(எம். காசிநாதன்)
“காங்கிரஸ் கட்சியுடன், மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லை” என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்திருப்பது, மத்திய அரசாங்கத்தில் ஆட்சியிலிருக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கு எதிரான, அகில இந்தியக் கூட்டணி அமைவதற்கு, நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. இந்திய அரசியலில் மாயாவதி, மம்தா பானர்ஜி, ஜெயலலிதா போன்றோர் எடுக்கும் முடிவுகள், அகில இந்திய அரசியலில் ‘வானவெடிகளை’ கடந்த காலத்தில் ஏற்படுத்தியிருந்தது.
என்றாலும், ஜெயலலிதா இல்லாத இந்த நிலையில், மம்தா பானர்ஜியும் மாயாவதியும் பா.ஜ.கவுக்கு எதிரான கூட்டணியை நிர்ணயிக்கும் சக்திகளாக விளங்குகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இதேமாதிரி, ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின், மகாராஷ்ராவில் சரத்பவார் ஆகியோர், தேசிய அரசியலில் பா.ஜ.கவுக்கு எதிரான ஒரு வலுவான கூட்டணிக்கு அடித்தளம் அமைக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
இதற்கு முக்கியக் காரணம், உத்தரபிரதேசம், மேற்குவங்கம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களில் மட்டும், 234 மக்களவை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
இந்த 234 மக்களவை உறுப்பினர்களில், காங்கிரஸ் கட்சியோ, அந்தக் கட்சியுடன் கூட்டணியாக இருக்கும் மாநிலக் கட்சியோ பெறும் எம்.பிக்களின் எண்ணிக்கை, காங்கிரஸை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும்.
ஏனென்றால், இந்த 234 தொகுதிகளில் பா.ஜ.கவோ அல்லது காங்கிரஸோ தனித்து வெற்றி பெறும் நிலையில் இல்லை. உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.கவுக்கு மாபெரும் வெற்றி கிடைத்து, 403 சட்டமன்றத் தொகுதிகளில், 312 தொகுதிகளைக் கைப்பற்றி, ஆட்சியில் அமர்ந்தாலும், அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யனாத்தின் ஆட்சி, மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து நிற்கிறது.
ஆட்சிக்கு வந்த பிறகு, நடைபெற்ற இடைத் தேர்தலில் குறிப்பாக, யோகி ஆதித்யனாத் இராஜினாமாச் செய்த, நாடாளுமன்றத் தொகுதியிலேயே பா.ஜ.கவால் வெற்றி பெற முடியவில்லை. அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது மாயாவதி – அகிலேஷ் யாதவ் – காங்கிரஸ் கூட்டணி ஆகும்.
ஆகவே, அப்படியொரு கூட்டணி, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அங்கு உருவாகி விட்டால், அம்மாநிலத்தில் உள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகளில், வெற்றி என்பது ‘கானல் நீராகி’ விடும் என்று, பா.ஜ.க. அஞ்சுகிறது.
அதனால், மத்திய பிரதேசம், சட்டிஷ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு நடக்கும் சட்டமன்ற தேர்தலில், “காங்கிரஸுடன் கூட்டணி இல்லை” என்று மாயாவதி அறிவித்திருப்பது, பா.ஜ.கவுக்கு ‘இன்பத் தேன்’ வந்து காதில் பாய்கிறது.
மாயாவதியின் இந்த முடிவு, உத்தரபிரதேசத்தில் மாயாவதி- அகிலேஷ்- காங்கிரஸ் கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தலின் போது, உருவாவதைத் தடுத்து நிறுத்தும் என்ற நம்பிக்கை, பா.ஜ.கவுக்கு ஏற்பட்டுள்ளது.
அதனால்தான், “கூட்டணி என்பது, காங்கிரஸின் டி.என்.ஏவில் இல்லை” என்று பா.ஜ.கவின் அகில இந்திய பொதுச் செயலாளர்களில் ஒருவரான, ராம் மாதவ் காங்கிரஸின் தலையில் குட்டியிருக்கிறார்.
இதேபோல், மகாராஷ்டிராவிலும் பா.ஜ.கவுக்குச் சாதகமான செய்தி, தேசிய வாத காங்கிரஸ் கட்சியை வழி நடத்தும் சரத் பவாரால் கிடைத்துள்ளது. 48 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தில், ‘காங்கிரஸ் – பவார்’ கூட்டணி, பா.ஜ.கவுக்குப் பாரிய நெருக்கடியைக் கொடுத்து விடும்.
ஏனென்றால், அங்கு ஏற்கெனவே பா.ஜ.கவுடன் கூட்டணியாக இருந்த சிவசேனா, போர்க்கொடி தூக்கி, தள்ளி நிற்கிறது. ஆனால், “ரபேல் விமானம் வாங்கியதில், பிரதமர் நரேந்திர மோடி ஊழல் செய்யவில்லை” என்று, சரத்பவார் அளித்த பேட்டி, காங்கிரஸ் – தேசிய வாத காங்கிரஸ் கூட்டணியில், விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் மீது, சரத்பவாருக்கு உள்ள கோபம், இன்னும் குறையவில்லை. ராகுல் காந்தியைப் பிரதமராக ஏற்றுக் கொள்ள, அவரது மனம் ஒப்பவில்லை என்றாலும், மக்களவைத் தேர்தலில், எதிர்பாராத பரிசு மகாராஷ்டிராவில் கிடைக்க வாய்ப்பு உண்டா என்பதே பா.ஜ.கவின் இப்போதைய சிந்தனை. அதை நோக்கியே, சரத்பவாரின் ‘ரபேல் விமான ஊழல் பேட்டி’ அமைந்திருக்கிறது.
மாநிலக் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, ஓரணி அமைக்க வேண்டும் என்பதை, மம்தா பாணர்ஜி முன்னிறுத்திப் பிரசாரம் செய்து வந்தார். ஆனால், அதற்காக அவர் முன்னிறுத்திய கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமிக்கும் காங்கிரஸுக்கும், ஏற்கெனவே கடும் போட்டி உருவாகி விட்டது.
ஆட்சியைக் காங்கிரஸ் ஆதரவுடன் நடத்தினாலும், இரு கட்சிகளுக்கும் இடையில் நடக்கும் கூத்துகள், கர்நாடக மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தல் வரை, காங்கிரஸ்- ஜனதாத் தள கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி பிறந்திருக்கிறது. இதேபோல், மம்தா பானர்ஜி முன்னிறுத்திய இன்னொரு முதலமைச்சர் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் ராவ்.
அவரோ, ‘மாநிலக் கட்சிகள் அணிக்கு எல்லாம், நான் தயாராக இல்லை’ என்பது போல், பா.ஜ.கவுடன் திரைமறைவில் நட்புப் பாராட்டி, முன்கூட்டியே சட்டமன்றத் தேர்தலுக்குச் சென்று விட்டார். அவர், மாநில கட்சிகள் கூட்டணிக்கோ, காங்கிரஸ் இருக்கும் அணிக்கோ வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. மம்தாவைப் பொறுத்தமட்டில், எஞ்சியிருப்பது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுவும் தமிழகத்தில் தி.மு.கவும் தான்.
ஆனால், இவர்களும் மாநிலக் கட்சிகள் கூட்டணி என்ற அடைமொழிக்குள் வருவார்களா என்ற சந்தேகம், அதிகமாகவே எழுந்திருக்கிறது. ஆகவே, மேற்குவங்கத்தில் 42 நாடாளுமன்றத் தொகுதிகளை வைத்துள்ள மம்தா பானர்ஜி, மாநிலக் கட்சிகளை இணைக்கும் முயற்சி எடுத்தார். அது கை கூடவில்லை.
ஆனாலும், மம்தா பானர்ஜி வலுவாக இருக்கின்ற வரை, இங்குள்ள 42 தொகுதிகளில் பெரிய அளவில், பா.ஜ.க வெற்றியை எதிர்பார்க்க முடியாது என்ற நிலையே இருக்கிறது.
ஆந்திர மாநிலத்தைப் பொறுத்தவரை, தெலுங்கு தேசக் கட்சியின் சந்திரபாபு நாயுடு, ‘பா.ஜ.க எதிர்ப்பு’ என்பதைக் கையில் எடுத்து, 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் முக்கியத்துவம் பெறுகிறார்.
அவருக்கு எதிராக, வை.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன்ரெட்டியை பா.ஜ.க ‘கொம்பு சீவி’ விட்டாலும், அவர் பா.ஜ.கவுடன் கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளாத வரை, ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளில் பா.ஜ.கவுக்கு ு எத்தகைய வெற்றி கிடைக்கப் போகிறது என்பது கேள்விக்குறியாகும்.
ஆகவே, இந்த மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல், பா.ஜ.க தவித்துக் கொண்டிருக்கிறது என்பதே நிலைமையாகும். தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவுடன் பா.ஜ.கவுக்குத் திரைமறைவில் ஏற்பட்டுள்ள நெருக்கம், ஆந்திர மாநில மக்களிடம் அக்கட்சிக்கு செல்வாக்கைப் பெற்றுத் தராது என்ற கருத்தே நிலவுகிறது.
எஞ்சியிருப்பது தமிழ்நாடு. இங்கு 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருப்பதால், தி.மு.கவுக்கு எதிராக, வலுவான அணியை உருவாக்கி விட வேண்டும் என்று பா.ஜ.க முயற்சிக்கிறது. ஆனால், ரஜினி, கமல், அ.தி.மு.க (எடப்பாடி பழனிசாமி) ஆகிய எதன் வழியாகவும் அந்த முயற்சி கைகூடவில்லை.
மக்களிடம் அ.தி.மு.க அரசாங்கத்துக்கு ஏற்பட்டு வரும் அதிருப்தியும் மத்திய அரசாங்கம், வீடுகளுக்குள் புகுந்து நடத்திய பல்வேறு பரிசோதனைகளும் கூட்டணி உருவானாலும், மாநிலத்தில் வெற்றி பெறுவது சவாலாகவே இருக்கும் என்று பா.ஜ.க கருதுகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சிறிது காலம் ‘ஓ.பி.எஸ் ஆதரவு’, பிறகு ‘ஈ.பி.எஸ் ஆதரவு’ என்று, நிலைப்பாட்டை வகுத்துக் கொண்ட பா.ஜ.க, தி.மு.கத்துடன் கூட்டணி வைப்பதற்கான முயற்சிகளில், பலனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
இன்றைய நிலையில், பா.ஜ.கவைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளிடமும் நம்பிக்கையிழந்து நிற்கிறது. ஆகவே, தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி தொடருவதைத் தடுத்து விட முடியுமா என்ற ஒரு வியூகத்தை ஏற்படுத்தி, அதன் தொடர்ச்சியாகவே, “இலங்கை போர்க் குற்றவாளிகளாக தி.மு.க- காங்கிரஸ் அறிவிக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டத்தை அ.தி.மு.கவை நடத்த வைத்துள்ளது பா.ஜ.க என்று தி.மு.கவே குற்றம் சாட்டுகிறது.
இப்படி, இந்த ஐந்து மாநிலங்களில் உள்ள 234 நாடாளுமன்றத் தொகுதிகளும் பா.ஜ.கவுக்குச் சிம்ம சொப்பனமாக இருக்கிறது. அதேநேரத்தில், இந்த ஐந்து மாநிலங்களிலுமே, அங்குள்ள மாநில கட்சிகளைக் காட்டிலும், காங்கிரஸ் வலுவிழந்துள்ளது. 2016 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பெற்ற 6.25 சதவீத வாக்குகளால், மாயாவதியிடம் தொகுதிப் பேரம் நடத்தும் பலத்தை காங்கிரஸ் இழந்துள்ளது.ஆந்திரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் ராகுல் தலைமையிலான காங்கிரஸின் நிலை இதுதான்.
ஆகவே, சரத்பவார், மாயாவதி, மம்தா, ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு போன்றோருடன் காங்கிரஸ், ஒரு சுமூகமான கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றால், 2019 நாடாளுமன்றப் பாதை பா.ஜ.கவுக்கு மீண்டும் வெற்றிப் பாதையாக அமையலாம். அதுதான், மாயாவதியின் முடிவிலிருந்து, ராஹுல் காந்தி கற்க வேண்டிய பாடம் ஆகும்.