இந்திய அரசியலைப் பொறுத்தவரை, அண்மைய சில வாரங்கள், மிக முக்கியமானவையாக அமைந்துள்ளன. இன்றைய தினம் (21), தமிழகத்தின் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் இடம்பெறவிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர், குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகியவற்றின் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருந்தன. ஆர்.கே நகரைப் பொறுத்தவரை, தேசிய அரசியலில் பெரிதாகச் செல்வாக்குச் செலுத்தாத ஒரு தொகுதியாக இருக்கிறது. அதற்குப் பிரதானமான காரணமாக, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு, தமிழகத்தில் எப்போதும் வரவேற்பு இருந்ததில்லை என்ற அடிப்படையில், இத்தேர்தலிலும் அக்கட்சி தோல்வியடையும் என்பதில் மாற்றுக் கருத்துகளே இல்லை.மாறாக, பா.ஜ.கவின் ஆதிக்கம், மறைமுகமான ரீதியில் இங்கு காணப்படுகிறது என்பது தான், பொதுவான கருத்தாக இருக்கிறது. அதுவும், ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க), இரண்டாகப் பிளவுபட்டிருந்த போது, அக்குழுவை ஒன்றாகச் சேர்ப்பதில் பா.ஜ.கவின் கை இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன்படியே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்த்து நின்ற ஓ. பன்னீர்செல்வமும் ஓரணியில் சேர்ந்தது மாத்திரமன்றி, துணை முதலமைச்சராகவும் பன்னீர்செல்வம் மாறினார்.
ஆனால் இவற்றுக்கு மத்தியில், சசிகலா தரப்பு, தனியாகப் பிரிந்தது. சசிகலாவின் அக்கா மகனான டி.டி.வி தினகரனும், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். கருத்துக் கணிப்புகளின்படி, இணைந்த அ.தி.மு.கவுக்கு 35 சதவீதமானோரும், தி.மு.கவுக்கு 34 சதவீதமானோரும் ஆதரவு தெரிவிக்கின்றனர். சுயேட்சையாகப் போட்டியிடும் தினகரனுக்கு, 28 சதவீதமான ஆதரவு இருக்கிறது. எனவே, யார் வெற்றிபெறுவார்கள் என்பது, இதுவரை உறுதியாகாத ஒன்றாகவே இத்தேர்தல் காணப்படுகிறது.
இவையெல்லாம் ஒருபக்கமாக இருக்க, தேசிய ரீதியில் தாக்கத்தைச் செலுத்திய ஏனைய இரண்டு தேர்தல்களை ஆராய்வது பொருத்தமானது. ஒன்று, பா.ஜ.கவின் கோட்டையாகக் காணப்படும் குஜராத்தில் இடம்பெற்றது. 1995ஆம் ஆண்டு முதல், பா.ஜ.க ஆட்சியே குஜராத்தில் இடம்பெற்று வருகிறது. குறிப்பாக, 2001ஆம் ஆண்டில் குஜராத்தின் முதலமைச்சராகப் பதவியேற்ற நரேந்திர மோடி, 2002, 2007, 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்று, பா.ஜ.கவின் அசைக்க முடியாத கோட்டையாக, குஜராத்தை மாற்றியிருந்தார். பிரதமராக நரேந்திர மோடி மாறிய பின்னர் இடம்பெற்ற முதலாவது சட்டசபைத் தேர்தல் என்ற அடிப்படையில், இத்தேர்தல் முக்கியம் பெற்றது.
அதேபோல், 22 ஆண்டுகளாக பா.ஜ.க ஆண்டுவரும் நிலையில், ஆளுங்கட்சிகளுக்கு எதிராக வரும் எதிர்ப்பலை, குஜராத்தில் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. வழக்கமாகவே, ஆகக்கூடியது இரண்டு தடவைகள் ஒரு கட்சி ஆட்சி புரிந்த பின்னர், அக்கட்சிக்கெதிரான எதிர்ப்பலை எழுவது வழக்கம். எனவே, பா.ஜ.க மீதான எதிர்ப்புகள் எழுந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. அது மாத்திரமன்றி, காங்கிரஸ் சார்பிலும் அதிகபட்ச பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. எனவே, பா.ஜ.கவுக்கு அதிர்ச்சியேதும் கிடைக்குமோ என்று எதிர்பார்க்கப்பட்டது.
அடுத்ததாக இமாச்சலப் பிரதேசம், இன்னும் சிக்கலானது. அங்கு, காங்கிரஸ் ஆட்சியே நிலவிவந்தது. ஆனால், அதை காங்கிரஸின் கோட்டை என வர்ணிக்க முடியாது. கடந்த பல ஆண்டுகளாக, இரண்டு பிரதான கட்சிகளும் மாறி மாறி ஆட்சிபுரிந்து வந்த மாநிலமாக, இமாச்சலப் பிரதேசம் காணப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம், 2019ஆம் ஆண்டில் பொதுத் தேர்தலைச் சந்திக்க முன்னர், தமது பலத்தைச் சோதிக்கும் தேர்தல்களாக இவை கருதப்பட்டன. அவற்றை விட முக்கியமாக, இவ்வரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட முக்கியமான சில திட்டங்கள், பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. பெரும் எதிர்பார்ப்புகளுக்கும் எதிர்ப்புக்கும் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட பணப்பெறுமதியழிப்பு நடவடிக்கை, நன்மையளித்திருக்கிறது என்ற அரசாங்கம் திரும்பத் திரும்பக் கூறினாலும், சாதாரண மக்கள் அதை ஏற்பதற்குத் தயாராக இல்லை.
மாறாக, சில வாரங்களாக வீதிகளின் நின்று, தாம் பட்ட கஷ்டங்களை, அம்மக்கள் இன்னமும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே, பொதுவான கருத்தாக இருக்கிறது. அதற்கடுத்ததாக, பொருட்கள் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி), பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் கொண்டுவரப்பட்டது. வரித் திட்டத்தை இலகுவாக்கும் முறையில் கொண்டுவரப்பட்டது எனக் கூறப்பட்டது. ஆனால், இதன் விளைவாகப் பொருட்களின் விலைகள் அதிகரித்தன.
பொருளாதார நிபுணர்கள், ஜி.எஸ்.டி திட்டத்தை வரவேற்றாலும், சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
அதேபோல், நரேந்திர மோடியின் அரசாங்கக் காலத்தில், இனங்களுக்கிடையிலான அவநம்பிக்கையென்பது அதிகரித்துள்ளது என்பது, செய்தி அறிக்கைகள் மூலமாகப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. மாட்டிறைச்சி சாப்பிட்டார்கள், மாடு வெட்டினார்கள், மாடு கடத்தினார்கள் போன்ற காரணங்களைக் கூறி, சிறுபான்மையினத்தவர்கள் முக்கியமாக முஸ்லிம்கள் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் அதிகரித்திருக்கிறது. எனவே, இவையெல்லாவற்றையும் மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பது முக்கியமானதாகும்.
இவையெல்லாம் நரேந்திர மோடியின் பக்கமாக இருக்க, காங்கிரஸ் பக்கத்திலும் முன்னேற்றங்கள் அல்லது எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. இதுவரை காலமும் கட்சித் தலைவியாக இருந்த சோனியா காந்தி, உடல்நலக்குறைவு காரணமாகக் கட்சி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியிருக்க, உப தலைவரும் சோனியா காந்தியின் மகனுமான ராகுல் காந்தி, தேர்தல்களில் முழு வீச்சுடன் ஈடுபட்டார். அத்தோடு, தேர்தல் காலத்திலேயே காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கான “தேர்தல்” இடம்பெற்றது.
தேர்தல் என்பதை மேற்கோட்குறிக்குள் இடுவதற்கான காரணம், அது பெயருக்கு மாத்திரமே தேர்தலாக இருந்தது. தேர்தல் அறிவிக்கப்பட முன்னரே, ராகுல் காந்தி தான் தலைவர் என்பது உறுதியாகவிருந்தது. எனவே, கட்சிக்குள் புது இரத்தம் பாய்ச்சப்படுகிறது என்பது, வாக்காளர்கள் மத்தியில் ஈடுபாட்டை ஏற்படுத்துமென்றே எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையிலேயே, 182 தொகுதிகளுக்கான தேர்தலில், 99 இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க, தனது ஆட்சியை உறுதிப்படுத்தியது. காங்கிரஸுக்கு, 77 ஆசனங்கள் கிடைத்தன. சுயேட்சை வேட்பாளர்களுக்கு 3 ஆசனங்களும் பாரதிய பழங்குடிக் கட்சிக்கு 2 ஆசனங்களும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஓர் ஆசனமும் கிடைத்தன. இதில் காங்கிரஸ் தோல்வியடைந்தாலும், முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த தேர்தலில் 115 ஆசனங்களைப் பெற்றிருந்த பா.ஜ.க, 16 ஆசனங்களை இழந்துள்ளது. 60 ஆசனங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ், 17 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் ஆட்சியை, பா.ஜ.க கைப்பற்றியுள்ளது. ஆனால், இமாச்சலப் பிரதேசம் பற்றிய கவனம் காணப்படவில்லை. மாறாக, குஜராத்தில் காங்கிரஸுக்கும் ராகுல் காந்திக்கும் கிடைத்தது வெற்றியா, தோல்வியா என்பது தான், இந்திய அரசியல் கலந்துரையாடலாக இருக்கிறது.
சாதாரணமாக இலக்கங்களைப் பார்த்தால், காங்கிரஸ் தோல்வியடைந்தது எனத் தெரியலாம். ஆனால், குஜராத் என்கின்ற பா.ஜ.க கோட்டைக்குள், நரேந்திர மோடியின் மத்திய அரசாங்கம் ஆட்சி புரியத் தொடங்கி 3 ஆண்டுகளிலேயே, காங்கிரஸ் கட்சியால் 17 ஆசனங்களை மேலதிகமாகப் பெறுவதென்பது, சாதாரணமானது கிடையாது. அதிலும் முக்கியமாக, குஜராத்தின் நகரப் புறங்களில் பா.ஜ.கவும், கிராமப் புறங்களில் காங்கிரஸும் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.
வழக்கமாக, பா.ஜ.க போன்ற தேசியவாதக் கட்சிகள், கிராமப் புறங்களிலேயே ஆதிக்கம் செலுத்துவது வழக்கம். காங்கிரஸ் போன்ற கட்சிகள், நகரப் புறங்களில் ஆதிக்கம் செலுத்தும்.
ஆனால் இம்முறை குஜராத் தேர்தலில், தலைகீழாக நடந்துள்ளது. கிராமியப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட அரசாங்கம் எனவும், கிராமத்தைச் சேர்ந்த சாதாரணமானவனே தான் எனவும், பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரங்களுக்கு மத்தியில், காங்கிரஸ் இவ்வாறு கிராமப் புறங்களின் ஆதரவை வென்றுள்ளமை, பிரதமர் மோடியின் அரசாங்கக் கொள்கைகள், கிராமப் புற மக்களைச் சென்றடையவில்லையோ என்ற கேள்வியையும் எழுப்பிச் சென்றிருக்கிறது.
பா.ஜ.கவின் நிலைமை எவ்வாறிருந்தாலும், குஜராத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தை, முக்கியமான முன்னேற்றமாக காங்கிரஸ் கருதுகிறது. எனவே, இத்தேர்தலில் ராகுல் வென்றாரா, இல்லையா என்பதற்கு, இரண்டு பக்கங்களாகவும் வாதங்கள் முன்வைக்கப்படலாம்.
ஆனால், ஏற்கெனவே கடந்த தேர்தலில் பெற்ற ஆசனங்களை விடக் குறைவான ஆசனங்களை காங்கிரஸ் பெற்றிருந்தால், பதவியேற்ற சில நாட்களிலேயே, ராகுல் காந்தியின் தலைமைத்திறன் தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கும். மாறாக, காங்கிரஸ் வெளிப்படுத்தியிருக்கும் முன்னேற்றம் என்பது, அவரைப் பொறுத்தவரை வெற்றியாகவே அமைந்துள்ளது எனக் கருதலாம்.
(Gopikrishna Kanagalingam)