ராஜபக்ஷர்கள் முன்னிறுத்தும் அரசியலுக்கான ஆதரவுதான், ராஜபக்ஷர்களுக்கான ஆதரவு என்பதைப் புரிந்துகொள்ளுதல் இங்கு அவசியம். இலங்கை அரசியல் இன்றும் இனத்தேசிய அடிப்படைகளில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. பெருந்தேசியவாதத்தின் சமகால முகம் ராஜபக்ஷர்களே! அந்த அடிப்படைகளில் கட்டமைந்ததுதான், அவர்களின் ஆதரவுத்தளம்.
ராஜபக்ஷர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், மோசடிக் குற்றச்சாட்டுகள், மோசமான ஆட்சி என இத்தியாதிகள் எல்லாம், அவர்களின் ஆதரவுத்தளத்தின் ஒரு பகுதியைத் தற்காலிகமாகக் குறைக்குமேயன்றி, இவை அவர்களது அடிப்படை ஆதரவுத்தளத்தைத் தகர்க்கப்போவதில்லை என்பது துரதிர்ஷ்டவசமான யதார்த்தம்.
மஹிந்த ராஜபக்ஷ, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் நான்கரை இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வி கண்டார். ஆனாலும் மேல்மாகாணம், மத்திய மாகாணம், வடமேல் மாகாணம், வடமத்திய மாகாணம் ஆகிய மாகாணங்களின் சில பகுதிகள், வடக்கு-கிழக்கு தவிர்ந்த பெரும்பான்மையான ஏனைய பகுதிகளில் மஹிந்த ராஜபக்ஷதான் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார். இலங்கையின் வாக்குவங்கியின் இனவாரியாகவும் பிரதேசவாரியாகவும் அமைந்த இந்தத் தன்மையை நாம் மறந்துவிடக்கூடாது.பெரும்பான்மையின வாக்குவங்கியினுள், கணிசமான வாக்குகள் பெருந்தேசியவாத ஆதரவு வாக்குகள்தான். அந்த வாக்குகள்தான், தற்போது ராஜபக்ஷர்களின் நிரந்தர வாக்குகள்.
அதற்கடுத்தபடியாக, கட்சி ரீதியாக ராஜபக்ஷர்களுக்கு எதிராக கணிசமான வாக்குகள் இருக்கின்றன. இவை ஒருபோதும் ராஜபக்ஷர்களுக்கு விழாத வாக்குகள். ஜே.வி.பி போன்ற இடதுசாரிகளுக்கான வாக்குகள் இதற்குள் அடங்கும். இவர்களுக்கு ராஜபக்ஷர்களுக்கு மாற்றானவர்கள் மீது பிடிப்பு இல்லாவிட்டால், வாக்களிக்காமல் தவிர்ப்பார்களேயன்றி, ராஜபக்ஷர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
அடுத்தபடியாக பொருளாதாரம், ஆதரவு அலை, சமகால அரசியல் அலை என்பவற்றால் எல்லாம் செல்வாக்குக்கு உட்படும் ஒரு வகையான ‘ஊசலாடும்’ வாக்குவங்கியாகும். கிட்டத்தட்ட இந்த வாக்குவங்கிதான், பெரும்பான்மையின வாக்குவங்கியின் தீர்மானம் மிகு வாக்குகள் எனலாம்.
இந்த வாக்குவங்கி ராஜபக்ஷர்களுக்கு ஆதரவாக அமையும் போதுதான், ராஜபக்ஷர்களுக்கு பெருவெற்றி கிடைக்கிறது. ஆனால், இந்த வாக்குவங்கி பெரும்பாலும் நகர்ப்புற வாக்குவங்கியாகவே அமைகிறது.
இந்த இடத்தில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற வாக்குவங்கிகளுக்கு இடையிலான வேறுபாட்டை புரிந்துகொள்ளுதல் அவசியமாகிறது. நகர்ப்புற வாக்குவங்கியின் தேவைகள், முன்னுரிமைகள் ஆகியன, கிராமப்புற வாக்குவங்கியின் தேவைகள், முன்னுரிமைகள் என்பவற்றில் இருந்து பெரிதும் வேறுபட்டவையாகும்.
இந்த இரண்டு வாக்குவங்கிகளினதும் வாழ்கை முறைகள், வாழ்வியல் விழுமியங்களில் கூட நிறைய வேறுபாடுகள் உள்ளன. ராஜபக்ஷர்களின் அரசியலைப் புரிந்துகொள்வதற்கு, இந்த நுட்பங்களைப் புரிந்துகொள்ளுதல் அவசியம்.
ஏனென்றால், ராஜபக்ஷர்களின் அரசியல் என்பது, அவர்களது ஆதரவுத்தளமாக அவர்கள் வரையறுத்துக் கொண்டவர்களுக்கான அரசியல். அது பெருமளவுக்கு இலங்கையின் பெருநகர் அல்லாத ‘சிங்கள- பௌத்த’ வாக்குவங்கியை மையப்படுத்தியது. அதனால்தான், 2015 ஜனவரி எட்டாம் திகதி ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த மஹிந்த, 2015 ஓகஸ்ட் 17ஆம் திகதி நடந்த பாராளுமன்றத் தேர்தலில், குருநாகல் மாவட்டத்தில், 423,529 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
ஐக்கிய தேசிய கட்சியில், குருநாகல் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற அகில விராஜ் காரியவாசம், பெற்றுக்கொண்ட வாக்குகள் 286,755. மஹிந்தவின் கட்சியில் இரண்டாமிடம் பிடித்த தயாசிறி ஜயசேகர பெற்றுக்கொண்ட வாக்குகள், 133,532.
2015ஆம் ஆண்டு, பாராளுமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டால் கூட, மேல் மாகாணம், மத்திய மாகாணம், வடமேல் மாகாணம், வடமத்திய மாகாணத்தின் சில பகுதிகள் மற்றும் வடக்கு-கிழக்கு தவிர்ந்த பெரும்பான்மையான ஏனைய பகுதிகளில் எல்லாம், ராஜபக்ஷ மற்றும் சுதந்திரக் கட்சி கூட்டுத்தான் வெற்றிபெற்றிருந்தது.
ராஜபக்ஷர்களுக்கு பொருளாதார அறிவு இல்லாமல் இருக்கலாம்; நாட்டை முறையாக ஆட்சி செய்யத் தெரியாதிருக்கலாம்; மிக முட்டாள்தனமாக முடிவுகளால், இலங்கையின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுக்கலாம். ஆனால், அவர்களுக்கு வாக்குவங்கி அரசியல் நன்றாகவே தெரிந்திருக்கிறது. அந்த ஆட்டத்தை அவர்கள் மிகச் சிறப்பாகவே ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் ராஜபக்ஷர்கள் முடிந்தார்கள் என்று நினைக்கும் போதெல்லாம், ராஜபக்ஷர்கள் மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டிருக்கிறார்கள்.
கோட்டாவின் பதவி விலகலைக் கூட, ராஜபக்ஷர்கள் ஒரு பின்னடைவாகவே கருதுவார்கள். அவர்களுக்குத் தெரியும் இது முற்றுப்புள்ளியல்ல; வெறும் காற்புள்ளிதான் என்று! இதற்குக் காரணம் இலங்கையின் இனவாரி வாக்குவங்கி மீது, அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை.
இன்று கொழும்பு உள்ளிட்ட பெருநகரங்களில், ஆங்கிலம் பேசும் பெரும்பான்மையின மக்களிடையே ஏற்பட்டிருக்கும் பேரினவாத அரசியலுக்கு எதிரான பிரக்ஞையை, இலங்கையின் அனைத்து பெரும்பான்மையின மக்களிடையே ஏற்பட்டிருக்கும் பிரக்ஞை என்று பொருள் கொள்வது அறிவீனமானது. இந்தப் பொருளாதார நெருக்கடியும் அரசியலில் ஊழல் பற்றிய விழிப்புணர்வும், இலங்கையின் இனவாத அரசியல் கலாசாரத்தை மாற்றிவிடும் என்பதெல்லாம் வெறும் கனவுதான்.
அடுத்த தேர்தலில், தாம் பெரும்பான்மையைப் பெறப்போவதில்லை என்று ராஜபக்ஷர்களுக்குத் தெரியும். ஆனால், ஐக்கிய தேசிய கட்சி 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பெருந்தோல்வி கண்டதுபோல, ராஜபக்ஷர்கள் ஒருபோதும் தோற்க மாட்டார்கள். காரணம், அவர்களுக்கு பேரினவாதம் மீதும், இலங்கையின் பேரினவாத வாக்குவங்கியின் மீதும் அளவற்ற நம்பிக்கை இருக்கிறது.
இதனால்தான், “ராஜபக்ஷர்கள் கைது செய்யப்பட வேண்டும்; அவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும்” என்று சில தாராளவாதிகளாகத் தம்மைக் காட்டிக்கொள்வோர் சொல்லக்கூடும். நாட்டினுடைய சாதாரண மக்கள் வாக்குவங்கியின் தன்மை, யதார்த்தம் பற்றியெல்லாம் புரியாத கருத்து இது.
இன்றைய சூழலில், ராஜபக்ஷர்களின் அரசியலுக்குச் செய்யக் கூடிய ‘மெத்தப் பெரிய உபகாரம்’ அவர்களை சிறையில் அடைப்பதுதான். சிறையில் அடைத்தல் என்பது, அரசியலைப் பொறுத்தவரையில் பல மோசனமானவர்களைப் புனிதமாக்குகிற செயலாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக, இனத்தேசிய அரசியலை, அரசியல் கலாசாரமாகக் கொண்ட ஒரு நாட்டில், அதுவேதான் நடக்கும். அப்படியானால் இதற்கு என்ன வழி?
ராஜபக்ஷர்கள் இழைத்த அநீதிகளுக்கு என்ன நியாயம் என்று கேட்கலாம். மாற்றம் மக்களிலிருந்து உருவாக்கப்பட வேண்டும். பௌத்த – சிங்கள மக்களுக்கு, பேரினவாதத்தைத் தாண்டிய அரசியல் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
ஒரு குழுநிலை அடையாளத்துக்குள் ஈர்க்கப்பட்டுள்ள, அதையே தம்முடைய அரசியலாகக் கொண்டுள்ள சமூகமொன்று காலப்போக்கில், அதன் தலைவர்களைப் புனிதமாக்கத் தொடங்கும். களங்கங்கள் வெற்றுக் கண்ணுக்குத் தென்பட்டாலும், பகுத்தறிவுக்குப் புலப்பட்டாலும், அந்தத் தலைமைகளை புனிதத்துவப்படுத்திய மனநிலையானது, அந்தத் தலைமைகளை விமர்சனத்துக்கும், விசனத்துக்கும் அப்பால் ஒரு வழிபாட்டு நிலையிலேயே கொண்டு சென்று வைத்துவிடும்.
இது, அந்த மக்களுக்கும் தலைமைகளுக்கும் ஆபத்தானது. மக்கள் தமது தலைமைகளின் தவறைக் காண்பதில்லை; அல்லது, கண்டும் காண்பதில்லை என்பது கிட்டத்தட்ட தற்கொலைக்குச் சமமானதொன்று! புனிதப்படுத்தப்படும் தலைமைகள், தன்னிலையை மறந்துவிடுகிறார்கள். அவர்களிடம் ‘god complex’ உருவாகிவிடுகிறது.
இந்த நிலையில்தான், இன்று இலங்கையின் பேரினவாத அரசியல் வாக்கு வங்கியும் ராஜபக்ஷர்களும் இருக்கிறார்கள். இங்கு, ராஜபக்ஷர்களை தொடர்ந்தும் காப்பாற்றிக் கொண்டிருப்பது, அவர்களைப் புனிதப்படுத்தி வைத்திருக்கும், இலங்கையின் பேரினவாத வாக்குவங்கிதான்.
‘அறகலய’வின் போது சத்தமாகக் கேட்ட ஒரு பத்து இலட்சம் ஆர்ப்பாட்டக்காரர்களின் குரல், ராஜபக்ஷர்களை எதிர்த்தது என்றால், ராஜபக்ஷர்களுக்கு ஆதரவளித்த ஐம்பது இலட்சம் குரல்கள் அமைதியாகவே இருந்தன என்பதை மறந்துவிடக்கூடாது. இந்த அமைதியை ‘அறகலய’வுக்கான ஆதரவு என்று கருதுவது, அரசியல் அறியாமை.
இலங்கையின் அரசியல் வரலாற்றில், பேரினவாத அரசியல் இருக்கும் வரை, ராஜபக்ஷர்கள் என்ற பேரினவாத அரசியல்வாதிகள் இருந்துகொண்டே இருப்பார்கள். அன்று ‘பண்டாரநாயக்காக்கள்’; இன்று ‘ராஜபக்ஷர்கள்’; நாளை இந்தப் பதவி வேறொருவருக்குப் போகலாம். ஆனால், பேரினவாத நோய் வாழ்ந்துகொண்டிருக்கும். அதுதான் இலங்கையின் சாபக்கேடு!