ராஜபக்‌ஷர்களின் மீள்வருகைக்கான கட்டியம்

ராஜபக்‌ஷர்களை வீட்டுக்குச் செல்லுமாறு முழு நாடும் கொந்தளித்து அடங்கி, சில மாதங்களே ஆகின்றன. கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டை விட்டுத் தப்பியோடி, ஜனாதிபதி பதவியை துறக்கும் அளவுக்கான நிலை ஏற்பட்டிருந்தது. 

மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது குடும்பத்தினரும், தென் இலங்கை அரசியலில் மீண்டும் தலையெடுக்க வாய்ப்பில்லை என்ற எதிர்வுகூறல்கள் எல்லாம் எழுந்திருந்தன. ஆனால், ஆட்சிப் பதவிகளில் இருந்து விலகிய போதும், ஆட்டிவைக்கும் அதிகாரம் என்பது, முற்றுமுழுதாகத் தங்களிடம் இருப்பதை ராஜபக்‌ஷர்கள் கனகச்சிதமாக பாதுகாத்துக் கொண்டனர். 

இறுதியாக இடம்பெற்ற மூன்று தேர்தல்களிலும், ராஜபக்‌ஷர்கள் நாட்டு மக்களின் பெரும் ஆணையைப் பெற்றிருந்தார்கள். ஆனால், சில காலத்துக்குள்ளேயே அந்த ஆணையை வழங்கிய மக்களே, வீதிக்கு இறக்கி, பெரும் போராட்டங்களை நடத்தி மீளப்பெற்றார்கள். அதுதான் நாட்டில் புதிய தேர்தலுக்கான தேவையை உருவாக்கியது. 

அப்படியான நிலையில், தேர்தலொன்று உடனடியாக இடம்பெறுமாக இருந்தால், ராஜபக்‌ஷர்களின் அரசியல் என்பது, கிட்டத்தட்ட செல்லாக்காசாகி போயிருக்கும். அவ்வாறான நிலை உருவாவதை ராஜபக்‌ஷர்கள், ரணில் விக்கிரமசிங்க எனும் துருப்புச் சீட்டை வைத்து தடுத்திருக்கிறார்கள். 

கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதும், அந்தப் பதவிக்கு தங்களது கட்சிக்குள் இருந்து இன்னொருவர் வருவதை தவிர்த்த ராஜபக்‌ஷர்கள், அதற்குப் பதிலாக ரணிலை கொண்டு வந்தார்கள். 

கடந்த பொதுத் தேர்தலில், முழுவதுமாக நிராகரிக்கப்பட்ட ரணில், தேசிய பட்டியலூடாக பாராளுமன்றம் வந்தவர். அவரைக் கொண்டு, தங்களது அரசியலை மீட்டெடுக்கும் வேலைகளை, ராஜபக்‌ஷர்கள் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த இரு வாரங்களுக்குள் பொதுஜன பெரமுன இரண்டு முக்கிய பேரணிகளை நடத்தி இருக்கின்றது. அந்தப் பேரணிகளில் கலந்து கொண்டு பேசிய மஹிந்தவும் நாமல் ராஜபக்‌ஷவும், ரணிலை ஏகத்துக்கும் புகழ்ந்திருக்கிறார்கள். 

குறிப்பாக, கடந்த காலத் தவறுகளை, ரணில் திருத்திக் கொண்டு, சரியான பக்கத்துக்கு வந்துள்ளதால், அவரை ஜனாதிபதியாக்கும் முடிவுக்கு வந்ததாக மஹிந்த கூறுகிறார். நாமலோ இன்னொருபடி மேலேசென்று, “ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தின் பிரதான தளமான காலி முகத்திடல் போராட்டக்காரர்களை, ரணில் இரவோடு இரவாக அகற்றி, சாதனை படைத்தவர். ஆகவே, ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர்” என்கிறார். 

குறிப்பாக, கடந்த காலங்களில் மனித உரிமைகள், ஜனநாயகம் என்றெல்லாம் பேசிய ரணில், ஜனாதிபதியானதும் அதுபற்றியெல்லாம் பேசாமல் செயற்பட்டு இருக்கின்றார் என்று கூறிய நாமல், மனித உரிமைகள், ஜனநாயகம் பற்றியெல்லாம் மறைமுகமாக எள்ளல் செய்திருக்கிறார். 

அவ்வளவுக்கான திமிரை, ராஜபக்‌ஷர்கள் எங்கிருந்து பெற்றுக் கொள்கிறார்கள் என்று யோசித்தால் விடை, எதுவுமே செய்யத் திராணியற்ற எதிர்க்கட்சிகள் இருப்பதால், அந்தத் திமிர் உருவாகி இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

ஒட்டுமொத்த நாடும், ராஜபக்‌ஷர்களுக்கு எதிராகப் போராடி, அவர்களை ஆட்சியில் இருந்து அகற்றிய சில மாதங்களுக்குள்ளேயே, ராஜபக்‌ஷர்கள் தங்களில் சுயரூபத்தைக் காட்ட முடிவதானது, அதிகாரத்தை இன்னமும் முழுமையாக வைத்துக் கொண்டிருப்பதால் ஏற்பட்டிருக்கும் நிலைமையாகும். 

ரணிலை தோற்கடிப்பதற்கான வழிகளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சிந்திப்பது மாதிரி தெரியாவில்லை. மாறாக, ரணிலிடம் ஓடத் தயாராக இருக்கும், தங்களது கட்சி உறுப்பினர்களைப் பாதுகாப்பதையே பெரும் வேலையாகப் பார்க்க வேண்டியிருக்கின்றது. 

எதிர்வரும் இரண்டு ஆண்டுகள், தேர்தலுக்கான நிலையை ஏற்படுத்தி விட்டிருப்பதால் அன்றி, ஐக்கிய மக்கள் சக்தியை இப்போது வேறு எதுவும் காப்பாற்றவில்லை. இதுவே, ரணில் முழுமையாக மூன்று ஆண்டுகள் ஆட்சி நடத்துவதற்கான சூழல் (தேர்தல்கள் இல்லாமல்) தொடருமாக இருந்தால், ஐக்கிய மக்கள் சக்தி மெல்ல மெல்ல காணாமல் போயிருக்கும். சஜித் பிரேமதாஸவோடு ஒரு சிலர் மாத்திரமே எஞ்சியிருந்திருப்பார்கள். 

ஆனால், தவிர்க்க முடியாமல் வரும் ஆண்டுகளில் தொடர்ச்சியாக தேர்தல்கள் நடைபெற இருப்பதால், அதைக் கருத்தில் கொண்டு, கமுக்கமாக பலரும் இருக்கிறார்கள். அதனால்தான், பிரதான எதிர்க்கட்சி என்ற பெயரை ஐக்கிய மக்கள் சக்தி இன்னமும் தக்க வைத்துக்கொள்ள முடிந்திருக்கின்றது. மாறாக, அரசியல் சதுரங்கத்தில் சரியாக காய்களை நகர்த்தி, பாதுகாத்துக் கொள்ளவில்லை என்பது தௌிவாகப் புலனாகின்றது. 

எதிர்க்கட்சியின் ஆளுமையற்ற செயற்பாடானது, ராஜபக்‌ஷர்களை எதிர்காலத்துக்கான ஆட்சியாளர்களாக பாதுகாத்து வருகின்றது. எதிர்வரும் தேர்தல்களில், ராஜபக்‌ஷர்கள் சற்று வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டாலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னால், ஆட்சியைப் பிடிப்பதற்கான அரசியலை செய்வதற்கான கட்டங்களை தக்கவைத்துக் கொள்வார்கள்.

 அதற்காகத்தான், மக்களால் விரட்டி அடிக்கப்பட்ட சில மாதங்களிலேயே, ராஜபக்‌ஷர்கள் எழுச்சிபெற நினைக்கிறார்கள். ராஜபக்‌ஷர்களோ, அவர்களின் பொதுஜன பெரமுனவோ, நாட்டு மக்கள் சில மாதங்களுக்கு முன்னால் கொந்தளித்து அடங்கியது என்னவோ, வேறு யாருக்கோ என்பது போலான தோரணையை வெளிப்படுத்துகிறார்கள். 

நாட்டின் சீரழிவுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்பது போல காட்டிக் கொள்ளும் அவர்கள், எதிர்க்கட்சிகளையும் ஜனநாயக விரும்பிகளையும் எள்ளல் செய்து எக்காளமிடுகிறார்கள். இந்த நிலை தடுக்கப்படாதவிடத்து, மக்களின் போராட்டம் வீணாகிப் போய்விடும்.

ராஜபக்‌ஷர்களின் ஆட்சிக் காலம் முழுவதும், மலையளவுக்கு அதிகரித்துவந்த அத்தியாவசியப் பொருட்களின் விலை, கடந்த சில நாள்களாக சற்று குறைந்திருக்கின்றது. எதிர்வரும் நாள்களிலும் அது தொடரும் வாய்ப்புகள் தென்படுகின்றன. 

இது, அடுத்த வருட ஆரம்பத்தில் நடைபெற இருக்கின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு நிகழ்த்தப்படும் சதி ஆட்டம். மலையளவு அதிகரித்துவிட்ட விலை அதிகரிப்பை சற்றுக் குறைத்துவிட்டு, அதனை தேர்தலில் வாக்குகளாக மாற்றும் வழக்கமான நரித்தனமான அரசியலை, ராஜபக்‌ஷர்களும் ரணிலும் இணைந்து இப்போது முன்னெடுக்கிறார்கள். 

இதன்மூலம், தங்களது வாக்கு வங்கியை பாதுகாத்துக் கொள்வார்கள். அந்த நிலை, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் ரணிலை முன்னிறுத்தி, ராஜபக்‌ஷர்கள் அதிகாரத்தில் இருப்பதற்கான உத்தியாகும்.

நாடு இன்று எதிர்கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடி நிலைக்குள், ஒவ்வொரு நாளும் ஆட்சியாளர்கள் மக்களுக்கு எதிராக, எவ்வாறான சதித்திட்டங்களைத் தீட்டி அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்க, சாதாரண மக்களுக்கு நேரமில்லை. 

கடந்த காலத்தில் நாளொன்றுக்கு எட்டு மணித்தியாலங்கள் உழைத்தால் குடும்பம் நடத்தலாம் என்று இருந்தால், இப்போது 16 மணித்தியாலங்கள் உழைக்க வேண்டியிருக்கின்றது. அப்படி உழைத்தால்தான், கொஞ்சமாவது மீட்சியுள்ள வாழ்க்கையை நடத்தக் கூடியதாக இருக்கும்.

பதினாறு மணித்தியாலங்கள் உழைக்கும் மக்களுக்கு, எஞ்சியுள்ள எட்டு மணித்தியாலங்களில் குடும்பத்தை நடத்தி, தூங்கி எழ வேண்டும். அதற்குள், இந்த அரசியல்வாதிகளின் அசிங்கமான ஆட்டங்களைக் காண நேரம் போதாது. 

இதைச் சாதகமாப் பயன்படுத்திக் கொண்ட ராஜபக்‌ஷர்கள், இப்போது தயக்கம் ஏதுமின்றி மக்களின் மண்டையில் மீண்டும் மிளகாய் அரைக்கத் தயாராகி விட்டார்கள். இதனை, எதிர்க்கட்சிகள் மாத்திரமல்ல, சமூக சிவில் அமைப்புகளும், ஜனநாயக விரும்பிகளும், பொருளாதார மீட்சிக்கான அர்ப்பணிப்புள்ளவர்களும் இணைந்து தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால், இலங்கையின் படுகுழியை நோக்கிய இருண்ட பயணம் இன்னும் வேகமானதாக இருக்கும்.