ருமேனியாவில் சோஷலிச அரசைக் கவிழ்த்த அமெரிக்க சதிப்புரட்சி

ருமேனியா நாட்டின் கடைசி கம்யூனிஸ்ட் தலைவர் நிகோலா ஸௌசெஸ்கு, ஒரு கிறிஸ்துமஸ் தினத்தன்று (25 december 1989) அவரது துணைவியார் எலேனாவுடன் படுகொலை செய்யப் பட்டார். சில தினங்களுக்கு முன்னர், அந்த நாட்டில் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சியின் விளைவாகவே அது இடம்பெற்றது. அமெரிக்காவினால் ஆதரிக்கப் பட்ட சதிப்புரட்சியாளர்கள், வெளிப்படையான நீதி விசாரணை எதுவுமின்றி சுட்டுக் கொன்றனர்.

ருமேனியாவில் நடந்த இராணுவ சதிப்புரட்சியானது, மேற்குலகில் “கம்யூனிசத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி” போன்று திரிபு படுத்தப் பட்டது. அன்றைய கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சின் உயர் அதிகாரியாக பதவி வகித்து வந்த Mircea Răceanu, ஒரு CIA உளவாளி என்பது பின்னர் தான் தெரிய வந்தது. அவரைப் போன்று சில இராணுவ அதிகாரிகளும் CIA க்காக உளவு பார்த்துள்ளனர்.

நிகோலா ஸௌசெஸ்குவின் முடிவானது, லிபிய அதிபர் கடாபியின் முடிவை பெருமளவு ஒத்துள்ளது. கடாபி போன்று, நிகோலா ஸௌசெஸ்குவும் மேற்குலகுடன் நட்புறவு கொண்டதன் மூலம், சிறந்த இராஜதந்திரியாக தன்னைக் கருதிக் கொண்டார். பலர் நினைப்பதைப் போன்று, அன்றிருந்த கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகள் ஒரே மாதிரி இருக்கவில்லை. எல்லா ஆட்சியாளர்களும், சோவியத் யூனியனின் கைப் பொம்மையாக ஆடவில்லை. ருமேனியாவும், யூகோஸ்லேவியாவும் மிகவும் சுதந்திரமாக இயங்கின.

சோவியத் தலைமையிலான வார்சோ ஒப்பந்த நாடுகளின் படைகள், ஹங்கேரி கிளர்ச்சியை அடக்குவதற்காக படையெடுத்த நேரம், நிகோலா ஸௌசெஸ்கு அதனைக் கண்டித்திருந்தார். சோவியத் யூனியனுடன் மட்டுமல்லாது, சீனா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற அனைத்து உலக வல்லரசுகளுடனும் இராஜதந்திர உறவுகளைப் பேணி வந்தார்.

மேற்குலகம் நிகோலா ஸௌசெஸ்குவுக்கு எதிரான சதிப்புரட்சியை நடத்துவதற்கான காரணம் என்ன? முதலாவதாக, நிகோலா ஸௌசெஸ்கு மேற்குலக நாடுகளிடம் வாங்கியிருந்த அந்நிய கடன்கள் ஒரு காரணம். உலகில் எந்த நாட்டு தலைவரும் செய்யாத, செய்யத் துணியாத ஒரு காரியத்தை அவர் செய்தார். அந்நிய நாடுகளின் கடன்களை எல்லாம் திருப்பிக் கட்டினார். சதிப்புரட்சி நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர், ருமேனியா மேற்குலகிடம் வாங்கிய அனைத்துக் கடன்களையும் திருப்பிச் செலுத்தி விட்டிருந்தது.

இரண்டாவதாக, ருமேனியா இராணுவத்திற்குள் தேசியவெறி கொண்ட அதிகாரிகள் சிலர் தலைமையுடன் அதிருப்தி கொண்டிருந்தனர். அதற்கு காரணம், அயல்நாடான ஹங்கேரி தனது படைகளை ருமேனிய எல்லையோரம் நகர்த்தி இருந்தது. அன்றைய காலத்தில், ருமேனியாவும், ஹங்கேரியும் சோஷலிச நாடுகளாகத் தான் இருந்தன. ஆயினும், அவற்றிற்கு இடையில் தீர்த்து வைக்கப் படாத பிராந்தியப் பிரச்சினை ஒன்றிருந்தது.

முதலாம் உலகப்போரில், ஹங்கேரியும், ஆஸ்திரியாவும் ஒரே மன்னராட்சிக்கு கீழே இருந்தன. ருமேனியாவின் மேற்குப் பகுதி பிராந்தியமான Transylvania முதலாம் உலகப்போர் வரையில் ஹங்கேரிக்கு சொந்தமான மாநிலமாக இருந்தது. ஆஸ்திரிய – ஹங்கேரி போரில் தோல்வியடைந்த படியால், மேற்குலகம் முன்மொழிந்த சமாதான ஒப்பந்தம் ஒன்றின் பின்னர், Transylvania ருமேனியாவுக்கு தாரை வார்க்கப் பட்டது.

எண்பதுகளின் தொடக்கத்திலேயே ஹங்கேரியில் பல அரசியல், பொருளாதார மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி விட்டன. ஹங்கேரி எழுபதுகளிலேயே அமெரிக்காவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியது. மேற்குலக கடன்களை வாங்கி வந்தது. எண்பதுகளின் மத்தியில், சோவியத் அதிபர் கோர்பசேவ் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்த சோவியத் துருப்புக்களை வாபஸ் வாங்குவதாக அறிவித்தார். அது மேற்குலகிற்கு ஆதரவான ஹங்கேரியின் போலி கம்யூனிச ஆட்சியாளர்களுக்கு சாதகமாக அமைந்து விட்டது.

எண்பதுகளின் இறுதியில், ஹங்கேரி ஒரு “சோஷலிச நாடாக” இருந்த போதே, நேட்டோவுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. கனடிய விமானப் படையினர், ஹங்கேரி வான் பரப்பில் சில பயிற்சிகளை மேற்கொண்டனர். மேலும், முன்னைய மன்னராட்சியின் தொடர்ச்சியாக, ஆஸ்திரியாவுடன் இராஜதந்திர உறவுகள் புதுப்பிக்கப் பட்டன. எல்லைப் பாதுகாப்புக் கருவிகள் பழுதடைந்து விட்டதாக ஒரு சாட்டுக் கூறப் பட்டது. (எல்லையில் பொருத்தப்பட்ட சமிக்ஞை கொடுக்கும் மின்னணுக் கருவிகள் பழுதடைந்த நேரம், சோவியத் யூனியன் அவற்றை திருத்திக் கொடுக்கவில்லை.)

ஹங்கேரிய கடவுச் சீட்டுகள் ஆஸ்திரியாவினால் அங்கீகரிக்கப் பட்டன. அதன் மூலம், ஹங்கேரி பிரஜைகள் மேற்கு ஐரோப்பாவுக்கு செல்லும் வாய்ப்புக் கிட்டியது. “இரும்புத் திரை” அகற்றப் பட்டது. எதிர்பாராவிதமாக, பெருமளவு கிழக்கு ஜெர்மன் மக்கள் ஹங்கேரி ஊடாக மேற்கு ஜெர்மனிக்கு செல்ல அதுவும் ஒரு காரணமாக அமைந்தது. பெர்லின் மதில் அப்போதே விழுந்து விட்டது.

இந்தப் பின்னணியிலேயே ருமேனியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெற்றது. ஹங்கேரி தனது படைகளை ருமேனிய எல்லை நோக்கி நகர்த்தியதும், அது Transylvania பகுதியை திரும்பவும் கைப்பற்றப் போகின்றது என்ற பதற்றம் ஏற்பட்டது. ஹங்கேரி வெளிப்படையாக அறிவிக்கா விட்டாலும், ருமேனியாவில் பலர் அப்படி நினைத்துக் கொண்டார்கள். அதே நேரம், Timișoara நகரில் மேற்குலக தூண்டுதலினால் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது. ருமேனியாவின் பாரம்பரிய ஜெர்மன் நகரங்களைப் போன்று Timișoara வும், பல்லின மக்களைக் கொண்டது. அங்கு நடந்த இனக்கலவரம் விரைவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாக மாற்றப் பட்டது.

நிகோலா ஸௌசெஸ்கு தங்களை ஹங்கேரி இராணுவத்திற்கு எதிராக போரிட அனுப்புவார் என்று, தேசியவாத இராணுவ அதிகாரிகள் எதிர்பார்த்தனர். ஆயினும், Timișoara கலவரத்தை அடக்குவதற்காக படையினர் அனுப்பப் பட்டதும், அதைக் காரணமாகக் கொண்டு, இராணுவ அதிகாரிகள் சதித்திட்டம் தீட்டினார்கள்.

தலைநகர் புகாரெஸ்ட்டில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றைப் பயன்படுத்திக் கொண்ட சதிகாரர்கள், மக்களோடு மக்களாக கலந்து நின்று குழப்பம் விளைவித்தனர். அந்த நேரம், அரச மாளிகையின் உப்பரிகையில் நின்றிருந்த நிகோலா ஸௌசெஸ்குவையும், அவரது துணைவி ஏலேனாவையும், மெய்க்காவலர்கள் ஹெலிகாப்டரில் ஏற்றிக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களை பலர் அறிந்திருப்பார்கள்.

இராணுவ சதிப்புரட்சியாளர்கள், நிகோலா ஸௌசெஸ்கு பயணம் செய்த ஹெலிகாப்டரை தடுத்து, தமது கட்டுபாட்டில் இருந்த முகாம் ஒன்றிற்கு கொண்டு சென்றார்கள். நிகோலா ஸௌசெஸ்குவுக்கு விசுவாசமான படையினர் வந்து மீட்டுச் செல்வதற்குள் கதையை முடித்து விட தீர்மானித்தார்கள். அதனால் தான், அவர்களை மக்கள் முன்னால் நீதிமன்றத்தில் நிறுத்தாமல், தாங்களாகவே ஒரு கண்துடைப்பு விசாரணை நடத்தி சுட்டுக் கொன்றார்கள்.

நிகோலா ஸௌசெஸ்கு படுகொலைக்குப் பின்னர் சில வருடங்கள், ருமேனியாவில் இராணுவ ஆட்சி நடந்தது. அப்போது கொலை சம்பந்தமான ஆதாரங்கள், ஆவணங்கள் எல்லாம் அழிக்கப் பட்டு விட்டன. ருமேனியாவில் இன்றைக்கும், சோஷலிச கடந்த காலம் பற்றி யாரும் வெளிப்படையாகப் பேசுவதில்லை. அதாவது, சோஷலிசத்தை எதிர்ப்பவர்கள் கூட, நிகோலா ஸௌசெஸ்கு அரசு இன்னென்ன குற்றங்களை செய்தது என்று விசாரணைகளை நடத்துவதை விரும்புவதில்லை. ஏனென்றால், அதை எல்லாம் விசாரிக்கப் போனால், கடைசியாக நடந்த இராணுவ சதிப்புரட்சி பற்றிய உண்மைகளும் வெளிவந்து விடும் என்ற அச்சம் காரணம்.

அன்றைய சதிபுரட்சியில் பங்கெடுத்த குற்றவாளிகள், இன்றைக்கும் அரசாங்கத்தில் உள்ளனர். அது மட்டுமல்ல, கிழக்கு ஐரோப்பாவில் மிகத் தீவிரமான அமெரிக்க ஆதரவு அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்துள்ளது. இன்று ஹங்கேரி மட்டுமல்லாது, ருமேனியாவும் நேட்டோவில் அங்கத்தவராக சேர்ந்து விட்டது. ருமேனியாவின் கேந்திர முக்கியத்துவம் காரணமாக, அந்த நாடு அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமானது. அதற்கு பின்வரும் காரணங்களை கூறலாம்:

1.அது கருங்கடலை அண்டிய நாடு. கருங்கடலில் வட கிழக்கில் கிரீமியா உள்ளது. அண்மைய உக்ரைனிய நெருக்கடியின் போது, ரஷ்யா செய்த முதல் வேலை, கிரீமியாவை தன்னோடு சேர்த்துக் கொண்டது தான். இல்லாவிட்டால், அங்கு அமெரிக்கா பாய்ந்து தளம் அமைத்திருக்கும்.

2. எண்ணை வளம் நிறைந்த அசர்பைஜானில் இருந்து வரும் குழாய் பாதை, ருமேனியா ஊடாகத் தான் ஐரோப்பாவை அடைய வேண்டும்.

3. பனிப்போர் காலத்தில் ருமேனியாவின் வட கிழக்கு எல்லையில் சோவியத் ஒன்றியம் இருந்தது. இன்று மோல்டாவியா, உக்ரைனுக்கு அப்பால் ரஷ்ய வல்லரசு உள்ளது. ஆயினும், புதிய பனிப்போர் யுகத்தில், ரஷ்யா உக்ரைனிலும், மோல்டாவியாவிலும் அழுத்தமாக கால் பதித்துள்ளது. அதாவது, இது ஒரு சதுரங்க ஆட்டம். அமெரிக்கா வருவதற்குள் ரஷ்யா முந்தி விடப் பார்க்கிறது. ரஷ்யா வருவதற்குள், அமெரிக்கா கிழக்கே நேட்டோவை விஸ்தரிக்க பார்க்கின்றது.

4. ருமேனியா மத்திய கிழக்கு நாடுகளிற்கு அருகில் உள்ளது. அமெரிக்கா மத்திய கிழக்கில் இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், ருமேனியாவில் உள்ள படைத் தளங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

5. ருமேனியா ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கின்றது. ஆயினும், அமெரிக்காவுக்கு விசுவாசமான அரசாங்கத்தை கொண்டுள்ளது. அதிலென்ன பிரச்சினை? அமெரிக்காவுக்கும், மேற்கு ஐரோப்பாவுக்கும் (ஐரோப்பிய ஒன்றியம்) இடையில் ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. இது பற்றி வெளியில் யாரும் பேசுவதில்லை. ஆனால், மேற்கு ஐரோப்பிய நாடுகளை நம்ப முடியாது. காலை வாரி விட்டு விடுவார்கள் என்பது அமெரிக்காவின் எதிர்பார்ப்பு. அதனால், கிழக்கு ஐரோப்பாவில் சில அடிமை நாடுகளை கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும்.

கிழக்கு ஐரோப்பாவில் உள்ள முன்னாள் சோஷலிச நாடுகளில், மக்கள் கிளர்ந்தெழுந்து கம்யூனிஸ்டுகளின் ஆட்சியை கவிழ்த்தார்கள் என்று தான் வெளியுலகில் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. அங்கே என்ன நடந்தது என்று யாரும் ஆய்வு செய்வதில்லை. மேற்குலக பிரச்சார சாதனங்கள் சொல்வதை உண்மை என்று நம்புகிறார்கள். உண்மையில், அதற்கு பல காரணங்கள் இருந்துள்ளன.

அவற்றை சுருக்கமாக சொல்லலாம். மேற்குலகிடம் வாங்கிய கடன்கள் பொருளாதார மாற்றங்களை உண்டாக்கின. மேற்குலகுடனான இராஜந்தந்திர உறவுகள் உயர் மட்டத்தில் உளவாளிகளை உருவாக்க வழிவகுத்தன. ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்ட சர்வதேச அரசியலில் மாற்றங்களை உண்டாக்குவதன் மூலம் உள்நாட்டில் குழப்பங்கள் உருவாக்கப் பட்டன. மேற்குலகிற்கு ஆதரவாக அரசுக்குள் செயற்பட்ட துரோகிகள் இறுதிக்கட்ட திட்டங்களை நிறைவேற்றினார்கள்.

(கலையகம்)