதுவே உணர்நிலை.
அப்படியிருக்க, சஜித்துக்குப் பதிலாக இன்னொருவரை ரணில் முன்வைக்க முனைவதன் பின்னாலுள்ள செய்தி, சஜித் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றால், கட்சித் தலைமைத்துவம் எந்தக் கேள்விகளும் இன்றி, தன்னிடம் இருந்து பறிக்கப்பட்டுவிடும் என்பதாகும். அதன்போக்கிலேயே, இன்றைக்கு அவர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
கோட்டாவின் வெற்றி என்பது, போர் வெற்றிக் கோசத்தால் மாத்திரமல்ல, ரணிலின் சுயநல ஆட்டத்தாலும் நிகழ்ந்துவிடுமோ என்பதுதான், பொதுவான பார்வை.
கட்சியின் தலைமைத்துவத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, கட்சிக்குள்ளேயே ரணில் குழப்பங்களை ஏற்படுத்தி விட்டிருக்கின்றார். இன்றைக்கு, அது, ஊடக வெளியில் முட்டிமோதும் கட்டத்துக்கு வந்திருக்கின்றது.
ராஜபக்ஷக்கள் தேர்தலை வெற்றிகொள்ளும் வேலைத்திட்டங்களில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஒருவர் மீது ஒருவர், சேறடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால், தொண்டர்கள் சோர்வடைய ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனாலும், ஹரீன் பெர்னாண்டோ, அஜித் பெரேரா போன்ற இரண்டாம் தலைமுறைக்காரர்கள், ரணிலுக்கு எதிராக, சஜித்தை முன்னிறுத்தி, வெற்றியடைய வேண்டுமெனப் போராடுகிறார்கள்.
ஏனெனில், இன்னொரு தோல்வி என்பது, ஆட்சி அதிகாரங்களை அடையும் கட்டங்களில் இருந்து, தங்களை இன்னொரு பத்து வருடங்கள் விலத்தி வைத்துவிடும் என்று, அவர்கள் நம்புகிறார்கள். அதனால்தான், ரணிலைத் தூக்கியெறிந்துவிட்டு, சஜித்தை முன்னிறுத்தவும் அவர்கள் துணிந்தார்கள். அது, ‘கோட்டா எதிர் சஜித்’ என்கிற தேர்தல் களத்தை, இறுதி செய்யும் கட்டத்துக்கு வந்திருக்கின்றது.
அப்படியான நிலையில், இனிவரும் நாள்களில் கோட்டாவும் சஜித்தும் யார் உண்மையான பௌத்த சிங்களப் பேரினவாதி என்று நிரூபிக்கவே, போராட வேண்டியிருக்கும். ஏனெனில், அதுதான் இறுதி வெற்றியைத் தீர்மானிக்கப் போவதாக, அவர்கள் நம்புகிறார்கள்.